முழு ஆத்துமாவோடு
தியானம்: 2022 ஜுன் 2 வியாழன் | வேத வாசிப்பு: சங்கீதம் 103:1-2

என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி (சங்.103:1).
வாழ்வின் சாதகமான, பாதகமான, சகலவிதமான சூழ்நிலைகளிலும் தன் தேவனைத்துதிக்கும்படி தன் ஆத்துமாவுக்கே அழைப்புவிடுத்த தாவீது, தனது உணர்வுகளைத் தேவனுக்கு முன்பாக வெளிப்படுத்துபவனாக இருந்தான். கோபம், ஆத்திரம், குதூகலம், பாவ உணர்வு யாவற்றையும் தேவனுக்கு முன்பாகக் கொட்டிவிடக்கூடிய மனப்பக்குவத்தை அவர் பெற்றிருந்தார். ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோதும், கொலை செய்யும்படி சவுல் அவரை ஓடஓட விரட்டியபோதும், தொடர்ந்து அவர் சந்தித்த ஒவ்வொரு சம்பவங்களும் தேவனோடு நெருங்கியிருக்கும் ஓர் உன்னத வாழ்வுக்குள் அவரைப் பக்குவப்படுத்தின.
இந்த 103ம் சங்கீதத்தின் பின்னணியில் நடந்ததாக நம்பப்படுகின்ற ஒரு கதை சரித்திரத்தில் உண்டு. ஒரு சமயம் பெலிஸ்தரோடு பலத்த யுத்தம் மூண்டதாம். தாவீதின்படை மூன்றாகப் பிரிக்கப்பட்டு, முதற்படை முன்னே சென்றபோது அது முறியடிக்கப்பட்டது. இரண்டாவது படை முன் சென்றபோதும் யுத்தம் மிகவும் பலத்தது. இறுதிவரை காத்திராமல், பலசாலிகள் அடங்கிய இறுதிப் படைசகிதம் தாவீதும் யுத்தகளத்தில் இறங்கினாராம். யுத்தம் அகோரமானது. இஸ்ரவேலர் செத்து மடிந்தனர். ஒரு கட்டத்தில் தாவீது, ஒரு கால் தேருக்குள்ளும், ஒரு கால் வெளியே தேரின் சக்கரத்தின் மீதுமாக நின்றபடி அம்புகளை எய்தாராம். சடுதியாக, எதிரி எய்த ஒரு அம்பு தன்னையே குறிவைத்து பாய்ந்து வருவதைக் கண்டாராம். தப்பிக்கொள்ள வழியே இல்லை. ஆனால், அந்த அம்பு அவரை மருவியபடி அப்பாலே சென்றதாம். ஆனால், அந்தப் போரில் தாவீது தோற்றுவிட்டார். எருசலேமுக்குத் திரும்பியவர், மாளிகையின் உப்பரிக்கையிலிருந்து, போரில் இறந்துபோன உடல்களைச் சுமந்துகொண்டு வருவதைக் கண்ட தாவீது, தான் இன்னமும் உயிரோடே இருப்பதை நினைந்து, உணர்ச்சி மேலிட்டவராக, உப்பரிக்கையின் பலமான கம்பிகளை இறுக பிடித்ததால், அவை வளைந்தன என்றும், அந்நிலையில்தான் கவிதை வடிவில் இச்சங்கீதத்தை அவர் எழுதினார் என்றும் சொல்லப்படுகிறது.
தாவீது தனது சொந்த வாழ்வில் தேவனை மிக நெருக்கமாக அனுபவித்தவர் என்பது தெளிவு. அதற்கு அவருடைய சங்கீதங்களே சாட்சி. அத்தனை உயிரோட்டமாகப் பாடிவைத்த இந்த சங்கீதத்தை நாம் எவ்வித உணர்வுடன் சொல்லுகிறோம்? அன்றைய தாவீதின் அனுபவம் நமக்கு இல்லாதிருக்கலாம். ஆனால், வாழ்வின் தோற்றுப்போன வேளைகளிலும், நாம் இன்னமும் தருணங்களைப் பெற்றுக்கொள்ளும்படிக்கு உயிருடன் இருக்கிறோமே, இந்த ஒன்று போதும் நம் தேவனைத் துதிப்பதற்கு! எனவே அன்பானவர்களே, நாம் அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரிப்போமாக.
ஜெபம்: அன்பின் தேவனே, நான் உம்மை துதிப்பது கடமைக்கென்றோ இன்னொருவரது தூண்டுதலாகவோ இராமல் உம்மை முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் துதிக்கின்ற அனுபவத்திற்குள்ளாக கடந்துவர எனக்கு உதவியருளும். ஆமென்.