சகோதர அன்பு!

அதிகாலை வேளையில்… (செப்டம்பர் – அக்டோபர் 2022)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: ஆதியாகமம் 4:1-10; 1யோவான் 3:11,12

கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார்; அதற்கு அவன்: நான் அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான் (ஆதியாகமம் 4:9).

நாம் இவ்வுலகத்தில் ஆதாம் ஏவாளின் வழித்தோன்றலாகப் பிறந்தோம். நமக்கு முன்பிறந்த ஒவ்வொரு குழந்தையைப்போலவே நாமும் சிலவற்றை நமது பெற்றோரிடமிருந்து பெற்றிருக்கிறோம். நம்முடைய உடற்கூறு மற்றும் மரபியல் அமைப்புகள் நமது மூதாதை யரிடமிருந்து நம்முடைய ஆண்டவரால் நமக்குத் தரப்பட்டுள்ளன (சங்கீதம் 139: 13-16). ஆனால், நாம் சுபாவப்படி கோபாக்கியினையின் பிள்ளைகளாகப் பிறந்தோம்; நாம் வளரவளர கீழ்ப்படியாமையின் பிள்ளைகளாக மாறினோம் (எபே.2:1-3). இயற்கையின்படி நாம் அனைவரும் பாவிகள். நாம் அவ்வாறு இருப்பதாலும் நம்முடைய செயல்களினாலும் நமக்கு ஒரு இரட்சகர் தேவை.

ஆனால், நாமும் மறுபடியும் பிறந்து தேவனுடைய பிள்ளைகளாக விசுவாசிகளாக ஆபேலைப்போல மாறமுடியும். தான் ஒரு பாவி என்பதை அவன் ஒத்துக்கொண்டு, விசுவாசத்தினாலே இரத்தப் பலியை ஆண்டவருக்குக் கொண்டு வந்தான் (எபி.11:4). நம்முடைய பிறப்பினாலே மனிதவாழ்வைப் பெற்றுக் கொண்டதுபோல, நம்முடைய பாவங்களுக்காகத் தன்னையே பலியாக ஈந்த இயேசுகிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தினாலே நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்கிறோம். காயீனுக்கு அந்த விசுவாசம் இல்லை. அவன் தான் ஒரு பாவியென்று அறிக்கையிடவில்லை. எனவே அவன் இரத்தப்பலியைக் கொண்டுவரவில்லை. பூமியிலே தனது சொந்தக் கைகளின் பிரயாசத்தையே கொண்டு வந்தான். கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல (எபேசி. 2:8,9).

காயீன் ஒரு விசுவாசியல்ல, அவன் ஏமாற்றுக்காரன், பிசாசின் மகன். “நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது. பொல்லாங்கானால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலை செய்த காயீனைப் போலிருக்கவேண்டாம்” (1யோவான் 3: 11-12). இயேசுகிறிஸ்துவைப் புறக்கணித்து விட்டு, அதற்கு பதிலாகப் போலியான மார்க்கத்தைப் பின்பற்றுபவனே பிசாசின் மகன். சாத்தானுக்கு ஒரு குடும்பம் உண்டு (ஆதி.3:15). யோவான் ஸ்நானனும் இயேசுவும் பரிசேயர்களை “விரியன் பாம்புகளே” என்று அழைத்தனர். சாத்தான் ஒரு பாம்பு (மத்.3:7-9; 12:34;23:33). இயேசு அவர்களை நரகத்தின் பிள்ளைகள் என்று குறிப்பிட்டார் (மத்.23:15). இயேசுவை சிலுவையில் அறைந்தவர்கள் பரிசேயர்களே. அப். பவுலும் கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களை அனுபவித்தார் (2கொரி.11:26; அப்.20:29,31; 1யோவான் 2:18-23). அனுபவமிக்க ஒரு தேவ நற்செய்தியாளர் “ஒருவரையொருவர் நேசிப்பது, விசுவாசிகளின் அடையாளம் என்றால் நம்முடைய உள்ளுர் சபையைச் சார்ந்த எவருமே உண்மையிலேயே மறுபடி பிறந்தவர்கள் அல்லர் என்று நான் எண்ணுகிறேன்” என்றார்.

“என் சகோதரனுக்கு நான் காவலாளியோ?” என்ற காயீனின் கேள்விக்கு வருவோம். அதில் ஒரு சிறிய கிண்டல் மறைந்திருக்கிறதல்லவா? அவன் சகோதரன் ஒரு மந்தை மேய்ப்பவன் (ஆதி.4:2), “மந்தையைக் காக்கிறவனுக்கு நான் காவலாளியோ?” என்று அவன் கேட்டிருக்கலாம். இதற்கான பதில் “ஆம்! “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூருவதும், உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவதும் இரு பெரிய கட்டளைகள் என்றும், நம்முடைய உதவி யாருக்கு தேவைப்படுகிறதோ அவர்களே நமக்குப் பிறன் என்றும் இயேசு கூறியுள்ளார் (லூக்கா 10: 25-37).

மனுக்குலத்தின் உறுப்பினர்களாகிய நாம், ஒருவருக்கொருவர் உதவிட வேண்டும். தேவனுடைய குடும்பத்தின் உறுப்பினர்களாகிய நாம் ஒருவரையொருவர் நேசித்து ஒருவருக்கொருவர் ஊழியஞ் செய்யவேண்டும் (கலா.5:13). சாத்தான் பொய்யனும் மனுஷ கொலை பாதகனுமாயிருக்கிறான் (யோவான் 8: 37-45) அவனுடைய பிள்ளையான காயீனும் தகப்பனைப்போலவே இருந்தான்.

“ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மை செய்யக்கடவோம்” (கலாத்தியர் 6:10).

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை