அதிகாலையில்…
தியானம்: 2022 அக்டோபர் 1 சனி | வேத வாசிப்பு: நீதிமொழிகள் 8:17-21

“அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்” (நீதிமொழிகள் 8:17).
சென்ற நாட்களெல்லாம் தேவன் நமக்கு போதுமானவராக இருந்து இந்த புதிய மாதத்திற்குள் வருவதற்கு உதவி செய்தபடியால் அவருக்கு துதிஸ்தோத்திரங்களை ஏறெடுப்போம். கர்த்தர் தமது ஜனங்களுக்கு சமாதானத்தை அருளி ஆசீர்வதிப்பார் என்ற வாக்கின்படி இப்புதிய மாதத்தில் நம் தேவைகள் அனைத்தையும் சந்தித்து ஆவிக்குரிய நன்மைகளையும் சுதந்தரிக்க தேவன் கிருபை செய்வாராக!
ஆண்டவர், தமது தாசர்களாகத் தெரிந்துகொண்ட பாத்திரங்களுடன் அதிகாலையில் இடைப்பட்டு ஆசீர்வதித்த அநேக காரியங்களை வேதத்தில் வாசிக்க முடியும். ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து தேவனைத் தரிசித்தார். அவரது ஒரே மகன் ஈசாக்கை தமக்குப் பலியிடும்படி கர்த்தர் கூறியபோதும் தயக்கமின்றி அதிகாலையில் எழுந்து புறப்பட்டுப்போனார். கர்த்தர் கொடுத்த கற்பனைகளை உடைத்துப்போட்ட மோசேயிடம், அதற்கு ஒத்த இரு கற்பலகைகளைச் செய்யச்சொன்ன கர்த்தர், அவற்றை எடுத்துக்கொண்டு, விடியற்காலத்தில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் உச்சியில் காலமே என் சமுகத்தில் வந்து நில் (யாத்.34:2) என்று அழைத்தார். மோசேயும் அதிகாலமே எழுந்து கர்த்தர் கட்டளையிட்டபடியே கற்பனை பலகையுடன் மலையில் ஏறினார். அதிகாலை வேளை ஒரு ஆசீர்வாதமான நேரம். ‘நான் இஸ்ரவேலுக்குப் பனியைப் போலிருப்பேன்’ (ஓசியா 14:5) என்று கர்த்தர் தமது கிருபையின் ஆசீர்வாதங்களைப் பனியைப் போல பொழிகின்ற நேரமது. அந்த நிசப்தமான வேளையிலே அமைதியாக தேவனைத் தேடும்போது, நிச்சயமாகவே தேவபிரசன்னம் நம்மை நிரப்புகிறது.
கவலைகளும் சோர்வுகளும் உள்ளத்தில் அலைமோதும் நேரமும் அந்த அதிகாலை வேளையே என்பதுவும் உண்மைதான். கண்கள் விழித்ததும், இந்த நாள் எப்படியாகுமோ? இன்றாவது விடுதலை கிடைக்குமோ? இன்றைய காரியங்கள் கைகூடுமோ? என்று பலவித ஏக்கங்கள் நமது மனதை அரிக்கும் நேரமும் அதிகாலையே. அப்படிப்பட்ட வேளையில் நாம் என்ன செய்கிறோம்? கவலைகளில் அமிழ்ந்து, அவிசுவாசத்தால் நம்மைத் தாலாட்டி விடியும்வரை புரண்டு படுத்து எழுந்து அந்த நாளை மப்பும் மந்தாரமுமுள்ள நாளாக கழிக்கப் போகின்றோமா? அல்லது, வேதத்தைத் தியானித்து விசுவாசப் பெருக்கத்துடன் சோர்வு துக்கங்களையெல்லாம் மேற்கொண்டு தேவனைத் துதித்து ஜெபித்து அந்த நாளை ஒரு வெற்றியின் நாளாக்கி மகிழ்ந்து களிகூரப்போகின்றோமா?
அன்பானவர்களே, எந்தவித மனநிலைமையாயினும் அதிகாலையில் தேவனைத் தேடுகின்ற ஆத்துமா வாழும். என்ன போராட்டமாயினும் அதிகாலையில் தேவ சமுகத்தில் அவற்றை ஒப்புவித்து, ஜெபித்து எழும்பும்போது தேவனுடைய புதிய கிருபையும் புதிய பெலனும் நிச்சயம் நம்மை நிரப்பும்.
ஜெபம்: அன்பின் கர்த்தாவே அதிகாலையில் எழுந்து, உம்மைத் தேடவும், உமது வார்த்தைகளைத் தியானிக்கவும் புதிய கிருபையால் என்னை நிரப்பும் ஆண்டவரே. ஆமென்.