நம்பிக்கைக்குரிய ஊழியக்காரன்
தியானம்: செப்டம்பர் 29 சனி; வாசிப்பு: ஆதியாகமம் 24:1-9
‘…ஊழியக்காரன் …இந்தக் காரியத்தைக்குறித்து அவனுக்கு
ஆணையிட்டுக்கொடுத்தான்.’ (ஆதியாகமம் 24:9)
பிரசித்தி பெற்ற நபர்களின் வாழ்க்கை சரித்திரங்களையே நாம் புரட்டிப் பார்ப்பது வழக்கம். மிகச் சாதாரண மக்களின் சரித்திரங்களும் நமது வாழ்வு சிறப்பாய் அமையத்தக்க பாடங்களாக அமைந்திருக்கின்றன என்றால் மிகையாகாது. இந்த வரிசையில் இன்று ஆபிரகாமின் ஒரு ஊழியக்காரனுடைய வாழ்க்கைக்கூடாக நாம் கற்றுக்கொள்ளக்கூடிய முக்கிய பாடம் என்ன என்பதைக் கவனிப்போம். இவன் ஒரு ‘நம்பிக்கைக்குரிய ஊழியன்’.
ஆபிரகாம் தன்னுடைய மகனுக்குப் பெண் பார்ப்பதற்காக வீட்டிலிருப்பவர்களில் வயதில் மூத்தவனும், தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் அதிகாரியுமான தன்னுடைய ஊழியக்காரனை அழைத்து, அவனுக்குச் சில கட்டளைகளைக் கொடுத்து, தன் இனத்தாரிடத்திற்கு அனுப்பினார். அவனும் சொன்னபடியே செய்வதாக வாக்களித்துச் சென்றான். அவன் தன் வாக்கில் உண்மை உள்ளவனாயிருந்தான். தன் கடமையில் கண்ணும் கருத்துமாய் இருந்து, தான் ஆபிரகாமிற்குக் கொடுத்த வாக்கில் தவறாது, ஈசாக்குக்கு ஏற்றதுணையைத் தெரிந்துகொண்டுவந்தான். மொத்தத்தில் அவன் ஆபிரகாமுக்கு நம்பிக்கைக்குரிய ஒரு ஊழியனாகவே இருந்தான்.
இந்நாட்களில் யாரைத்தான் நம்புவது என்பது நம் எல்லோரினதும் ஒரு பெரிய முறைப்பாடு. அதேசமயம் நாம் பிறரால் நம்பப்படக்கூடியவர்களாக வாழுகிறோமா என்பதையும் நம்மையே நாம் கேட்டுப்பார்க்கவேண்டும். வேலை ஸ்தலத்தில், வீட்டில், சபையில் எவ்விடத்திலாகிலும் நமக்கு மேலேயுள்ளவர்களுக்கு நாம் உண்மையுள்ளவர்களாகவும், கடமை உணர்வுள்ளவர்களாகவும் நமக்குக் கொடுத்த பொறுப்புகளை உத்தமத்தோடும் நிறைவு செய்கிறோமா? அல்லது, அவர்களை நமது சொல்லாலும் செயலாலும் அவமதித்து, நமக்குக் கொடுக்கப்பட்ட கடமைகளையும் ஏனோதானோ என்று செய்கின்றோமா?
“உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்.” (நீதி.28:20). ஒரு பெரிய பொறுப்பை நம்பிக்கொடுக்கத்தக்கதாக இந்த ஊழியன் இருந்தான். ஆபிரகாம் அவனை நம்பினான். அவனும் ஆபிரகாமுக்கு உண்மையுள்ளவனாய் நடந்து, ‘…தான் செய்த சகல காரியங்களையும் ஈசாக்குக்கு விவரித்துச்சொன்னான்’ (ஆதி.24:66) இந்த உண்மைத்துவம் நம்மிடம் உண்டா? நம்மை ஆராய்ந்து பார்ப்போம். எந்தவிடத்திலாவது நாம் தவறியிருப்போமாயின் இன்றே அறிக்கையிட்டு சரிப்படுத்துவோம். உத்தமனுக்கு என்றும் கர்த்தர் துணை நிற்பார். அந்த ஊழியக்காரன் தன் பொறுப்பை நிறைவேற்ற உதவியாய் நின்ற தேவன் நம்மைக் கைவிடுவாரோ!
ஜெபம்: “தேவனே! என் அதிகாரிகளுக்கு நான் ஒரு நம்பிக்கைக்குரிய ஊழியனாகத் திகழ உமது ஆவியால் என்னைப் பெலப்படுத்தும். ஆமென்.”