கிறிஸ்தவ பாவம்!

தியானம்: 2024 ஜுன் 4 செவ்வாய் | வேத வாசிப்பு: ரோமர் 6:1-11

YouTube video

அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை. அவர்கள் தேவனை அறிந்தும், …. சிந்தனைகளினாலே வீணரானார்கள் (ரோமர் 1:20,21).

“பாவம்” – இந்தச் சொல் நமக்கு மிகவும் பரிச்சயமாகியிருப்பதாலோ என்னவோ, இதைக்குறித்த பயம் குறைந்துவிட்டது எனலாம். ஆனால், அது என்ன “கிறிஸ்தவ பாவம்?” சிருஷ்டி கர்த்தர், இயேசுவினாலான விடுதலை, கிருபையாய் தந்த நித்திய வாழ்வின் நிச்சயம் இவற்றை அறியாத, விசுவாசிக்காத மக்கள் அநேகருண்டு. ஆனால் இவற்றை விசுவாசித்தும், தேவனுடைய அன்பை அனுபவித்தும், தேவனை மறுதலித்து, பாவத்துக்கு இடமளிக்கும்போது, அதனை கிறிஸ்தவ பாவம் எனலாமா?

தேவனும் மனிதனும் அன்போடு உறவாடிய ஏதேனிலே, மனிதன் பாவத்தில் அகப்பட்டு விழுந்தான். அதற்கு சாத்தான் அல்ல; மனிதனேதான் பொறுப்பாளி. ஏனெனில், மனிதனுக்கு சுதந்திரத்தை அளித்த கர்த்தராகிய தேவன், அவன் வாழ்ந்திருக்கும்படி ஒரு கட்டளையும் கொடுத்திருந்தார். கட்டளை கொடுத்தவர் தன்னைப் படைத்த தேவனே என்பதை அறிந்திருந்தும், மனிதன் தனக்குக் கொடுக்கப்பட்ட சுதந்தரத்தைத் தவறாகப் பயன்படுத்தினான். அதாவது, அவன் தெரிந்தே தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாக கலகம் பண்ணினான். “உம்மு டைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம்” (சங்.119:160). ஆக, தேவனுடைய நீதிக்கு விரோதமாக செயற்படுவதே பாவம்! தேவன் நீதியைக் கோருவதால், பாவம், தேவனோடுள்ள உறவின் அடிப்படையிலேயே கணிப்பிடப்படவேண்டும். தேவகிருபை என்பதை நாம் தவறாகக் கணித்து பாவத்திற்கு இடமளிக்கிறோமா என்று எண்ணத் தோன்றுகிறது. ஆகவேதான், பவுல், “கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே” என்கிறார். நாம் இரட்சிப்பைப் பெற்றிருக்கிறோம் என்றால் நாம் பாவத்துக்கு மரித்தவர்கள் அல்லவா! மரித்தது மெய்யானால், நாம் பாவத்திலிருந்து விடுதலை பெற்றதும் மெய்யே! கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துவுடன் மரித்தது மெய்யானால், அவரோடேகூட பிழைத்தும் இருக்கிறோம் என்பதுவே சத்தியம்.

சிருஷ்டிகருடைய அதிகாரத்தை அறிந்தும், இயேசுவினூடாக தேவனை அறிந்து அனுபவித்தும், தேவநீதிக்கு எதிரான விசுவாசமற்ற கலகமே கிறிஸ்தவ பாவமாகும். தேவ பரிசுத்தமும் அதனுடன் முரண்படுகின்ற பாவமும் ஒரே இடத்தில் இருக்கமுடியாது. பாவத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட நம்மை பாவம் தாக்காது என்று சொல்லமுடியாது; நம்மைத்தான் அதிகமாகத் தாக்கும். ஆனால், நமக்குள் கிறிஸ்து வாழுவதால், பாவம் நம்மை ஆட்கொள்ள முடியாது. இன்று நாம் பாவத்திற்கு இடமளிக்கிறோமா? அதை வெறுத்து நமக்குள் வாழும் கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறோமா?

ஜெபம்: பரிசுத்தமும் நீதியுமுள்ள தேவனே, பாவத்திலிருந்து எங்களுக்குத் தந்திருக்கிற விடுதலை, நித்திய வாழ்வைக் குறித்த நிச்சயம் இவைகளை பெற்றனுபவிக்கிற நாங்கள் பாவத்தை முற்றுமுழுதாய் வெறுத்து உம்மை மாத்திரம் வெளிப்படுத்த உதவிச்செய்யும். ஆமென்.