சமஸ்த இஸ்ரவேலின் இரண்டாம் ராஜா!

தியானம்: 2024 ஆகஸ்டு 12 திங்கள் | வேத வாசிப்பு: 2 சாமுவேல் 5:1-10

YouTube video

… அவர்கள் தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள் (2 சாமுவேல்; 5:3).

மூன்று தடவைகள் அபிஷேகம் பெற்ற ஒரேயொருவர் தாவீது ராஜாதான். ராஜாவாகிய சவுலை கர்த்தர் புறந்தள்ளினபோது சாமுவேலை அனுப்பி, தாவீதை அபிஷேகம் பண்ணுவித்தார் (1சாமு.16:13). பின்பு, சவுல் மரித்த பின்பு, யூதாவின் மனுஷர், “தாவீதை யூதா வம்சத்தாரின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள்” (2 சாமு.2:4). மூன்றாவதாக, இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் சேர்ந்து, “தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள். தாவீது ராஜாவாகும்போது, முப்பது வயதாயிருந்தான்; அவன் நாற்பது வருஷம் ராஜ்ய பாரம் பண்ணினான்” (2சாமு.5:3-5).

தாவீது சமஸ்த இஸ்ரவேலின் இரண்டாவது ராஜாவானார். அதற்காக இவருடைய ராஜவாழ்வு இலகுவாக இருக்கவில்லை. ஆடுகள் மேய்ப்பதற்கே தகுதியானவன் என்று அவரது குடும்பத்தார் மதித்தனர். அவர்கள் நடுவிலேயே அபிஷேகம் பண்ணப்பட்டும் அவர் ராஜ சிங்காசனத்தில் அமரவில்லை. சவுலின் எரிச்சலுக்கு ஆளாகி, உயிர் தப்ப ஓடினார்; சவுலைக் கொன்றுபோட இரண்டு தடவை தாவீதுக்கு தருணம் கிடைத்தும் சவுலைத் தப்பவிட்டார். பின்னர், யூதாவுக்கு ராஜாவாகியும் தாவீதுக்கு நிம்மதி இருக்கவில்லை. சமஸ்த இஸ்ரவேலின் ராஜாவாகிய பின்பும், ஏகப்பட்ட வேதனைகள்! சோதனைகள்! இதினிடையில் பத்சேபாள் விஷயத்தில் பாவத்தில் அகப்பட்ட தாவீது, தான் ராஜா என்பதையும் மறந்து, தேவனுடைய பாதத்தில் விழுந்து “தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும்” என்று கதறினாரே! மகன் அப்சலோமின் நிமித்தம் திரும்பவும் காடு மேடு என்று அலைய நேரிட்டது. அவனும் இறந்த பின்னர்தான் தாவீது வந்து அரியணையில் அமர்ந்தார். இவர்தான் இஸ்ரவேலின் ராஜா! அவர் தன் பாவத்தின் விளைவுகளைச் சந்திக்க நேரிட்டபோதும், தாவீது தனது ராஜரீகத்தைக் குறித்து பெருமை பாராட்டவேயில்லை, கர்த்தரையே சார்ந்திருந்தார்.

தாமே ராஜாவாகத் தெரிந்துகொண்ட தாவீதின் வாழ்வில், தேவன் இத்தனை பாடுகளை அனுமதித்தது என்ன? சவுல் தேவவார்த்தையைப் புறக்கணித்தபோதே, கர்த்தர் தாவீதை அரியணையில் ஏற்றிவிடாதிருந்தது ஏன்? ஆம், வரப் போகின்ற மேசியா, தாவீதின் சந்ததியிலேதான் வந்து பிறப்பார் என்பது தேவ திட்டம். அந்த ராஜாவாகிய மேசியா மாம்சத்திலிருந்த நாட்களில், “அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு” என்று நாம் வாசிக்கிறோம் (எபி.5:7,8). தாவீதின் வம்சத்தில் வரவிருந்த இயேசுவையே பிதாவானவர் இவ்வழியில் நடத்தும்போது அவன் எம்மாத்திரம்? நாம் எம்மாத்திரம்? எந்தவொரு உபத்திரவமோ சோதனையோ எதுவும் நமக்கு வீணுக்கல்ல. தேவன் தமது சித்தப்படி நம்மை உயர்த்தும்போது உயர்த்தட்டும்; நாமோ அவருடைய கரங்களில் தாவீதுபோல அடங்கியிருப்போமாக!

ஜெபம்: அன்பின் தேவனே, எவ்வித கடினமான பாதையின் வழியாக நான் செல்ல நேரிட்டாலும் அந்தப் பாதையிலும் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு உமது கரத்தில் அடங்கியிருக்க எனக்கு உமது கிருபையைத் தாரும். ஆமென்.