கிறிஸ்துவின் மாதிரி!
தியானம்: 2025 மார்ச் 14 வெள்ளி | வேத வாசிப்பு: 1 பேதுரு 2:12-25

… நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார் (1 பேதுரு 2:21).
பேதுரு, இயேசு கிறிஸ்துவின் சீஷர்களில் ஒருவர். கிறிஸ்துவே மேசியா என அறிக்கை பண்ணினவரும் இவரே; பின்னர், இயேசுவை நான் அறியேன் என்று கிறிஸ்துவை மறுதலித்தவரும் இவரே. ஆனாலும், உயிர்த்தெழுந்த இயேசு தாம் பரத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பாக, தமது ஜனத்தை வழிநடத்தும் மேய்ப்பனாக அழைத்ததும் இந்தப் பேதுருவையே. பெந்தெகோஸ்தே நாளிலே பரிசுத்தாவியால் நிரப்பப்பட்ட பின்பு கிறிஸ்துவுக்கு உத்தம சாட்சியாக விளங்கியதும் இதே பேதுருதான். இந்தப் பேதுரு பின்னர் கிறிஸ்துவுக்குச் சாட்சியாக எழுதிய நிருபங்களைத்தான் வேதாகமத்தில் வாசிக்கிறோம். இவற்றுள் முதலாம் நிருபத்தை பேதுரு இரு நோக்கங்களோடு எழுதினார் என்று வேத அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒன்று, விசுவாசிகள் இந்த உலகத்தை ஆவிக்குரிய கண்ணோட்டத்தோடு பார்க்கவேண்டும். இரண்டாவது, விசுவாசிகள் தமது வேலை ஸ்தலங்களில் எவ்விதமாக கிறிஸ்துவின் மாதிரியைப் பின்பற்றி, குற்றமற்றவர்களாய் நீதியோடும் உத்தமத்தோடும் நடக்கவேண்டும் என்பதேயாகும்.
கிறிஸ்து எந்த வேலை ஸ்தலத்தில் வேலை செய்தார்? இந்த உலகமே அவருடைய வேலை ஸ்தலம். உலக மக்களுக்கு இரட்சிப்பைப் பெற்றுக்கொடுக்க வந்திருந்தாலும், இவ்வுலகின் அதிகாரிகளையும் இயேசு சந்திக்க நேர்ந்தது. குறிப்பாக, எந்தக் குற்றமுமே செய்யாதபோதும், குற்றஞ்சாட்டப்பட்டவராக அதிகாரிகள் முன் நின்றபோது, அவர் எப்படிப்பட்ட மாதிரியை நமக்கு வைத்தார் என்பதைச் சிந்தித்துப் பார்ப்போம். அவர் எதிர்த்துப் பேசாதிருந்தார். இயேசு பல பாடுகளுக் கூடாகக் கடந்து சென்றபோதும், அவர் தாம்வந்த நோக்கத்தை நிறைவுசெய்யும்படி அமைதியாகவே சகலத்தையும் ஏற்றுக்கொண்டார். இதற்கூடாக, கிறிஸ்து நமக்குக் காட்டிய மாதிரி, கீழ்ப்படிதலும், தாழ்மையுமே!
பிரியமானவர்களே, இந்தக் கீழ்ப்படிதலும் தாழ்மையும் நமது வாழ்வில் உண்டா? அநியாயமாக நாம் குற்றப்படுத்தப்படும்போது நாம் எப்படிப் பதிலளிக்கிறோம்? கிறிஸ்துவின் பிள்ளைகளாக பல்வேறு வேலை ஸ்தலங்களில் நாம் வேலை செய்யும்போது அதிகாரிகள் கொடுக்கும் அழுத்தம், சகஊழியர்களின் எதிர்ப்பு, எரிச்சல், பொறாமை, உதவியற்ற நிலைமை போன்றவற்றுக்கு நாம் முகங் கொடுத்து பல பாடுகளுக்கூடாகக் கடந்துசெல்கிறோமா? இப்படியான சூழ்நிலைகளில், கிறிஸ்துவின் மாதிரியைப் பின்பற்ற தேவன் நமக்கு நல்ல தருணம் கொடுத்திருக்கிறார் என்று விசுவாசித்து, கிறிஸ்துவின் மாதிரிக்கு நாம் சாட்சியாக விளங்கலாமே. அதற்கான தேவபெலம் வேண்டி இந்நாளிலே நம்மை ஒப்புவிப்போமா!. கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக (ரோமர் 15:6).
ஜெபம்: நீடிய பொறுமையும் சாந்தமுமுள்ள தேவனே, உமது அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறோம் என்று சொல்லுகிற நாங்கள் அதையே எங்கள் வாழ்வில் வெளிக்காட்டவும் எங்களுக்குத் துணை செய்யும். ஆமென்.