• Dr.வாரன் வியர்ஸ்பி •
(செப்டம்பர் – அக்டோபர் 2025)

நீண்டதூர பிரயாணமொன்றின் பின், நான் சோர்வுற்று இருந்தபோது, மிஷன் இல்லத்திலிருந்த ஒரு வாசகம் என்னை சிரிக்கவைத்தது: “ஆண்டவா, எனக்குப் பொறுமையைத் தாரும். அதுவும் உடனேயே எனக்கு வேண்டும்”.

பொறுமை என்பது சிறுபிராயத்திலேயே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முதற்பாடங்களில் ஒன்று. பொறுமையாயிருக்க கற்றுக்கொள்ளாத ஒரு பிள்ளை, வேறு எதைக்குறித்தும் அவ்வளவாக அறிந்துகொள்ள இயலாது. வாசித்தல், எழுத்துக் கூட்டல், எழுதுதல், பெருக்கல் வாய்ப்பாட்டினை மனனஞ்செய்தல் போன்ற அனைத்திற்கும், பொறுமையானது தேவைப்படுகிறது. முதிர்ச்சி என்பது ஒரு திடீர் அனுபவமாக இல்லாதபடிக்கு, மெதுவாய் நிகழும் ஒரு சம்பவமாக அதை தேவன் நியமித்திருக்கிறார். அவ்விதமாக அவர் அமைத்திருப்பதையிட்டு நானும் மகிழ்ச்சியடைகின்றேன். ஏனெனில், வளரும்போது காரியங்களைப் புரிந்துகொள்வதற்கு அது அவகாசமளிக்கின்றது.

பொறுமையின்மை அநேகமாக முதிர்ச்சியின் மையின் அறிகுறியே. அப்படித்தான் யாக்கோபு நினைத்திருக்கவேண்டும். “நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது” (யாக்.1:4). சிறு பிள்ளைகள் சிறிதுநேரம் டாக்டரின் அறையில் இருப்பதற்கும் பொறுமையற்றவர்களாயிருப்பார்கள். வளர்ந்தவர்களும்கூட பொறுமையற்றிருக்கிறார்கள். ஆபிரகாம் உடன்படிக்கையின் பிள்ளைக்காகக் காத்திருப்பதில் சோர்வடைந்தான். எனவே, அவன் அவசரப்பட்டு, ஆகாரை தனது இரண்டாவது மனைவியாக்கிக் கொண்டான். அவள் அவனுக்கு இஸ்மவேலைப் பெற்றாள்.

மோசேயும் அவசரப்பட்டு ஒரு மனுஷனைக் கொன்றான். இதனால் 40 வருடங்களாக மீதியான் தேசத்திலே அவன் வேலை செய்யவேண்டி நேர்ந்தது. பல வருடங்களின் பின்னர் மீண்டும் மோசே பொறுமையற்றவனாகி, கற்பலகையை உடைத்து பரிசுத்த ஸ்தலத்துக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தான்.

குதிரையைப்போலவும், கோவேறு கழுதையைப் போலவும் இருக்கவேண்டாம் என்று சங்கீ தம் 32:9இன் எச்சரிப்புதான் நமக்கும் தேவைப்படுகிறது. கோவேறு கழுதைக்கு பிடிவாதத் தன்மையுண்டு. குதிரைக்கு அவசரத் தன்மையுண்டு. இதில் ஆள்தத்துவ வேற்றுமை சம்பந்தப்படலாம். ஆனால், அடிப்படையாக, நாமும் இதே பிரச்சனையையே கொண்டிருக்கிறோம். தேவனில் காத்திருப்பது என்பது நமக்கு கடினமானதாயிருக்கிறது.

நாம் விசுவாசத்தினாலல்லாது, தரிசனத்தின்படி நடக்கப் பழக்கப்பட்டிருப்பது, இப்பிரச்சனையின் ஒரு பகுதியாகும். தேவன் தம் வார்த்தையின் மூலம், நம்மில் அவர் கரிசனை கொண்டவராயிருக்கிறாரென்று உறுதியளித்துள்ளபோதிலும், அதை நம் கண்ணால் காணவேண்டுமென்று விரும்புகிறோம். யாத்திராகமத்தில், தேவன் தம்மை வறண்டுபோகப் பண்ணினார் என்றும், தம்மை அழிவு எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது என்றும், இஸ்ரவேலர் எண்ணியிருந்தார்கள். இருளும் புயலும் நிறைந்த ஒரு சூழ்நிலை. ஆனால், தேவன் இருளுக்கும், புயலுக்கும் ஊடாக, தம் மக்களுக்காய் பணியாற்றினார். “இதெல்லாம் எனக்கு விரோதமாய் நேரிடுகிறது” (ஆதி.42:36) என்றான் யாக்கோபு. உண்மையில் எல்லா காரியங்களும் அவனுக்கு சாதகமாகவே நேர்ந்துகொண்டிருந்தது.

“தேவன் தாமதிக்கிறார் என்பது, அவர் மறுக்கிறார் என ஆகாது” என்று F.B.மேயர் என்பவர் கூறினார். அநேகமாக, அது தேவன் நம்மை மேலான காரியங்களுக்கென்று ஆயத்தப்படுத்தும்படி, பயன்படுத்தும்படி, பயன்படுத்தும் கருவிகளாகும். தேவன் தம் மக்களின் நலனுக்காகவே, எல்லா காரியங்களிலும் செயல்படுகின்றார் (ரோமர் 8:28 பார்க்க). அதில், நம்மைப் பதறவைக்கின்ற, நோகச் செய்கின்ற காரியங்களும் அடங்கும். நம்மைத் துன்பத்துக்குள்ளாக்குவதும் சோதனைக்குள்ளாக்குவதுமே தேவன் நமக்குப் பொறுமையைக் கற்றுத்தரும் பாதையாகும். அதேவேளையில், நாம் பொறுமையைக் கற்றுக்கொள்வதற்கான ஒரே வழி, நம்மை அவருக்கு அர்ப்பணித்து, அவர் தம் விருப்பப்படி செயல்படட்டும் என விட்டுவிடுவதே.

தேவன் ஒரே இரவில் ஒரு காளானை உண்டாக்கக்கூடியவர். அதேவேளையில் சிந்தூரமரம் போன்ற இராட்சத மரங்களை உண்டாக்க அவருக்கு நீண்ட நாட்கள் தேவை. எகிப்தின் முதலமைச்சர் பதவிக்கு யோசேப்பைத் தயார்படுத்த, அவருக்கு 13 வருடங்கள் பிடித்தன. மோசேயின் 40 வருட ஊழியத்திற்கு 80 வருடங்களாக அவனை ஆயத்தப்படுத்தினார். தாவீதை இஸ்ரவேலின் ராஜாவாக சாமுவேல் அபிஷேகம் பண்ணியபோது, அவன் வாலிபனாக இருந்தான். ஆனால், அவன் அச்சிம்மாசனத்தில் ஏறுவதற்கு முன் மிகப்பெரிய பாடுகளை அனுபவிக்க வேண்டியவனாயிருந்தான். அதன்மூலம் நாமே ஐசுவரியவான்களானோம். ஏனென்றால், அந்த நாட்களில்தான், தாவீதின் மாபெரும் சங்கீதங்கள் உருவாயின.

நமது ஆண்டவர் மூன்று வருட பொது ஊழியத்திற்காக முப்பது வருடங்களை தயார்படுத்துவதில் செலவழித்தார். அந்த நாட்களில், பொறுமையோடு, தம் பிதாவின் சித்தத்துக்குக் கீழ்ப்படிந்தார். “என் வேளை இன்னும் வரவில்லை” (யோவான் 2:4) என்றார் மரியாளைப் பார்த்து. “பகலுக்குப் பன்னிரண்டு மணி நேரம் இல்லையா” என பொறுமையற்ற சீஷர்களைப் பார்த்துக் கேட்டார். தேவன் தமக்கென்று நேரத்தையும், நோக்கத்தையும் வைத்திருக்கின்றார். அவருடைய நேரத்தை தவறவிடுவதென்பது, அவரது நோக்கத்தைத் தாமதிக்க செய்வதாகும்.

நான் வேதாகம கல்லூரியிலே ஒரு மாணவனாக இருந்தபோது, வாரஇறுதியில், ஆலயமொன்றின் போதகராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. தேவன் பல வழிகளில் ஆசீர்வதித்தார். ஒரு கட்டத்தில் கல்லூரியை விட்டுவிட்டு, முழுநேரத்தையும் ஆலயத்திற்கென்று செலவிட நினைத்தேன். எனது கல்லூரி ஆலோசகர் என்னை சிந்திக்கச் செய்தார். “நீ இம்மட்டும் தொடர்ந்துவர, தேவன் பல காலமாக காத்திருந்தார். எனவே, நீ பட்டம் பெறும்வரை அவர் நிச்சயம் காத்திருப்பார். உடனடி தேவைக்காக நிரந்தரமானதைப் பலியிடாதே” என நினைவூட்டினார். அவர் சொன்னது சரி. அவருடைய ஆலோசனையைக் கடைப்பிடித்ததற்காக இன்று சந்தோஷப்படுகிறேன்.

பாடுகளின் சூளைதான் நாம் பொறுமையாயிருக்க கடினமான இடம். தேவன் தாம் என்ன செய்கிறாரென்றோ, ஏன் செய்கிறாரென்றோ விளக்கிக்கொண்டிருப்பதில்லை. பாடுகளின் வேளையில் தான் நாம் “வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும், நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருக்க வேண்டும்” (எபி.6:11). “நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது” (எபி.10:36). பிதாவானவர் நம்மருகில் இருக்கிறாரென்றும் அவர் தமது அற்புதமான நோக்கங்களை நிறைவேற்றுகிறாரென்பது நம்மை உற்சாகப்படுத்த வேண்டுமென்றும் அறிந்துள்ளபோதிலும், நாம் அடிக்கடி பொறுமையிழக்கத்தான் செய்கின்றோம்.

வேதனை அனுபவிக்கும் ஒரு பரிசுத்தவான், தனது போதகரைப் பார்த்து “ஏன் தேவன் என்னை இப்படி உருவாக்கினார்” எனக் கேட்டார். “அவர் இன்னும் உருவாக்கவில்லை. இப்பொழுதுதான் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்” என்றார் போதகர். இது எவ்வளவு உண்மை! இவ்வுண்மையை மறப்பது எவ்வளவு சுலபம்!

தேவன் ஒரு விசுவாசியை பொறுமைசாலியாக்குவாரானால், தம் இரக்கமுள்ள சித்தத்திற்குரிய எல்லாவற்றிற்காகவும் அவனை நம்புகிறார். ஆனால், பொறுமை என்னும் பாடசாலை ஒரு போதும் பட்டதாரிகளை உருவாக்குவதில்லை. நாம் கற்றுக்கொண்டேயிருக்கிறோம். வளர்ந்து கொண்டேயிருக்கிறோம். சிலவேளைகளில், பாடம் எதுவென்று அறியும் முன்னரே பரீட்சையில் தோல்வியடைகின்றோம். என்றாலும் பரவாயில்லை, நமதன்பின் பிதாவானவர் நம்மை வழி நடத்துகிறார். தமது பிரிய குமாரனின் சாயலுக்கு ஒப்பாக மாற்றுகிறார். அதுவே பிரதானம்!

“ஆண்டவா, எனக்குப் பொறுமையைத் தாரும்” என்ற ஜெபத்துக்கு தேவன் மறுமொழி அருளுவார். அநேகமாக நம்மைத் திடுக்கிடச் செய்யும் வழிகளில்! “அதை உடனேயே செய்யும்” என்ற ஜெபத்துக்கு, அவரால் பதில் தர இயலாது. எல்லாம் வல்ல தேவனுக்கும்கூட களிமண்ணை பாத்திரமாக வனைவதற்கு நேரம் எடுக்கின்றது. நானும் நீங்களும் செய்யக்கூடிய சிறந்த காரியம் என்னவென்றால், காலண்டர்களையும், கடிகாரத்தையும் பார்த்துக்கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, தேவனுடைய முகத்தை விசுவாசத்தோடே நோக்கிப்பார்ப்பதுதான். அவர் தமது விருப்பத்தின்படி இயங்கட்டும் தம்முடைய வேளைவரும்போது…!

 மொழியாக்கம்: Bro.Johndurai