கண்கள் திறக்கட்டும்!
தியானம்: 2026 ஜனவரி 26 திங்கள் | வேத வாசிப்பு: யோவான் 9:24-38

… அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கேயிருந்து வந்தவரென்று நீங்கள் அறியாதிருக்கிறது ஆச்சரியமான காரியம் … என்றான் (யோவா. 9:30).
பிறவிக் குருடனாகிய அவனுக்கு பிச்சை கேட்க மாத்திரமே தெரியும். பெற்றோர் உட்பட எவரும் அவனை ஒரு பொருட்டாகவே எண்ணுவதில்லை. அவனது கண்களை இயேசு திறந்தார், அவ்வளவுதான். அவனது வாழ்வே மாறியது. எந்த சமுதாயத்தில் அவன் பிச்சை எடுத்தானோ அங்கேயே திரும்பி வந்தான். இதுவரை அவனைத் திரும்பிபாராதவர்கள், இப்போது அவனைப் பிடித்துக் கேள்வி கேட்டார்கள். யூதருக்குப் பயந்த அவனது பெற்றோரே அவனைத் தனித்து கைவிட்டனர். ஆனால் ஏதோ ஒன்று அவனை உந்தித் தள்ளியது. இயேசுவை “கிறிஸ்து” என்று அறிக்கையிடுபவன் ஜெப ஆலயத்திலிருந்து தள்ளப்படுவான் என்பதைக் கேள்விப்பட்டிருந்தும் அவன் பயப்படவில்லை. “நீ அவனுடைய சீஷன்” என்று அவனை திட்டியபோதும் அவன் இயேசுவை உறுதியாக அறிக்கையிட்டான். பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ஒரு பிறவிக் குருடனுக்கு இந்த அறிவும் துணிவும் எங்கிருந்து வந்தது?
ஆண்டவர் நம்மைக் கண்டார், தொட்டார், மாற்றினார் என்பதை நாம் யாவரும் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால் அதன்பின் நமது வாழ்விலே நடந்தது என்ன? நடப்பது என்ன? இந்த மனுஷன் தன் புதுவாழ்வை உணர்ந்தான். அதை அனுபவித்தான், இயேசுவை அறிய ஆரம்பித்தான். அவனுடைய குருட்டுக் கண்கள் மாத்திரமல்ல, ஆவிக்குரிய கண்களும் திறந்தன. “இயேசு தேவனிடத்திலிருந்து வந்தவர். தேவபக்தியுள்ளவன் தேவனுக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்கு தேவன் செவிகொடுப்பார்” என்று, பரிசேயருக்குப் போதிக்கத்தக்க அறிவும் துணிவும் அவனுக்கு எங்கிருந்து வந்தது? பார்வை மட்டும் போதுமென்று இருந்திருந்தால் இவ்வளவும் நடந்திராது. பார்வையடைந்த அந்த விநாடியிலிருந்து அவன் ஆண்டவரை அறிகிற அறிவிலே வளர ஆரம்பித்திருந்தான். அது அவன் வாழ்க்கையிலே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. நாம் எந்த அறிவிலே வளருகிறோமோ, அந்த வழியில்தான் வாழ்வில் மாற்றம் ஏற்படுகிறது. எந்த வகையில் மாற்றம் வருகிறதோ, அதுவே நம் வாழ்வில் வெளிப்படுகிறது. எதிர்ப்புகள் மத்தியிலும் உறுதியாய் நின்ற அவன் இயேசுவை நேரிலே கண்டான். அவனுடைய மாம்ச கண்கள் மாத்திரமல்லாமல், அவனுடைய இதயக் கண்களும் திறக்கப்பட்டன. ஆனால் நமது மாம்ச கண்கள் ஏற்கனவே பார்வை உள்ளதாக இருந்தபோதும், ஏன் நம்மால் இயேசுவைக் காணமுடியவில்லை? அவரை அறியும் அறிவில் வளர முடிவதில்லை. இந்தப் புதிய ஆண்டிலே கண் சொருகிப்போன குருடரைப்போல இராதபடி, நமது ஆவிக்குரிய கண்களையும் திறக்கும்படி நம்மை ஒப்புவிப்போமாக. அவரை அறிகிற அறிவிலே வளர்ந்து, அவரை நமது வாழ்வில் வெளிப்படுத்துவோமாக. தைரியமாக இயேசுவே ஆண்டவர் என்று அறிக்கை செய்வோமாக.
ஜெபம்: அன்பின் தேவனே, எங்கள் ஆவிக்குரிய கண்கள் திறக்கப்படாததால் குன்றிப் போயுள்ள எங்கள் வாழ்வை உயிர்ப்பியும். ஆமென்.