தேவையற்ற நினைவுகள்!
தியானம்: 2026 மே 7 வியாழன் | வேத வாசிப்பு: யாத்திராகமம்; 16:1-3

இந்தக்கூட்டம் முழுவதையும் பட்டினியால் கொல்லும்படி நீங்கள் எங்களைப் புறப்படப்பண்ணி, … அழைத்து வந்தீர்களோ என்று அவர்களிடத்தில் சொன்னார்கள் (யாத்.16:3).
பல ஆண்டுகள் கடந்தாலும் நாம் ஒருசில காரியங்களை நன்கு நினைவில் வைத்திருப்போம். இது ஆச்சரியமான ஒன்று. ஒரு சிறுவன் பள்ளித்தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்ததால் தகப்பன் அவனைக் கடிந்து கொண்டார். மகனோ அவரை நோக்கி, “அப்பா நான் நன்றாக ஆயத்தம் பண்ணிக்கொண்டுதான் தேர்வுக்குச் சென்றேன். ஆனால் பரீட்சை அறையிலே எனக்கு எல்லாமே மறந்து விட்டது” என்றான். ஆனாலும் அவர், “நீ நல்ல மதிப்பெண்கள் எடுக்கும்வரைக்கும் உனக்குப் பிரியமான பந்து விளையாட்டுக்கு இன்றுமுதல் செல்லக்கூடாது” என தடைவிதித்தார். மகனோ, “அப்பா அப்படியல்ல, இன்று நம் நகரத்துக்கு பிரேவ் குழுவினர் வருகின்றனர். மாடக்ஸ் என்பவர் அதில் விளையாடுகிறார். கடந்த ஆண்டு அவருக்கு வயது 15. அவரது சராசரி ஓட்டம் 2.72. அவர் தொடர்ச்சியாக நான்கு முறை இளைஞருக்கான விருதுகளையும் ஏழு தங்கப் பதக்கங்களையும் பெற்றிருக்கிறார். மூன்றுமுறை ERA குழுவினரை நடத்தியுள்ளார். 5 ஸ்டார் குழுவிலும் விளையாடியுள்ளார்” என்றான். தகப்பனார் அவனுக்குப் பிடித்த அந்த விளையாட்டு விஷயங்களை அவன் நன்கு நினைவில் வைத்திருந்ததைக் கேட்டு வியந்து நின்றார்.
இஸ்ரவேல் மக்களும் இப்பையனைப்போல ஒரு சில காரியங்களை நன்கு நினைவில் வைத்திருந்தனர். சில காலத்துக்கு முன்பு எகிப்து தேசத்தில் அடிமைகளாய், வைக்கோல் இல்லாமல் செங்கற்கள் சுடவேண்டியதாயிருந்தது. இரக்கமற்ற எகிப்திய ஆளோட்டிகளால் அடிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். பிறக்கும் ஆண் பிள்ளைகளை கொல்லவேண்டும் என்ற கட்டளையை எபிரெய மருத்துவச்சிகள் பார்வோனிடமிருந்து பெற்றிருந்தனர். இவையெல்லாவற்றையும் இஸ்ரவேல் மக்கள் மறந்து, எகிப்தில் தாங்கள் உண்டு மகிழ்ந்த அப்பத்தையும் இறைச்சிப் பாத்திரத்தையுமே நினைவில் வைத்திருந்தனர். சாத்தானும் இதைப் போலவே நம்மையும் சோதிப்பான். அவிசுவாசிகளாக நாம் வாழ்ந்த நாட்களைவிட விசுவாசிகளாய் வாழும் நாட்கள் வருத்தம் நிறைந்ததாக இருக்கலாம். பின்னோக்கிப் பார்க்கும்பொழுது முந்திய நாட்கள் நல்ல நாட்களாகவே தோன்றும். நாம் அனுபவித்த வெறுமை, நம்பிக்கையற்ற நிலையை மறக்கடித்து, பாவம் நம்மைத் தோற்கடித்து அழித்துப்போட்டதை மறக்கச்செய்து, பாவத்தில் மகிழ்ந்த நாட்களை மட்டுமே பிசாசானவன் நினைப்பூட்டுவான். இப்படிப்பட்ட நினைவுகளை மூழ்கடித்து கடந்தகால யதார்த்தங்களை மட்டும் நினைப்பூட்ட தேவனிடம் கேட்போமாக. அவர் செய்த நன்மைகளை நினைப்போமாக. சாத்தானின் தந்திரமான காரியங்களில் ஏமாந்துவிடக்கூடாது. அவன் தெரிந்தெடுத்து தரும் விஷயங்கள் சகல உண்மைகளையும் வெளிப்படுத்தாது. அவை நம்மை தேவனைவிட்டுப் பிரித்துவிடும். ஆக தேவையற்ற நினைவுகளைக் குறித்து எச்சரிக்கையாயிருப்போம்.
ஜெபம்: கர்த்தாவே, சேற்றிலிருந்து எங்களைத் தூக்கியெடுத்து உம் பிள்ளையாய் மாற்றினீர். உமக்கு என்றென்றும் நன்றியுள்ளவர்களாய் வாழ எங்களுக்கு அருள் செய்யும். ஆமென்.