ஓய்வு நாள்
தியானம்: 2026 மே 11 திங்கள் | வேத வாசிப்பு: யாத்திராகமம் 16:19-24

நாளைக்குக் கர்த்தருக்குரிய பரிசுத்த ஓய்வுநாளாகிய ஓய்வு; …. மீதியாயிருக்கிறதையெல்லாம் நாளைமட்டும் உங்களுக்காக வைத்துவையுங்கள் என்றான் (யாத்.16:23).
சராசரியாக ஒரு மனிதன், ஒரு நாளின் 24 மணிநேரத்தில், 23,040 தடவை சுவாசிக்கிறான். 438 கன அடி காற்றை உள்ளிழுக்கிறான். 3.5 பவுண்டு எடை உணவை உட்கொள்ளுகிறான். 10 கோப்பை நீரை அருந்துகிறான். 4,800 சொற்களைப் பேசுகிறான். 750 தசைகளை அசைக்கிறான். இதயம் 1,03,689 முறை துடிக்கிறது. அவனது நகங்கள் 0.000046 அங்குலம் வளர்கிறது. மூளையின் 7 மில்லியன் செல்களைப் பயன்படுத்துகிறான். ஆச்சரியமாய் இருக்கிறதா? இவ்வளவு காரியங்களைச் செய்யும் அவனுக்கு ஓய்வு தேவைப்படுவது விந்தையாகாது.
இஸ்ரவேல் மக்களுக்கு வாழ்க்கை நெறிகளை அமைத்துக்கொடுத்த தேவன், அவர்களது சரீரம் ஓய்வினால் புதுப்பிக்கப்பட சிறிது நேரத்தை ஓய்வுக்காகவும் உருவாக்கி தந்தார். ஆனால் ஆவிக்குரிய பொருளிலோ, அவர்களது இரட்சிப்பு இன்னும் பூரணப்படவில்லை. மேசியா வந்து பாவத்தை எடுத்துப்போடும் போதுதான் அவர்களுக்கு நிரந்தர ஓய்வு கிடைக்கும். யூத மக்கள் ஓய்வுநாளை ஆசரித்தாலும் அவர்களுக்கு இளைப்பாறுதல் என்பது எதிர்காலத்தில் நிறைவேறப்போகும் காரியம் என்பதை எபிரெய புத்தகத்தின் ஆக்கியோன் தெளிவாக விளக்குகிறார். யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்கு உட்படுத்தியிருந்தால், பின்பு அவர் வேறொரு நாளைக் குறித்து சொல்லியிருக்க மாட்டாரே. ஆகையால், தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது (எபி.4:8-9).
பத்து கற்பனைகளிலுள்ள, ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக’ என்ற கற்பனை மட்டும் புதிய ஏற்பாட்டில் மீண்டுமாகத் தரப்படவில்லை. பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் எதிர்பார்த்திருந்ததும், ஓய்வுநாள் குறிக்கும் ஆவிக்குரிய இளைப்பாறுதலுமானது, “வருத்தப்பட்டுப் பாரஞ் சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்தேயு 11:28) என்ற இரட்சகர் இயேசுவின் அழைப்பில் நிறைவேறுகிறது.
ஆரோக்கியமான சரீரத்துக்கு ஒருநாள் ஓய்வு அவசியமானதுதான். ஆனால் அது சரீரத்தின் தேவைதானே தவிர, அதனை ஆவிக்குரிய சட்டமாக்கக்கூடாது. கிறிஸ்துவில் கிடைக்கும் உண்மையான இளைப்பாறுதலில் நாம் நிச்சயமாகவே மகிழ்ந்து களிகூருகிறோம். அந்த ஓய்வும் இளைப்பாறுதலும் நமக்காக வைக்கப்பட்டிருக்கிறது. அதுவரை ஓய்வு என்பது அவசியமே, ஆனால் கட்டாயமல்ல. எனினும், தேவன் தருகின்ற ஓய்வை அனுபவித்து நம்மைப் புதுப்பித்துக் கொள்வோமாக.
ஜெபம்: “கர்த்தாவே, அனுதினமும் உமது சமுகத்தில் காத்திருந்து சரீரத்திலும் ஆத்துமாவிலும் புதுப்பெலன் அடைந்து தேவபணி புரிய எங்களை ஒப்படைக்கிறோம். ஏற்றுக்கொள்ளும். ஆமென்.