எதிராளியாகிய பிசாசானவன்
தியானம்: பிப்ரவரி 1 சனி; வாசிப்பு: ஆதியாகமம் 3:1-10
“அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை
நசுக்குவாய்.” (ஆதியாகமம் 3:15)
கிறிஸ்தவ வாழ்வு போராட்டங்கள் நிறைந்தது. நாம் எப்போதும் விழிப்புடனும், தெளிவான சிந்தையுடனும் இருக்கவேண்டும். ஏனெனில், நமக்கு எதிராளி ஒருவன் இருக்கிறான். அவனை நாம் எதிர்த்துப் போராடித்தான் வாழவேண்டும். நம்மைத் தேவனிடமிருந்து பிரிப்பதும், பாவத்துக்குள் வீழ்த்துவதுமே அவனது பிரதான நோக்கம் என்பதைக் குறித்து நாம் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். அந்த எதிராளிதான் பிசாசானவன்.
பிசாசின் தந்திரங்களில் முக்கியமான ஒன்று, தேவனைக் குறித்தும் அவரது வார்த்தைகளைக் குறித்தும் சந்தேகத்தைக் கிளப்பிவிடுவதே என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஏதேன் தோட்டத்தின் நடுவில் இருந்த விருட்சத்தின் கனியைக் குறித்து தேவன், தாம் உருவாக்கின மனுஷருக்குத் தெளிவாகக் கூறியிருந்தார். அப்படியிருக்க, சர்ப்பமாக வந்த சாத்தான், ஸ்திரீயின் மனதிலே சில சந்தேகங்களை எழுப்பினான். தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னதுண்டோ என்று கேட்டான். இது ஒரு கூற்று அல்ல; சந்தேகத்தைக் கிளப்பிவிடுகின்ற ஒரு கேள்வி. இப்படியாகவே அவன் ஸ்திரீயைக் குழப்பி, அவளைக் கீழ்ப்படியாமையின் பாவத்தில் வீழ்த்தினான். அவள் மூலமாக ஆதாமையும் வீழ்த்தினான். தேவன் உருவாக்கிய மனிதனைப் பாவத்தில் வீழ்த்தி, தானோ வெற்றிகொண்டான்.
எந்த மனிதனைத் தேவன் தமக்குச் சொந்தமாக வைத்திருக்கும்படிக்குத் தமது சாயலாகப் படைத்தாரோ, அந்த மனிதனைத் தேவனிடமிருந்த பிரிப்பதே எதிராளியாகிய பிசாசின் நோக்கமாயிருந்தது. ஏதேனிலே பாவத்தில் விழுந்த மனிதன் இப்போது தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டு ஒளித்துக்கொண்டான். கர்த்தர், “ஆதாமே” என்று பெயர் சொல்லி கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கிறாய்” என்றார். அவனோ, “நான் நிர்வாணியாய் இருப்பதினால் பயந்து ஒளித்துக்கொண்டேன்” என்றான். அங்கே சாத்தான் தனது திட்டத்தை வெற்றியாக முடித்துவிட்டான்.
கிருபையாய் மீட்புப் பெற்ற நாம் இன்று தேவ பிரசன்னத்தில் மகிழ்ந்திருக்கிறோமா? அல்லது, தேவ சமுகத்திற்கு ஒளித்து வாழுகிறோமா? நாம் நம்மை ஆராய்ந்து பார்ப்போம். நமக்குள்ளே தேவனைக் குறித்தும், அவரது வார்த்தைகளைக் குறித்தும் சந்தேகங்கள் எழும்புகின்றனவா? ஜாக்கிரதையாய் இருப்போம். சத்துருவானவன் சந்தேகங்களினால் நம்மை வீழ்த்த தந்திரமுள்ளவனாய் இருக்கிறான். பிசாசுக்கு எதிரான போராட்டத்திலே நாம் ஒருநாளும் ஓய்ந்துபோகக்கூடாது ஏனெனில், நம்மை விழத்தள்ளும் வரைக்கும் அவனும் ஓய்ந்து போவதில்லை.
ஜெபம்: அன்பின் ஆண்டவரே, எதிராளியான பிசாசானவனை உமது பெலத்தினால் நான் மேற்கொண்டு வாழ உதவி செய்தருளும், ஆமென்.