உபத்திரவத்திலும் நம்பிக்கை
தியானம்: ஏப்ரல் 10 வியாழன்; வாசிப்பு: யோவான் 16:31-33
“…உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு,
ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை
ஜெயித்தேன் என்றார்.” (யோவான் 16:33)
கிறிஸ்துவின் பிள்ளைகள் உபத்திரவப்பட வேண்டுமா என்ற கேள்வி பலருக்கும் எழுவதுண்டு. அது கூடாது என்று வாதிடுவோரும் உண்டு. ஒரு கிறிஸ்தவன் உபத்திரவங்களுக்கூடாகக் கடந்துசென்றால், அவன் ஏதோ பாவம் செய்திருக்கிறான் என்றுகூடக் கூறுவோரும் உண்டு. ஆனால் இப்பாடுகளைக் குறித்து இயேசு என்ன கூறினார், அவர் எப்படி நமக்கு மாதிரியை வைத்துப் போனார் என்று யோவான் கூறுவதை நாம் சிந்திப்போம்.
ஏற்கனவே தாம் சீஷருக்குச் சொன்ன பல விஷயங்களை இயேசு ஒன்று திரட்டிக் கூறியதை இன்றைய வாசிப்புப் பகுதியில் நாம் கவனிக்கலாம். தமக்கு சீஷனாயிருப்பவனுக்கு இவ்வுலகில் உபத்திரவம் வருவதைத் தவிர்க்க முடியாது என்றும், சோர்ந்துபோகாமல் முகங்கொடுக்கும்படிக்கும் இயேசு தமது சீஷரை உற்சாகப்படுத்துவதையே இங்கே காண்கிறோம். எந்த உபத்திரவத்திலும் அவர்கள் தனித்து நிற்கப்போவதில்லை என்றும், தாம் அவர்களைக் கைவிடுவதில்லை என்றும் இயேசு உறுதியளிப்பதையும் காண்கிறோம்.
மாத்திரமல்ல, தமக்கு வந்த உபத்திரவங்களில் இயேசு நமக்கு ஒரு மாதிரியையும் வைத்துள்ளார். அவர் தேவகுமாரனாயினும், மனுஷனாய் இவ்வுலகிற்கு வந்ததினிமித்தம் பல உபத்திரவங்களைச் சந்தித்தார். பரிசேயர், வேதபாரகர், சபையின் மூப்பர்கள் யாவருடைய எதிர்ப்புகளையும் பொய்க் குற்றச்சாட்டுக்களையும் தமது ஊழியத்தின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை இயேசு எதிர்கொண்டார். மரண வேளையிலும் தமது சரீரத்தில் எவ்வளவாய் உபத்திரவப்பட்டு மரணத்தைத் தழுவிக்கொண்டார்! அவர் தமது ஆவி, ஆத்துமா, சரீரம் மூன்றிலும் உபத்திரவப்பட்டார். ஆனாலும், பிதா அவரைக் கைவிடவில்லை. உபத்திரவம் முடிவல்ல; இயேசு மரணத்தை ஜெயமாக்கி உயிரோடு எழுந்தாரே!
இன்றும் தேவ ஊழியர்கள் பலர் பல நாடுகளிலும் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் பல உபத்திரவங்களுக்கூடாகக் கடந்துசெல்லுகிறார்கள். சில குறிப்பிட்ட நாடுகளில் தேவபிள்ளைகள் மிகவும் துன்புறுத்தப்படுவதை மறுக்கமுடியாது. ஆனாலும், ஆண்டவர் ஒரு திடநம்பிக்கையைத் தந்துபோயுள்ளார். “…திடன் கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன்” என்றார் இயேசு. ஆம், இயேசு உலகத்தை ஜெயித்துவிட்டார். எந்த சூழ்நிலையிலும் இந்த வெற்றியை நினைவுகூருவோமாகில், கிறிஸ்துவினிமித்தம் எவ்வளவுதான் உபத்திரவம் நேரிட்டாலும் நமது இருதயத்தின் சமாதானத்தை எதுவுமே அசைத்துவிட முடியாது. ஏனெனில், ஆண்டவர் நம்மோடுகூடவே இருக்கிறார். இதுவே நமது விசுவாசம்.
ஜெபம்: “தேவனே! எந்த உபத்திரவத்திலும் கிறிஸ்துவின் வார்த்தைகளால் என்னைப் பலப்படுத்தி முன்செல்ல உம் கிருபை தந்தருளும். ஆமென்.”