சத்திய வசனம் பங்காளர் மடல்
மார்ச்-ஏப்ரல் 2021
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,
மரணத்தை ஜெயமாக வென்ற இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
இவ்விதழின் வாயிலாக தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். ஒரு மனிதன் தன் பிள்ளையை சுமந்துவருவதுபோல இவ்விடம் வருகிறவரைக்கும் நம்மை சுமந்து நடத்திவந்த தேவனைத் துதிப்போம். குறிப்பாக ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்காகவும் மேலும் மேற்கு வங்காளம், அஸ்ஸாம், கேரளா, புதுச்சேரி அகிய மாநிலங்களின் தேர்தலுக்காகவும் உன்னதமானவருடைய தீர்மானம் தேசத்தில் விளங்க, தேசம் சேமம் அடைய திறப்பில் நின்று மன்றாடுவோம். இப்போதும் கொரோனா உருமாற்றம் ஆகி அதன் பரவலும் அதிகமாகி வருவதாக நாம் கேள்வியுறுகிறோம். கர்த்தரோ ஆதரவாக இருந்து இத்தொற்றின் அச்சுறுத்தலுக்கும் பயங்களுக்கும் நமது தேசத்தையும் நமது பங்காளர்களின் குடும்பங்களையும் விலக்கிக் கண்மணிப்போலப் பாதுகாக்கவும் நாங்கள் வேண்டுதல் செய்கிறோம்.
சத்தியவசன ஊழியத்தோடு தொடர்புகொண்டு மின்-அஞ்சல், தொலைபேசி, கடிதங்கள் குறுஞ்செய்திகள் மூலமாக தங்கள் ஜெபவிண்ணப்பங்களைத் தெரிவித்த அனைத்து ஜெபத்தேவைகளுக்காகவும் மன்றாட்டு ஜெபங்களை ஏறெடுக்கிறோம். தங்களுக்காக ஜெபிக்க வேண்டிய விசேஷித்த ஜெபக்குறிப்புகள் இருந்தால் எங்களுக்குத் தெரிவியுங்கள். 2019ஆம் ஆண்டிலே நிறுத்தம் செய்திருந்த சத்தியம் டிவி நிகழ்ச்சிகள் பிப்ரவரி மாதத்திலிருந்து மறுபடியும் ஒளிபரப்பாகி வருகிறது என்பதை தெரியப்படுத்துகிறோம். இந்நிகழ்ச்சிகளில் குடும்பமாக பங்குபெற்று ஆசீர்வாதம் பெறுங்கள்.
இவ்விதழில் வேதாமத்திலிருந்து தேவன் என்னோடு எவ்வாறு பேசுகிறார் என்ற தலைப்பில் கலாநிதி அஜித்பெர்னாண்டோ அவர்கள் நாம் வேதத்தை அனுதினமும் வாசிக்கவேண்டிய ஒழுங்கு முறைகளைப் பற்றி எழுதியுள்ளார்கள். நாம் தேவனுடைய கிருபையை அறிந்துகொள்வதற்கு சிறந்த இடம் சிலுவையே என்பதை வலியுறுத்தி சிலுவையில் காணப்படும் தேவனுடைய பண்புகள் என்ற தலைப்பில் Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதியுள்ளார்கள். இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணத்தின்போது நிகழ்ந்த ஒரு கள்ளனின் ஆச்சரியமான வேண்டுதலை தியானித்து இன்றைக்கு என்னுடனேகூட… என்ற தலைப்பில் Dr.W.வாரன் வியர்ஸ்பி அவர்களது கட்டுரையும், சிலுவையை எடுத்துக்கொண்டு… என்ற தலைப்பில் சிலுவையை எடுத்துக்கொண்டு பின்பற்றுவது என்றால் என்ன என்பதை விளக்கி பேராசிரியர் எடிசன் அவர்கள் எழுதிய கட்டுரையும் இடம் பெற்றுள்ளது.
மேலும் உயிர்த்தெழுந்த ஆண்டவர் தரும் ஆசீர்வாதங்கள் என்ற தலைப்பில் சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் எழுதிய செய்தியும், நமது விசுவாச பயணத்தை உத்தமத்தோடும் தேவபெலத்தோடும் ஓடுவதற்கு வேண்டிய சத்தியங்களை தூரப்பயணம் போவோமா… என்ற தலைப்பிலும் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ளார்கள். இச்செய்திகள் தங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படி ஜெபிக்கிறோம்.
கே.ப.ஆபிரகாம்