சத்திய வசனம் பங்காளர் மடல்
(ஜூலை-ஆகஸ்ட் 2022)
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,
நமது ஒத்தாசையும் பெலனுமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
இவ்விதழ் வாயிலாக தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். தேவனுடைய பெரிய கிருபையால் சத்தியவசன ஊழியத் தேவைகள் அனைத்தையும் கர்த்தர் சந்தித்து நடத்திவருகிறபடியால் கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறோம். சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சி, இணையதளம், சோஷியல் மீடியாக்கள் ஆகியவற்றின் வாயிலாக அனுதினமும் மக்களை சந்திக்க தேவன் கிருபை செய்துவருகிறார். இவ்வூழியங்களின் வாயிலாக இன்னும் அநேகமாயிரம் ஆத்துமாக்கள் ஆதாயப்படுத்தப்படவும், அநேகருடைய ஆவிக்குரிய வாழ்வு கட்டப்படவும் வேண்டுதல் செய்வோம். மேலும் தங்கள் ஜெபங்களில் சத்தியவசன ஊழியங்களைத் தாங்க அன்பாய் கேட்கிறோம்.
தேவன் இவ்வூழியத்திற்கு தந்திருக்கிற அன்பு பங்காளர் குடும்பங்களுக்காகவும், அவர்கள் தருகிற ஆதரவுக்காகவும் தேவனை ஸ்தோத்திரிக்கிறோம். உங்கள் ஆவிக்குரிய நண்பர்கள், விசுவாசிகள், உறவினர்களுக்கும் சத்தியவசன ஊழியத்தை அறிமுகப்படுத்தி வைக்க அன்பாய் கேட்கிறோம். தங்கள் பங்காளர் சந்தாவைப் புதுப்பித்துக் கொள்ளாதவர்கள் தயவுசெய்து சந்தாவைப் புதுப்பித்து இவ்வூழியங்களுக்கு ஆதரவை அளிக்க கேட்டுக்கொள்கிறோம். மேலும் இவ் வூழியத்தின் வாயிலாக தாங்கள் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதத்தை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களோடு சேர்ந்து நாங்களும் தேவனை மகிமைப்படுத்த ஏதுவாக இருக்கும். சத்தியவசன புத்தக வெளியிடுகளை மறுபதிப்பு செய்யும் வேலையை மேற்கொண்டு வருகிறோம். இதற்கான பொருளாதாரத் தேவைகள் அனைத்தும் சந்திக்கப்படவும் உங்கள் ஜெபங்களில் நினைத்துக்கொள்ளுங்கள். நமது இருமாத இதழ்கள் பிரிண்டிங் செய்வதற்கான பேப்பர் பெறுவதில் உள்ள சிரமங்கள் மாற தொடர்ந்து வேண்டுதல் செய்ய அன்பாய் கேட்கிறோம்.
இவ்விதழில் நானே ஜீவன் (இயேசு) என்ற தலைப்பில் பேராசிரியர் S.C.எடிசன் அவர்கள் வழங்கிய செய்தியும், 121 ஆம் சங்கீதத்திலிருந்து ஒத்தாசை தரும் தேவன் என்ற தலைப்பில் சகோ.பழனிவேல் ஆபிரகாம் அவர்கள் எழுதிய செய்தியும், அப்.பவுல் எபேசியர் நிருபத்தில் விசுவாசிகளுக்காக பண்ணிய விண்ணப்பத்தை தியானித்து பிரகாசமான மனக்கண்கள் என்ற தலைப்பில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதிய செய்தியும் இடம் பெற்றுள்ளது. மேலும் தானியேல் புஸ்தகம் தொடர் வேதபாடத்திலிருந்து நான்கு வல்லரசுகளின் எழுச்சி என்கிற சிறப்புச்செய்தியும், Dr.தியோடர் எச்.எஃப் அவர்கள் எழுதிய காலங்களைப் பற்றிய சத்தியம் என்ற தொடர் வேதபாடமும், சகோ.நீரியஸ் பெர்னாண்டோ அவர்கள் எழுதிய மனித வாழ்வின் எதிர்பார்ப்பு என்ற சிறப்புச் செய்தியும் இடம்பெற்றுள்ளது. இச்செய்திகள் யாவும் தங்களுக்கு அதிக பிரயோஜனமாகவும் ஆவிக்குரிய வாழ்வின் எழுச்சிக்கு பயனுள்ளதாகவும் இருக்கும் என்று விசுவாசிக்கிறோம். உங்களுக்காக ஜெபிக்கிறோம்.
கே.ப.ஆபிரகாம்