Bro. நீரியஸ் பெர்னாண்டோ
(ஜூலை-ஆகஸ்ட் 2022)

Bro. நீரியஸ் பெர்னாண்டோ
மனிதர்கள் பொதுவாக சிறுபிள்ளைகளாய் இருக்கும்போது தமது சிறுபிராயத்தைக் குறித்து சலிப்படைந்து விரைவில் பெரியவர்களாகிவிட வேண்டுமென துடிக்கிறார்கள். ஆனால், பெரியவர்களானதும் மீண்டும் சிறியவர்களாக விரும்புகின்றனர். அதேபோல பணம் சம்பாதிக்க தமது உடல் நலத்தையும் கவனியாது இரவு பகல் என பாடுபட்டு உழைக்கிறார்கள். ஆனால் வாழ்வின் இறுதிக் காலத்தில் நாம் இழந்துபோன உடல் நலத்தைத் திரும்பப்பெற கஷ்டப்பட்டு உழைத்த பணத்தையெல்லாம் செலவழிக்கிறார்கள். அதுமட்டுமன்றி, அவர்கள் எப்போது பார்த்தாலும் எதிர்காலத்தைக் குறித்தும் தம்மிடம் இல்லாததைக் குறித்தும் ஏங்குவதால் அவர்கள் நிகழ் காலத்திலுள்ள நன்மைகளில் சந்தோஷப்பட்டு திருப்தியடைவதே இல்லை. இதுதான் மனித வாழ்வின் ஏக்கமாய் இருக்கிறது.
ஆனால் மோசே தனது ஜெபத்தில் தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும் (சங்.90:15) என ஒரு அர்த்தமுள்ள ஜெபத்தை முன்னெடுக்கிறார்.
இன்று மனிதன் எதைச் செய்தாலும் அதற்கு ஒரு நோக்கம் அல்லது ஒரு காரணம் இருக்கும். நோக்கம் இல்லாமல் நாம் எதையும் செய்வதே இல்லை. அவ்வாறாக மனிதனுடைய அடிப்படையான நோக்கம் என்ன என்று பார்ப்போமானால், மனிதன் தன் மகிழ்ச்சிக்காகவே எதையும் செய்கிறான். நாம் மகிழ்ச்சியாயிருப்பது தவறு அல்ல. ஆனால் தவறான காரியங்களில் நாம் மகிழ்ச்சி அடைய முடியாது. ஏனெனில் கடவுள் மனிதனை படைத்தபோது அவன் தன்னிலும் தன் படைப்புகளிலும் திருப்திகொண்டு மகிழ்ச்சியடைய வேண்டும் என்பதே அவருடைய நோக்கமாயிருந்தது.
ஆனால், பாவத்தால் மகிழ்ச்சியை இழந்த மனிதன் மீண்டும் அம்மகிழ்ச்சியை பெற்றுக்கொள்ளவே இன்று படாதபாடு படுகின்றான். பணத்தை சம்பாதிப்பதினால், வாய்க்கு ருசியான உணவு வகைகளினால் தன் வயிற்றை நிரப்பிக்கொள்வதினால், விதவிதமாய் ஆடை ஆபரணங்களை வாங்கி அணிந்துகொள்வதினால், புதிய உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதினால், வீட்டை பலவிதமான நவீன சாதனங்களினால் நிரப்புவதினால், ஏதாவது ஒன்றை சாதித்து பெருமை கொள்வதினால் என இப்படியாக எவ்விதத்திலாவது மகிழ்ச்சியைக் கண்டுகொள்ளவே கடும் பிரயாசப்படுகிறான். ஆனால், நமது மெய்யான மகிழ்ச்சி நம்முடைய ஆண்டவரிடமிருந்து நமக்குக் கிடைக்கின்றது என்பதை மறந்துவிடுகிறான்.
இதை இன்னும் ஒருபடி ஆழமாய் விளக்க ஒரு சிறு உதாரணத்தை கூறி முடிக்க விரும்புகிறேன்.
ஒரு அரசனுக்கு 4 மனைவியர் இருந்தார்கள். அவன் தனது 4வது மனைவியை எல்லாரிலும் அதிகம் நேசித்தான். அவளுக்கு உடுக்க சிறந்த உடைகளையும், உண்ண சுவையான உணவையும் வாங்கிக் கொடுப்பானாம். இப்படியாக அவளில் அதிகமாக கரிசனைகொண்டு நேசித்தான். அதுபோல அவன் தனது 3வது மனைவியையும் நேசித்தான். அவளது அழகைக் குறித்து அடிக்கடி பெருமைப்பட்டுக் கொள்வான். ஒரு வேளை அவள் தன்னைவிட்டுப் போய் விடுவாளோ என்ற பயமும் அவனுக்குள்ளே இருந்தது.
அவ்வாறே அவன் தனது 2வது மனைவியையும் அன்பு செலுத்தினான். அவள் அவனுக்கு பெரும் ஆறுதலாக இருந்தாள். அவன் கவலையோடும் மனக்கலக்கத்தோடும் இருக்கும் நேரங்களில் இந்த இரண்டாவது மனைவியிடம் சென்று ஆறுதலையும் ஆலோசனையும் பெற்றுக்கொள்வான். ஆனால் அவனது முதல் மனைவியோ அவனுக்கு மிகவும் உண்மையுள்ள மனைவியாக, அவனுடைய வாழ்க்கையைக் குறித்த கரிசனையுள்ள ஒரு மனைவியாக இருந்தாள். ஆனால் அவனோ, அவளைக் குறித்து சற்றும் அக்கறையற்றவனாக, அவள் இருப்பதையே மறந்தவனாக வாழ்ந்து வந்தான்.
ஒருநாள் அரசன் அதிகமான நோய்வாய்ப்பட்டு இறக்கும் நிலையில் தனது 4வது மனைவியை அழைத்து, “நான் இன்னும் சில நாட்களில் சாகப் போகிறேன். நான் உனக்கு விலையுயர்ந்த ஆடைகளையும் ருசியான உணவு வகைகளையும் வாங்கித்தந்தேனே, எனது சாவிலும் நீ என்னோடு வருவாயா?” என்று கேட்டானாம். அதற்கு அவள் முடியாது என மறுத்துவிட்டாள்.
உடனே அவன் தனது 3வது மனைவியை அழைத்து, “உன்னை நான் எவ்வளவாய் நேசித்தேன் என்பதும் உன்னைக் குறித்து நான் எவ்வளவாய் பெருமைப்பட்டேன் என்பது உனக்குத் தெரியும். சரி, நீயாவது என்னோடு வருவாயா?” என்று கேட்க அவளும் முடியாது என்று மறுத்துவிட்டாள்.
இறுதியாக, 2வது மனைவியை அழைத்து “வாழ்விலே நீ எனக்கு எவ்வளவோ ஆறுதலாய் இருந்தாயே, அதுபோல என் சாவிலும் நீ என்னோடு வருவாயா?” என்று கேட்க, அவளோ “இல்லை என்னால் முடியாது, வேண்டுமானால் கல்லறைமட்டும் வருகிறேன். அதற்குமேல் என்னால் வரமுடியாது” என மறுத்துவிட்டாள்.
அப்பொழுது “நான் வருகிறேன்” என சத்தம் கேட்டது. உடனே அரசன் சத்தம் வந்த திசையை நோக்கி தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, அங்கே அவனுடைய முதல் மனைவி கதவோரமாய் நின்றுகொண்டிருப்பதைக் கண்டான். “யார் வராவிட்டாலும் உங்களோடு நான் எங்கு வேண்டுமானாலும் வரத் தயாராய் இருக்கிறேன்” என்று சொன்னாள். அவன் அவளைக் கூர்ந்து கவனித்தான். அவள் சரியான உணவு இன்றி மெலிந்து வாடிப்போய் காணப்பட்டாள்.
அரசன் தன் மனதுக்குள் “ஐயோ இவளை அல்லவா என் வாழ்நாளில் அதிகமாய் கரிசனை கொண்டு நான் கவனித்திருக்க வேண்டும். தவறு செய்துவிட்டேனே” என எண்ணி வருந்தினான்.
அருமையானவர்களே, இந்தக் கதை நமக்கு ஒரு அருமையான பாடத்தைக் கற்றுத்தருகிறது. இதில் வரும் 4வது மனைவி நமது உடலைக் குறிக்கிறது. இந்த உடலுக்கு உடுக்க சிறந்த உடைகளையும் உண்ண சுவையான உணவையும் கொடுத்திருக்கிறோம். ஆனால் மரணத்தின்பின் இந்த உடல் நம்மோடு வரப்போவதில்லை.
அடுத்ததாக, 3வது மனைவி நமது வீடு வாசல் சொத்து சுகங்களைக் குறிக்கிறது. இவைகளைக் குறித்து அடிக்கடி பெருமைப்பட்டுக்கொள்கிறோம். இவை நம்மைவிட்டு போய்விடுமோ என சிலவேளைகளில் எண்ணிப்பயப்படுகிறோம். ஆனால், இதுவும் மரணத்திற்குப் பின் நம்மோடு வரப்போவதில்லை.
அடுத்ததாக, இரண்டாவது மனைவி நமது உறவுகளைக் குறிக்கிறது. அவர்கள் நமக்குப் பெரும் ஆறுதலாகவும். நாம் கவலையோடும் மனக் கலக்கத்தோடும் இருக்கும் நேரங்களில் அவர்கள் நமக்கு ஆறுதலையும் ஆலோசனைகளையும் தரக்கூடும். ஆனால், மரணத்தின் பின் அவர்கள் கல்லறை வரை மட்டுமே வரப்போகிறார்கள்.
இறுதியாக, முதல் மனைவி நமது ஆத்துமாவைக் குறிக்கின்றது. அநேக நேரங்களில் நாம் அதைக் குறித்து சற்றும் அக்கறையற்றவர்களாக, அப்படி ஒன்று நமக்குள் இருப்பதையே மறந்து வாழ்கிறவர்களாக நாம் இருப்பதுண்டு. ஆனால் மரணத்தின் பின் நம்மோடு வரப்போவது நமது ஆத்துமா மாத்திரமே. அதை நாம் எந்தளவு அக்கறைகொண்டு, கரிசனையோடு பராமரித்து பாதுகாத்திருக்கிறோம் என நம்மை நாமே ஆராய்ந்து மனந்திரும்பியவர்களாக, ஆண்டவரின் கிருபை வேண்டி மன்றாடுவோமாக. நிலையற்ற மனிதவாழ்விலே பாடுகள் வேதனைகள் இல்லாத மனிதர்களே இல்லை. எல்லா மனிதருக்கும் ஏதோ ஒரு வேதனை இருக்கத்தான் செய்கின்றது. ஆனாலும், தேவனை தனிப்பட்ட விதத்தில் அறிந்துகொண்டு அவருடன் வாழும்போது அவர் தரும் மெய்யான பாதுகாப்பை அனுபவிப்போம். கர்த்தரின் கரத்திற்குள் நாம் இருப்பதல்லவோ நமது பாதுகாப்பு.
நாம் அடைக்கலமாகக் கொண்டிருக்கும் நம் ஆண்டவர் எங்கோ அணுகமுடியாத தூரத்திலிருக்கும் ஒருவர் அல்ல. மாறாக அவரே சகலத்தையும் ஆளுபவர். எனவே நமது வாழ்க்கை அவர் கரத்தில் பாதுகாப்பாய் இருக்கிறது என்ற நிச்சயத்துடன் வாழ்வோம். இனி வரும் நாட்கள் ஆண்டவருக்குள் மகிழ்ச்சி நிறை நாட்களாக அமைய தேவன்தாமே வழிநடத்துவாராக!