Bro.K.P.ஆபிரகாம்
(ஜூலை-ஆகஸ்ட் 2022)

Bro.K.P.ஆபிரகாம்

121ஆம் சங்கீதம் நம் அனைவருக்கும் நம்பிக்கையையும் ஆறுதலையையும் தரும் ஓர் சங்கீதமாகும். உதவியற்ற ஒருவனுக்கு தேவன் எவ்வளவு ஆதரவாக இருக்கிறார் என்பதையும் பாதுகாப்பற்ற நிலையை உணரும் ஒருவனுக்கு அவரே அவனது பாதுகாவலராயிருக்கிறார் என்பதையும் இந்த சங்கீதம் நமக்கு உறுதியளிக்கின்றது.

சங்கீதம் 121 ஆரோகண வகை சங்கீதமாகும். ஆரோகண சங்கீதம் என்றால் மலையேற்றப் பாடல்கள் என்று பொருள்படும். இஸ்ரவேலர் வருடத்திற்கு மூன்று முறை எருசலேம் தேவாலாயத்திற்கு வந்து தேவனைத் தரிசிப்பதும் பலியிடுவதும் அவர்களது வழக்கமாயிருந்தது (யாத்.23:17). குறிப்பாக பஸ்கா பண்டிகை, கூடாரப் பண்டிகை மற்றும் பெந்தேகோஸ்தே பண்டிகை ஆகிய பண்டிகைகளின்போது இஸ்ரவேல் தேசத்திலிருக்கிற அவருடைய ஜனங்களும், பிறதேசங்களில் சிதறியிருந்தவர்களும் எருசலேம் தேவலாயம் அமைந்திருக்கிற மலையை நோக்கி பிரயாணப்பட்டு வரும்போது வழிநெடுக ஆரோகண சங்கீதங்களைப் பாடிக்கொண்டு வந்தனர். 120 முதல் 134 வரையுள்ள 15 சங்கீதங்களும் இவ்வாறு பாடப்பட்டவையாகும்.

இச்சங்கீதங்களின் மையக்கருத்தாக இருப்பது, தேவன் ஒருவரே நம் வாழ்வின் ஆதாரமாயிருக்கிறார். அவர் ஒருவரே சமாதானம் அருளமுடியும், நமக்கு உதவி செய்யமுடியும், நமது பாதுகாவலராயிருக்க முடியும், நமக்கு அவர் ஒருவரே இரக்கம் பாராட்டமுடியும், சீயோனை நோக்கிய நமது வாழ்க்கைப் பயணத்திலும் தேவனே நமது ஆதாரமாயிருக்கிறார். அவரே நமது கீதமாயிருக்கிறார்.

121ஆம் சங்கீதத்தில் இடம்பெற்றுள்ள ஒத்தாசை என்ற பதத்திற்கு உதவி என்ற பொருள் உண்டு. மனிதனுடைய ஒத்தாசையோ அல்லது உதவியோ நிரந்தரமானதல்ல. சில நேரங்களில் அது விருதாவாகிவிடுகிறது. ஆகையால்தான் சங்கீதக்காரன் தேவனிடம், “இக்கட்டில் எங்களுக்கு உதவி செய்யும் மனுஷனுடைய உதவி விருதா” என்று விண்ணப்பிக்கிறார் (சங்.108:12).

யூதாவின் ராஜாவாகிய ஆகாஸ் என்பவன் அசீரியா இராஜாவிடமிருந்து ஒத்தாசையைப் பெற்றுக்கொள்வதற்கு ஆட்களை அனுப்புகிறான். ஆனால் இறுதியில், “ஆகாஸ் கர்த்தருடைய ஆலயத்தில் ஒரு பங்கும், ராஜ அரமனையில் ஒரு பங்கும், பிரபுக்களின் கையில் ஒரு பங்கும் எடுத்து, அசீரியாவின் ராஜாவுக்குக் கொடுத்தும், அவனுக்கு உதவி கிடைக்கவில்லை” என்று 2 நாளாகமம் 28:21இல் வாசிக்கிறோம். அவன் ஏமாற்றமடைந்தான். ஆனால், எந்தவிதமான ஒத்தாசையையும் நாம் தேவனிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்பதைத்தான் 121ஆம் சங்கீதத்தின் வாயிலாக நாம் அறிந்துகொள்கிறோம்.

முதலாவது, ஒத்தாசை செய்கிற தேவன் ஒருவர் நமக்கு இருக்கிறார் என்பதை நாம் அறிய வேண்டும். இவ்வாறு சங்கீதக்காரன் அறிந்தது மாத்திரமல்ல, அவன் அனுபவித்துமிருந்தான். ஆகவேதான் “எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்” என்று நம்பிக்கையோடு பாடுவதைப்பார்க்கிறோம். ஆண்டவரோடு நமக்கிருக்கும் உறவிலேதான் இந்த நம்பிக்கை நமக்குள் உறுதியாயிருக்கும். தனக்கு உதவி செய்யக்கூடிய தேவன் ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கை சங்கீதக்காரனின் இருதயத்தில் ஆழமாக பதிந்திருந்தபடியால்தான் சங்கீதக்காரன் தனக்கு உதவி தேவைப்பட்ட போதெல்லாம் அவரை ஏறெடுத்துப் பார்க்கிறான்.

இதேபோல 34ஆம் சங்கீதத்திலே, “அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை” (வச.5) என்று தாவீது அனுபவித்துப் பாடுகிறதை பார்க்கிறோம். இதை வாசிக்கும் அன்பானவர்களே, நமது வாழ்க்கைப் பயணத்திலும் ஒத்தாசை செய்யும் தேவன் ஒருவர் நம்மோடுகூட வருகிறார் என்பதை விசுவாசிப்போமானால் எவ்வித இக்கட்டான சூழ்நிலையிலும் நாம் அவரை நோக்கிப் பார்ப்போம்.

இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் யெரொபெயாம் ராஜாவாகி சமாரியாவில் ஆட்சி செய்தபோது இஸ்ரவேலர் மாபெரும் இக்கட்டில் சிக்கியிருந்தனர். அவர்கள் விடுவிக்கப்பட முடியாத நிலையில் இருப்பதை தேவன் கண்ணோக்கிப் பார்த்தார். இஸ்ரவேலின் உபத்திரவம் மிகவும் கொடிது என்றும், அடைபட்டவனுமில்லை, விடுபட்டவனுமில்லை, இஸ்ரவேலுக்கு ஒத்தாசை செய்கிறவனுமில்லை என்றும் கர்த்தர் பார்த்தார் (2இராஜா.14:26). பாவஞ்செய்து கர்த்தரைவிட்டு தூரமாகச் சென்றபோதிலும் கர்த்தர் அழிக்காமல் அந்த ஜனங்களுக்காக இரங்கி அவர்களை இரட்சித்தார். இது எதை நமக்கு உணர்த்துகிறதென்றால் நம்முடைய ஒத்தாசைக்கும் உதவிக்கும் கர்த்தரை நோக்கும்போது அது எப்பேர்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் விடுவிக்கக்கூடாத, அடைப்பட்ட நிலையாக இருந்தாலும் அவர் நம்மை விடுவிக்கவல்லவர். கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார் (சங்-72:12).

இரண்டாவதாக, நமக்கு ஒத்தாசை செய்யும் தேவன் வானத்தையும் பூமியையும் படைத்த சிருஷ்டி கர்த்தா என்பதை நாம் அறியவேண்டும். அவர் பரலோகத்தில் வாசமாயிருக்கிற உன்னதமான தேவனாக இருக்கிறார். நாம் அடிக்கடி அவசரப்பட்டு மனிதனுடைய உதவியையும் ஒத்தாசையையும் நாடி செல்வதின் காரணம், நமது தேவனின் வல்லமையையும் அவர் சிருஷ்டிகர்த்தா என்பதையும் அறியாமலிருப்பதும் மறந்துவிடுவதுந்தான் காரணம். தாவீதின் நம்பிக்கையைப் பாருங்கள்: என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை நிந்திக்கையில், அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னை இரட்சிப்பார்; (சேலா.) தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார் (சங்.57:3). இவ் வசனத்தில் சேலா என்ற இசை குறியீடு இடம் பெற்றுள்ளதைப் பார்க்கிறோம். சங்கீத புஸ்தகத்தில் அடிக்கடி இடம்பெறும் இச்சொல்லுக்கு அநேக அர்த்தங்களும் விளக்கங்களும் உண்டு. இதில் என்றென்றைக்கும் (For ever) என்ற பொருளுமுண்டு. நமது நெருக்கடியான காலங்களில் நமக்கு ஒத்தாசை அருளுவதற்கு வல்லவரான சிருஷ்டி கர்த்தா ஒருவர் என்றென்றும் பரலோகத்தில் இருக்கிறார் என்று அர்த்தம் கொள்ளலாம். இதை தாவீது தனது வாழ்நாள் முழுவதும் அனுபவித்திருந்தார். ஆனபடியால் 124ஆம் சங்கீதம் 8ஆம் வசனத்தில் “நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது” என்று மனவுறுதியோடு பாடுகிறார்.

யூதாவின் இராஜாவாகிய ஆசா தாவீதைப் போன்ற அனுபவத்தை உடையவனாயிருந்தான். எத்தியோப்பியனாகிய சேரா 10 இலட்சம் பேர்களும் 300 இரதங்களும் அடங்கிய மகாபெரிய சேனையுடன் யூதாவை எதிர்த்து வருகிறான். இவனிடமிருந்ததோ 5 இலட்சம் வீரர்கள்தான். அவன் நம்பிக்கையோடு பரலோகத்தின் தேவனைப் பார்க்கிறான். ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவி செய்கிறது உமக்கு லேசான காரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணை நில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான் (2நாளா.14: 11). நாம் எப்பேர்பட்ட நிலையிலிருந்தாலும் தேவன் நமக்கு உதவி செய்வது இலேசான காரியமாகும். ஏனென்றால், அவர் வானத்தையும் பூமியையும் நம்மையும் படைத்த சிருஷ்டி கர்த்தா! ஆசா தலைமை தாங்கிய அந்த சிறிய படை இறுதியில் எத்தியோப்பியரை முறியடித்து வெற்றிசிறந்தனர். வானத்தையும் பூமியையும் படைத்த தேவனிடமிருந்து ஆசாவிற்கு ஒத்தாசை வந்தது.

அன்பானவர்களே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார் (யோவான்14:16) என்று சீஷர்களுக்கு வாக்குப் பண்ணினார். அவர் வாக்குப் பண்ணினபடியே பரிசுத்தாவியானவர் இன்றைக்கும் நம் மத்தியிலும் நம்மிலும் வாசம் பண்ணுகிறார். நம் முடைய வேதனையான அனுபவத்திலும் நெருக் கத்திலும் பாடுகளின் வேளையிலும் நமக்கு உதவி செய்கிறவராயிருக்கிறார். அந்தப்படியே ஆவியான வரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார் (ரோமர் 8:26). எனவே நாம் சோர்ந்து போகாமல் நமக்கு ஒத்தாசை தரவல்லவரான தேவனை நோக்கிப் பார்ப்போம். வானத்தையும் பூமியையும் படைத்த தேவனிடமிருந்து நமக்கு ஒத்தாசை வரும்.

ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார் (எபி.2:18).