பேராசிரியர் S.C.எடிசன்
(ஜூலை-ஆகஸ்ட் 2022)
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் (யோவான் 14:6) .

பேராசிரியர் S.C.எடிசன்
இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் சத்திய வசனம் நேயர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள், சத்தியமுள்ளவரைத் தியானிக்கிறோம், நித்தியரைத் தியானிக்கிறோம், சர்வவல்லவரைத் தியானிக்கிறோம், ஆகையால் நம்முடைய இருதயம் ஒரு பயபக்தியுடன் தியானிப்பது நல்லது. வானத்தையும் பூமியையும் படைத்த தேவன் என்னோடு பேசிக்கொண்டு இருக்கிறார்; ஆகையால் என் முழுமனதோடு நான் அதைக் கேட்பேன் என்கிற எண்ணத்தோடு இருக்கவேண்டும்.
ஆதியிலே பூமி இருந்தது, ஆழத்தின்மேல் இருள் இருந்தது. ஜலம் இருந்தது. ஆனால், ஜீவன் இல்லை; ஒன்றிற்கும் உயிர் இல்லை, ஒரு ஜீவராசி அல்லது உயிருள்ள பிராணி எதுவுமே இல்லை. அப்படிப்பட்ட நிலையிலே, அனைத்திற்கும் உயிர் கொடுத்து, உண்டாக்கி அவைகள் பலுகிபெருக செய்யக்கூடியவர் ஒருவர் உண்டென்றால் நானே ஜீவன் என்று சொல்லக்கூடிய அந்த இயேசுகிறிஸ்து ஒருவரே. இயேசு சொன்னார்: ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன் (யோவான்10:15). ஒரு மனிதனுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன் என்றும் சொன்னார்.
ஆகையால் சகோதரனே, இயேசுகிறிஸ்துவே ஜீவனாய் இருக்கிறார். ஒரு விதைக்குள் உயிரை வைக்க அவரால் மட்டும்தான் முடியும். விஞ்ஞானிகள் எல்லாவற்றையும் செய்கின்றனர், அவர்களால். ஒரு விதையை உருவாக்க முடியும். ஆனால், அந்த விதையை முளைக்கச் செய்ய அவர்களால் முடியாது. அது இயேசு ஒருவரால்தான் முடியும். ஆகையினால்தான் அவருடைய வார்த்தை மிகவும் பயங்கரமான வார்த்தையாகும்!
நாம் சாதாரணமாக வாழ்க்கை அல்லது ஜீவன் என்பதை எப்படிச் சொல்லுகிறோம்? பிறப்பிற்கும் மரணத்திற்கும் இடையிலுள்ள காலத்தைத்தான் நாம் வாழ்க்கை அல்லது ஜீவன் என்று சொல்லுகிறோம். மனிதனுக்குள் சுவாசத்தைக் கொடுத்தவர் யார்? ஏதேன் தோட்டத்திலே ஆதாமை அதாவது, மனுக்குலத்தை உருவாக்கும்பொழுது தேவன் செய்தது என்ன? மண்ணினால் ஆதாமை உருவாக்கி, அவன் நாசியினிலே ஜீவசுவாசத்தை ஊதினார்; அவன் ஜீவாத்துமாவானான். இதின் அர்த்தம் என்னவென்றால், ஜீவாத்துமா என்றால், மரணமே இல்லாத, முடிவில்லாத நித்திய வாழ்க்கையாகும். ஆதாமுக்கு அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை, ஜீவனை கொடுத்திருந்தார். தன்னுடைய ஜீவனையே அவனுக்கு கொடுத்திருந்தார். தேவனுடைய ஜீவசுவாசத்தையே அவனுக்குள் கொடுத்திருந்தார். ஆனால், அவனோ பாவம் செய்தபொழுது, அந்த ஜீவாத்துமாவை இழந்து, வெறும் மண்ணான ஆத்துமாவாக மாறிவிட்டான். அவனுடைய சந்ததியாக வந்த நாமும் அந்த ஜீவசுவாசம் நமக்குள் இராததினால், நாம் மண்ணாகதான் இருக்கிறோம். ஆனால் நான் இந்த பாவ வாழ்க்கையை வெறுத்து, எனது பாவத்தையெல்லாம் தேவனிடத்தில் அறிக்கை செய்து அவரிடத்தில் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைப் பெறும்பொழுது, அவர் மறுபடியும் எனக்குள் ஜீவனைத் தருகிறார். மறுபடியும் பிறத்தல் என்கிற ஒரு அனுபவத்தை எனக்குத் தந்து, ஆவியினால் பிறக்கச் செய்கிறார். மாம்சத்தில் பிறந்த என்னை, நான் பாவத்தை அறிக்கை செய்யும் பொழுது, என்னை ஆவியில் பிறக்கச் செய்கிறார்.
அருமையானவர்களே, இதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். பரலோகத்தில் நீங்கள் வாழவேண்டுமென்று வாஞ்சித்தால், இந்த மறுபிறப்பின் அனுபவத்தை பெறவேண்டியது அவசியம். ஜீவ ஆத்துமாவாக நீங்கள் மாறவில்லையென்றால் உங்களுடைய முடிவு கஷ்டம். இதனால்தான் திட்டவட்டமாக ஆண்டவர் சொன்னார்; அவருடைய பிரசங்கமே அதுதான். மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபத்திருக்கிறது (மத்.4:17). யார் தங்களது பாவத்தை அறிக்கை செய்து, பரிசுத்த வாழ்க்கை வாழுகிறார்களோ, அவர்களுக்குள் தன் ஜீவ சுவாசத்தைக் கொடுக்கிறார். அவர்கள் மறுபடியும் ஜீவ ஆத்துமாவாகிவிடுகிறார்கள். அதுதான் கிறிஸ்து எனக்குள் வாழ்கிறார் என்பதின் அர்த்தம். பவுல் சொல்லுகிறார்: இயேசுவோடு மரித்தேன்; ஆனால், அவரோடு பிழைத்தும் இருக்கிறேன், இனிநான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார். கிறிஸ்து எனக்குள் பிழைத்திருக்கிறார் என்றால் அந்த ஜீவசுவாசம் என்னை உயிரோடு வைக்கிறது. இந்த விசுவாசம் உங்களுக்கு வேண்டும்.
இன்றைக்கு நான் உயிரோடு இருந்து பெரிய காரியங்களை செய்கிறேன், நான் பெரிய கம்பெனியை நடத்துகிறேன், நான் இவ்வளவு லாபம் சம்பாதிக்கிறேன். வசதியாய் இருக்கிறேன், இவ்வளவு மிஷனெரிக்கு கொடுக்கிறேன். அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன் என்று சொல்லுகிற உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் அறிவீர்களா? வேதம் சொல்லுகிறது: அது நிழலைப் போல் கடந்துபோகிற வாழ்க்கை, தரி நாடாவிலும் வேகமாய் நாட்கள் ஓடுகிற வாழ்க்கை, எங்கள் வாழ்க்கையை ஒரு கதையைப்போல கழித்துப் போட்டோம் என்று சொல்லுகிற சகோதரனே, உங்களுடைய பாசத்தை தன்னுடைய கையில் வைத்திருக்கிற அந்த தேவனுக்கு நீங்கள் பயப்படாமல் அந்த தேவன் சொல்லுகிற வார்த்தைகளுக்கு கீழ்ப்படியாமல், பிசாசின் பிள்ளையாய் வாழ்ந்து கொண்டிருந்தால், உங்களுக்கு எப்படிப்பட்ட இடம் மரணத்திற்கு பின் கிடைக்கும்.
எபிரெயர் 9:27 தெளிவாக சொல்லுகிறது: அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத் தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது. தப்பிக்க முடியாது. அன்றைக்கு என்ன செய்வீர்கள்? அன்றைக்கு நீங்கள் இரட்சிக்கப்பட முடியாது. அன்றைக்கு Judgment நரகத்திற்கு போ, உனக்கு பரலோகத்தில் இடம் இல்லை. இந்த நிலையை லூக்கா தன்னுடைய சுவிசேஷத்திலே அவர் ரொம்ப அழகாக சொல்லியிருப்பார். லூக்கா 13:28 ஆம் வசனம் நியாயத்தீர்ப்பிலே தேவன் உங்களை புறக்கணிப்பார் என்றால் அப்போ உங்க நிலைமை எப்படி இருக்கும்? நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும், யாக்கோபையும் சகல தீர்க்கத்தரிசிகளையும் அதாவது விசுவாசித்தவர்கள் அனைவரையும், தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ, புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் உண்டாகும்.
சகோதரனே, இயேசு தருகிற ஜீவனை பெற்றுக் கொள்வோம். உங்களுக்கும் ஜீவனை தந்திருக்கிறார், ஆனால், நித்திய ஜீவனுக்காக நீங்கள் வாழ வேண்டும். அதைத் தரக்கூடியவர் இயேசு!
எனக்கு அன்பான சகோதரனே, உங்களது வாழ்க்கையில் அந்த நித்திய ஜீவனைப்பற்றி நீங்கள் நினைத்திருக்கிறீர்களா? அந்த நித்திய ஜீவனுக்கு ஏதுவாக வாழ சில எளிய வழிகளை உங்களுக்குச் சொல்லுகிறேன். அதன்படி செய்யுங்கள்; நீங்கள் பிழைப்பீர்கள். பாவத்தை அறிக்கை செய்து, இரட்சிக்கப்பட்ட நாம் ஒவ்வொருவரும், நம்முடைய மாம்சமும், மனதும், விரும்பினவைகளை வெறுத்துவிட்டு, நமது இஷ்டப்படி வாழாமல், இயேசுவின் சித்தப்படி வாழ ஆரம்பியுங்கள்,இந்த நித்திய ஜீவனைக் காத்துக்கொள்ள சில வழிகளை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
முதலாவதாக, தினமும் இயேசுவோடு உறவாடுங்கள்.
அதாவது அவரோடு பேசுங்கள். உறவு என்பது இருவர் அல்லது நண்பர்கள், ஒருவரோடொருவர் பேசிக்கொள்வது, நான் ஜெபத்திலே தேவனிடத்தில் எனது இருதயத்தின் பாரங்கள், பெலவீனங்கள், பரிசுத்த குலைச்சல்கள் ஆகிய எல்லாவற்றையும் அவரிடத்தில் சொல்லி, எனக்கு இரங்கும் தேவனே, பாவியாகிய என்மேல் கிருபையாய் இரும் என்று அவரிடத்தில் மன்றாடி, எனக்கு ஒரு வாழ்வை தேடிக்கொள்வேன், அதே நேரத்தில் அவரும் என்னோடு பேசுவார். என் மனசாட்சியிலே அவர் பேசுகின்ற சத்தம் நன்றாக தெளிவாக கேட்கும், அவர் இந்த வேதவசனங்களின் மூலமாக என்னோடு பேசுவார். நான் தவறு செய்தால் வசனம் என்னை எச்சரிக்கும், தாவீது சொல்லுவான்: உம்முடைய வசனம் என் கால்களுக்கு தீபமும் என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது (சங்.119:105). ஆகையால் அந்த வசனம் தேவனுடைய சத்தம்; தேவனுடைய சித்தத்தை எனக்குச் சொல்லுகிறது என்று நீங்கள் விசுவாசிக்க வேண் டும். விசுவாசித்து ஜெபம் பண்ணவேண்டும். அவர் சத்தத்திற்காக காத்திருக்கவேண்டும்.
இரண்டாவதாக விசுவாசிகளின் ஐக்கியத்திற்குள் இருக்கவேண்டும்.
ஒரு அடுப்பில் ஒரேயொரு கட்டை எரிந்தால், அது முழுவதும் எரியாது. சீக்கிரத்தில் அணைந்துவிடும். அதே நேரத்தில் கூட இரண்டு கட்டைகளை வைத்து எரித்தால், ஒன்று அணைவது மாதிரி இருந்தால் மற்றொன்றினுடைய நெருப்பினால் பற்றி எரியும். விசுவாசிகளின் ஐக்கியத்திற்குள் இருப்பீர்கள் என்றால், உங்களுக்காக மற்றவர்கள் ஜெபிப்பார்கள். மற்றவர்களுக்காக நீங்களும் ஜெபிப்பீர்கள். ஒருவராவது கெட்டுப்போகாமல் தேவனுடைய சித்தத்தின்படி இரட்சிக்கப்படுவதற்கு அது உதவும்.
சபை என்பது விசுவாசிகளின் ஐக்கியமாகும். ஆகையால்தான் பவுல் சொல்லுகிறார்: சபை கூடி வருதலை விட்டுவிடாதிருங்கள் (எபி.10:25). எனவே நாமும் கண்டிப்பாக சபை கூடுதலை விட்டுவிடக்கூடாது. ஞாயிற்றுக்கிழமை ஆராதனைக்கு போகிறேன், போதும் என்று நினையாதிருங்கள். ஞாயிற்றுக்கிழமை ஆராதனைக்கு போகும் முன்பு சனிக்கிழமை இரவு என்ன செய்கிறீர்கள்? ஆண்டவரே, நாளைக்கு உமது வீட்டிற்கு வாரேன், எனக்கு வழியைச் சொல்லித்தாரும். என் தப்பிதங்களையெல்லாம் உம்மிடம் சொல்லியிருக்கிறேன். அதிலிருந்து எனக்கு ஒரு விடுதலை தாரும் என்று பாவ அறிக்கை செய்து, வீட்டிலே ஜெபம் பண்ணுங்கள். வேத வசனத்தை வாசியுங்கள். அப்படியே படுக்கைக்குச் செல்லுங்கள். தேவனோடு படுக்கைக்குச் செல்லுங்கள். காலையிலே எழும்பும்போதும் தேவனோடும், அவர் அருளும் புதுகிருபைகளோடும் எழும்புங்கள். ஆலயத்திற்கு பரிசுத்தமாய் போங்கள். அந்த வாசல், ஆலய வாசலில் நின்று தேவனே எனக்கு இரங்கும் என்று உங்களைத் தாழ்த்தி ஆலயத்திற்குள் போங்கள், தேவன் கிருபையினால் உங்களை நிறைத்து, தமது வீட்டின் நன்மையால் உங்களை திருப்தியாக்கி வீட்டிற்கு அனுப்புவார். நீங்கள் பாக்கியவான்களாய் இருப்பீர்கள். அந்த ஆராதனை உங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும். நிறைய பேர் ஆராதனையை Waste of time என்று பெருமையாய் பேசுகின்றனர்; நரகத்தின் பிள்ளைகள். ஆயத்தமில்லாமல் வந்தால் அப்படித்தான் இருக்கும். ஆனால் ஆயத்தத்தோடு வந்தால், உங்கள் மணவாளனோடு வீட்டிற்கு செல்வீர்கள். நித்திய ஜீவனை காத்துக்கொள்வதற்கு விசுவாசிகளின் ஐக்கியத்தில் இருக்க வேண்டும், ஆராதனையில் பங்கெடுக்கவேண்டும்.
மூன்றாவதாக, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, இயேசுவைப் பின்பற்றவேண்டும்.
லூக்கா 9:23,24 இல் இயேசு சொல்லுகிறார்: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன், தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான். சாது சுந்தர்சிங் திபெத்திலே ஊழியம் செய்து விட்டு, ஒரு வழிப்போக்கனோடு பேசிக்கொண்டு வந்தார். முன்னாலே பார்த்தால் ஒருவன் கீழே விழுந்துகிடக்கிறான், சாது சுந்தர்சிங் பக்கத்திலே இருக்கிறவனிடம் சொன்னார்: வா, நாம் இவனுக்கு உதவி செய்து இவனை கேம்பிற்கு கீழேகொண்டு வந்துவிடவேண்டும் என்று. அதற்கு அவன், நான் இங்கே இவனுக்கு உதவி செய்துகொண்டு இருந்தால், இன்னும் கொஞ்ச நேரத்தில் செத்துப்போவேன், நான் போகிறேன் என்று சொல்லிபோய் விட்டான். ஆனால் சாது சுந்தர்சிங் அவனை தூக்கி, தன் முதுகில் போட்டுக்கொண்டு அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு அவர் மெதுவாக வந்தார். இந்த இரண்டுபேர் உடம்பும் உரச உரச அவர்களுக்குள் வெப்பம் வந்தது, அந்த மனிதன் உயிரடைந்து, கொஞ்ச நேரத்திலே பெலனடைந்து, நடக்க ஆரம்பித்தான். கொஞ்ச தூரம் நடந்துபோனால், நான் என் ஜீவனை காப்பாத்தணும் என்று ஓடியவன் செத்துகிடந்தான். தன் ஜீவனை காப்பாற்ற விரும்பாமல் அடுத்தவனுக்கு ஊழியம் செய்த அந்த சாது ஜீவனோடு இருந்தார்.
சகோதரனே, இயேசுவை நாம் பின்பற்ற வேண்டுமென்றால், நம்முடைய ஜீவனைப் பார்க்கிலும் அடுத்த ஜீவனைப் பார்க்கவேண்டும். அவன் கெட்டுப்போகாமல் இருக்கும்படியாக மற்றவர்களுக்காக சில காரியங்களை நாம் செய்யத்தான் வேண்டும். அதுதான் நித்திய ஜீவனை காத்துக்கொள்ளும் ஒரு வழியாகும். நித்திய ஜீவன் என்பது அது தேங்கி நிற்கும் தண்ணீர் அல்ல. இதை விசுவாசிக்கிறவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும். நதி ஓடினால் அந்தத் தண்ணீர் அநேகருக்கு தாகத்தைத் தீர்க்கும். சகோதரனே உங்களுக்குள் இருக்கிற ஜீவன், அதை உங்களோடே அடக்கி வைக்க முடியாது. அந்த ஜீவன் பாவங்களினாலும் அக்கிரமங்களினாலும் மரித்தபோன அநேகருக்கு ஜீவனைக்கொடுக்கிற ஜீவநதியாக இருக்கும்.