பழைய ஏற்பாட்டு வேதபாடம்
Dr.உட்ரோ குரோல்
(ஜூலை-ஆகஸ்ட் 2022)
தானியேல்
7 ஆம் அதிகாரம்

Dr.உட்ரோ குரோல்
தானியேலின் புத்தகத்திலிருந்து சிங்கங்களின் கெபியில் போடப்பட்ட ஜெபவீரன் தானியேல், சூளை நெருப்பில் போடப்பட்ட மூன்று விசுவாச யூத இளைஞர்கள், மதியை இழந்து காட்டு விலங்கைப்போல வாழ்ந்த ஒரு பேரரசன் ஆகியவர்களின் வரலாற்று நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதை நாம் பார்த்தோம். இந்த இதழிலிருந்து எதிர்காலத்தைக் குறித்து தானியேல் கண்ட தரிசனங்களை ஆராய்வோம்.
இத்தரிசன நூலை அறிந்துகொள்ள அநேக வேத அறிஞர்களும், முதிர்ச்சியடைந்த பல கிறிஸ்தவர்களும் முயற்சி செய்து வருகின்றனர். ஆனாலும், யாராலும் இதுவரை முழுமையாக அறிந்துகொள்ள முடியவில்லை; எனினும் கடினமான இப்பகுதிக்கு விளக்கம் கொடுக்கும் சில ஆய்வாளர்களின் கொள்கைகளை நாம் கவனிப்போம். தூய ஆவியானவரின் ஒத்தாசைக்காக நாம் ஜெபிப்போம். வேதாகம அறிஞர்கள் இதற்கான விளக்கங்கள் குறைவு என்று உணருகிறார்கள். வேத விளக்கங்கள் தரும் அறிஞர்களும் ஒருவருக்கொருவர் கருத்தில் மாறுபடுகிறார்கள். வருங்காலத்தைக் குறித்து தானியேல் கூறியுள்ளவற்றை என்னால் முடிந்த அளவு சிறப்பாக விளக்க முயலுகிறேன்.
தானியேல் 7ஆம் அதிகாரத்தில் ஒரு வித்தியாசமான காரியம் நடந்தது. தானியேல் 7:1 “பாபிலோன் ராஜாவாகிய பெல்ஷாத்சாரின் முதலாம் வருஷத்திலே தானியேல் ஒரு சொப்பனத்தையும் தன் படுக்கையின்மேல் தன் தலையில் தோன்றின தரிசனங்களையும் கண்டான். பின்பு அவன் அந்தச் சொப்பனத்தை எழுதி, காரியங்களின் தொகையை விவரித்தான்” என்று கூறப்பட்டுள்ளது.
நேபுகாத்நேச்சார் அரசரின் கனவுகளையும், பெல்ஷாத்சார் அரசரின் கனவுகளையும் விவரித்த தானியேலுக்கு நான்கு சொப்பனங்கள் தோன்றின. இப்புத்தகத்தின் மீதி பகுதிகளில் நாம் தானியேல் கண்ட வெவ்வேறான சொப்பனங்களை நாம் ஆராய்வோம். எதிர்காலத்தை நாம் அறிந்துகொள்வதில் 7ஆம் அதிகாரத்தில் எழுதப்பட்டுள்ள சொப்பனம் மிக மிக முக்கியமானது.
தானியேல் 7:1 இல் அது பாபிலோன் ராஜாவாகிய பெல்ஷாத்சாரின் ஆட்சியின் முதலாம் வருஷம் என்று வாசிக்கிறோம். தானியேல் 6ஆம் அதிகாரத்தில் அவ்வரசரின் ஆரம்ப காலத்தில் நடந்த ஆட்சியை நாம் ஏற்கனவே பார்த்தோம். இது பெல்ஷாத்சார் அரசரின் இறுதிக்கால நிகழ்வாகும். எனவே தானியேலின் புத்தகம் வரிசைக் கிரமமாக எழுதப்படவில்லை என்பதை அறிந்துகொள்ளலாம். எனினும் தானியேலின் வாழ்க்கையில் மற்றொரு முக்கிய நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
வசனம் 2இல் “இராக்காலத்தில் எனக்கு உண்டான தரிசனத்திலே நான் கண்டது என்னவென்றால்: இதோ, வானத்தின் நாலு காற்றுகளும் பெரிய சமுத்திரத்தின்மேல் அடித்தது.” இவ்வாறு எழுதுவது சங்கேத பாஷை அல்லது குறியீட்டு மொழி என்று கூறலாம். வேதாகமத்தில் பெரிய சமுத்திரம் என்பது தேசங்களின் குறியீட்டுச் சொல்லாகும். எனவே இங்குள்ள நான்கு காற்றுகளும், நான்கு ஜீவன்கள் அல்லது நான்கு தூதர்களைக் குறிக்கின்றன. அவை கடலில் எழும்பி அப்பெரிய சமுத்திரத்தைக் கலக்கியது. அப்பெரிய கடலிலிருந்து – அதாவது உலகத்தின் பெரிய தேசங்களிலிருந்து – சில உயிரினங்கள் எழும்பின.
வெவ்வேறு உருவமுள்ள நான்கு மிருகங்கள் சமுத்திரத்திலிருந்து எழுந்தன. மத்திய தரைக் கடலிலிருந்து எழும்பியவை கடல்வாழ் உயிரினங்களான திமிங்கலங்கள் அல்லது மீன்கள் என அவர் குறிப்பிடவில்லை. எனவே தானியேல் இவ்வுலகின் எதிர்காலத்தைக் குறித்த தீர்க்கதரிசன தரிசனங்களைப் பெற்றார் என நான் எண்ணுகிறேன். சமுத்திரத்திலிருந்து எழும்பிவந்த இந்த நான்கு பெரிய மிருகங்கள் உலகத்தின் வலிமையான பேரரசுகள் என நாம் பார்க்க இருக்கிறோம்.
இவ்வுலகத்தின் பேரரசுகளை அறிந்துகொள்ள நாம் 2ஆம் அதிகாரத்துக்குத் திருப்பவேண்டும். அதில் இந்த நான்கு பேரரசுகளைப் பற்றி சிறிது கூறப்பட்டுள்ளது.
முதலாவது மிருகம் சிங்கமாகும். 7:4இல் “முந்தினது சிங்கத்தைப்போல இருந்தது; அதற்குக் கழுகின் செட்டைகள் உண்டாயிருந்தது.” சிங்கமானது ஒரு பலமுள்ள மிருகம். அது வலிமை வாய்ந்தது. அதற்கு செட்டைகள் உண்டாயிருந்தது. எனவே இது செட்டைகள் உள்ள சிங்கம்; ஆகவே வேகமாக செல்லக்கூடியது. இது பாபிலோனிய சாம்ராஜ்யத்தைக் குறிக்கிறது.
இரண்டாம் மிருகத்தைப் பற்றி 5ஆம் வசனம் குறிப்பிடுகிறது. “பின்பு, கரடிக்கு ஒப்பாகிய வேறே இரண்டாம் மிருகத்தைக் கண்டேன்; அது ஒரு பக்கமாய்ச் சாய்ந்து நின்று, தன் வாயின் பற்களுக்குள்ளே மூன்று விலாவெலும்புகளைக் கவ்விக் கொண்டிருந்தது.” கரடியை நாம் அதன் வலிமைக்கும் சக்திக்கும் ஒப்பிடலாம். இது மேதிய பெர்சிய சாம்ராஜ்யத்தைக் குறிக்கும்.
இக்கரடி சற்று வித்தியாசமானது. பொதுவாக கரடிகள் உருவத்தில் பெரியவை. அலஸ்கான் அல்லது கொடியாக் கரடிகள் மிகப்பெரிய மிருகங்களாகும். இவை 1500 பவுண்டு எடை கொண்டவை. சாதாரண கருப்பு அல்லது பழுப்பு நிறக் கரடிகள் 500 பவுண்டுகளுக்கு மேல் இருக்கும். தானியேல் கண்ட தரிசனத்தில் இக்கரடி ஒரு பக்கமாய்ச் சாய்ந்து நின்று கொண்டிருந்தது. அதாவது ஒருபக்கம் மறுபக்கத்தைவிட உயரமாய் இருந்தது. ஒருபகுதி அடுத்த பகுதியை ஆதிக்கம் செலுத்தும். இந்த மிருகம் தன் வாயின் பற்களுக்குள்ளே மூன்று விலாவெலும்புகளைக் கவ்விக் கொண்டிருந்தது. இது மேதிய பெர்சிய சாம்ராஜ்யம் வெற்றி கொண்ட பாபிலோன், லிடியன் மற்றும் எகிப்தியப் பேரரசுகளைக் குறிக்கிறது.
வசனம் 6இல் “அதின்பின்பு, சிவிங்கியைப் போலிருக்கிற வேறொரு மிருகத்தைக் கண்டேன்; அதின் முதுகின்மேல் பட்சியின் செட்டைகள் நாலு இருந்தது.” இது மிகவும் வித்தியாசமான ஒரு மிருகம். சாதாரண சிறுத்தைக்கு (சிவிங்கி) செட்டைகள் கிடையாது. அது வேகமாக ஓடுவதற்கு பெயர்பெற்றது. மேலும் அது தந்திரமுள்ளது. இந்த சிறுத்தைக்கு செட்டைகள் இருப்பது அது அதிவேகமாக செல்வதைக் குறிப்பிடுகிறது. இதை கிரேக்கப் பேரரசு மிக வேகமாகப் பரந்து விரிந்ததைக் காண்பிக்கிறது.இவ்வசனத்தில் இறுதியில் மற்றொரு குறிப்பை நாம் வாசிக்கிறோம். அதற்கு நாலு தலைகள் இருந்தன. அதற்கு ஆளுகை அளிக்கப்பட்டது. இது கிரேக்கப் பேரரசின் அரசரான அலெக்ஸாண்டருக்குப் பின் பிரிந்த நான்கு பிரிவுகளைக் குறிப்பதாக உள்ளது.
அம்மிருகத்துக்கு ஆளுகை அளிக்கப்பட்டது என்பது என்னைக் கவர்ந்த ஒரு செய்தியாகும். மகா அலெக்ஸாண்டர் மாபெரும் பெர்சியப் படைகளை வென்றபொழுது, அவர் வலிமைமிக்க தளபதியாகவோ, கிரேக்கப் படைகள் வலிமை வாய்ந்ததாகவோ இருந்திருக்கவில்லை. பெர்சிய படை வீரர் கள் 2 மில்லியன் இருந்தாலும் அலெக்ஸாண்டரிடம் வெறும் 35 ஆயிரம் வீரர்கள் மட்டுமே இருந்தனர். பெர்சியப் படையை அலெக்ஸாண்டர் தோற்கடிக்க வேண்டுமென்பது தேவதிட்டமாக இருந்ததால்தான் ஆளுகை அளிக்கப்பட்டது என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது என நான் நினைக்கிறேன். தேவன் அவருக்கு ஆளுகையை அளித்தார். ஆளுகை தேவனுடையது என்பதை நினைவில்கொள்ளுங்கள். தேவனே அனைத்தையும் ஆள்பவர்.
“அதற்குப்பின்பு, இராத்தரிசனங்களில் நாலாம் மிருகத்தைக் கண்டேன்; அது கெடியும் பயங்கரமும் மகா பலத்ததுமாயிருந்தது; அதற்குப் பெரிய இரும்புப் பற்கள் இருந்தது; தனக்கு எதிரேயிருந்தவைகளை நொறுக்கிப் பட்சித்து, மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டது; அது தனக்கு முன்னிருந்த எல்லா மிருகங்களைப் பார்க்கிலும் வேற்றுருவமாயிருந்தது, அதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தது.” வலிமை வாய்ந்தது, இரும்புப் பற்கள், பத்துக் கொம்புகள் இவை நமக்கு உலக மல்யுத்த சம்மேளனத்தை நினைவூட்டுகிறதல்லவா?
இந்த மிருகத்தை நாம் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இது சிங்கத்தைப் போலவோ, கரடியைப் போலவோ சிறுத்தையைப் போலவோ இல்லை. இதனை நான் பலவித மிருகங்களின் கலவை என்பேன். மற்ற மூன்று மிருகங்களிலிருந்தும் இது வேறுபட்டிருந்தது. இங்கே கூறப்பட்டுள்ள மிருகம் ரோம சாம்ராஜ்யத்தைக் குறிக்கிறது. இந்த மிருகத்தை பரி.யோவானும் வெளிப்படுத்தல் 13 ஆம் அதிகாரத்தில் விளக்கியுள்ளார். அதனையும் வாசித்துப் பாருங்கள். இந்த மிருகத்தின் பத்துக் கொம்புகள் பலவித ராஜ்யங்களைக் குறிக்கிறது. எனவே இதைப் பன்னாட்டு மிருகம் என நாம் அழைக்கலாம்.
வசனம் 8 இல் “அந்தக் கொம்புகளை (பத்துக் கொம்புகள்) நான் கவனித்திருக்கையில், இதோ, அவைகளுக்கு இடையிலே வேறொரு சின்ன கொம்பு எழும்பிற்று; அதற்கு முன்பாக முந்தின கொம்புகளில் மூன்று பிடுங்கப்பட்டது; இதோ, அந்தக் கொம்பிலே மனுஷ கண்களுக்கு ஒப்பான கண்களும் பெருமையானவைகளைப் பேசும் வாயும் இருந்தது.” இந்தச் சிறிய கொம்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இது பத்துக் கொம்புகளுக்கு இடையிலே எழும்பிற்று. இக்கொம்பு தான் செய்ய விருப்பதைப்பற்றி மிகவும் பெருமையாகப் பேசிற்று. அது அதிகாரத்துக்கு வருமுன்பதாக தனக்கு இடமுண்டாக்கும்படிக்கு பத்துக்கொம்புகளில் மூன்றினை அழித்தது.
வேதாகம தீர்க்கதரிசனங்களை அறிந்துகொள்பவர்களுக்கு இதுவொரு சிறந்த படவிளக்கமாகும். தானியேல் இத்தீர்க்கதரிசனத்தை அறிந்து கொண்டார். அது தேவன் அவருக்குத் தந்த வரமாகும். தானியேலின் முதலாண்டு சிறையிருப்பில் நேபுகாத்நேச்சார் அரசருக்கு முன்பாக நிற்கும்பொழுது அவருக்குக் கொடுக்கப்பட்ட வரம். தேவன் தானி யேலை சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார்.
திடீரென்று தானியேல் 7:9இல் காட்சிகள் மாறுகிறது. பூமியிலிருந்து வானத்துக்கு வர்ணனை செல்கிறது. சாத்தானின் நினைவிலிருந்து ஆதிக்காலத்துக்கு மாறியது. அந்திக்கிறிஸ்துவின் தூஷணத்திலிருந்து விண் மாந்தர்களின் தொழுகைக்குச் செல்கிறது. தானியேலின் கனவு புதிதும் நவீனமுமான காரியமாகக் காணப்படுகிறது.
“நான் பார்த்துக்கொண்டிருக்கையில், சிங்காசனங்கள் வைக்கப்பட்டது; நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார்; அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போலவும், அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப்போலத் துப்புரவாகவும் இருந்தது.” இது வேதாகமத்தில் காணப்படும் தனிப்பட்ட ஒருவரின் அழகை வர்ணிக்கிறது. நீண்ட ஆயுசுள்ளவர் (தொன்மையானவர், ஆதி பகவன்) என்பது பிதாவாகிய தேவனைக் குறிக்கிறது. “ஆயிரமாயிரம் பேர் அவரைச் சேவித்தார்கள்; கோடாகோடி பேர் அவருக்கு முன்பாக நின்றார்கள் (வசனம் 10).” இது அவரது மாட்சிமையையும் மகிமையையும் காட்டுகிறது. அழகான வெள்ளை சிரசும் வெண்மையான வஸ்திரமும் அவரது பரிசுத்தத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்த மாட்சிமை அவருடைய பரிசுத்தத்தின் விளைவாகும்.
தேவனுடைய உடை அவர் ஒரு தனித்துவமானவர் என்பதைக் காட்டுகிறது. ஆடை ஒரு மனிதனை உருவாக்காது என்பதை நான் அறிவேன். ஆனால், நீங்கள் சிறப்பான உடையை அணிந்திருந்தால் அது உங்களை உயர்த்திக்காட்டும். ஆள் பாதி; ஆடை பாதி என்பர். இது உண்மையல்லவா?
சமீபத்தில் சிறந்த ஆடை வடிவமைப்பாளரால் தயாரிக்கப்பட்டிருந்த டயானா இளவரசியின் 80 ஆடைகள் இலண்டன் மாநகரத்தில் கிறிஸ்டி என்ற இடத்தில் ஏலம் விடப்பட்டது. இதன் மூலமாக நான்கு மில்லியன் பவுண்டு கிடைக்கும் என எதிர்பார்த்தனர். அது ஆறு மில்லியன் அமெரிக்க டாலருக்கு சமம். ஆடைகளும் துணிகளும் மிகவும் முக்கியமானவையாகத் தெரியும்பொழுது அதனை அணியும் மனிதர்களும் சிறப்பானவர்களாகிறார்கள். தேவனுடைய மகத்துவத்தையும் அவருடைய அழகையும் விவரிக்கும் காட்சியை தானியேல் விளக்குகிறார்.
வசனம் 13இல் தரிசனம் தொடருகிறது. “வானத்தின் மேகங்களின்மீது மனிதகுமாரனைப் போன்ற ஒருவர் தோன்றினார். தொன்மை வாய்ந்தவர்; அருகில் அவர் அழைத்துவரப்பட்டார். அவருக்கு அதிகாரமும் மகிமையும் ஆட்சி உரிமையும் தரப்பட்டன. அனைத்து மக்களும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட்டனர். அவரது அரசாட்சி நிலையானது; அது ஒழிந்து போகாது; ஒருவரும் அதனை அழிக்கவும் முடியாது.”
தானியேலின் தரிசனத்தில் தொன்மை வாய்ந்தவர் பிதாவாகிய தேவனைக் குறிக்கிறது எனில், மனிதகுமாரனைப் போன்ற ஒருவர் என்பது குமாரனாகிய தேவனைக் குறிக்கும். இவர் இயேசு கிறிஸ்து. வருங்காலத்தில் இயேசு பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நிற்பதை தானியேல் தரிசனமாகக் கண்டார். நியாயசங்கம் நியமிக்கும் நியாயாதிபதி இயேசுவே. இவரே அந்திக்கிறிஸ்துவை எதிர்காலத்தில் நியாயந்தீர்க்க இருக்கிறார். வசனம் 11 மற்றும் 12 இல் குறிப்பிடப்பட்டுள்ள முழு உலகையும் ஆளுகை செய்யும் மிருகம் அந்திக்கிறிஸ்துவையே சுட்டிக்காட்டுகிறது. இயேசு கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பில் சடுதியில் அவன் அழிக்கப்பட்டுப்போவான்.
இயேசுகிறிஸ்து ஒரு நாளில் இவ்வுலகை நியா யந்தீர்ப்பார் என்பது எனக்கு இரவில் அமைதியான நல்ல உறக்கத்தைத் தருகிறது. ஒரு நாளில் நான் ஆண்டவராகிய இயேசுவை முகமுகமாய் சந்திப்பேன்; நீங்களும் சந்திப்பீர்கள். அந்திக் கிறிஸ்துவும் சாத்தானும் இவ்வுலகில் வாழ்ந்த அனைவரும் அவரை சந்தித்தேயாகவேண்டும். இயேசுவே நியாயாதிபதி. அவரது நியாயத்தீர்ப்பில் வல்லமையும் மகிமையும் உடையவர். அவரது நியாயத்தீர்ப்பில் இராஜாவாக வீற்றிருப்பார்.
பரலோகத்தைப் பற்றிய ஓர் அற்புதமான காட்சியை நமக்கு தானியேல் விளக்குகிறார். தொன்மையானவர் சிறப்பான வஸ்திரம் அணிந்திருந்தார். அது உறைந்த மழையைப்போலவும், அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும் இருந்தது. அவர் இயேசுவை தமது அருகில் அழைத்தார். அவருக்கு அனைத்து அதிகாரமும் நியாயத்தீர்ப்பின் அதிகாரமும் கொடுக்கப்பட்டது. அகில உலகத்துக்கும் அவரே நியாயாதிபதி; இவரே சர்வலோக நியாயாதிபதி.
தானியேலின் தரிசனம் இரு பகுதிகளைக் கொண்டது. முதல்பகுதியில் அவர் சமுத்திரத்திலிருந்து வந்த நான்கு மிருகங்களைக் கண்டார். பின்னர் அவருடைய காட்சி வானலோகத்திற்குச் சென்றது. அங்கே அவர் தொன்மையானவரையும் அவருடைய சமுகத்தில் இயேசுவையும் கண்டார். இதனை எவ்வாறு விளக்குவீர்கள்?
இதனை நாம் அனுமானிக்கவேண்டியது இல்லை; தானியேல் 7:15இல் “தானியேலாகிய நான் என் தேகத்தினுள் என் ஆவியிலே சஞ்சலப்பட்டேன்; என் தலையில் தோன்றின தரிசனங்கள் என்னைக் கலங்கப்பண்ணினது” என்று அவர் கூறினார். தானியேலுக்கும் நடப்பதைப்பற்றி அறிந்துகொள்ள முடியவில்லை.
வசனம் 17 இல் “அந்த நாலு பெரிய மிருகங்களும் பூமியிலிருந்து எழும்புகிற நாலு ராஜாக்கள்” என்று தானியேலுக்கு விளக்கம் அளிக்கப் படுகிறது. இந்த நான்கு ராஜ்யங்களும் பூமியின் இராஜ்யங்கள். அவை பாபிலோன், மேதிய பெர்சியா, கிரீஸ் மற்றும் ரோம சாம்ராஜ்யம் என்று நாம் அறிவோம். இந்த நான்கு ராஜ்யங்களுக்கும் தனித்தனி அர்த்தங்கள் உண்டு.
14-17 வசனங்களில் இந்த நான்கு மிருகங்களைப்பற்றி தானியேல் சிறிது அறிவினைப் பெற்றார். வசனம் 19இல் “மற்றவைகளையெல்லாம் பார்க்கிலும் வேற்றுருவும், கெடியுமுள்ளதுமாய், இருப்புப் பற்களும், வெண்கல நகங்களுமுடையதாய் நொறுக்கிப் பட்சித்து, மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டதுமாயிருந்த நாலாம் மிருகத்தைக் குறித்தும், அதின் தலைமேலுள்ள பத்துக் கொம்புகளைக் குறித்தும், தனக்கு முன்பாக மூன்று கொம்புகள் விழுந்துபோக எழும்பினதுமாய், கண்களையும் பெருமையானவைகளைப் பேசும் வாயையுமுடையதுமாய், மற்ற வைகளைப்பார்க்கிலும் பருமனாகத் தோன்றினதுமாயிருந்த அந்த வேறே கொம்பைக் குறித்தும், அவற்றின் பொருளை அறிய மனதாயிருந்தேன்” என்று கூறியுள்ளார்.
இந்த பத்துக் கொம்புகள் யாவை? அவற்றின் நடுவே எழும்பின சின்ன கொம்பு எது? என்பதனையே இன்றும் நீங்களும் நானும் அறிய விரும்புகிறோம். இந்த சின்ன கொம்பு என்பது அந்திக் கிறிஸ்துவைக் குறிக்கும். இவனைப்பற்றி சில காரியங்களை நாம் ஏற்கனவே அறிந்துள்ளோம். இவன் ரோம சாம்ராஜ்யத்தின் பத்து ராஜாக்களில் மூவரை வெற்றிக்கொள்வான். தேவனுக்கு விரோதமாகப் பேசுவான். அவருக்கு விரோதமாக எழும்புவான். மேலும் தேவனுக்கு மேலாகத் தன்னை உயர்த்துவான் என வசனம் 25 தெரிவிக்கிறது. அப்.பவுலும் இதனையே 2 தெசலோனிக்கேயர் 2:4 இல் கூறியுள்ளார். எனவே அந்திக்கிறிஸ்து என்பவன் கிறிஸ்துவின் விரோதி. தானே கடவுளாக விரும்புகிறவன். தேவனுக்கு விரோதமாக தீயக்காரியங்களைப் பேசுவான்.
மூன்றாவதாக, அவன் பரிசுத்தவான்களைத் துன்புறுத்துவான். உபத்திரவகாலத்தில் இரட்சிக்கப்பட்டவர்களை (வெளிப்படுத்தல் 7) இரக்கமில்லாமல் துன்புறுத்துவான். ஏனெனில் அவன் தேவனையும் அவருடன் தொடர்புடைய அனைத்தையும் வெறுக்கிறவன்.
நான்காவதாக, அவன் தன்னுடைய தெய்வீகத்தை நிரூபிக்க முயற்சி செய்வான். அதனை எவ்வாறு செய்வான்? அந்திக்கிறிஸ்துவைப் பற்றிக் கூறும் வசனம் 25இல் “உன்னமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்; அவர்கள் ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புக் கொடுக்கப்படுவார்கள்.”
இந்த அந்திக்கிறிஸ்துதான் தேவனைப்போல் இருப்பேன் என்று எண்ணி தேசங்களின் சட்டங்களையும் மாற்ற யோசிப்பான். இயற்கை நியதிகளை ஒதுக்கிவிட்டு தன்னுடைய விதிகளைப் புகுத்த எண்ணுவான். அவனால் அது இயலாது; ஆனால் அவன் தன்னால் முடியும் என்று நினைத்துக்கொள்வான். அந்திக்கிறிஸ்து வரும்பொழுது பரிசுத்தவான்களை துன்புறுத்துவான் என்று தானியேல் நமக்கு கூறுகிறார். பத்து இராஜ்யங்களில் மூன்றினை அவன் அழிப்பான். தேவனுக்கு மேலாகத் தன்னை உயர்த்துவான். தன்னையே தேவன் என நினைப்பான்.
ஆனால், வசனம் 26 மற்றும் 27இல் அவனுடைய முடிவு சடுதியில் வரும் என்பதைக் கவனியுங்கள். தானியேல் நான்கு விலங்குகளின் தரிசனம் மட்டுமல்லாது தொன்மையானவரின் பெரிய தரிசனத்தையும் கண்டார். “ஆனாலும் நியாயசங்கம் உட்காரும்; அப்பொழுது முடிவுபரியந்தம் அவனைச் சங்கரிக்கும்படியாகவும் அழிக்கும்படியாகவும் அவனுடைய ஆளுகையை நீக்கிப் போடுவார்கள். வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரீகமும் ஆளுகையும் மகத்துவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்; அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; சகல கர்த்தத்துவங்களும் அவரைச் சேவித்து, அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்” என்பது. “ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீரசத்தங்கள் வானத்தில் உண்டாயின” என்று வெளிப்படுத்தல் 11: 15இல் உண்மையாகிறது. இது தானியேலுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதியாகும்.
தானியேலுக்கு தான் கண்ட தரிசனத்தை முழுவதுமாக அறிந்துகொள்ளமுடியவில்லை. தானியேல் நான்கு மிருகங்களில் இரண்டாவது மிருகத்தின் ஆரம்ப ஆட்சியில் வாழ்ந்து கொண்டிருந்தார். ஆனால் தேவன் அவருக்கு எதிர்காலத்தைப் பற்றிய தரிசனத்தை அருளினார். எனவே தானியேல் மூன்றாவது மற்றும் நான்காவது மிருகத்தின் ஆட்சியை விசுவாசத்தின் மூலமாக நம்பவேண்டியிருந்தது. எனவேதான் இந்த அதிகாரத்தின் இறுதி வசனம் மிகவும் முக்கியமானது. “அவன் சொன்ன இந்த வார்த்தை முடிந்தது;” தானி யேல் தனக்குக் கூறப்பட்ட அனைத்தையும் உணர்ந்துகொள்ள ஆவலாய் இருந்தார். எனவே தேவனிடம் கூடுதலாக விவரிக்கக் கெஞ்சினார். தேவன் அவனிடம் “தானியேலே நீ எல்லாவற்றையும் அறிந்துகொள்ள முடியாது; இதுவே உனக்குப் போதும்” என்று கூறிவிட்டார். தானியேலாகிய நான் என் நினைவுகளால் மிகவும் கலங்கினேன்; என் முகம் வேறுபட்டது; இந்தக் காரியத்தை என் மனதிலே வைத்துக்கொண்டேன்.
தீர்க்கதரிசனங்களின் உட்பொருளை விவரிப்பதில் நாம் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். அநேக காரியங்களை நமக்குள்ளாக வைத்துக்கொள்வோமானால் தீர்க்கதரிசனத்தை விவரிக்காமல் இருப்பது நலம். தானியேலுக்கு தேவன் கூறியதை நான் அறிவேன்; ஆனால் தானியேலின் தீர்க்கதரிசனங்களை முழுவதுமாக என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை; நான்கு ராஜ்யங்கள் எழும்பும் என்று தானியேலுக்குக் கூறப்பட்டது. அதிலிருந்து உலகை ஆள ஒருவன் எழும்புவான். ஆனால் அவன் தோல்வியடைவான்; ஏனெனில் இயேசுகிறிஸ்துவே இராஜாதி இராஜா, கர்த்தாதி கர்த்தா. இவையனைத்தும் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் நடந்தது. இயேசுகிறிஸ்து இனிதான் இராஜாதி இராஜாவாக வரப்போகிறார். எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடியாத எனக்கு இது போதும்.
தானியேல் தான் அறிந்து கொண்ட அனைத்தையும் எழுதிவைத்தார். அதன் முடிவு அவர் தேவனுடைய மனிதர். தேவன் கூறியதைச் செய்தார். தேவனுக்கு உண்மையான தீர்க்கதரிசியாக இருந்து எதிர்காலத்தை நாம் எவ்வாறு எதிர்நோக்கியிருக்க வேண்டும் என்று உணர்த்தினார்.
அதிவேகமாக வளர்ந்து வரும் இவ்வுலகம் ஒழுக்கத்தில் அதிவேகமாக அழிந்துவருகிறது என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். அந்திக்கிறிஸ்துவின் ஆட்சி நெருங்கிவருவதை உணருகிறோம் அல்லவா? வேதாகமம் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. ஆனாலும், அதன் தீர்க்க தரிசனங்களால் நாமும் நன்மையடைகிறோம்.
ஒரு குறிப்பிட்ட காலத்தில் தேவன் தானியேலுக்குத் தரப்பட்ட தரிசனங்களானது புதிய ஏற்பாட்டில் தொடர்ந்தது. வெளிப்படுத்தல் கூறுவதை வைத்து தானியேலின் புத்தகத்தை நாம் வாசிக்க வேண்டும். நம்முடைய விளக்கங்கள் அல்ல; வேதம் தன்னைத் தானே விளக்குவதற்கு நாம் இடமளிக்க வேண்டும்.
மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை
சிந்தியுங்கள்!
எந்த நிலையிலும் எல்லா சம்பூரணமும் நிறைந்த ஆண்டவர் நமக்குப் போதும் என்ற மனப்பக்குவத்தை நமக்குள் வளர்த்துக்கொள்வோமானால், திருப்திமிக்க வாழ்வு தானாகவே நம்மில் மலர்ந்துவிடும்.