சகோதரி சாந்தி பொன்னு
(ஜூலை-ஆகஸ்ட் 2022)

தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன் (எபே.1:19).

சகோதரி சாந்தி பொன்னு

தேசங்கள் பலவிதங்களிலும் தத்தளிப்புக்கு ஆளாகியிருக்கின்ற இந்தக் காலப்பகுதியில், ஜெபிக்காத ஒரு கிறிஸ்தவ விசுவாசியும் இருக்க முடியாது. ஆனால் நாம் எதற்காக ஜெபிக்கிறோம்? எப்படி ஜெபிக்கிறோம் என்பதே காரியம். சொந்த விருப்பு வெறுப்புகளை ஜெபத்திலே கொட்டி, அதன்படியேதான் நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோமா? அல்லது, நமது ஆதங்கங்களைக் குறைபாடுகளைக் கூறி ஜெபித்தாலும், கர்த்தருடைய ஆளுகை நம்மையும், நம் தேசத்தையும் ஆட்கொள்ள வேண்டுமென்று மனப்பூர்வமாக ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறோமா? “பிதாவே, நீரே ராஜா. உம் சித்தப்படி ஆகட்டும்” என்று ஜெபத்தில் சொன்னாலும், நமது உள்ளான மனதின் எதிர்ப்பார்ப்பிற்கு மாறாக பதில் வருமானால் நாம் சோர்ந்துபோவது ஏன்? இதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று நமது மங்கிப்போன மனக்கண்களே என்றால் மிகையாகாது.

நமது மனக்கண்கள் குறும்பார்வையுடையதாக, மங்கியதாக இருக்கும்போது நமது ஜெபங்களும் எதிர்பார்ப்புகளும் அதற்கேற்றதாகவே இருக்கும். நமது மனக்கண்கள் மிகுந்த தூரப்பார்வையுடன் எவ்வளவுக்குப் பிரகாசமாயிருக்கிறதோ, அதன் அடிப்படையிலேதான் நமது ஜெபவிண்ணப்பங்களும் இருக்கும். ஆகவே, முதலாவது, நம்மை நாமே ஏமாற்றுவதை விடுத்து, நமது மனக்கண்கள் திறக்கப்பட பிரகாசமடைய நாம் நமக்காக ஜெபிக்கவேண்டும். பின்னர், நாம் யார் என்பதை நம்மால் உணர முடியும்; அப்படியே உணர்ந்துகொண்டால், கர்த்தருடைய வார்த்தையை நாடுவோம். கர்த்தருடைய வார்த்தை நம்மை நிரப்பும்போது நமது விசுவாசமும் ஊன்றக்கட்டப்படும்; வார்த்தையும் விசுவாசமும் இணைந்து நாம் ஏறெடுக்கின்ற ஜெபங்களும் நிச்சயம் கர்த்தருடைய இருதயத்துக்கு ஏற்றதாகவும், கர்த்தர் நம்மை வைத்திருக்கின்ற ஸ்தானத்திற்கு மகிமையாகவும், மேலானவைகளையே நாடுகிறவையாகவும் ஏறெடுக்கப்படும். பின்னர் அது நிறைவேறாமல் போகுமா!

பவுலின் ஜெபம்

பவுலுடைய ஒவ்வொரு நிருபங்களும் அந்தந்த சபையின் நிலைமைக்கு ஏற்றபடியும், சபைகளை ஊக்குவித்து உறுதிப்படுத்துகிறவையுமாகவே இருக்கின்றதை அறிகிறோம். ஆனால், அந்நாட்களில் வெவ்வேறு சபைகளில் காணப்பட்ட வெவ்வேறு பிரச்சனைகள் ஒட்டுமொத்தமாக இன்று நமது சபைகளுக்குள்ளும் நமக்குள்ளும் பல்வேறு கோலங்களில் நுழைந்துவிட்டன என்று எண்ணத் தோன்றுகிறது. ஆகவே, பவுலின் ஒவ்வொரு நிருபமும் ஒவ்வொரு பொக்கிஷங்களாக இன்றும் நம்மை எச்சரிக்கிறது. இவைகளிலே எபேசியர், பிலிப்பியர், கொலோசெயர், பிலேமோன் இந்தக் கடிதங்களை எழுதியபோது பவுல் ரோமாபுரியில் சிறைவைக்கப்பட்டிருந்தார். சிறையிலடைக்கப்பட்ட பவுல் சிலகாலம் விடுவிக்கப்பட்டு, மீண்டும் பாதாள சிறையில் அடைக்கப்பட்டு ஓரிரு வருடங்களில் சிரைச்சேதம் செய்யப்பட்டு மரித்ததாகச் சொல்லப்படுகிறது. அந்த நிலையில் பவுல் எழுதிய உருக்கமான இறுதியான நிருபம்தான் தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் நிருபம்.

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு மனுஷன், அதிலும் கிறிஸ்துவின் நாமத்தை அறிவித்த தினிமித்தம் கட்டப்பட்டுள்ள ஒரு மனுஷன் முதலாவது, “கர்த்தருக்குத்தானே ஊழியம் செய்தேன், எனது சிறையிருப்பு நீங்க வேண்டும்” என்று தானும் ஜெபித்து, பிறரிடமும் ஜெபிக்கக் கேட்டிருக்க வேண்டும். அதில் தவறு ஒன்றுமில்லையே! ஆனால், தன்னையும் தான் சேவிக்கும் ஆண்டவரையும் தனக்கு நேரிடப்போவதையும் அறிந்திருந்த பவுல் தனது விடுதலைக்காக ஜெபிக்கும்படி எங்கும் எழுதியாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு இடத்திலே, “எனக்காகவும் விண்ணப்பம் பண்ணுங்கள்” என்கிறார். எதற்காக? “சுவிசேஷத்திற்காகச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிற ஸ்தானாபதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியபடி தைரியமாய்ப் பேசத்தக்கதாக, நான் தைரியமாய் என் வாயைத் திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்குக் கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம் பண்ணுங்கள்” (எபே.6:19,20) என்று மீண்டும் சுவிசேஷத் தினிமித்தமே தனது ஜெபவிண்ணப்பத்தை முன் வைக்கிறார் பவுல்.

எபேசு சபைக்கு பவுல் இந்த நிருபத்தை எழுதிய நாட்களில் எபேசு பட்டணத்தில் வேறு கஷ்டதுன்பங்கள் இருந்திராதா? மக்கள் அரசாட்சியினால் ஒடுக்கப்படாமல் இருந்திருப்பார்களா? வேறு பலவித பிரச்சனைகள் மக்களுக்கு இருந்திராதா? ஆனால், எந்த சூழ்நிலை நெருக்கங்களிலும், கர்த்தருடைய பிள்ளைகளின் ஜெபம் எப்படியிருக்க வேண்டும், யாரை, எதனை நோக்கவேண்டும் என்று பவுல் ஏறெடுத்த ஜெபமே நமக்கு மாதிரியாக அமைந்திருக்கிறது. ஏனெனில், நாம் யார், கர்த்தர் நம்மை எப்படியெல்லாம் ஆசீர்வதிக்கிறார் என்பதை எழுதிவிட்டுத்தான், எபேசு சபையாருக்காகத் தான் எதற்காக ஜெபிக்கிறார் என்பதைப் பதிவு செய்துள்ளார்.

“நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்” (எபே.1:3). ஆக, நமது ஆசீர்வாதங்கள் உன்னதங்களிலிருந்து கிறிஸ்துவினூடாக நமக்குக் கிடைத்துவிட்டது – ஆசீர்வதித்திருக்கிறார். மாத்திரமல்ல, “கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்” (எபே.2:7) என்றும் தொடர்ந்து எழுதியுள்ளார். நாம் இப்போது உட்கார வைக்கப்பட்டிருக்கிற இடம் எங்கே என்பதை நாம் உணர்ந்திருக்கிறோமா? அந்த மேலான உன்னத இடத்தில் வாசம் பண்ணும் வாழ்வைத்தான் இந்தப் பூவுலகிலே நாம் வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். அப்படியானால் ஆண்டவர் இயேசு எப்படி இந்த உலகில் வாழ்ந்தாரோ எப்படி ஜெபித்தாரோ அப்படியேதானே நமது வாழ்வும் இருக்க வேண்டும்! மேலும், “நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்” (கொலோ.3:1) என்றும் பவுல் கொலோசெயருக்கும் எழுதுகிறார். இன்றைய கிறிஸ்தவ வாழ்க்கை இந்த வார்த்தைகளுக்கு ஏற்ப இருக்கிறதா என்று சிந்திப்போம்.

மேலும், நாம் தேவகிருபையினால் விசுவாசிகளானபோது, நாம் கர்த்தருக்கே சொந்தமானவர்கள் ஆனோம்; பரிசுத்த ஆவியானவரால் முத்திரையிடப்பட்டுள்ளோம். இப்படியே, இந்த எபேசு சபையினரின் விசுவாசத்தையும் அன்பையும் குறித்துக் கேள்விப்பட்ட பவுல், ஒருமுறை இரண்டு தடவை அல்ல, இடைவிடாமல் ஸ்தோத்திரம் பண்ணி தனது ஜெபங்களில் இந்த எபேசு சபையினரை நினைத்துக்கொள்வதாக எழுதுகிறார். ஆனால், விசுவாசிகளாகிவிட்டால் அத்துடன் எதுவும் முடிவுறவில்லை; அங்கேதான் யாவும் ஆரம்பமாகிறது.

இப்படியிருக்க நமது நடவடிக்கைகளும் ஏறெடுக்கப்படும் ஜெபங்களும் இந்த மேலான இடத்துக்கு ஏற்றபடி, நம்மைக் கர்த்தர் உயிரோடெழுப்பி உட்காரவைத்திருக்கின்ற ஸ்தானத்திற்கு மகிமை சேர்க்கும்படி இருக்கிறதா என்பதைச் சிந்திப்பது நல்லது. அப்போ, நமது அன்றாட தேவைகளுக்காக ஜெபிக்கக்கூடாதா என்ற கேள்வி எழும்பலாம்; ஜெபிக்கவேண்டும், ஆனால் நமது மனநோக்கும் மனவிருப்பமும் தேவனை நோக்கி இருக்கவேண்டும் என்பதை உணர்ந்து நமது ஜெப வாழ்வில் நாம் முன்னேறலாமே! உலகப் பிரச்சனைகள் ஒருபோதும் ஒழிந்து போகாது; ஒன்று மாறி ஒன்றாகக் கூடிக்கொண்டே போகும்; அதைக் கண்ணூடாக நாம் இன்று காண்கிறோம் அனுபவிக்கிறோம். ஆனால், நாம் தேடவேண்டியதைத் தேடினால், அந்தத் தேடல் நம்மைச் சரியான பாதையில் இட்டுச்செல்லும் என்பதை உணர்ந்து, நமது ஜெபங்களின் போக்கில் ஜாக்கிரதையாயிருப்போம்!

பவுல், விசுவாசிகளுக்காக என்ன விண்ணப்பங்களை வைத்தார் என்பதை இந்த எபேசியர் நிருபத்தின் முதலாம் அதிகாரத்திலிருந்து சற்று கற்றுக்கொள்வோம்:

1. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும் …… (எபே.1:17).

தேவனுடைய பிள்ளைகள் தேவனை அறிந்துகொள்ள வேண்டும், அதற்குரிய ஞானத்தையும் தெளிவையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றே பவுல் தனது முதலாவது ஜெபவிண்ணப்பத்தை வைக்கிறார். முதலிடம் தேவனை அறிகிற அறிவு; இது தவறிப்போனதால்தான் இன்று கிறிஸ்தவ உலகம்கூட தடுமாறிநிற்கிறது! இரண்டு காரியங்கள் உண்டு. ஒன்று, தேவனைப்பற்றி அறிந்துகொள்வது, மற்றது தேவனையே அறிந்துகொள்வது. இதில் முதலாவது மிக இலகு. கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத ஏராளமானவர்களும் இன்று தேவனைப்பற்றி அறிந்திருக்கிறார்கள். அவர்களும் வேதத்தை வாசிக்கிறார்கள், பல நற்கிரியைகளைச் செய்கிறார்கள், நாமும் செய்கிறோம். கிறிஸ்தவர்கள் அநேகர் இன்று இறையியல் வல்லுணர்கள் ஆகிவிட்டனர், அது நல்லது. இன்னும், பலவித தியானப் புத்தகங்கள், இணையத்தள தியானங்கள் என்று ஏராளம். ஏராளமான கவர்ச்சியான பிரசங்கங்களும், கூட்டங்களும் இன்னொரு புறம். இவற்றைவிட இயற்கையே தேவனை அறிவித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆகவேதான் தேவனைப்பற்றித் தெரியாது என்று எவரும் சொல்லமுடியாது. ஆகவேதான் பவுல், “அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை;” என்று பவுல் எழுதுகிறார் (ரோமர் 1:20).

ஆனால், தேவனைப்பற்றிய அறிவைத் தருகின்ற இவைகள் தேவனை அறிந்துகொள்ள உதவுமா? ஒரு திருமண ஒழுங்கிலே மணப்பெண், மணமகன் பற்றி பிறர் கூற அறிந்து கொண்டு, திருமண பந்தத்துள் வந்துவிடுகிற பல திருமண உறவுகள் இன்று சின்னா பின்னமாகிவிடக் காரணம், இதுவரை ஒருவர் பற்றி ஒருவர் அறிந்தவர்கள், ஒருவரையொருவர் அறியாதிருப்பதேயாகும். இப்போ ஒருவரையொருவர் அறியவரும்போது சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள். மாறாக, ஒருவருக்கொருவர் நேரம் கொடுத்து, ஒருவரோடொருவர் மனம் திறந்து பேசி, ஒருவரையொருவர் அறிய வரும்போது, சிக்கல்கள் நேரிட்டாலும் பிரிவினைக்கு இடமிராதல்லவா!

இப்படியிருக்க, அறிவுபூர்வமாக தேவனை அறிகிற அறிவு அவரைப்பற்றிய அறிவையே கொடுக்கிறது. ஆனால், அவரை தனிப்பட்ட ரீதியில் அறியவேண்டுமனாால் அவருடன் அமர்ந்திருக்க வேண்டும்; நேரம் செலவிடவேண்டும்; அவருடைய வார்த்தையை நமதாக்கி அவர் நம்முடன் பேசுவதை உணர்ந்து, தேவனுடன் இணங்கி வளரும்போது நாம் இன்னும்இன்னும் தேவனை அறியமுடியும்.

இந்த ஆவிக்குரிய உறவையும் தெளிவையும் பரிசுத்த ஆவியானவராலேயே நமக்குத் தந்தருள முடியும். அவரே வார்த்தையை நமக்கு அருளியவர்; அவரே வார்த்தையை நமக்கு விளங்க வைக்கிறவர்; அவரே தேவனைப்பற்றி அல்ல, தேவனையே அறிந்துகொள்ள நமக்குக் கிருபை அளிக்கிறவர். பவுல் தனது அனுபவத்தையே பிறரும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று விரும்பினார் என்பது, அவர் பிலிப்பியருக்கு எழுதி கடிதத்திலிருந்து அறிந்துகொள்ளலாம். “என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்” என்றும் “அவருக்காக எல்லாவற்றையும் … குப்பையுமாக எண்ணுகிறேன்” என்று எழுதியுள்ளார் (பிலி.3:8,11). இந்த அறிவு பவுலுக்குக் கொடுத்த பேரின்பத்தை எல்லோரும் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற அவரது அன்பு மனதையே எபேசியருக்காக ஜெபித்த ஜெபத்தில் காண்கிறோம்.

கர்த்தாவே, நானும், மற்றும் எல்லாரும் உம்மைப்பற்றி அறிகிற அறிவில் வளர, உம்முடனான உறவில் திடப்பட ஏதுவாக உம்முடன் தரித்திருக்கிற கிருபையைத் தாரும் என்று நாம் ஜெபித்திருக்கிறோமா!

2. தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும் (எபே.1:18).

கர்த்தர் நம்மை அழைத்திருக்கிறார். எப்போது? “அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே” (எபே. 1:4) உலகம் அஸ்திபாரமிடப்பட முன்னரே நாம் தெரிந்துகொள்ளப்பட்டபடியினாலே, நித்தியத்தின் ஆசீர்வாதமான நம்பிக்கையை நாம் பெற்றிருக்கிறோம்; இது முற்றிலும் கிருபையினாலானதாகும். கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பை (பிலி.3:14) இது முற்றிலும் உன்னத அழைப்பு, மற்றும்… தம்முடைய தீர்மானத்தின்படி கிறிஸ்து இயேசுவுக்குள்… பரம அழைப்பினாலே அழைத்தார் (2தீமோ.1:9) என்றபடி அந்தப் பரிசுத்த அழைப்பை உணராத எந்தவொரு கிறிஸ்தவனும் இந்த அழைப்புக்குப் பாத்திரவானாக நடக்கவே முடியாது. ஆகவேதான் பவுல் இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறார். ஏனெனில் இந்த நம்பிக்கை மங்கிய நம்பிக்கை அல்ல; கிறிஸ்துவினாலுண்டான ஜெயத்தினால் நமக்கு உண்டாயிருக்கிற உறுதியான நம்பிக்கை ஆகும். இந்த நம்பிக்கையே நம்மைப் பாவத்திலிருந்து தூர விலக்கும் அல்லவா! இந்த நம்பிக்கையில் நிலைத்திருக்கவேண்டுமென்று நாம் ஜெபித்திருக்கிறோமா?

3. பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக் கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்… (எபே.1:18).

“மகிமையின் ஐசுவரியம்” – இது கர்த்தருடைய சுதந்திரம்; நாமோ, “கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம்” (எபே.1:12). இப்படியிருக்க மகிமையின் ஐசுவரியமாகிய சுதந்திரத்தை நாம் கிறிஸ்துவுக்குள் பெற்றிருக்கிறோம்; அப்படியென்றால், அதற்கேற்றபடி நமது வாழ்வு இருக்கவேண்டாமா; இந்த சுதந்திர பாக்கியத்தை நமக்கு அருளிய தேவனுக்கு நாம் மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டாமா! ஜெபித்து தேவனைத் துதிப்போமாக!

4. தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே, விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும் நீங்கள் அறியும்படிக்கு (எபே.1:19).

“பலத்த சத்துவத்தின் வல்லமை”, “தம்முடைய வல்லமையின் மகாமேன்மையான மகத்துவம்” இந்த வார்த்தைகளின் கனத்தை நாம் உணர வேண்டும். இன்று மனிதன் எதையெதையோவெல்லாம் கண்டுபிடித்து, எதையும் அழிப்பதற்கு தன்னால் கூடும் என்பதுபோல தனது வல்லமையை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறான். ஆனால், அவனால் ஒரு ஜீவனைப் படைக்க முடியுமா? மரண நாளைக் குறிக்கத்தான் முடியுமா? இந்த உலகம் மனிதன் உருவாக்கியுள்ள ஆயதங்களுக்கும் அணுக்குண்டுகளுக்கும் பயப்படலாம். ஆனால், நமது ஆண்டவர் அந்த அணுக்குண்டுக்குள் வல்லமையை வைத்தவர்; மாத்திரமல்ல, சாவின் கூரையே ஒடித்து, சாவிலிருந்து இயேசுவை உயிரோடே எழுப்பிய மகா வல்லமையுள்ளவர் என்பதை உலகம் நினைப்பதில்லை. அதனால்தான் இன்றும் உலகம் தன்னை அறியாமலோ அறிந்தோ தேவனோடு போட்டி போடுகிறது.

கிறிஸ்து இயேசுவை சாவிலிருந்து எழுப்பிய அதே வல்லமை நமது அன்றாட வாழ்விலும் காணப்படுகிறது என்பதை நாம் சிந்திப்பதில்லை. பாவத்தின் கொடுக்கை ஒடித்து கிறிஸ்து ஏற்கனவே வெற்றிசிறந்துவிட்டார். சாவும் ஒழிந்தது; உலகமும் சாத்தானும் தோற்றுவிட்டன. சகலத்தையும் கிறிஸ்து ஜெயித்துவிட்டார். இந்த சத்தியத்தை நமதாக்க ஏன் கஷ்டப்படுகிறோம்? அறிவுக்குத் தெரிந்த சத்தியம் அன்றாட வாழ்வில் செயற்பட நாம் இடமளிப்பது குறைவானபடியினால்தான், கிறிஸ்து வெற்றி சிறந்ததை மறந்து வெற்றிக்காக நாம் போராடிக்கொண்டிருக்கிறோம்.

நமது ஜெபங்கள் மாறட்டும்

பிரியமானவர்களே, எல்லா நாமத்துக்கும் மேலான நமது ஆண்டவரை பிதாவாகிய தேவன் உன்னதங்களில் தமது வலது பாரிசத்தில் உட்கார வைத்திருக்கிறார். மாத்திரமல்ல, தேவ கிருபையால் பாவத்தின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட நாமும், கிறிஸ்துவுக்குள் உயிரடைந்தவர்களாய் உன்னதங்களிலே அவரோடேகூட உட்கார வைக்கப்பட்டிருக்கிறோம் (எபே.2:7). இப்படியிருக்க அந்த மகிமையின் ஐசுவரியத்தை நாம் மறந்து மனம்போனபடி ஜீவிக்கலாமா? நாம் உட்கார வைக்கப்பட்டிருக்கின்ற இடத்தில் குழப்பம் இல்லை, கொடூரம் இல்லை, தோல்வியும் இல்லை. வல்லமையும், சமாதானமும், ஜெயமும் நிறைந்த அந்த உன்னத இடத்தில் உட்கார வைக்கப்பட்ட நாம், அதை விசுவாசிக்கிறவர்கள் என்றால், இந்த உலகத்துடன் நமக்கு என்னதான் இருக்கப்போகிறது?

இவற்றை உணர்ந்து ஜீவிக்கவேண்டுமென்றால் நமக்கு தேவையானது ஒன்றே, “பிரகாசமான மனக்கண்கள்”. அதனை அருளுகிறவர் பரிசுத்த ஆவியானவரே! அவர் நம்மைப் பரிசுத்தப்படுத்துகிறவர், அதாவது வேறு பிரித்து வாழச் செய்கிறவர். இந்த மகத்துவமான மகிமையான ஐசுவரியமான வாழ்வை நமக்கு அருளிய தேவன், நாளை மாறிப்போகும் இந்த உலக வாழ்வில் நம்மை நடத்தமாட்டாரா? அவர் யாவையும், முடிவையும் அறிந்தவர். நமக்காக அவர் வைத்திருக்கிற மகிமை நிறைந்த ஆசீர்வாதத்தை நினைந்து, நாம் எங்கே உட்கார வைக்கப்பட்டிருக்கிறோம் என்பதைச் சிந்தித்து, அந்த வாழ்வை இந்த உலகிலே அவருக்கு சாட்சியாக வாழ கிருபைவேண்டி, பிரகாசமான மனக்கண்களை நாடி, நமக்காகவும், நம் ஒவ்வொருவருக்காகவும் அர்த்தமுள்ள ஜெபங்களை ஏறெடுப்போமாக. இந்த உலகிலிருந்து நாம் வேறுபடுத்தப்பட்டவர்கள் என்பதை மறவாதிருப்போம்.

அதேசமயம், இன்னமும் இயேசுவைக் கிறிஸ்துவாக ஏற்றுக்கொள்ளாமல், இந்த மகிமையின் ஐசுவரியத்தையெல்லாம் காணக்கூடாதபடி உணரக்கூடாதபடி கண்கள் இருளடைந்து கூசிப் போயிருக்கிற ஏராளமான மக்களும், அந்த அன்பின் மீட்பைப் பெற்று, பிரகாசமான மனக் கண்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும், ஒவ்வொரு மனிதனும், தன் பாவத்தை உணர்ந்து மனந்திரும்பி, பரிசுத்தமடைய வேண்டுமென்றும் ஆத்தும பாரத்துடன் ஜெபிப்போமாக. ஆமென்.

நினைவுகூருங்கள்!

எந்தச் சூழ்நிலையிலும் நாம் அசைக்கப்படாமல் இருப்பதற்கு தேவன் மீதுள்ள நம்பிக்கையில் நாம் நிலைகொண்டிருத்தல் அவசியம்.