ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 30 புதன்
“.. உங்களில் இரண்டுபேர் .. பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால் .. பரலோகத்திலிருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும்” (மத்.18:19) என்ற வாக்குப்படி இம்மாதம் முழுவதும் நாமனைவரும் ஒருமனதோடு ஏறெடுத்த விண்ணப்பங்களுக்கு கர்த்தர் கொடுத்த பதில்களுக்காக ஆண்டவரை ஸ்தோத்திரிப்போம்.
பரீட்சை பார்த்தல்
தியானம்: ஏப்ரல் 30 புதன்; வாசிப்பு: யாத்திராகமம் 17:1-7
“…இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை
பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.”
(மத்தேயு 4:7)
சில வருடங்களுக்கு முன்பு, மரித்துப்போன ஒருவரை உயிர்ப்பிக்கப் போவதாக தேவன் தன்னிடம் சொன்னதாகச் சொல்லி, ஒரு மரணவீட்டிற்குச் சென்ற ஒருவர் அதிகநேரம் ஜெபித்தார். எதுவும் நடைபெறவில்லை. அந்த புறவினத்தார் மத்தியில் தேவநாமம் தூஷிக்கப்பட்டுக் கேலிக்கூத்தானது.
தேவனையும் அவரது வல்லமையையும் பரீட்சை பார்க்கும்படிக்கு தூண்டுவது சாத்தானின் ஒரு தந்திரமாகும். வனாந்திரத்திலே தேவனுக்கு எதிராக முறுமுறுத்த இஸ்ரவேலரை மோசே பலதடவைகளிலும் கண்டித்தார். ‘ஏன் தேவனைப் பரீட்சை பார்க்கிறீர்கள்? அவரது வழிநடத்துதலையும், அற்புதங்களையும் கண்ணாரக் கண்ட நீங்கள் அவரை அறிந்திருந்தும் ஏன் முறுமுறுத்து அவரைப் பரீட்சை பார்க்கிறீர்கள்’ என்றார் மோசே. தேவனைப் பரீட்சை பார்த்ததால் அநேகர் வனாந்திரத்தில் மாண்டுபோனார்கள்.
தேவனைப் பரீட்சை பார்ப்பதைக்குறித்தே சாத்தான் இயேசுவுக்கு இரண்டாவது சோதனையைக் கொடுத்தான். தேவாலயத்து உப்பரிக்கையின் மேலே இயேசுவைக் கொண்டுபோய், “இதிலிருந்து தாழக்குதியும். ஏனெனில், உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு தூதர்கள் தங்கள் கைகளில் உம்மை ஏந்திக்கொள்வார்கள் என்று எழுதியிருக்கிறதே” என்றான். ஆனால், இயேசு, “உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே” என்றார்.
நாம் தேவனைப் பரீட்சைப் பார்க்க முயற்சிக்கிறோமா? தேவனுடைய வார்த்தைகளைச் சோதித்துப் பார்க்க எண்ணுகிறோமா? இது சாத்தானின் ஒரு தூண்டுதலே என்பதை மறக்கவேண்டாம். இயேசுவை சோதித்தவன் நம்மை விட்டுவைப்பானா? இஸ்ரவேலர் தேவனைப் பரீட்சை பார்த்ததற்கு முக்கிய காரணம் அவர்களுக்குள் இருந்த இச்சையே (சங்.106:14). தாம் விரும்பியது யாவும் கிடைக்கவேண்டும் என்ற ஆசை; குறைவில்லாத வாழ்வு. இப்படி அனைத்தையும் இச்சித்த அவர்கள் மோசம் போனார்கள். விட்டுவந்த எகிப்தில் உண்ட உணவுகளைக்கூட இச்சித்து அதையே எண்ணி, எகிப்தை விட்டுப் புறப்பட்டாலும், மனதளவில் எகிப்திலேயே வாழ்ந்தார்கள். நமது வாழ்வு எப்படிப்பட்டது? நாம் திருப்தியோடு வாழுகிறோமா? அல்லது இச்சையும், தேவையற்ற ஆசைகளும் நமக்குள் வேரூன்றியுள்ளனவா? நம்மை வீழ்த்த சாத்தானுக்கு அது போதும். தேவனைப் பரீட்சை பார்க்கும் சோதனைக்குள் நாமும் தள்ளப்பட்டுப்போவோம். நம்மை நாமே நிதானித்துப் பார்ப்போமா!
ஜெபம்: “அன்பின் தேவனே, எக் காரணத்தினாலும் உம்மைப் பரீட்சை பார்க்கும் சோதனையில் விழுந்துவிடாமல், உம்மை நம்பி வாழ உதவிடும். ஆமென்.”
வாக்குத்தத்தம்: ஏப்ரல் 29 செவ்வாய்
நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார். (2நாளா.15:2)
ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 29 செவ்வாய்
“.. நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் அருளாதிருப்பதெப்படி?” (ரோம.8:32) இவ்வாக்குப்படியே பலவிதத் தேவைகளோடிருக்கிற 13 நபர்களுக்கு கர்த்தர் இரக்கத்தையும் தயவையும் காண்பித்து தம்முடைய வழிகளில் பாதுகாத்து நடத்திட ஜெபிப்போம்.
அவிசுவாசம்
தியானம்: ஏப்ரல் 29 செவ்வாய்; வாசிப்பு: மத்தேயு 14:22-33
“இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால்
ஆகும். விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்
என்றார்.” (மாற்கு 9:23)
இயேசு, தமது ஊழிய காலங்களில் தமது சீஷர்களையும், தம்முடன் இருந்தவர்களையும் அவ்வப்போது ‘அற்பவிசுவாசிகளே’, ‘விசுவாசமில்லாத சந்ததியே’ என்றெல்லாம் அழைத்ததற்கு காரணம், அவர்கள் அவிசுவாசத்துடன் நடந்து கொண்டதேயாகும். இன்று நமது பிரச்சனையும் அதுதான். ஆக, நமது அவிசுவாசத்தையே தன் ஆயுதமாக எடுத்துக்கொண்டு, சாத்தான் நம்மை இலகுவாக வீழ்த்திவிடுகிறான். அவனை எதிர்கொள்ள நமக்கு விசுவாசம் என்னும் கேடயம் மிகவும் அவசியம் என்பதை மறக்கக்கூடாது.
தினமும் இந்தக் கேடயத்தை அணிந்துகொள்ளாவிட்டால் சாத்தான் வெகு இலகுவாக நமது நெஞ்சைத் தாக்குவான். படகு அலைகளினால் அலைவுபட்டபோது சீஷர்கள் கலங்கித் தவித்தனர். அவர்களது கலக்கத்தின் மிகுதியால் கடலில் நடந்துவந்த இயேசுவைக்கூட அவர்களால் இனங்காண முடியவில்லை. இயேசு, ‘நான்தான்’ என்றதும் அவர்களது அவிசுவாசம் சற்றுக் குறைந்திருக்கலாம். அதனால்தானோ என்னவோ, பேதுரு கடலில் நடக்கத் துணிந்தார். ஆனால், காற்று பலமாய் இருக்கிறதைக் கண்டு பயந்து, மீண்டும், “ஆண்டவரே! இரட்சியும்” என்கிறார். உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து, “அற்பவிசுவாசியே! ஏன் சந்தேகப்பட்டாய்” என்கிறார்.
புயலிலும், பலமான காற்றிலும், கொந்தளிப்பிலும் நமது வாழ்க்கைப் படகு தத்தளிக்க நேரிடும்போது, நமது விசுவாசத்தைத் தளரவிடுவதால் கலங்கிப் போகிறோம். நமது வாழ்க்கைப் படகில் இயேசு இருப்பாரானால், எல்லா வேளைகளிலும் விசுவாசத்தோடு உறுதியாக நிற்கக் கற்றுக்கொள்ள வேண்டும். பிரச்சனைகளும் சோதனைகளும் வரும்போது நமக்குள் சாத்தான் கொண்டு வரும் அவிசுவாசத்தை, நமது உறுதியான விசுவாசத்தைக்கொண்டு முறியடிக்க வேண்டும்.
தேவனில் உறுதியான விசுவாசம் கொண்டிருக்கவேண்டுமானால்; நாம் தினமும் அவருடன் நல்லுறவு கொண்டிருத்தல் வேண்டும். மோசேக்கும் யோசுவாவுக்கும் தேவனோடு உறவு இருந்ததால்தான், செங்கடலைப் பிளக்கவும், யோர்தானை கடக்கவும், எரிகோ மதிலை வீழ்த்தவும் முடிந்தது. தேவனுடனான நம் உறவும், தேவ வார்த்தைகளில் வைத்திருக்கும் உறுதியான நம்பிக்கையுமே நாம் விசுவாசத்தில் வளர உதவிடும் ஊன்றுகோல்கள். விசுவாசத்தில் தளர்ந்துவிடாதிருக்க தேவனோடுள்ள உறவைப் பெலப்படுத்துவோம். அவிசுவாசத்தைக் கொண்டு நம்மை முறியடிக்க முயற்சிக்கும் சாத்தானை நமது தேவன்மீதுள்ள விசுவாசத்தால் ஜெயிப்போம்.
ஜெபம்: “அன்பின் பிதாவே, உம்மோடு உறவில் வளரவும், விசுவாசத்தில் பெலப்படவும், சாத்தானை ஜெயிக்கவும் பெலன் தாரும். ஆமென்.”