ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 30 வியாழன்
“… இந்தக் கிரியை எங்கள் தேவனால் கைகூடி வந்ததென்று அறிந்தார்கள்” (நெகேமி.6:16) என்று வாசிக்கிறபடி இம்மாதம் முழுவதும் கர்த்தர் நம்மோடிருந்து நம்முடைய காரியங்களை கைகூடி வரப்பண்ணினபடியாலும், தம்முடைய சமாதானத்தால் காத்துக்கொண்டபடியாலும் அவரைத் துதித்து ஜெபிப்போம்.
கிருபையும் சத்தியமும்
தியானம்: ஏப்ரல் 30 வியாழன்; வாசிப்பு: சங்கீதம் 57:1-11
“உமது கிருபை வானபரியந்தமும், உமது சத்தியம்
மேகமண்டலங்கள் பரியந்தமும் எட்டுகிறது.”
(சங்கீதம் 57:10)
கம்யூனிஸ ஆட்சிக்காலத்தில் ரூமேனிய சிறைச்சாலையில் போதகர் ரிச்சர்ட் உம்பிராண்ட் உட்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் சிறையிலடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்கள். இந்தச் சித்திரவதைகளில் மூளைச்சலவையும் ஒன்று. செவிகளுக்கு மிக அருகில் ஒலிபெருக்கியை வைத்து “கிறிஸ்தவம் முட்டாள்தனமானது, கம்யூனிஸம் நல்லது, உன்னை இனி ஒருவரும் நேசிக்கமாட்டார்கள்” போன்ற வார்த்தைகள் காதுகளில் திரும்பத் திரும்ப ஒலிக்கும்படி செய்தனர். இப்படி ஒரு நாளைக்கு 17 மணி நேரமாக, நாட்கள் மாதங்களாகத் தொடர்ந்து கேட்கச் செய்தனர். இதனால் சிலருடைய செவிப்பறைகள் வெடித்தது. சிலர் செவிடாகினர். சிலர் தாங்கமுடியாமல், இயேசுவை மறுதலித்தனர். ஆனால், ரிச்சர்ட் உம்பிராண்ட் அவர்களோ, “இதைச் சமாளிப்பதற்கு ஒரே வழி ‘இதயச் சலவை’தான்” என்று எழுதியுள்ளார். நமது இதயம் தேவ அன்பினால் நிறைக்கப்பட்டிருக்குமானால் எந்தச் சித்திரவதையிலும் கிறிஸ்துவுக்காய் உறுதியுடன் வாழலாம் என்பதையே அவர் உணர்த்தியுள்ளார்.
தாவீதை மரண ஆபத்து தொடர்ந்துகொண்டிருந்தது. தாவீதை விடாமல் துரத்தினான் சவுல். ஆனால், சவுலைக்கொன்றுபோட சந்தர்ப்பம் கிடைத்தும், தாவீது சவுலை எதுவுமே செய்யவில்லை. தன் ஆபத்தில் தாவீது தேவனையே நம்பியிருந்தான். இந்த உறுதி தாவீதுக்கு எப்படிக் கிடைத்தது? “என்னை விழுங்கப் பார்க்கிறவன் என்னை நிந்திக்கையில், அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி என்னை இரட்சிப்பார்.” இந்த உறுதிதான் எல்லாவித நெருக்கத்திலும் தாவீதைத் தேற்றியது. தேவனின் கிருபையும் சத்தியமும் தாவீதை நிறைத்திருந்தது. அதனால்தான் தாவீது எந்தச் சூழ்நிலையிலும் அநீதிக்கு உடன்படவுமில்லை; தடுமாறிவிடவுமில்லை.
தேவனிடத்தில் கொண்டிருந்த அன்பானது தாவீது மற்றும் போதகர் உம்பிராண்ட் அவர்களுடைய இதயத்தை நிரப்பியிருந்ததால் எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் திடமாக இருந்தனர். அவர்கள் சந்தித்த துன்பத்தில் எதை இன்று நாம் அனுபவிக்கிறோம்? ஒரு சிறு பிரச்சனையிலும் வெகு இலகுவாகத் துவண்டு போகிறோமே, ஏன்? போதகரின் இதயத்தை நிறைத்திருந்த அன்பும், தாவீது பெற்றிருந்த கிருபையும் சத்தியமும் நம்மிடம் இல்லையா? பிரச்சனைகள் தாக்கும்போது, துக்கம் வராது என்று சொல்லமுடியாது. அது மனித உணர்வு. ஆனால், தேவபிள்ளைகளாகிய நாம் அந்தத் துக்கத்தில் மாண்டுபோகக் கூடாது. ஏனெனில், நம்மைத் தாங்கவல்ல கிருபையும் சத்தியமும் நமக்குண்டு. அந்த தேவஅன்பு நம் இருதயத்தை நிரப்ப இன்றே நம்மை தாழ்த்துவோமாக.
ஜெபம்: “பிதாவே, எந்த நிலையிலும் உமது கிருபையும் சத்தியமும் என்னைத் தாங்கட்டும். உம்மை நேசிக்கும் நேசத்தால் என்னை நிரப்பும். ஆமென்.”
வாக்குத்தத்தம்: ஏப்ரல் 29 புதன்
… அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள். (ஏசா.61:3)
ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 29 புதன்
“..சிறியவனைப் புழுதியிலிருந்தும்… எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிற” (சங்.113:7) கர்த்தர்தாமே பலவிதமானத் தேவைகளோடிருக்கிற 13 நபர்களுக்கு உதவி செய்து, அவர்களது பிரச்சனைகளில் நல்ல தீர்வையும், குறைவுகளில் நிறைவையும் தந்து பாதுகாத்திட மன்றாடுவோம்.
கிருபைகளின் திரட்சி
தியானம்: ஏப்ரல் 29 புதன்; வாசிப்பு: சங்கீதம் 106:1-15
“…உம்முடைய அதிசயங்களை உணராமலும், உம்முடைய
கிருபைகளின் திரட்சியை நினையாமலும் போய், சிவந்த
சமுத்திர ஓரத்திலே கலகம்பண்ணினார்கள்.” (சங்கீதம் 106:7)
வங்கி ஒன்றிலே கௌரவமாக வேலை செய்த ஒரு தம்பதியினர், திடீரென வேலை ஸ்தலத்திற்கு அறிவிப்பு கொடுக்காமல் வெளிநாடு சென்று விட்டனர். ஆனால், அங்கே அவர்களுக்கு எதுவும் வாய்க்காதே போனதால் திரும்பி வந்தனர். இப்போது அவர்களுக்கு வெளிநாடும் இல்லை; வேலையும் இல்லை. ஏன் இந்த நிலைமை? இதுவரை கர்த்தர் நடத்திவந்த பாதையை எண்ணாமல் போனதும் ஏன்? கர்த்தருடைய கிருபையை நினையாமற்போன அவர்களுடைய திருப்தியற்ற மனநிலைதான் காரணம் என்றால் அது மிகையாகாது.
இதைத்தான் அன்று இஸ்ரவேலரும் செய்தனர். எகிப்திலே அடிமைகளாக உபத்திரவப்பட்ட தமது ஜனத்தை மீட்பதற்காகக் கர்த்தர் செய்த அற்புதமான அடையாளங்களை இஸ்ரவேல் மக்கள் கண்டனர். அந்த வாதைகளின்போது இஸ்ரவேலருக்கும் எகிப்தியருக்கும் இடையே கர்த்தர் வித்தியாசம் ஏற்படுத்தியதையும் அவர்கள் கண்டனர். இறுதியில், எகிப்தின் மனிதர் தொடங்கி மிருக ஜீவன்கள் வரைக்கும் எல்லா தலைச்சன்களும் செத்துப்போனதையும் இவர்கள் கண்டனர். இத்தனைக்கும் பின்னர், சிவந்த சமுத்திரத்தண்டைக்கு வந்தபோது, பின்தொடர்ந்து வந்த எகிப்தின் சேனையைக் கண்ட அவர்கள் எவ்வளவாகக் கூக்குரலிட்டார்கள். “எகிப்திலே பிரேதக்குழிகள் இல்லையென்றா வனாந்தரத்திலே சாகும்படிக்கு எங்களை கொண்டுவந்தீர்?” என மோசேயிடம் முறுமுறுத்ததிலேயே அவர்களுடைய முரட்டாட்டம் தெரிந்தது. ஆனாலும், தேவன் அவர்களைக் கைவிடவில்லை. சிவந்த சமுத்திரத்தையே பிளந்து அவர்களை வழிநடத்தினார். தாம் தப்புவிக்கப்பட்டதைக் கண்டு துதி பாடிய இஸ்ரவேல், மீண்டும் தேவனுடைய கிரியைகளை மறந்தார்கள்; தங்கள் இஷ்டப்படி நடந்தார்கள் என்று பார்க்கிறோம்.
கர்த்தர் அருளிய கிருபையின் திரட்சியை மறக்கும்போதெல்லாம் நாம் அல்லலுற நேரிடும் என்பதை நாம் மறக்கக்கூடாது. கர்த்தர் நமக்குக் கிருபையாய் ஈந்த தொழில், சுகவாழ்வு, குடும்பம் போன்றவைகளுக்காக என்றும் நன்றியுடன் இருப்பது அவசியம். இக்கட்டுகள் நேரிடும் போது அவற்றை மறக்கக் கூடாது. மறுபுறத்தில், நாமாக வழிகளைத் தெரிந்துகொள்ளுவதும் நமக்கு ஆபத்தைதான் விளைவிக்கும். அன்றைய இஸ்ரவேலைப்போல அடிக்கடி தேவ கிருபையை மறந்து தன்னிஷ்டப்படி முடிவெடுக்கவும், தன் காரியங்களை முன்னெடுக்கவும் துணிகரம் கொள்ளாதிருப்போமாக. தேவன் இரக்கமுள்ளவர்; அதற்காக, அவரது நீதியைச் சோதிப்பது நல்லதல்ல. வாழ்வின் எந்த வழியிலும் தேவன் நம்முடன் இருக்கிறார் என்ற நிச்சயம் ஒன்றே நமக்குப் போதுமானது.
ஜெபம்: “கர்த்தாவே, எந்த நிலையிலும் உமது கிருபையின் திரட்சியை மறந்து முறுமுறுக்காது உமக்குள் மன ரம்மியத்துடன் வாழ வழிநடத்தும். ஆமென்.”