ஜெபக்குறிப்பு: ஜுன் 30 செவ்வாய்

“நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாயிருந்தபடியால், நான் உம்மைத் துதிப்பேன்” (சங்.118:21) நம்முடைய ஜெபங்களுக்கு கர்த்தர் செவிகொடுத்து அருளிச் செய்த இரட்சிப்புக்காகவும், ஆசீர்வாதங்களுக்காகவும் நன்றி பலிகளைச் செலுத்துவோம்.

கிருபையினால் இரட்சிப்பு!

தியானம்:  ஜுன் 30 செவ்வாய்; வாசிப்பு: லூக்கா 7:11-17

“…கிட்டவந்து, பாடையைத் தொட்டார்.
அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்.”
(லூக்கா 7:14)

திரைச்சீலை அகன்றது. மேடைக் காட்சி நம்மைச் சிந்திக்க வைத்தது. மேடையிலே இருட்டு. ஒரு சில இருண்ட மனிதர்போலத் தெரிந்தவர்கள் ஆரவாரமும் ஆடல் பாடலுமாய் ஒருவனைத் தூக்கிக்கொண்டு போகிறார்கள். அவர்களுடைய கூட்டத்திற்கு இன்னொருவன் கிடைத்த மகிழ்ச்சி அவர்களுக்கு. திடீரென மேடையிலே வெளிச்சம் பளிச்சிடுகிறது. சுமந்தவர்கள் கண்கள் கூச அப்படியே நிற்கிறார்கள். வெளிச்சத்தைச் சகிக்கமுடியாமல் அந்த மனிதனைப் போட்டுவிட்டு சிதறி ஓடுகிறார்கள். அவனோ திகைத்து நிற்கிறான். ஒரு கை அவனை நோக்கி நீட்டப்படுகிறது. அவனும் தன் கரத்தை நீட்டுகிறான்; எழுந்து நிற்கிறான். மகிழ்ச்சியுடன் பாடுகிறான். இது ஒரு நாடகக் காட்சிதான். ஆனால், ஒரு மனிதனுடைய மரித்துப்போன நிலைமையையும், அவன் மீட்கப்படுகின்ற அற்புதமும் தத்ரூபமாக இக் காட்சியியில் வெளிப்பட்டது.

நாயீன் ஊர் விதவையின் மகனுடைய நிலைமை, இன்று “அக்கிரமங்களாலும் பாவங்களாலும் மரித்தவர்களாகிய” (எபே.2:1) முழு உலக மக்களையும் பிரதிபலிக்கிறது. எப்படி மரித்துப்போனவன் தானாக மரணத்திலிருந்து எழுந்திருக்க முடியாதோ, தனக்குத்தானே வாழ்வு கொடுக்க முடியாதோ, அது போலவேதான், பாவத்தில் மரித்தவனும் எதுவும் முடியாதவனாக இருக்கிறான். தனக்கு உதவிவேண்டும் எனக் கேட்கமுடியாதவனாக இருக்கிறான். தன்னைக் கொண்டுபோய் அடக்கம் செய்யும்படிகூட கேட்கமுடியாத அவனால் தனக்குத்தானே எப்படி உதவமுடியும்? மனதிரங்கி யாராவது அவனுக்கு உதவினால்தான் அவனை அடக்கம்கூட செய்யலாம். அன்று அந்த விதவைக்கு யாரும் இல்லை. மரித்தவர்களுக்குரிய மரியாதை கொடுக்கின்ற பழக்கம் ஊருக்குள்ளே இருந்ததால், ஊர் ஜனங்கள் அத்தாயுடன் சென்றனர். அதற்கு மிஞ்சி யாராலும் எதுவும் செய்யமுடியாது. அந்த நிலையில்தான் இயேசு தாமே கிட்ட வந்தார். பாடையைத் தொட்டார். தொட்டதும் சுமந்தவர்கள் நின்றார்கள். அந்த வாலிபனும் தன் வாழ்வில் இன்னொரு தருணத்தைப் பெற்றுக்கொண்டான்.

“தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்” (எபே.2:4,5). இன்று நாம் மறுவாழ்வு பெற்றிருக்கிறோம் என்றால் அது இயேசு நம்மேல் மனதுருகி, கிருபையாய் தொட்டதால்தான். நம்மால் நமக்கு வாழ்வு தரமுடியாது. இரட்சிப்பைச் சம்பாதிக்கமுடியாது. ஆனால், ஆண்டவர் கிருபையாய் தந்த புதிய வாழ்வை ஸ்தோத்திரத்தோடே ஏற்றுக்கொண்டு, அவருக்காக வாழலாமே.

ஜெபம்: “பாவத்தில் மரித்திருந்த எனக்கு கிறிஸ்துமூலம் கிருபையாய் புது வாழ்வு தந்த தேவனே, உமக்காகவே வாழ என்னைத் தருகிறேன். ஆமென்.”

ஜெபக்குறிப்பு: ஜுன் 29 திங்கள்

“..நம்முடைய தேவன் நமக்காக யுத்தம் பண்ணுவார்” (நெகேமி.4:20) யுத்தத்தில் வல்லவராகிய கர்த்தர்தாமே பலதரப்பட்ட தேவைகளோடிருக்கிற 9 நபர்களுக்கு அவரவருடைய குறைவுகளில் உதவி செய்து, எல்லா நெருக்கத்தினின்றும் விடுவித்திடவும், அவர்கள் இக்கட்டுகளில் நன்மை செய்திடவும் மன்றாடுவோம்.

மனதுருக்கமுள்ள தேவன்!

தியானம்: ஜுன் 29 திங்கள்; வாசிப்பு: லூக்கா 7:11-14

“கர்த்தர் அவளைப் பார்த்து, அவள்மேல் மனதுருகி:
அழாதே என்று சொல்லி, கிட்டவந்து,
பாடையைத் தொட்டார்.” (லூக்கா 7:13,14)

இனி செத்துப்போனால் என்ன என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோமா? கடைசி நம்பிக்கையும் இழந்து தவிப்பது என்பது மிகக் கொடுமை. அதிலும் மரணத்திற்கு ஒரு உறவைப் பலி கொடுத்துவிட்டுத் தனித்து நிற்பது என்பது மகா கொடுமை. யுத்தக் காலத்தில் இப் பயங்கரத்துக்குள் தள்ளப்பட்டவர்கள் அநேகர். என்றாலும், அத்தனை இழப்பின் மத்தியிலும் அவர்கள் இன்றும் சாட்சிகளாக வாழுகிறார்கள் என்பதுதான் உண்மை. காரணம் இயேசு!

இயேசு நாயீன் என்ற ஊருக்குள் போனார். திரளான ஜனங்களும் சீஷர்களும் அவருடன்கூடப் போனார்கள். ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, ஒரு மரண ஊர்வலம் வந்துகொண்டிருந்தது. ஒரு விதவைத் தாயின் ஒரே மகன் இறந்துபோனான். இத் தாயின் நிலை மிகவும் மோசமாயிருந்தது. அவளுடைய கணவனும் மரித்துப்போனான்; இப்போது அவளுடைய வாழ்வுக்கு ஒரே நம்பிக்கையும் ஆதாரமுமாயிருந்த மகனும் இறந்துபோனான். இனி அவளுக்கு யாரும் இல்லை. இனி மணமுடித்துப் பிள்ளைகளைப் பெறும் நிலையிலும் அவள் இல்லை. அவளுக்கு இனிப் பாதுகாப்பும் இல்லை; துணையும் இல்லை. அவள் வாழ்வில் தனித்துப்போனாள். அவளுடைய எதிர்காலம் இருண்டுவிட்டது. ஊருக்குள் இனி அவளை யார் மதிப்பார்கள்? உணவுக்காகப் பிச்சை எடுக்கும் நிலை கூடவரலாம். இப்படிப்பட்ட ஒரு தாயைத்தான் இயேசு சந்தித்தார். இயேசு அன்று நாயீன் ஊருக்கு வந்ததும், அன்று அந்த மரண ஊர்வலம் ஊர் வாசலைச் சமீபித்ததும், எத்தனை பெரிய ஆச்சரியம். இயேசுவிடம் யாரும் அந்த மரித்துப்போன மகனை எழுப்பும்படி கேட்கவுமில்லை; மன்றாடவுமில்லை. இயேசு அவளைப் பார்த்து மனதுருகி அழாதே என்றார். அவராகவே சென்று பாடையை தொட்டார். தொட்டதும் அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்.

பிரியமானவனே, உன் தனிமையை, இருண்டுபோன எதிர்காலத்தை, நம்பிக்கையற்ற சூழ்நிலையை யாரும் காணவில்லை என்று கலங்காதே. ஒருவேளை அந்த விதவையைப்போல இல்லாமல், உன் சூழ்நிலை வேறாக இருக்கலாம். எந்த சூழ்நிலையாயினும் அவற்றுக்கும் மேலாக உயர்ந்தவர் நமது ஆண்டவர். ஒருவேளை, மரித்துப்போன உங்கள் மகனோ, காணாமற்போன உங்கள் உறவுகளோ இன்னமும் திரும்பக் கிடைக்காமற் போகலாம். ஆனாலும், மனதுருக்கமுள்ள இயேசு உங்கள் வேதனையைக் காண்கிறார். அன்று அந்த விதவைக்கு அந்த மகன் அவசியமாயிருந்தான். இன்று உங்கள் அவசியம் என்னவென்று நமது ஆண்டவர் அறிவார். அவரை நீங்கள் நம்பலாம். உங்கள் கண்ணீரைக் காண்கிற இயேசு, “அழாதே” என்கிறார். அது உங்கள் காதுகளில் கேட்கிறதா?

ஜெபம்: “ஆண்டவரே, என் தனிமை வேதனையை அறிந்த ஒருவர் எனக்குள் இருக்கிறார் என்ற நம்பிக்கையைத் தந்ததற்காக ஸ்தோத்திரம். ஆமென்”