ஜெபக்குறிப்பு: ஜூலை 31 வெள்ளி

“.. தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்?” (2சாமு.7:18) என்ற வாக்குப்படியே இவ்வருடத்தின் ஏழுமாதங்களையும் அவருடைய கிருபையால் கடந்துவர உதவி செய்தபடியால் அவருக்கே துதிகளைச் செலுத்தி கர்த்தரை முழுமனதோடு ஸ்தோத்திரிப்போம்.

குடும்ப ஆராதனை

தியானம்: ஜூலை 31 வெள்ளி; வாசிப்பு: யோசுவா 24:14-22

“…நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே
சேவிப்போம் என்றான்.” (யோசுவா 24:15)

“குடும்பத்தில் பிரச்சனை; யாரும் யாரோடும் பேசவில்லை. ஒவ்வொருவரும் அமைதியாக ஒவ்வொரு அறையில் இருந்தனர். பாயை எடுத்து விரித்து எல்லோரும் ஜெபத்துக்கு வாருங்கள் என்றேன். அனைவரும் அறையைவிட்டு வெளிவந்தனர். குடும்பமாகச் சேர்ந்து பாடி ஜெபித்தோம். ஜெபம் முடிந்ததும் மனஸ்தாபங்களைப் பகிர்ந்துகொண்டு ஒருவரோடு ஒருவர் ஒப்புரவானார்கள்” என்று ஒரு சகோதரி சாட்சி சொல்லக் கேட்டேன். குடும்ப ஜெபத்தின் முக்கியத் துவத்தையும், ஆசீர்வாதத்தையும் எண்ணி தேவனுக்கு நன்றி சொன்னேன்.

யோசுவா இஸ்ரவேலருக்குச் சவாலிடுகிறார். “யாரை நீங்கள் சேவிக்கப் போகிறீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள். நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம்” என்றார். அன்றைய காலத்தில் ஒன்றாக குடும்பமாக அமர்ந்து உணவு உண்பதும், ஒன்றாக நிகழ்வுகளுக்குச் செல்லுவதும், ஆராதனைக்குச் செல்லுவதும், குடும்பமாக ஆராதிப்பதும் வழக்கமாக இருந்தது. இன்று அது அற்றுப்போய்க்கொண்டிருக்கிறது. குடும்பப் பிரிவினைகள் அதிகமாகத் தலைதூக்குகிறது. நம்மைக் குடும்பமாய் இணைத்தவரை நாம் குடும்பமாக ஆராதிப்பதில் நாம் ஏன் குறை வைக்கவேண்டும்?

குடும்ப ஆராதனையானது, குடும்பமாய்க் கர்த்தருடன் கிட்டிச்சேரவும், ஒருவரையொருவர் மன்னிக்கவும், ஒருவரோடொருவர் அன்புசெலுத்தி புரிந்து, உணர்வுடன் வாழவும் வழிவகுக்கிறது. குடும்பத்திலுள்ள சிறு பிள்ளைகள் தேவ நம்பிக்கையில் வளரவும், தேவனை அறிந்துகொள்ளவும், தேவ வார்த்தைகளை கற்றுக்கொள்ளவும், குடும்பத்தில் தேவஉறவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதைக் கண்டுகொள்ளவும் உதவுகிறது.

இன்று பல வீடுகளில் ‘கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்’, ‘கர்த்தரே இவ் வீட்டுத் தலைவர்’ என்றெல்லாம் சுவரில் வசனங்களாய் தொங்குகிறது. அவைகள் எல்லாம் வெறும் வசனங்களாகவே சிலவேளை அமைந்து விடுகிறது. அந்த வீட்டில் இருப்பவர்களுக்கும் அதற்கும் எவ்வித தொடர்பும் இல்லாமலே போய்விடுகிறது. ஞாயிறுதோறும் ஆராதனையில் ஆராதிப்பதோடு நமது ஆராதனைகள் நின்றுவிடாது, வீட்டிலும் குடும்பமாய் ஆராதிக்கக் கற்றுக்கொள்வோம். மார்த்தாள், மரியாள், லாசரு என்ற ஒரு அழகான குடும்பத்தில் இயேசு எல்லாச் சந்தர்ப்பத்திலும் பங்களிப்புக் கொடுத்தார். அதுபோலவே நமது குடும்பங்களிலும் தேவன் பங்கெடுக்க விரும்புகிறார். நாம் அவரை ஆராதித்து அழைக்க ஆயத்தமா? இதுவரை குடும்ப ஜெபம் இல்லாவிட்டால் இன்றே ஆரம்பிப்போமாக.

ஜெபம்: “கர்த்தாவே, உம்மைக் குடும்பமாய் ஆராதிக்க உமது நாமத்தை உயர்த்த உமக்காக வாழ எங்களைக் குடும்பமாய் அர்ப்பணிக்கிறோம். ஆமென்.”

ஜெபக்குறிப்பு: ஜூலை 30 வியாழன்

இன்றைய கிறிஸ்தவ சமுதாயத்தில் பிறரை ஏமாற்றி அல்லது குறுக்கு வழியிலும், தீய வழியிலும் பணம் சம்பாதிக்கிற மக்கள் மனந்திரும்ப, இரட்சிக்கப்படவும், ‘கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப் பொருளே உத்தமம்’ (நீதி.15:16) என்ற வார்த்தையின்படி வாழ்வதற்கும் கர்த்தருடைய கிருபைகளுக்காய் ஜெபிப்போம்.

உள்ளத்தின் அமைதி

தியானம்: ஜூலை 30 வியாழன்; வாசிப்பு: யோவான் 14:23-27

“சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன்.
…என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக்
கொடுக்கிறேன்…” (யோவான் 14:27)

உலகம் கொடுக்கும் அமைதிக்கும், தேவன் தரும் அமைதிக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. உலகம் தரும் அமைதியானது அமைதிபோலத் தோன்றினாலும், அது நிரந்தர அமைதி கிடையாது. ஆனால், தேவன் தருகின்ற அமைதியென்பது சூழ்நிலைகள் மாறினாலும் மாறாதது. நாமாக அமைதியைத் தேடிக்கொள்ளும்போது, அது எந்நேரத்திலும் குலைந்துபோகலாம். தேவன் தரும் அமைதியென்பது எவ்விடத்திலும் எந்நேரத்திலும் மாறாததாய் இருக்கும்.

இன்றைய தியானப் பகுதி தேவன் தருகின்ற சமாதானத்தைக் குறித்தும், அதன் தன்மை குறித்தும் விளக்கிக் கூறுகிறது. அன்று ஆண்டவர் தனது கடைசி இராப்போஜனத்தைமுடித்து சீடரோடுகூட கெத்சமெனேக்குச் சென்றபோது, அவர் ஆவியில் கலங்கியவராக தேவனை நோக்கி, அவரது சித்தத்துக்காக ஜெபித்தார். அப்போது, அவருக்குள் வந்த அமைதி, அதுதான் தேவன் தரும் அமைதி. அதன்பின்னர் அவர் ஏளனம் செய்யப்பட்டார், சிலுவையில் அறையப்பட்டார்; கன்னத்தில் அடிக்கப்பட்டார், கள்வரோடு கள்வராக அறையப்பட்டார். இவை எதிலுமே அவரது அமைதி கலைந்துவிடவில்லை.

தேவசமுகத்தில் கிடைக்கும் அந்த உண்மையான அமைதியைப் பெற்றுக்கொள்ள நாம் அவர் பாதத்தில் அமைதியாக காத்துக் கிடக்கவேண்டும். வேகமாக உருளும் இந்த உலகின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் நாமும் பறந்தடித்துத் திரிகிறோம். அமைதி வேளைகளையும், தியான நேரத்தையும் மறந்துபோகிறோம். நமது அவசரத்துக்கு தேவனும் செயற்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அமர்ந்திருந்தும் அவரது வழிநடத்துதலைப் பெற்றுக்கொள்ள நாம் பின் நிற்கிறோம்.

தேவபாதம் அமர்ந்திருந்த மரியாளைக்குறித்து, தேவையான, ‘நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள்’ என்ற இயேசு, மார்த்தாளைப் பார்த்து, ‘நீ அநேகம் காரியங்களைக் குறித்துக் கவலைப்படுகிறாய்’ என்றார். இன்று நாம் மார்த்தாளா அல்லது மரியாளா? யாரைப்போல இருக்கிறோம்? நம்மை நாம் ஒருகணம் யோசித்துப் பார்ப்போம்;. நாம் தவறவிட்ட அமைதி நேரங்கள் எத்தனை. தேவபாதத்தில் அமர்ந்திருக்க நாம் விரும்பாது அங்கலாய்த்துத் திரிந்த நேரங்கள் எத்தனை. “நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்” என்று தேவ வார்த்தை கூறுகிறது. தேவ அமைதி நமக்குள் இருக்குமென்றால் நம்மை எவரும், எதுவும் கலங்கப்பண்ண முடியாது. எந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் தேவனுக்குள் திடமாக நிற்க முடியும். அந்த அமைதி இன்று நமக்கு வேண்டாமா!

ஜெபம்: “அன்பின் தேவனே, என்றும் உமது பாதம் அமர்ந்திருந்து, உமக்குள்ளான அமைதியைப் பெற்று வாழ உதவி செய்யும், ஆமென்.”