ஜெபக்குறிப்பு: ஜூலை 1 புதன்
“.. அவர்களுடைய தேவனின் கண் அவர்கள்மேல் வைக்கப்பட்டிருந்தது” (எஸ்றா.5:5) என்ற வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் கர்த்தருடைய கண்களில் தயை கிடைக்கப்பெற்று சமாதானத்தோடு இம்மாதத்தை கடந்துசெல்ல தேவனுடைய கிருபைகளுக்காய் ஜெபிப்போம்.
கர்த்தருடைய ஆலயம்
தியானம்: ஜூலை 1 புதன்; வாசிப்பு: சங்கீதம் 122:1-9
“கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள்
என்று எனக்கு அவர்கள் சொன்னபோது
மகிழ்ச்சியாயிருந்தேன்” (சங்கீதம் 122:1).
“என்ன மகள், இன்றைக்கு ஆலயம் வந்திருக்கிறீர்கள்” என்று கேட்டால், “நாளை பரீட்சை, அதுதான் வந்தேன்” என்ற பதில். “என்ன குடும்பமாய் இன்று ஆலயம் வந்திருக்கிறீர்கள்” என்றால், “பெண் பார்க்க வந்தோம்” என்ற பதில். “கனடாவுக்கு ஒரு சாமான் அனுப்பவேண்டும். ஆலயத்தில் கொண்டுவந்து தரும்படி சொன்னார்கள்” என்று இன்னொருவர். இப்படியாக ஆலயம் செல்லுவதற்கு எத்தனை எத்தனையோ காரணங்கள்.
வாழ்க்கையின் அழுத்தங்களினால் ஓய்வின்றி இயங்கிக்கொண்டிருக்கும் மனிதன் ஓய்வெடுக்க விரும்பும்போது, ஓய்வுநாளில் ஆலயத்திற்கு செல்லுவதென்பது விருப்பமற்ற காரியமாகவே தோன்றுகிறது. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பள்ளிக்கூடம் செல்லவும், சனிக்கிழமை டியூஷன் செல்லவும் ஞாயிறு என்றாலும், நிம்மதியாகத் தூங்க முடியாமல் ஆலயம் செல்லுவதற்காக விடியற்காலையில் எழும்பவேண்டுமே என்பது பிள்ளைகளின் விசனக்குரல். இன்றைக்கு மக்கள் இருக்கும் இந்த மனநிலையில், தாவீதின் மனநிலையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது நம்பமுடியாததாகவே இருக்கிறது.
தாவீது தேவனோடு நெருக்கமான உறவினைக் கொண்டிருந்ததால் தேவனை ஆராதிக்கவும் சேவிக்கவும் அவர் பின் வாங்கினதில்லை. ஆதலால், கர்த்தருடைய ஆலயத்திற்குச் செல்லுவதென்பது அவருக்குச் சந்தோஷமான அனுபவமாகவே இருந்தது. நாம் கர்த்தருடைய ஆலயத்திற்கு செல்லுவதற்கும், அவரை ஆராதிப்பதற்கு விருப்பமற்றுப் போவதற்குக் காரணம் என்ன? நாம் கர்த்தரைவிட்டுத் தூரம்போய்விட்டோம். நம்மை நேசித்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்த ஆண்டவரை நாம் நேசிக்கத் தவறிவிட்டோம். அவருக்குக் கொடுக்கவேண்டிய கனத்தையும், முக்கியத்துவத்தையும் நாம் நமக்காகவும் நமது தேவைகளுக்காகவும் கொள்ளையாடிவிட்டோம். இதுதான் உண்மை.
அன்பானவர்களே, உண்மையிலேயே கர்த்தருடைய ஆலயம் செல்லுவதற்கும், அவரை ஆராதிப்பதற்கும் நாம் சந்தோஷத்துடன் முன் நிற்க வேண்டும். அதனைப் பாரமாக எண்ணாமல் பாக்கியமாக எண்ணவேண்டும். நாம் நேசிக்கிற ஆராதிக்கின்ற தேவனை நமது சகோதர, சகோதரிகளுடன் சேர்ந்து ஐக்கியமாக ஆராதிக்கப் போகிறோம் என்பது நமக்கு எப்போதும் மகிழ்ச்சியான விஷயமாகவே இருக்கவேண்டும். நம்மை நாமே ஆராய்ந்துப் பார்ப்போம். கர்த்தருடைய ஆலயம் செல்லுவது நமக்கு எப்படிப்பட்ட உணர்வை கொடுக்கிறது? என்ன நோக்கத்துக்காக நாம் தேவ ஆலயத்திற்குச் செல்லுகிறோம்?
ஜெபம்: “அன்பின் தேவனே, உம்மை உண்மையாக ஆராதிக்கும்படி வாஞ்சையோடு உமது சமுகம் கடந்துவர எனக்கு உதவிடும், ஆமென்.”
அதிகாலையின் கிருபை!
அதிகாலை வேளையில்… (ஜூலை-ஆகஸ்டு 2015)
– Dr.உட்ரோ குரோல்
“நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய
இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும்
புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது” (புலம். 3:22,23).
ஆதிகாலத்து கிழக்கத்திய நாடு களின் இலக்கியங்களில் புலம்பல் புத்தகம் மிகவும் சோகமான ஒன்றாகும். இதிலுள்ள ஐந்து அதிகாரங்களும் ஒருவரது மரணத்தின்போது பாடப்படும் ஓர் இரங்கற்பா போன்றன. ஒவ்வொரு பாடலும் விவரிக்க முடியாத சோகத்தை வெளிப்படுத்துவதாய் அமைந்துள்ளது. அவை கண்ணீரின் காவியம், சோக கீதங்களின் தொகுப்பு, வேதனையின் ஓலங்கள். இப்புத்தகத்தை வேதாகமத்தின் ‘அழுகையின் சுவர்’ என்று அழைக்கலாம். ஆம், அது உண்மையே. அதிகாரத்துக்கு அதிகாரம் சோகங்கள் அதிகரித்து கண்ணீர் பெருகுகின்றது. ஆனால் அந்த சோகத்தின் நடுவிலும் ஒரு நம்பிக்கை வெளிப்படுகிறது. இதுவே இந்த இதழின் தியானமாகும்.
கொடூரமான விரக்தியின் உச்சியிலும் எரேமியா தீர்க்கதரிசி தேவ கிருபையின் வல்லமையையும் ஆழத்தையும் பற்றிய சாட்சியை விளக்குகிறார். புலம்பல் பாட்டில் காணப்படும் இத்துன்ப கார்மேகங்கள் என்றும் நிலையானவை அல்ல. இருண்ட மேகத்தின் நடுவில் ஒரு சிறிய இடைவெளியில் பிரகாசமான சூரியவெளிச்சம் ஊடுருவி வருவதைப் போல, இருண்ட ஒரு காவல றையில் புலம்பல் 3:22,23 ஆம் பகுதி யானது நம்பிக்கையின் கீற்றாகக் கடந்து வருகிறது. எருசலேமின் அழிவின் மத்தியிலும் தேவனுடைய முடிவில்லாத கிருபையை எரேமியா தீர்க்கதரிசி தெளிவாகக் காண்கிறார்.
தேவனுடைய கிருபையை நாம் உரிமை கோரமுடியாது. எனினும் அவைகள் முடிவற்றவைகள். தேவனை கோபமூட்டும் அநேக காரியங்களை நாம் செய்திருந்தாலும் அவர் தம்முடைய கிருபையை நம்மை விட்டு விலக்கவில்லை. அவருடைய கிருபையை தகுதியற்றவர்களாய் பலவேளைகளில் நாம் பெற்றிருக்கிறோம்; பலவேளைகளில் நன்றியற்றவர்களாய் அலட்சியமும் செய்திருக்கிறோம். தேவனுடைய கிருபையை நாம் காணமுடியாவிட்டாலும் அவை மறையவில்லை. ஆதவனின் கதிர்கள் காலையிலிருந்து மாலை வரை மாறுவது போல் தேவனுடைய கிருபைகளும் மாறலாம்; ஆனால் அவை ஒருக்காலும் ஒழிந்து போவதில்லை. தேவனுடைய சிட்சையும் கிருபையின் ஓர் உருவமே. அவர் நம்மை சிட்சியாமல் இருக்கும் வேளையைவிட சிட்சிக்கும்பொழுது அதிக கிருபையை அவர் நமக்கு அளிக்கிறார். புலம்பல் 3:22,23 இல் காணப்படும் நம்பிக்கையின் ஒளியில் தேவனுடைய கிருபை முடிந்துபோவதில்லை; அது காலை தோறும் புதியவைகளாய் இருக்கின்றன. தேவனுடைய உண்மைக்கு அவை சாட்சிகளாக நிற்கின்றன.
மனிதவாழ்வில் அநேக புதுமைகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் நாம் புதிய கடினமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியதாய் உள்ளன. நம்முடைய புதிய பரபரப்பான சவால்களைச் சந்திக்க தேவனுடைய கிருபை நம்முடன் இருக்கிறது. ஆனால் அவருடைய செயல்பாடுகள் மாறுபடுகின்றன. நம்முடைய தினசரி தேவைகளுக்கு ஏற்ப அவருடைய கிருபை மாற்றமடைகின்றன. அவருடைய கிருபைகள் கற்களை உடைக்கும் உளிகளல்ல; அவை இன்றியமையாத உயிரூட்டக்கூடியன. மோசே, எரேமியா மற்றும் யோவான் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட பழங்காலக் கிருபைகளை நாம் ஆராய்ந்து பார்க்க அவசியமில்லை. ஏனெனில் நமக்கு தேவன் அருளுகின்ற கிருபையானது நாள்தோறும் புதியதாயும் உயிருள்ள தாயும் உள்ளது. தேவன் தம்முடைய உலகத்தை வசந்த காலத்தில் புதுப்பிப்பதுபோல, தம்முடைய பிள்ளைகளுக்கு தமது கிருபையையும் ஒவ்வொரு நாள் காலையிலும் புதுப்பித்து புத்துணர்ச்சியூட்டுகிறார்.
ஒவ்வொரு நாள் காலையிலும் இயற்கையானது தேவனைப் புகழ்ந்து போற்றுகின்றது. சூரியன் உதிக்கின்றது, பறவைகள் பாடுகின்றன, மரங்கள் தென்றல் காற்றை அளிக்கின்றன. மனிதர்களாகிய நாம் மாத்திரம் நன்றியற்றவர்களாய் அமைதியாக இருக்கலாமா? கிறிஸ்தவர்களாகிய நாம் தேவனுடைய கிருபைகளுக்காக நன்றி சொல்ல வேண்டுமே! அவருடைய கிருபைகள் புதுப்பிக்கப்படுவதை ஒத்துக்கொள்ள வேண்டுமே! இயற்கை மட்டுமே சிருஷ்டிகரைத் தொழுது கொள்ள நாம் அனுமதிக்கலாமா?
நம்முடைய காலங்கள் எவ்வளவுதான் இருளாயிருந்தாலும், “நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது” என்று எரேமியாவுடன் சேர்ந்து சொல்லுவோம் (புலம்பல் 3:22,23).
அதிகாலைப் பாடல்:
தம் கிருபை பெரிதல்லோ!
எம் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே;
இன்னும் தேவை கிருபை தாருமே!
அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்
புனித வேதாகமத்தின் வரலாறு (ஜூலை-ஆகஸ்டு 2015)
அத்தியாயம்-9
சகோ.M.S.வசந்தகுமார்
தென் அமெரிக்க மொழிகளில் வேதாகமம்
மாற்கு சுவிசேஷம் ஈக்குவேடா நாட்டின் நான்கு கோத்திர மக்களது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது.
தென் அமெரிக்காவின் இன்னு மொரு நாடான பிரேசிலில் 1956ஆம் ஆண்டிலிருந்து வைக்கிளிப் முகாமைச் சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அந்நாட்டின் 40 கோத்திர மக்கள் மத்தியில் ஊழியம் செய்வதோடு வேதாகமத்தை அந் நாற்பது கோத்திர மொழிகளிலும் மொழிபெயர்க்கும் பணிகளைச் செய்து வருகின்றனர். 1968 ஆம் ஆண்டு கணிப்பீட்டின்படி அந்நாட்டின் 12 கோத்திர மொழிகளில் வேதாகமத்தின் பகுதிகள் இருந்துள்ளதை அறிகின்றோம். 1955 ஆம் வருடம் வைக்கிளிப் முகாமைச் சேர்ந்தவர்கள் பொலீவியா எனும் நாட்டில் தமது ஊழியங்களை ஆரம்பித்தனர். இவர்களது பணி காரணமாக 1970 ஆம் ஆண்டுவரை மாற்கு சுவிசேஷம் பொலீவிய நாட்டின் 8 மொழிகளிலும், லூக்கா சுவிசேஷமும் புதிய ஏற்பாட்டின் வேறு புத்தகங்களும் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. இவற்றைத்தவிர பொலீவிய வேதாகமச்சங்கம் 2 கோத்திர மொழிகளில் புதிய ஏற்பாட்டை வெளியிட்டிருந்தது.
1946ஆம் ஆண்டு பெரூ நாட்டில் வைக்கிளிப் முகாமின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 1970ஆம் ஆண்டு கணிப்பீட்டின்படி பெரூ நாட்டின் 3 கோத்திர மொழிகளில் புதிய ஏற்பாடும், 27 மொழிகளில் வேதாகமத்தின் பகுதிகளும் இருந்துள்ளன. இவற்றுள் 24 மொழிகளின் மொழி பெயர்ப்புப்பணி வைக்கிளிப் முகாமைச் சேர்ந்தவர்களால் செய்யப்பட்டதாகும். இம் முகாமைச் சேர்ந்தவர்கள் 1962ஆம் ஆண்டு கொலம்பியா நாட்டுக்குச் சென்றனர். இன்று அந் நாட்டின் பல கோத்திர மொழிகளில் வேதாகமத்தின் பகுதிகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1970இல், தென் அமெரிக்காவிலுள்ள வெனிசூலா நாட்டின் 6 கோத்திர மொழிகளில் வேதாகமத்தின் பகுதிகள் இருந்தன.
வேதாகம மொழிபெயர்ப்பு வரலாற்றில், வைக்கிளிப் முகாமைச் சேர்ந்தவர்களது பணி உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய தொன்றாகும். காட்டுவாசிகளான, பயங்கரமான கோத்திர மக்கள் மத்தியில் சென்று, அவர்களது மொழியைக் கற்று, அவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவித்துள்ளதோடு அவர்களது மொழியில் வேதாகமத்தையும் மொழிபெயர்த்துள்ள இம்முகாமைச் சேர்ந்த பல மிஷனரிகள் காட்டுவாசிகளால் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காட்டின் வாழ்க்கை காரணமாக வியாதிப்பட்டுள்ளனர். அப்படியிருந்தும் இம்முகாமில் சேருவோர் எண்ணிக்கையும், அவர்கள் மொழிபெயர்க்கும் வேதாகமங்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. அவர்கள் ஒரு வருடத்திற்கு 30 புதிய கோத்திர மொழிகளில் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்து வருவ தாகக் கணிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க மொழிகளில் வேதாகமம்
ரோம சாம்ராட்சியத்தின் காலத்தில் ஆப்பிரிக்காவின் வட பகுதியில் கிறிஸ்தவம் பரவியிருந்ததோடு, கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் அப்பிரதேசத்து மக்களது பிரதான மொழியான லத்தீன் மொழியில் முழுவேதாகமமும் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. (இது பற்றி 7ஆம் அத்தியாயத்தில் பார்த்துள்ளோம்) ஆரம்பத்தில் வட ஆப்பிரிக்காவில் கிறிஸ்தவம் வளர்ச்சியடைந்திருந்தபோதிலும், கி.பி.7 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட இஸ்லாமிய ஆக்கிரமிப்பு அப்பகுதியில் கிறிஸ்தவத்தை அழித்துவிட்டது. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் பைசன்டைன் மிஷனரிகளினால் எத்தியோப்பியாவில் ஆரம்பிக்கப்பட்ட சபைமட்டும், தொடர்ச்சியான வீழ்ச்சிகளுக்கு மத்தியிலும் இன்று வரை நிலைத்துள்ளது.
இன்று, ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள நாடுகளில் மொத்தம் 523 மொழிகளும் அவற்றிலிருந்து உருவான மேலும் 320 கிளை மொழிகளும் இருக்கின்றன. 1960ஆம் ஆண்டு வரை ஆப்பிரிக்காவின் 59 மொழிகளில் முழுவேதாகமமும், 114 மொழிகளில் புதிய ஏற்பாடும், 219 மொழிகளில் வேதாகமப் பகுதிகளும் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன.
13ஆம் 17ஆம் நூற்றாண்டு களுக்கு இடைப்பட்ட காலத்தில் ரோமன் கத்தோலிக்கச் சபை மிஷனரிகள் ஆப்பிரிக்கா கண்டத்தின் கரை யோரப்பகுதிகளில் இஸ்லாமியர்களது எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் கிறிஸ்தவ சபைகளை உருவாக்கியுள்ளனர். 1652 இல், தென்னாப்பிரிக்காவின் கேப் எனும் மாகாணத்தில் ஒல்லாந்தர் தமது குடியிருப்புப் பிரதேசங்களை ஏற்படுத்தியதோடு தமது சபைகளையும் ஸ்தாபித்தனர். 1737இல் மொரேவிய சபை மிஷனரிகளும் 1799இல் லண்டன் மிஷனரி சங்கத்தினரும் தென் ஆப்பிரிக்காவில் ஊழியங்களை ஆரம்பித்தனர். 1815இல் லண்டன் மிஷனரி சங்கம் ரொபர்ட் மொஃபட் என்பவருடன் நான்கு மிஷனரிகளை ஆப்பிரிக்காவுக்கு அனுப்பியது.
தென்னாப்பிரிக்காவிலுள்ள கேப் டவுனுக்குச் சென்ற இவர்களில் மொஃபட்டுக்கும் இன்னுமொரு மிஷனரிக்கும் பல மாதங்களின் பின்பே கேப்டவுனுக்கு வடக்கே செல்ல அனுமதி கிடைத்தது. இவர்கள் கேப்டவுனுக்கு வடக்கே பலநூறு மைல்களுக்கு அப்பாலுள்ள நம்மாகுவலன்ட் என்னுமிடத்தில் இருவருட காலம் பணியாற்றிய பின்னர் மறுபடியுமாக கேப்டவுனுக்கு வந்தனர். அச்சமயம் அங்கு இங்கிலாந்திலிருந்து வந்த அவரது காதலி மேரி ஸ்மித்தை (1819இல்) திருமண முடித்த மொஃபட், அவளுடனும் இன்னுமொரு மிஷனரியுடனும் கேப்டவுனுக்கு 600 மைல்கள் வடகிழக்கில் இருந்த குருமன் என்னுமிடத்துக்குச் சென்று தனது இறை பணியை ஆரம்பித்தார்.
(தொடரும்)
வாசகர்கள் பேசுகிறார்கள்
(ஜூலை-ஆகஸ்டு 2015)
1. 2014ஆம் ஆண்டில் வேதவாசிப்பு அட்டவணைப்படி பரிசுத்த வேதாக மத்தை மறுபடியும் ஒருமுறை வெற்றிகரமாக வாசித்து முடிக்க, தேவன் அருளிய கிருபைக்காக அவருக்கு கோடானகோடி துதிகளைச் செலுத்தி தங்களுக்கும் மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன். அனுதினமும் கிறிஸ்துவுடன் தினசரி வேதவாசிப்புப் பகுதிகளும், வேதவாசிப்புக் குறிப்புகளும் அவற்றிற்கான தியானக்குறிப்புகளும் எம் மனதின் போராட்டங்கள், அங்கலாய்ப்புகள், எதிர்பார்ப்புகளை அகற்றி, தைரியப்படுத்தி ஆசீர்வதிப் பதை ஒவ்வொரு நாளும் உணர முடிகிறது. சத்தியவசன ஊழியங்கள் மென்மேலும் வளர்ச்சியடைந்து மேன்மை பெற ஜெபிக்கிறேன்.
Mrs.Chandrabai Paul, Chennai.
2. We are regularly receiving your bimonthly Magazine and daily devotion books too. Thank you.
Mrs.Beulah Kasthuri, Sivakasi.
3. அனுதினமும் கிறிஸ்துவுடன் தின தியானபுத்தகம் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு வழிகாட்டியாக உள்ளது. வேதத்தை இன்னும் அதிகதிகமாக அறிந்துகொள்ள மிகவும் தாகமாய் இருக்கிறேன். தொடர்ந்து தங்கள் வெளியீடுகளை தவறாமல் அனுப்பவும்.
Mr.Arul Jeganathan, Thiruppathur.
4. தங்களது தொலைகாட்சி நிகழ்ச்சியை ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை ஆகிய நாட்களில் தமிழன் டிவியில் பார்த்து வருகிறேன். செய்திகள் மிகவும் ஆசீர்வாதமாக உள்ளது. தங்களது நிகழ்ச்சியில் பாடப்படும் பாடல்கள் மிக அருமை. சகோ.நீரியஸ் பெர்னாண்டோ அவர்கள் பாடிய பாடல்கள், டாக்டர் புஷ்பராஜ் அவர்கள் பாடிய பாடல்கள் மிகவும் நன்றாக உள்ளன.
Mr.Dhanakumar, Tirunelveli.
5. அனுதினமும் கிறிஸ்துவுடன் எங்களுக்கு மிகவும் ஆசீர்வாதமாக இருக்கிறது. அந்த தியானங்களை எழுதிவரும் சகோதர, சகோதரிகள் எங்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்துகிறார்கள். இந்த ஆத்தும ஆகாரத்தால் நாங்கள் தினமும் வழிநடத்தப்படுகிறோம். தேவன்தாமே உங்கள் ஊழியங்களை ஆசீர்வதிப்பாராக!
Mrs.A.Leelabai, Madurai.
6. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் எங்களோடு தினமும் பேசுவது மிகவும் ஆறுதலாகவும் விசுவாசத்தில் வளரவும் உதவுகிறது. எங்களுடன் சேர்ந்து பாடுகளுடன் பங்கெடுத்து உணர்ந்து எழுதும் செய்திகள் எங்களுக்காகவே எழுதுவதுபோல் உள்ளது. ஒரு பிச்சைக்காரன் மற்றொருவனுக்கு எங்கு ஆகாரம் கிடைக்கும் என்று சொல்லுவதுபோல் நாங்கள் சோர்ந்துபோகும் போதெல்லாம் ஜீவ வசனங்களினால் எங்களை தேற்றுகிறதற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம். தேவன் எங்களை அபரிமிதமாக ஆசீர்வதித்து இருக்கிறார்.
Mr.Richard Sam Alex, Chennai.