ஜெபக்குறிப்பு: டிசம்பர் 31 சனி

“ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்” (யோபு.9:10) தேவன் செய்த எண்ணிமுடியாத நன்மைகளுக்காகவும், அவருடைய கிருபைகளுக்காகவும் அவருடைய பாதம் பணிந்து ஸ்தோத்திர பலிகளை ஏறெடுப்போம்.

என்னை நடத்தும்!

தியானம்: டிசம்பர் 31 சனி; வேத வாசிப்பு: சங்கீதம் 43:1-5

“உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும். அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும், உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டு போவதாக” (சங். 43:3).

இவ்வருடத்தை வெகு சீக்கிரமாய் முடித்துவிட்டதுபோலத் தெரிகிறதா! வருடா வருடம் இந்த ‘வேகம்’ அதிகரிப்பதுபோலத் தோன்றினாலும், நிஜம் அதுவல்ல. நிஜத்தில், நமது வாழ்வு முறையின் வேகம்தான் அதிகரிக்கிறது, என்றாலும், நாம் நிதானித்து வாழுவோமானால், வேகம் நமது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். கர்த்தருக்குச் சித்தமானால், நாளைய நாள் நமக்கு இந்தப் பூமியிலே விடியுமானால், பூமியின் அடுத்த சுழற்சியிலே நாமும் இணைந்து கொள்வோம். ஆயினும், சுழன்று சுழன்று நாம் எங்கே எதை நோக்கி ஓடுகிறோம்? நமது மரணத்தையா? அல்லது நாம் வாழப்போகும் நித்திய ராஜ்யத்தையா? இதற்கு நமது பதில் என்னவோ, அதிலேதான் நமது அன்றாட சந்தோஷமும் தங்கியிருக்கிறது. வருடத்தின் இக்கடைசி நாளிலே சங்கீதக்காரனின் ஜெபம் (சங்.43) நம்முடையதாகட்டும்.

சோர்ந்துபோன மனதுடன், நம்பிக்கையை எதிர்நோக்கி இச்சங்கீதம் எழுதப்பட்டுள்ளது. வாழ்க்கையின் கடின சூழ்நிலைகளில் நாம் சோர்ந்துபோய், ‘போதும் கர்த்தாவே’ என்று சொல்லுவதுண்டு. அதவாது, நமது உள்ளுணர்வு, இந்த உலகைவிட்டு, நிரந்தரமாய் வசிக்கப்போகும் நித்தியத்தை நோக்கி ஏங்குகிறது என்பதுதான் உண்மை. ‘தீமைகள் அற்ற இடத்தில் இயேசுவுடன் வாழுவோம்’ என்ற நிச்சயம் ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் உண்டு. உண்மையும் அதுதான். அன்று சங்கீதக்காரனுக்கு பரிசுத்த பர்வதம், எருசலேமில் கட்டப்பட்டிருந்த தேவாலயமாயிருந்தது. அங்கேதான் மக்கள் ஆராதனையிலும் ஜெபத்திலும் தேவனைச் சந்தித்தார்கள். ஆகவே, அங்கே வழிநடத்தப்பட, தேவனைச் சந்திக்க அவன் இரண்டு காரியங்களைக் கேட்டு ஜெபித்தான். ஒன்று, சத்தியம்; சரியான பாதையில் நாம் நடக்க அது நம்மை வழிநடத்துகிறது (1யோவா.2:27). அடுத்தது, வெளிச்சம்; (1யோவான் 1:5) அது நாம் வழிநடக்கத்தக்க சரியான தரிசனத்தைத் தருகிறது (யோவான் 1:5).

குழப்பங்கள் கேள்விகள் நம் இருதயத்தைப் பாரமாக்கியிருக்கலாம். அடுத்த ஆண்டும் என்னவாகுமோ என்று மனது தவிக்கலாம். தேவனுடைய சத்தியத்தையும், வெளிச்சத்தையும் நாடி ஜெபித்து, அவருடைய வழிநடத்துதலுக்கு நம்மை ஒப்புவிப்போமாக. நாம் போய்ச்சேரவேண்டிய சரியான இடத்திற்கு அவர் நடத்துவார். அங்கே நாம் நிச்சயமாய் தேவபிரசன்னத்தைச் சந்திப்போம்.

“கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும். உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்” (சங். 25:4).

சத்தியவசன பங்காளர்கள், வாசகர்கள், நேயர்கள் அனைவருக்கும் பிறக்கப்போகும் புத்தாண்டு ஆசீர்வாதமாக அமைய வாழ்த்துகிறோம்!

ஜெபம்: துதிக்குப் பாத்திரரே, கடந்துபோன காலங்களுக்காக நன்றி செலுத்துகிறோம். தொடர்ந்தும் தேவன்தாமே உம்முடைய வெளிச்சத்திலும் சத்தியத்திலும் எங்களை நடத்தும்படி ஒப்புவித்து ஜெபிக்கிறோம்.

ஜெபக்குறிப்பு: டிசம்பர் 30 வெள்ளி

அனைத்து திருச்சபைகளிலும் நடைபெறும் புதுவருட ஆராதனை மற்றும் ஆசீர்வாதங்களுக்கான ஆயத்த ஜெபக்கூட்டம் உபவாசக்கூட்டம் யாவற்றையும் கர்த்தர் ஆசீர்வதிக்கவும், தேவமகிமையால் ஆலயம் நிரப்பப்படவும், புதுவருட ஆராதனை ஒவ்வொரு இடங்களிலும் சிறப்போடே ஆசரிக்கப்பட ஜெபம் செய்வோம்.

வீண் கவலை எதற்கு?

தியானம்: டிசம்பர் 30 வெள்ளி; வேத வாசிப்பு: எபிரெயர் 11:8-16

“…காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள். காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்” (2கொரி. 4:18).

எல்லா உயிரினங்களும் ஒரு விடுதலைக்காகத் தவித்து நிற்கிறது என்பது அவற்றிற்கே தெரிகிறதோ இல்லையோ, அதுதான் உண்மை. “சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவ வேதனைப்படுகிறது” (ரோமர் 8:22) என்று பவுல் எழுதியுள்ளதை நாம் சிந்திக்கவேண்டும். நமக்குள்ளும் அந்தத் தவிப்பு உண்டு. ஏனெனில், ஏற்கனவே நாம் தியானித்தது போல, நாம் இந்த உலகத்திற்கென்று சிருஷ்டிக்கப்படாததால், காணுகின்றவைகள்மேல் அல்ல; காணாத ஏதோ ஒன்றுக்காக நமது உள்ளம் தவித்து ஏங்குகிறது என்பதுவே உண்மை; அதை நாம் உணர்ந்திருக்கிறோமா?

விசுவாச மார்க்கத்தாரின் தந்தை என்று அறியப்பட்ட ஆபிரகாம், தன்னை அழைத்தவர் இன்னார் என்று அறியாமலும், எங்கே போவது என்று தெரியாமலும் தன்னுடன் பேசிய வார்த்தையையே நம்பிப் புறப்பட்டுச் சென்றார். ஒரு பிள்ளையும் இல்லாதபோதும் தேவனுடைய உடன்படிக்கையை விசுவாசித்தார். பிறந்த ஒரே பிள்ளையைப் பலியாகக் கொடுக்கவும் அவர் தயங்கவில்லை.  இவை யாவும் ஆபிரகாமின் விசுவாச வாழ்வின் முக்கிய மைல்கற்கள். ஆனால், இங்கே நாம் சிந்திக்கவேண்டியது என்னவெனில், “இவர்களெல்லாரும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி… விசுவாசத்தோடு மரித்தார்கள்” (எபி.11:13). ஆம், தேவனால் வாக்குப்பண்ணப்பட்ட எதையும் ஆபிரகாம் காணவில்லை; அதேசமயம், தனது நித்திய வீட்டைக்குறித்த தரிசனத்திலிருந்து ஆபிரகாம் விலகவுமில்லை. விலகியிருந்தால், தான் விட்டுவந்த ஊருக்கு அவர் திரும்பிச் சென்றிருப்பாரே.

மரணத்திற்கு ஏதுவான வியாதிகள், இனித் தப்பித்துக்கொள்ளமுடியாது என்ற சூழ்நிலைகளைச் சந்திக்கும்போதும், கிறிஸ்துவுக்குள் நமது ஜெபங்கள் கேட்கப்படவில்லையோ என்ற சந்தேகம் தோன்றும்போதும், நாம் நினைத்தது நினைத்த நேரம் நடக்காதபோதும், நம்மில் அநேகர் வெகு விரைவாக மனமடிவுக்குள்ளாகிறோம்; நம்பிக்கையை இழந்துவிடுகிறோம்; பின்வாங்கிவிடுகிறோம். இந்த நாளிலே அந்த மனநிலையில் யாராவது இருந்தால், அதைவிட்டு வெளியே வந்துவிடுவோம். இந்த ஆபிரகாமுக்குக் கிடைக்காத ஒரு ‘விசேஷித்த நன்மையை’, “கிறிஸ்துவை” தேவன் நமக்குத் தந்தார். நித்தியமான வாழ்வைக் குறித்த நிச்சயத்தை கிறிஸ்து நமக்குத் தந்தார். இவற்றோடு ஒப்பிடும்போது இந்த உலக பாடுகள் எம்மாத்திரம், தைரியத்தோடே எழுந்து முன்செல்லுவோம! கர்த்தர் நம்மோடிருப்பார்!!

“…இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்” (எபி.11:18).

ஜெபம்: கர்த்தாவே, எங்களது கண்களுக்கு எட்டாத ஒரு ஆனந்த பாக்கியம் வைத்து வைக்கப்பட்டிருக்கும்போது, வீண் கவலைகள் எங்களை ஆட்கொள்ளாதவராறு காத்துக்கொள்ளும். ஆமென்.