ஜெபக்குறிப்பு: நவம்பர் 30 புதன்
“.. இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவு பரியந்தமும் அன்பு வைத்த” (யோவா.13:1) தேவன்தாமே இவ்வருடத்தின் 11 மாதங்களும் நமக்குப் பாராட்டின இரக்கங்களுக்காக, கிருபைகளுக்காக ஸ்தோத்திரம் செலுத்துவோம்.
ஒப்புவித்தலின் பலன்
தியானம்: நவம்பர் 30 புதன்; வேத வாசிப்பு: மாற்கு 14: 32-42.
அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே கூடும்; இந்தப் பாத்தி ரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்றார் (மாற்.14:36).
பிதாவுடைய சித்தத்துக்குத் தம்மைத்தாமே பூரணமாக ஒப்புக்கொடுத்த இயேசுவின் வாழ்விலே, பிதாவானவர் எப்படிப்பட்ட காரியங்களை அனுமதித்தார் என்பதை இன்று தியானிப்போம்.
இயேசு அன்று கட்டப்பட்டார்! அதனால், நம்முடைய பாவக்கட்டுகள் அறுந்தன. பாவமில்லாதவர் குற்றம் சாட்டப்பட்டு அநீதியாக நியாயம் தீர்க்கப்பட்டார். அதனால் நம்மை அவர் நீதிமான்களாக்கினார். இயேசு வேண்டாதவராக ஒதுக்கப்பட்டு ஒரு அடிமையைப் போலானார். நாமோ சுவீகார புத்திர பாக்கியத்தைப் பெற்றுக்கொண்டோம். இயேசு காயப்பட்டார். நமது காயங்களோ ஆற்றப்பட்டது. சிலுவையிலே பிதாவின் முகம் அவருக்கு மறைக்கப்பட்டது. இன்று நாமோ அப்பா பிதாவே என்று உரிமையுடன் கூப்பிடுகிற பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். கூடவே இருந்த சீஷர்கள் அவரை விட்டுவிட்டு ஓடிவிடுமளவுக்கு அவர் நிராகரிக்கப்பட்டார். இன்று இயேசுவோ நம்மோடிருக்கிறார்.
நமக்காகத் தம்மையே பலியாக்கிய இயேசுவின் கரங்களில் இருக்கின்ற நாம், அவருடைய பாடுகளில் ஒரு சிறிதளவிலாவது பங்குபெற வேண்டாமா? நம்மைப் பிதாவின் கரங்களில் ஒப்புக்கொடுத்திருப்பது மெய்யானால், அவர் நடத்தும் வழி கடினமாயினும், மகிழ்ச்சியோடு முன்செல்லுவோமாக. நமக்குப் பிரியமில்லாத பல காரியங்களை நாம் செய்ய வேண்டி நேர்ந்தாலும், உம் சித்தம் தேவா, ஆகட்டுமே எனக்கூறி நம்மை ஒப்புக்கொடுப்போமாக. அன்று பாடுகள் அனுபவித்த இயேசு மரணத்தைச் சந்தித்தபோது, சாத்தானுக்கு வெற்றிபோலத் தெரிந்தது. இயேசு உயிர்த்தெழுந்தபோது, அவர் சாவின் கூரையே உடைத்தெறிந்து, வெற்றி சிறந்தார் அல்லவா!
தேவபிள்ளையே, தேவசித்தத்திற்கு ஒப்புவித்தல் என்பதுவும், நமது வாழ்வைத் தேவனுக்கு அர்ப்பணிப்பது என்பதுவும், வெறும் வாய் வார்த்தைகள் அல்ல. அது ஒரு உன்னதமான செயல்! ஏனெனில், அதன்பின்னர், நமது சித்தம் அல்ல, தேவசித்தமே நமது வாழ்வில் நிறைவேறும். அது கடின பாதையாயினும், முடிவு ஜெயம் என்பதை இயேசுவின் உயிர்த்தெழுதல் நமக்கு உறுதி செய்திருக்கிறது. இன்று நமது வாழ்விலும் நீதி செத்தததுபோலத் தெரியலாம். வேதனையினிமித்தம் பிறர் மகிழ்வுறுவதுபோலத் தெரியலாம். நாம் நஷ்டமடைவதால் வேறு யாரோ பயனடைவதுபோலவும் தெரியலாம். மொத்தத்தில் நாம் தோற்றுப் போனதுபோலவும் தெரியலாம். இப்படியொரு நிலைமை வரும்போதுதான், நமது வெற்றியும் அருகிலே வந்துவிட்டது என்பதை உறுதியாக நம்புவோமாக.
ஜெபம்: தேவனே, எங்களை முற்றும் ஜெயம் கொள்ளச் செய்கிற உம்முடைய சமுகத்தில் பூரணமாக எங்களை ஒப்புக்கொடுக்கிறோம். ஆமென்.
வாக்குத்தத்தம்: நவம்பர் 29 செவ்வாய்
… நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்.
(யோவான் 11:40)
ஜெபக்குறிப்பு: நவம்பர் 29 செவ்வாய்
சத்தியவசன ஊழியத்தை அதிக உற்சாகத்தோடு பிரதிநிதிகளாக இருந்து செயல்பட்டு கொண்டிருக்கும் அனைத்து சகோதர, சகோதரிகளின் நல்ல சுகத்திற்காக, அவர்களது ஊழியப்பணிகளையும், குடும்பங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்து, நன்மையாலும் கிருபையாலும் நிரப்பி வழிநடத்த மன்றாடுவோம்.
முழு வாழ்வும்!
தியானம்: நவம்பர் 29 செவ்வாய்; வேத வாசிப்பு: மாற்கு 14: 3-9
….அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள் (மாற்கு 14:3).
சீமோனுடைய வீட்டிலே போஜனம் பண்ணும்படி, இயேசு சென்றிருந்தார். அப்போது ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற தைலமுள்ள வெள்ளைக்கல் பரணியைக் கொண்டுவந்து, அதை உடைத்து, இயேசுவின் தலையின் மேலே ஊற்றினாள். அதைக் கண்டு அங்கிருந்த சிலர் முறுமுறுத்தனர். ஆனால், இயேசுவோ, இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்; நான் அடக்கம் பண்ணப்படுவதற்கு எத்தனமாக, என் சரீரத்தில் தைலம் பூச முந்திக்கொண்டாள் என்று கூறி அவர்களை அமர்த்தினார்.
அந்தப்பெண் அப்படிச்செய்ததற்கு அவளுக்கு உந்துதலாக இருந்தது என்ன? இயேசு இனி மரிக்கப்போகிறார் எனத் தெரிந்தா, தன்னிடமிருந்த அந்த விலையுர்ந்த தைலத்தைக் கொண்டுவந்து, அவர் தலையின் மீது ஊற்றினாள்! அதிலும், தைலம் வைக்கப்பட்டிருந்த அந்தக் குப்பியை அவள் உடைத்தாள் என்றிருக்கிறது. இனி அது பயன்பாட்டுக்கு உதவாது. அதாவது அவள் முழவதுமாக ஊற்றிவிட்டாள்! தனக்கென்று இருந்ததை அவள் இயேசுவுக்கென்று ஊற்றிவிட்டாள். ஆம், இயேசுவை அவள் இதயபூர்வமாக ஆராதித்தாள். இயேசுவின் பாதத்தில் இருந்து கற்றுக்கொண்ட அவளுடைய உள்ளுணர்வு, தன்னிடமுள்ள விசேஷத்தைக் கொடுத்து இயேசுவை ஆராதிக்கும்படி அவளை உந்தித்தள்ளியது (மாற்கு 14:9).
ஆண்டவராகிய இயேசு ஆராதிக்கப்படுவதற்குப் பாத்திரராயிருக்கிறார். தமது விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே நம்மை மீட்டு, நித்திய ஜீவனையும் இலவசமாய் அளித்துவிட்ட ஆண்டவருக்கு நம்மால் செய்யக்கூடியது என்ன? ஆகக் குறைந்தது உண்மையுள்ள ஆராதனையை நம்மால் ஏறெடுக்க முடிகிறதா? அன்று அந்தப் பெண்ணிடமிருந்த நறுமண தைலத்தைப்போல, இன்று நமக்குள்ளதில் மேன்மையானதை, விலையுயர்ந்ததை, மிகச் சிறந்ததை ஆண்டவருக்கென்று கொடுத்து அவரை ஆராதிக்கின்றோமா? அல்லது மல்கியா 3ஆம் அதிகாரத்திலே குறிப்பிட்டபடி, அசுத்தமான அப்பத்தையும், நசல்கொண்டதையும் ஆண்டவருக்குக் கொடுப்பதுபோலக் கொடுத்து, நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோமா? அந்தப் பெண் ஆராதித்ததைப் பார்த்து மற்றவர்கள் முறுமுறுத்தார்கள். ஆனால், இயேசு அவள் கிரியையை ஏற்றுக்கொண்டார். எப்படி? இயேசு அவளுடைய இருதயத்தை அறிந்திருந்தார். இன்று நமது இருதயத்தை இயேசு எப்படிக் காண்கிறார். நமது வாழ்வே தேவனுக்கு அர்ப்பணிக்கின்ற ஆராதனையா? நமது உள்ளுணர்வு ஆண்டவரோடு நல்லுறவில் இல்லையானால் அவருக்குப் பிரியமான ஆராதனையை நம்மால் ஏறெடுப்பது கடினம்.
ஜெபம்: ஆண்டவரே, எங்களுக்காக ஜீவனைக் கொடுத்த உமக்கு எங்கள் முழு வாழ்வையுமே அர்ப்பணிக்கிறோம். ஏற்றுக்கொள்ளும். ஆமென்.