இயேசுவின் ஊழிய இரகசியம்!

தியானம்: நவம்பர் 1 செவ்வாய்; வேத வாசிப்பு: மாற்கு 1:21-40

அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம் பண்ணினார் (மாற்கு 1:35).

இயேசுவானவர் இவ்வுலகிலே வாழ்ந்திருந்தபோது ஏராளமான மக்களுக்குச் சேவை செய்தார். அந்த சேவை எப்படிப்பட்டது என சற்று தியானிப்போம்.

முதலாவதாக, அவர் வல்லமையோடும் அதிகாரத்தோடும் செயற்பட்டார். அவர் அசுத்த ஆவியை அதட்டினார் என வாசிக்கிறோம் (வச.25). நாமும் பணி செய்யும்போது, நமது பெலத்தில் அல்ல. இயேசுவின் நாமத்தில் வல்லமையுடனும் அதிகாரத்துடனும் சத்துருவை எதிர்த்து நிற்கவேண்டும். இரண்டாவதாக, அவர் மக்களால் அணுகக்கூடியவராகக் காணப்பட்டார். “பட்டணத்தார் எல்லோரும் வீட்டு வாசலுக்கு முன்பாகக் கூடி வந்தார்கள். பலவிதமான வியாதியினால் உபத்திரவப்பட்டிருந்த அநேகரை அவர் சொஸ்தமாக்கி, அநேகம் பிசாசுகளையும் துரத்திவிட்டார்” (வச.33,34). தேவை நிறைந்த மக்கள் அவரைக் கிட்டிச்சேர அவர் ஒருபோதும் தடை போட்டதில்லை. மூன்றாவதாக, இயேசு கரிசனையுடன் மக்களுக்கு ஊழியம் செய்தார். நோயினால் வாடிய சீமோனின் மாமியாரின் அருகே போய், அவளது கையைப் பிடித்துத் தூக்கி, சுகம் கொடுத்தார். யாருமே திரும்பியும் பார்க்காத குஷ்டரோகிகளைக் கண்டு மனதுருகி, தமது கையினாலேயே தொட்டுக் குணப்படுத்தினார். வசதியாக ஒரு இடத்தில் உட்கார்ந்திருந்து அவர் ஒருபோதும் ஊழியஞ் செய்யவில்லை. அடுத்த ஊர்களிலும் பிரசங்கம் பண்ணவேண்டும் எனக் கூறி அவரே மக்களைத் தேடிச்சென்றார்.

இயேசுவானவரின் இந்த வெற்றிகரமான ஊழியத்தின் இரகசியம் என்ன? அவர் அதிகாலையில் இருட்டோடே எழுந்து ஜெபித்தார். இதுவே அந்த இரகசியம். இயேசுவுக்காய் ஜீவித்து, அவருக்காய் ஊழியம் செய்ய விரும்புகின்ற சகோதரனே, சகோதரியே நமது வாழ்வில் முதல் முக்கியம் ஜெபம். நாம் ஜெபிக்கவேண்டும். பரிசுத்தாவியின் வல்லமையோடும், மக்கள்மீது உண்மையான கரிசனையோடும், நாமே மக்களைத் தேடிச்சென்று பணிசெய்ய வேண்டும். அங்கே நாம் அல்ல, ஆண்டவரே மகிமைப்படுவார். அது நமக்கும் பிறருக்கும் மகிழ்ச்சியையும் ஆசீர்வாதத்தையும் நிச்சயம் கொண்டுவரும். நமது வாழ்வின் எல்லா நிலையிலும் நமக்கு மாதிரி ஆண்டவர் ஒருவரே. ஊழியப்பாதையிலும் அவரையே பினபற்றுவோமாக.

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, அதிகாலையில் இருட்டோடே எழுந்து நீர் ஜெபித்ததுபோல, நாங்களும் உம்மையேப் பின்பற்றி உண்மையான கரிசனையோடு உம் பணியைச் செய்ய எங்களுக்கு உதவி செய்தருளும். ஆமென்.

அரைகுறையான கீழ்ப்படிதல்

அதிகாலை வேளையில்… (நவம்பர்-டிசம்பர் 2016)
– Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: 1சாமுவேல் 15:1-35
மறுநாள் அதிகாலமே சாமுவேல் சவுலைச் சந்திக்கப்போனான்; அப்பொழுது சவுல் கர்மேலுக்கு வந்து, தனக்கு ஒரு ஜெபஸ்தம்பம் நாட்டி, பின்பு பல இடங்களில் சென்று கில்காலுக்குப் போனான் என்று, சாமுவேலுக்கு அறிவிக்கப்பட்டது (1சாமு.15:12).

ஒரு கட்டளைக்கு அரைகுறையாகக் கீழ்ப்படிவது கீழ்ப்படியாமைக்கு சமம். செயலில் கீழ்ப்படியவில்லை எனில் அது மனத்தளவிலும் கீழப்படியாமைக்குச் சமம். இத்தகைய கீழ்ப்படியாமைக்கு சவுல் அரசர் ஓர் உதாரணம் ஆவார். மோவாப், அம்மோனியர், ஏதோம் மற்றும சேபாவின் இராஜாக்கள் மீது பெற்ற வெற்றியினால் இஸ்ரவேலின் அரசராக சவுல் தனது பதவியின் மீது மக்களது நம்பிக்கையையும் பெற்றார். மக்களும் சவுலைத் தங்களது தலைவனாக ஏற்றுக்கொண்டனர். சவுலுக்கும் இது தெரிய ஆரம்பித்தது.

ஆயினும் அமலேக்கியரின் மாபெரும் பெடோயின் என்ற நாடோடிகளின் குழுவானது யூதர்களைத் தொடர்ந்து தொல்லைப்படுத்தியது. சீனாய் மலை, வனாந்தரம் போன்ற இடங்களிலும் கிதியோன் காலத்திலும் இந்த அமலேக்கியர் அடிக்கடி இஸ்ரவேலரை முன்னறிவிப்பின்றி தாக்கினர். இத்தீயவர்களான அமலேக்கியரைக் கொன்று அவர்களது கால்நடைகளையும் அழித்துவிடுமாறு தீர்க்கதரிசிகள் மூலமாய் தேவன் சவுலுக்கு அறிவித்தார். தாம் பாவத்தை வெறுப்பதை தமது ஜனங்கள் அறிந்து கொள்ள தேவன் விரும்பினார். மேலும் பக்தியற்ற அண்டை நாட்டு மக்களை வெற்றி பெறுவதனால் அவர்களது வழியை அவர்கள் பின்பற்றி விடக்கூடாது என்றும் அவர் விரும்பினார்.

இரண்டாயிரம் காலாட்படையுடனும் யூதாவிலிருந்து வந்த பத்தாயிரம் மனிதர்களுடனும் சவுல் அமலேக்கியரை தென்புறமாகப் படையெடுத்துச் சென்றார். அமலேக்கியர்மேல் முழுவதுமாக வெற்றி பெற்றார். இஸ்ரவேலரின் சேனை அமலேக்கியரை முழுவதுமாக முறியடித்தது. ஆனால் தேவன் கட்டளையிடாததும் தவிர்க்க வேண்டியதுமான ஒரு காரியத்தை சவுல் செய்தார்.

“அமலேக்கியரின் ராஜாவாகிய ஆகாகை உயிரோடே பிடித்தான்; ஜனங்கள் யாவரையும் பட்டயக்கருக்கினாலே சங்காரம்பண்ணினான். சவுலும் ஜனங்களும் ஆகாகையும், ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப் போட மனதில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப்போட்டான்” (1சாமு.15:8,9).

கர்த்தருக்குக் கீழ்ப்படியாமையினால் தலைவனாயிருக்கும் தகுதியை இழந்தவராய் சவுல் காணப்பட்டார். தனது கீழ்ப்படியாமையினாலும் முரட்டாட்டத்தினாலும் சவுல் அரசராகத் தொடரமுடியாது என்று சாமுவேலுக்குக் கர்த்தர் அறிவித்தார். இது சாமுவேலுக்கு மிகவும் வருத்தத்தை அளித்தது. எனவே இராமுழுவதும் அவர் கர்த்தரிடமும் விண்ணப்பம் பண்ணினார். ஆனாலும் தேவன் தமது முடிவினை மாற்றிக்கொள்ளவில்லை.

“மறுநாள் அதிகாலமே சாமுவேல் சவுலைக் சந்திக்கப்போனான்” (1சாமு. 15:12) கில்காலிலே தன்னை சந்தித்த சாமுவேலை சவுல் வாழ்த்தி, “நீர் கர்த்தரால் ஆசிர்வதிக்கப்பட்டவர்; கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்றான்”. ஆனால் சாமுவேலோ “அப்படியானால் என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன என்றான்”. ஆடுகளின் சத்தமும் மாடுகளின் சத்தமும் பொதுவாக நமக்கு எதையும் அறிவிக்காது. ஆனால் இந்நிகழ்ச்சியில் அவை சவுலின் கீழ்ப்படியாமையை சாமுவேலுக்கு அறிவித்தன.

எண்ணாகமம் 32:23 இல் காணப் படும் “உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்துபிடிக்கும்” என்ற நியமத்தை அது தெளிவாக நிரூபித்தது. தன்னுடைய கீழ்ப்படியாமை தெரியவந்தது என்பதை அறிந்த சவுல் அதற்கு விளக்கம் தந்தார். சவுல் அப்பாவத்தை ஜனங்கள் மீது சுமத்தினார்.

“சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய சொல்லைக் கேட்டு, கர்த்தர் என்னை அனுப்பின வழியாய்ப் போய், அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகைக் கொண்டு வந்து, அமலேக்கியரைச் சங்காரம் பண்ணினேன். ஜனங்களோ உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குக் கில்காலிலே பலியிடுகிறதற்காக, கொள்ளையிலே சாபத்தீடாகும் ஆடுமாடுகளிலே பிரதானமானவைகளைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள் என்றான்” (வச.20,21).

கர்த்தரின் கட்டளையை சவுலுக்கு நினைவூட்டிய சாமுவேல் அதனை அவர் கைக்கொள்ளாததையும் விளக்கினார். யெகோவாவுக்கு பலிசெலுத்தும் எண்ணத்தை தீர்க்கத்தரிசி அங்கீகரிப்பார் என்று எண்ணி தனது செயலுக்கு மிகப்பொருத்தமான ஒரு விளக்கத்தை சவுல் அளித்தார். ஆனால் கர்த்தர் பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலையே விரும்புகிறவர்.

“அதற்குச் சாமுவேல் கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப் பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம். இரண்டகம் பண்ணுதல் பில்லிசூனியப் பாவத்துக்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது; நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்” (22,23).

கீழ்ப்படிதலைக்காட்டிலும் மற்ற ஆராதனைகள் தேவனுக்கு பிரியமாகாது. எஜமானருக்குக் கீழ்ப்படிதலே ஒவ்வொரு வேலைக்காரருடைய தலையாய கடமையாகும். பகுதி கீழ்ப்படிதல் என்பது நமது பரம எஜமானை எதிர்ப்பதற்கு சமம்.

அதிகாலைப் பாடல்:

தேவ வார்த்தையின் வெளிச்சத்தில் நாம் நடந்தால்
நம் பாதையில் அவர் மகிமையை அருளுவார்
அவருடைய சித்தத்தை நாம் செய்தால்
அவர் நம்மோடு என்றும் இருப்பார்
அவரை நம்பி கீழ்ப்படியும் அனைவருடனும் இருப்பார்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை

வாசகர்கள் பேசுகிறார்கள்

(நவம்பர்-டிசம்பர் 2016)

1. ஐயா, உங்களுடைய சத்தியவசனம் புத்தகம் படித்தேன். மனசுக்கு ரொம்ப சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருக்கு. தேவனுடைய சத்தியத்தை அறிந்துகொள்ளவும் உதவியா இருக்கு. எனக்கு தவறாமல் இப்புத்தகத்தை அனுப்பவும். இப்புத்தகங்கள் நாங்கள் தேவனிடம் கிட்டி சேர உதவியாக இருக்கும்.

Mrs.Radha, Trichy

2. Greetings. The Meditations for July had been written by Bro.Dharma Kulasingam. His writing is lively and thought provoking. You may give more chances for writing Meditations.

Mr.G.Wilson, Nagercoil.

3. சத்தியவசனம் வெளியிட்டுள்ள விருத்தாப்பியம் என்ற நூல் எனக்கு பரிசளிக்கப்பட்டது. நான் பணி ஓய்வு பெற்று தனிமையிலிருப்பவள். இந்த புத்தகத்தில் என்ன இருக்கப்போகிறது என்று அலட்சியமாக ‘விருத்தாப்பியம்’ நூலை வாசிக்கத் துவங்கினேன். … என்னைப் போன்ற வயது முதிர்ந்தவர்களுக்கு சகோதரி அநேக பயனுள்ள ஆலோசனைகளை கூறியுள்ளார். முதுமையை எப்படி பலன் தரும்படி பயன்படுத்தலாம் என்றும், கர்த்தர் நமக்கு ஈவாக கொடுத்துள்ள வாழ்க்கையை எப்படி அவருக்கு கனி தரும் வாழ்க்கையாக மாற்றலாம் என்றும் யோசனை அளித்துள்ளார். வாழ்க்கையில் தனிமையில் சோர்ந்துபோயிருந்த எனக்கு இந்த புத்தகத்தை வாசித்ததில் நல்ல ஒரு ‘டானிக்’ அருந்தியது போல் பெலன் கிடைத்துள்ளது. சகோதரி சாந்தி பொன்னு அவர்களது எழுத்துப் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

Mrs.P.Jeyaseeli, Madurai.

4. கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள சகோதரருக்கு, நான் ‘அனுதினமும் கிறிஸ்துவுடன்’ புத்தகத்தை தொடர்ந்து வாசித்து வருகிறேன். சென்ற மாதம் என் தாயார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். செப்.8ஆம் தேதி தியானம் எனக்கு மிகவும் பிரயோஜனமாயிருந்தது. அன்றைய நாளின் அப்.27:22ஆம் வசனம் எனக்கு ஒரு தைரியத்தைத் தந்தது. அந்த வசனத்தை வைத்து நான் ஜெபித்து வந்தேன். கர்த்தர் என் அம்மாவை சுகப்படுத்தி வீடு வர உதவி செய்தார். கர்த்தரின் பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. ஆமென்.

Mr.Kishore, Bangalore.

ஜெபக்குறிப்பு: நவம்பர் 1 செவ்வாய்

“கர்த்தாவே உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை” (சங்.9:10) என்ற இவ்வாக்குப்படியே கைவிடாத ஆண்டவர் இம்மாதம் முழுவதும் நமது முன்னணியில் சென்று நமது பாதைகளைச் சீர்படுத்தி நம்மை நடத்திச் செல்லும்படி நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.

ஆசிரியரிடமிருந்து…

(நவம்பர்-டிசம்பர் 2016)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

நம் மீட்பரும் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

இவ்வருடத்தின் இறுதிவரைக்கும் வழிநடத்தி வந்திருக்கும் அன்பின் தேவனை நாங்கள் துதிக்கிறோம். கடந்த இதழ் வாயிலாக தாங்கள் பெற்ற ஆசீர்வாத அனுபவங்களை எங்களோடு பகிர்ந்துகொண்ட தேவபிள்ளைகளுக்கு எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

இவ்வாண்டில் வேதவாசிப்பு அட்டவணைப்படி பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்கள் எங்களுக்கு எழுதித் தெரிவியுங்கள். வருகிற புதிய ஆண்டிலே அநேகர் வேதாகமத்தை முறையாக வாசிக்க வாஞ்சிக்கிறோம். “வேத வசனங்களை ஆராய்ந்துபாருங்கள் (யோவான் 5:39) என ஆண்டவராகிய இயேசு நமக்கு கட்டளை கொடுத்துள்ளார். வெறுமனே இந்த தியானங்களை மட்டுமன்றி அவர் கட்டளைப்படி வேத வசனங்களை ஆராய்ந்து கற்றுக்கொள்வது மிகவும் அவசியம்.

தங்கள் சந்தாவைப் புதுப்பித்துக் கொள்ளாத பங்காளர்களும் சந்தாதாரர்களும் புதுப்பித்துக் கொள்வதற்கு நினைவூட்டுகிறோம்.

நவம்பர் மாதத்தில் சகோதரி ஜெபி பீடில் அவர்கள் மாற்கு சுவிசேஷத்தில் இடம் பெற்றுள்ள இயேசுகிறிஸ்துவின் போதனையிலிருந்தும் சம்பவங்களிலிருந்தும் தியானங்களை தயாரித்து வழங்கியுள்ளார்கள். டிசம்பர் மாத தியானங்களை சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் இயேசுகிறிஸ்து இவ்வுலகத்தில் வந்து பிறந்ததின் நோக்கம், தேவதிட்டம், பிதாவின் அன்பு ஆகியவற்றை மையமாக வைத்து எழுதியுள்ளார்கள். இத்தியானங்களின் வாயிலாக வாசிக்கிற ஒவ்வொருவரும் ஆசீர்வாதம் அடைய வேண்டுதல் செய்கிறோம்.

சத்தியவசன விசுவாசபங்காளர்கள், நேயர்கள் சந்தாதாரர்கள் யாவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்