Daily Archives: November 5, 2018

ஜெபக்குறிப்பு: 2018 நவம்பர் 5 திங்கள்

…. என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் (2கொரி.12:9) என்ற வாக்குப்படியே சுகவீனமாய் இருக்கும் 9 நபர்களது வியாதிகளை கர்த்தர் குணமாக்கி, பெலவீனத்தில் பெலனாகவும் பலத்த அரணாகவும் இருந்து அவர்களை வழிநடத்த வேண்டுதல் செய்வோம்.

பரிசுத்த சந்நிதானம்

தியானம்: 2018 நவம்பர் 5 திங்கள்; வேத வாசிப்பு: 1சாமுவேல் 5:1-12

“அதை எடுத்துச் சுற்றிக்கொண்டு போனபின்பு, கர்த்தருடைய கை அந்தப் பட்டணத்தின்மேல் மகா உக்கிரமாக இறங்கிற்று” (1சாமு.5:9).

மிகுந்த வெய்யிலுக்குள் அலைந்துவிட்டு, ஒரு கடைக்குள் உட்பிரவேசிக்கும்போது, அங்கு பொருத்தப்பட்டிருக்கும் குளிரூட்டி தருகின்ற குளிரை உணரும்போது நமக்கு எப்படியிருக்கும்! அதுபோலவே, தேவசந்நிதியில் பரிசுத்தத்தையும் நாம் உணரவேண்டும். நாம் பாவிகள், பாவத்தில் வாழும் பாவ சுபாவம் கொண்டவர்கள்; நம்மால் தேவனின் பரிசுத்தத்திற்கு முன்னால் நிமிர்ந்து நிற்க முடியாதுதான். என்றாலும் தேவகிருபையால் நாம் நிலைநிற்கிறோம்.

தேவன் தம்மைப் பரிசுத்தமானவராகவும், பயங்கரமானவராகவும் இஸ்ரவேலருக்கு அறிமுகம் செய்தார். பாவத்திற்குத் தண்டனை கொடுக்கின்ற தேவனாகவே அவரை இஸ்ரவேலர் பார்த்தனர். தேவனின் உடன்படிக்கைப் பெட்டி என்பது, அவரது மகிமையால் நிறைந்திருக்கும் ஒன்று. அதன்மீதுள்ள கிருபாசனத்திலிருந்துதான் தேவன் அன்று பிரதான ஆசாரியனுடன் பேசினார். இந்தப் பெட்டியைப் பரிசுத்தமாய் காத்துக்கொள்ள வேண்டும் என்று இஸ்ரவேலர் கட்டளை பெற்றிருந்தனர். இந்த உடன்படிக்கைப் பெட்டியைக் கைப்பற்றிய பெலிஸ்தியர் அதைக் கொண்டுவந்து தங்கள் தெய்வமான தாகோனின் கோவிலில் வைத்தனர். அவர்களுக்கு அதன் மகிமை, பெறுமதிப்பு, பரிசுத்தம் ஆகிய எதுவுமே தெரியவில்லை. ஆனால் மறுநாள் காலையில் தாகோன் சிலை, உடன்படிக்கைப்பெட்டிக்கு முன்பாக தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்தது. அப்பொழுதும் அவர்கள் உடன்படிக்கைப் பெட்டியின் மகிமையை உணராதவர்களாக, மீண்டும் தாகோனை எடுத்து அதன் ஸ்தானத்தில் வைத்துச் சென்றனர். மறுநாளிலும் தாகோன் விழுந்து கிடந்ததுமல்லாமல், அதன் தலையும், இரண்டு கைகளும் உடைந்து உடல் மாத்திரமே இருந்தது. அத்தோடு தேவனின் உக்கிர கோபம் அவர்களை மூலவியாதியினால் வாதித்தது.

ஒரு விக்கிரக சிலைக்கே தேவனுடைய பரிசுத்தத்தின் பயங்கரம் தெரிந்து பெட்டிக்கு முன்னே விழுந்து கிடந்தது என்றால், உணர்வுள்ள நாம் அவருடைய பரிசுத்தத்திற்கு முன்பாகத் துணிகரம்கொண்டு நிற்கமுடியுமா என்று சிந்தித்துப் பார்ப்போம். அன்று ஏசாயா மகா பரிசுத்த தரிசனத்தைக் கண்டபோது, “ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுள்ள மனுஷன்” என்று கதறியது ஏன் என்று சிந்திப்போம். நாம் இன்று எதுவித பயமோ பக்தியோ இன்றி துணிகரமாக தேவ சமுகத்திற்கு வரவும் நிற்கவும் கற்றுக்கொண்டோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. சிந்தித்து மனந்திரும்புவோமாக.

“அப்படியே என் பரிசுத்த ஸ்தலம் அவர்கள் நடுவிலே என்றென்றைக்கும் இருக்கும்போது, நான் இஸ்ரவேலைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று ஜாதிகள் அறிந்து கொள்வார்கள்…” (எசே.37:28).

ஜெபம்: பரிசுத்தமுள்ள தேவனே, எனது அபாத்திரமான நிலையை உணராமல், துணிகர மாக உமது சமுகத்திற்கு வருகிறவதற்காக வருந்துகிறேன். இனி பயத்துடனும் பரிசுத்தத்துடனும், உமது சமுகத்திற்கு வர என்னை ஒப்புக்கொடுக்கிறேன். ஆமென்.

சத்தியவசனம்