ஜெபக்குறிப்பு: 2018 அக்டோபர் 31 புதன்
“கர்த்தர் அரணான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை அதிசயமாய் விளங்கப்பண்ணினபடியால், அவருக்கு ஸ்தோத்திரம்” (சங்.31:21) தம்முடைய கிருபையாலும், தம்முடைய வல்லமையுள்ள புயத்தாலும் இவ்வருடத்தின் 10 மாதங்களைக் கடந்துவர தேவன் கிருபை செய்துள்ளார். அவருக்கே மகிமையும் கனமும் உண்டாக ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.
தன்னிலை உணர்வது அவசியம்
தியானம்: 2018 அக்டோபர் 31 புதன்; வேத வாசிப்பு: 2சாமு.12:1-10; சங்.51:1-12
…ஐயோ! நான் அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன். சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன் (ஏசா. 6:5).
பேச்சில் கவனமாயிருக்கவேண்டியது அவசியம் என்று தெரிந்திருந்தாலும், நாம் ஆத்திரப்படும்போது தன்னிலை மறந்து அடுத்தவரைப் புண்படுத்தும்படி வார்த்தைகளை அள்ளி வீசிவிடுகிறோம். அது சில பயங்கரமான விளைவுகளைத் தோற்றுவித்துவிடுகிறது. கல்லை எறிந்தால் பொறுக்கிக்கொள்ளலாம்; ஆனால் வார்த்தைகளை எறிந்துவிட்டால் அவற்றை மீண்டும் பொறுக்கி எடுப்பது மிக மிகக் கடினம். நாமே நமது வார்த்தைகளால் பிடிபடவும்கூடும்.
உப்பரிகையில் உலாவிய தாவீது பத்சேபாளைக் கண்டு, ஆசை வைத்தான். அவளை அடைய திட்டமிட்டு, அவளுடைய கணவனைப் போர்முனைக்கு அனுப்பிக் கொன்று போடுவித்தான். பின்னர் அவளைத் தன் மனைவியாக்கிக் கொண்டான். கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரம் செய்யாதிருப்பாயாக, பிறருடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக என்று கர்த்தர் கொடுத்த கட்டளைகளையெல்லாம் மீறிவிட்டு, தான் செய்தது எதுவும் யாருக்கும் தெரியாது என்பதுபோல அமைதியாய் இருந்தான் தாவீது. கர்த்தரோ நாத்தானை, தாவீதிடத்திற்கு அனுப்பினார். நாத்தான் ஒரு ஆட்டுக்குட்டிக் கதையைச் சொன்னபோது, தாவீது தன்னிலை என்னவென்பதை மறந்து, தனது தீர்ப்பையும் கூறிவிட்டான். தான் சொல்லும் தீர்ப்பு, தனக்கே உரியது என்பதைத் தாவீது அறிய வெகுநேரம் செல்லவில்லை. நாத்தான் சொன்ன ஒரேயொரு வார்த்தை, “நீயே அந்த மனுஷன்”. அப்பொழுது தாவீது, தன்னிலையை உணர்ந்து, தான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்ததை அறிக்கையிட்டான். அந்தரங்கத்தில் செய்கின்ற பாவத்திற்கான கிரயத்தை வெளியரங்கமாக நடப்பிக்கின்ற கர்த்தரிடமிருந்து தாவீது எப்படித் தப்பமுடியும்? தவறை உணர்ந்தான் தாவீது (சங்.51:1). தவறுக்காக மனங்கசந்து, தேவ பிரசன்னத்துக்காக மன்றாடினான். தன்னை மறந்தபோது அகப்பட்ட தாவீது, தன்னிலை உணர்ந்தபோது, மனந்திரும்பினான்.
நமது வாழ்விலும் தன்னிலை உணர மறந்ததால் பல தவறுகள் நேரிட்டிருக்கலாம். விசேஷமாக தன்னிலை உணராமல் வார்த்தைகளை விட்டு, நமது வார்த்தைகளாலேயே நாம் அகப்பட்டிருக்கலாம். அதேசமயம், தன்னிலை உணராத பாவ அறிக்கையும் ஜெபமும் எவ்வித பலனையும் தராது. ஆகவே, இன்று சற்று அமர்ந்திருந்து சிந்திப்போமாக. பாவம் செய்திருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு, நமது அபாத்திர நிலையை மறந்து, நீதிமான்கள்போல வேடம் போடாமல் தேவனிடம் அறிக்கையிட்டு மனந்திரும்புவோமாக.
“தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும். நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்” (சங். 51:10).
ஜெபம்: பரிசுத்தமுள்ள தேவனே, என்னை நானே நிதானித்துப் பார்த்து, பாவங்களைவிட்டு மனந்திரும்பி, ஒரு புதிய வாழ்வைத் தொடர எனக்குக் கிருபை தாரும். ஆமென்.
வாக்குத்தத்தம்: 2018 அக்டோபர் 30 செவ்வாய்
கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரமராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார். (2தீமோத். 4:18)
வேதவாசிப்பு: எரேமி. 45-48 | 2தீமோத்.4
ஜெபக்குறிப்பு: 2018 அக்டோபர் 30 செவ்வாய்
“குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும்” (ஆப.2:3) என்ற வாக்குப்படியே பலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பங்க ளோடும் கர்த்தருக்கு காத்திருக்கிற 9 நபர்களுக்கு தேவ சித்தத்தின்படியான நன்மைகளும் ஆசீர்வாதங்களும் குறைவின்றி அருளப்பட ஜெபம் செய்வோம்.
கர்த்தரில் சார்ந்திராமற்போனால்…
தியானம்: 2018 அக்டோபர் 30 செவ்வாய்; வேத வாசிப்பு: 2சாமுவேல் 24:1-14
மனுஷன்மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டுவிலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரே.17:5).
தாவீது எத்தனையோ கஷ்டங்களுக்கும் அலைச்சல்களுக்கும் முகம் கொடுத்தாலும் கர்த்தர்மீது சார்ந்து ஜீவிப்பதை அவன் விட்டுவிடவில்லை. ஆனால், இறுதியில் தன் படைபலத்தை நம்புவதற்கும், சுயத்தில் சார்ந்திருப்பதற்கும் பெருமையடைவதற்கும் ஏதுவாக மக்களைத் தொகையிட்ட காரியம் தாவீதுக்கு பாவமானது. “நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர்” (சங்.70:5) என்று பாடிய தாவீது எங்கே? “உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்ந்து போவேன். என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்” (சங்.18:29) என்று கூறிய தாவீது தன் படைபலத்தைக் கணக்கெடுக்கவேண்டியது என்ன? சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி இஸ்ரவேலைத் தொகையிடுவதற்கு தாவீதை ஏவிவிட்டது (1நாளா.21:1) என்று வாசிக்கிறோம்.
தாவீது செய்வது தவறு என்று உணர்ந்த யோவாப், ‘உம்முடைய கண்கள் காணும்படி உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஜனங்களை இப்போது இருப்பதைப் பார்க்கிலும்; நூறு மடங்கு அதிகமாக வர்த்திக்கபண்ணுகிறவர்; ஏன் இந்தக் காரியத்தை செய்கிறீர்’ என்று கேட்டும் தாவீது சம்மதிக்கவில்லை. யோவாபும் இராணுவத் தலைவரும் கூறிய வார்த்தை தாவீதிடம் எடுபடவில்லை. இதினிமித்தம் கணக்கிட்டு முடித்தபோது, தாவீது தன் பாவத்தை உணர்ந்தான். அவனுடைய உள்ளம் அவனை வாதித்தது. தன்னுடைய புத்தியீனமான இக்காரியத்தை மன்னிக்கும்படி தாவீது கர்த்தரிடம் வேண்டினான். கர்த்தர் காத் என்பவனை அனுப்பி, மூன்று காரியங்களை முன்வைத்து, அவற்றில் ஒன்றைத் தெரிந்துகொள்ளும்படி சொன்னார். ஏழு வருடப் பஞ்சம், சத்துருக்களால் மூன்று மாத சங்காரம், அல்லது மூன்று நாட்கள் கொள்ளை நோய். அப்போது தாவீது, “இப்போது நாம் கர்த்தருடைய கையிலே விழுவோமாக. அவருடைய இரக்கங்கள் மகா பெரியது. மனுஷர் கையில் விழாதிருப்பேனாக” (2சாமு.24:14) என்றான்.
கஷ்ட நஷ்டங்கள் வரும்போது கர்த்தரிடம் ஓடிச்சென்று சரணடைவதும், எல்லாம் சுமூகமானதும் நமது வழிகளைத் தெரிந்தெடுப்பதும் நமக்குத்தான் ஆபத்தை விளைவிக்கும். சாத்தான் தாவீதின் மனதை ஏவுமளவுக்குத் தாவீது இருந்தது கவலைக்குரியது. எந்த நிலையிலும் தேவனை மாத்திரம் சார்ந்திருப்போமாக. சுயத்தை நினைத்து சுத்தரை மறந்தால் எல்லாமே சூனியமாகிவிடும். அது கடினமான முடிவுகளைக் கொண்டு வந்துவிடும்.
“அவர்கள் முறிந்து விழுந்தார்கள். நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்” (சங். 20:8).
ஜெபம்: அன்பின் ஆண்டவரே, சுயத்திற்கு மரித்து, உமது சித்தம் செய்து வாழ இன்றே என்னை அர்ப்பணிக்கிறேன். ஆமென்.