வாக்குத்தத்தம்: 2018 நவம்பர் 1 வியாழன்

கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; … விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது (ரோமர் 1:16).


நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதரியாகக் காண்பி. (தீத்து.2:7)
வேதவாசிப்பு: எரேமி.51,52 | தீத்து.2

ஜெபக்குறிப்பு: 2018 நவம்பர் 1 வியாழன்

கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி காத்திருப்பேன் (சங். 5:3).


“நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய்” (ஏசா.49:23) இவ்வருடத்தின் பதினொராவது மாதத்தைக் காணச் செய்த தேவனை ஸ்தோத்திரிப்போம். கர்த்தருக்குக் காத்திருந்து புதுப் பெலனை பெற்றுக்கொள்ள அவருக்கு நம்மை அர்ப்பணிப்போம்.

உண்மையான ஜெபம்

தியானம்: 2018 நவம்பர் 1 வியாழன்; வேத வாசிப்பு: 1சாமுவேல் 1:1-28

“இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம் பண்ணினேன், நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார் (1சாமு.1:27).

ஜெபிக்கும்போதும் சரி, பாவமன்னிப்புக் கேட்கும்போதும் சரி நாம் பல காரியங்களைக் கர்த்தரின் சமுகத்தில் சொல்லுகிறோம். அவற்றிற்கு நாம் உண்மையாக இருக்கிறோமா? நாம் மனிதரை ஏமாற்றி வாழ்வதுபோல இன்று ஆண்டவரையும் ஏமாற்றி வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்றால் அது மிகையாகாது. ஆண்டவரின் சமுகத்தில் நாம் சொல்லுவதொன்று, நாம் செய்வதோ வேறொன்று. நாம் ஜெபத்தில் மாய்மாலம் பண்ணுகிறோமா?

அன்னாளின் ஜெபம் உண்மையான ஜெபமாக இருந்தது. அவள் தேவனோடு பேசியதை வேறு யாரும் கேட்கவில்லை. அவள் வாய் மாத்திரம் அசைந்தது. அதை ஆசாரியனாகிய ஏலியும் பார்த்தான். அன்னாள் தனது இருதயத்தைத் தேவ சமுகத்தில் ஊற்றி ஜெபித்தாள். அந்த ஜெபமானது அவளுக்கும், தேவனுக்குமான ஒரு பொருத்தனையாக இருந்தது. அதை அவள் நூறு சதவீதம் உண்மையாய் நிறைவேற்றினாள் என்று காண்கிறோம். குழந்தையில்லாததால் தனது சக்களத்தியினிடத்தில் அவள் கேட்ட அவச்சொற்கள் ஏராளம். இப்போது ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த அவள், அதைத் தனக்குச் சொந்தமாக்கிக்கொள்ள எண்ணவில்லை. தேவனுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதையே தனது முக்கிய கடமையாக எண்ணி, ஜெபித்தபிரகாரமாக அனைத்தையும் செய்துமுடிப்பதைக் காண்கிறோம். இன்னலில் தன்னை நினைந்தருளின தேவனை, தன் நிறைவில் மறவாது செயற்பட்டாள் அன்னாள். தனது குறைவை நிவிர்த்தி செய்து தன்னை ஆசீர்வதித்த தேவனின் ஊழியம் சிறப்புற தனது மகனை தேவாலயத்தின் பணிக்காக ஒப்புக்கொடுத்தாள். ஏலியின் புத்திரரின் கொடுமைகள் மத்தியிலும் தேவநாமத்தை உண்மைத்துவமாய் மதித்துச் செயற்படக்கூடியவிதமாக தனது மகன் சாமுவேலை அன்னாள் ஏலியின் மேற்பார்வையில் தேவாலயத்தில் விட்டாள்.

அன்பானவர்களே, இன்று நாம் ஜெபத்தில் சொல்லுவதையெல்லாம் கிரியையில் எந்தளவுக்கு நிறைவேற்றுகிறோம்? ஆண்டவருக்குத் தெரியும்தானே, என்னால் முடியவில்லை என்றால் அவர் மன்னிப்பார். அன்றிருந்த நிலைமை வேறு, இன்றிருக்கும் நிலைமை வேறு. இது அவருக்கு விளங்காதா என்ன என்று சாக்குப் போக்குகளை அடுக்கிக்கொண்டே போகலாம். நாம் யாரை ஏமாற்றுகிறோம்? ஆண்டவரை ஏமாற்றுவதாக எண்ணி நம்மைநாமே ஏமாற்றி வாழ்கிறோம். எனவே அமர்ந்திருந்து சிந்திப்போம். ஜெபத்தில் ஏறெடுத்த எதையாவது விட்டுவிலகி யிருந்தால் இன்றே மனந்திரும்பி, அதை நிறைவேற்றுவோமாக.

“இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர், அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்” (சங்.51:6).

ஜெபம்: அன்பின் தேவனே, உமது சமுகத்தில் நான் பேசுகின்ற காரியத்திலும், உமக்காக செய்கின்ற பணிகளிலும் உண்மையுள்ளவனாயிருக்க கிருபை தாரும். ஆமென்.

தேவன் மாத்திரமே!

அதிகாலை வேளையில்… (நவம்பர் – டிசம்பர் 2018)
– Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: யோபு 7: 1-21
நான் படுத்துக்கொள்ளுகிறபோது, எப்பொழுது எழுந்திருப்பேன்? இராக்காலம் எப்பொழுது முடியும் என்று சொல்லி, கிழக்கு வெளுக்குமட்டும் அரண்டு புரளுகிறதினால் எனக்குப் போதுமென்று போகிறது (யோபு.7:4).

யோபின் புத்தகமானது “மனித குலத்தில் தோன்றிய மாபெரும் ஓர் இலக்கியச் செய்யுள்” என்று கருதப்படுகிறது. “பழங்கால மற்றும் நவீன காலத்தின் மாபெரும் செய்யுள்” என்று திரு.ஆல்ஃபிரட் டென்னிசன் என்பவர் கூறியுள்ளார்.

தேவனுக்கு முன்பாக உத்தமனாக வாழ்ந்த யோபு என்னும் ஒரு மனிதன் சாத்தானால் கடுமையாக தாக்கப்பட்டும் தனது உத்தமத்தில் உறுதியாக வாழ்ந்து, இழந்த அனைத்தையும் திரும்பப் பெற்றுக்கொண்டான். இவரது வாழ்க்கை நம் அனைவருக்கும் ஆறுதலைத் தருவதாக உள்ளது. இப்புத்தகத்தின் ஏதோவொரு பகுதியில் நம்மை அடையாளம் காண முடியும்.

யோபு சாத்தானால் தாக்கப்பட்டது மாத்திரமல்ல, அவனுக்கு ஆறுதல் கூறவந்த அவனுடைய மூன்று நண்பர்களும் யோபின் பாவங்களைப்பற்றி அனுமானித்து தீய காரியங்களையே கூறினார்கள். இப்புத்தகத்தின் அநேக அதிகாரங்கள் யோபின் நண்பர்களின் உரைகளையும் உத்தமனான யோபின் பதிலுரைகளையும் கொண்டுள்ளன.

முதல் சுற்று எலிப்பாசின் உரையுடன் ஆரம்பிக்கிறது. தான் கண்ட தரிசனத்தில் உன்னத தேவனின் பரிசுத்தத்தையும் மனிதர்களின் பாவத் தன்மைகளையும் அவர் தெளிவான சொற்களால் விவரிக்கிறார். தீயவர்கள் மாத்திரமே அழிவார்கள் என்பதால் தனது தீமையினாலேயே யோபும் தீங்கினை அனுபவிக்கிறார் என்று எலிப்பாஸ் எண்ணினார். உத்தமனான யோபு கசப்புணர்வு கொள்ளாது தேவனிடம் மனந்திரும்ப வேண்டும் என்ற ஆலோசனையைக் கூறினார்.

எலிப்பாசுக்கு மறுமொழி கொடுத்த யோபு மனித வாழ்வை இராணுவ ஊழியத்துக்கும் ஒரு கூலிக்காரனுடைய ஊழியத்துக்கும் ஒப்பிட்டார். தன்னுடைய வாழ்வையும் இவைகளுக்கு ஒப்பிட்ட அவர் தன்னுடைய கட்டுப்பாட்டுக்கு மீறின சூழ்நிலையில் தான் மாட்டிக்கொண்டதாகவும் அறிக்கையிட்டார். கூலிக்கு அமர்த்தப்பட்ட வேலையாள் இந்த உலகில் சில நாட்களே வாழ்வான் என்றும் அந்த வாழ்வும் அர்த்தமில்லாமல் போகும் என்று அறிந்தவராய் தன்னுடைய வாழ்வும் அவ்வாறே உள்ளது என்றும், தன்னுடைய குடும்பம் மற்றும் ஆஸ்திகள் யாவும் அழிந்தன; நண்பர்களும் தனக்கு எதிராக எழும்பியுள்ளனர் என்பதையும் உணர்ந்தார்.

யோபு 7:4 நமது நிலைமையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. யோபு இரவில் தனது படுக்கையில் படுத்திருக்கும்பொழுது ‘எப்பொழுது எழுந்திருப்பேன்? இராக்காலம் எப்பொழுது முடியும்?’ என்ற எண்ணமே அவருக்குள் மேலோங்கியிருந்தது. பொருளாதார நஷ்டங்கள், தனிப்பட்ட இழப்புகள், நண்பர்களின் வஞ்சகம் போன்ற காரியங்கள் நமக்கும் ஒரு இரவை நீண்ட இரவாகக் காட்டும். யோபைப் போல நாமும் நித்திரை வராமல் நமது படுக்கையில் காலை வரை புரண்டு படுத்திருப்போம்.

யோபு என்ன செய்தார்? யாரை நாடினார்? அவருடைய காரியங்களைக் கேட்டு புரிந்துகொள்ள யார் உள்ளார்? மாறும் உலகில் மாறாமல் நிலைத்திருப்பவர் யார்? இக்கேள்விகளுக்கு விடையை யோபு அறிந்திருந்தார். தேவனிடம் தனது விண்ணப்பங்களை ஏறெடுத்து நம்பிக்கையைப் பெற்றுக்கொண்டார்.

வான் ஹாவ்னர் என்பவர் பலவித துன்பங்களால் பாதிக்கப்பட்ட ஒரு வயதான பெண்மணியைப் பற்றிக் கூறினார். அவரது சில துன்பங்கள் உண்மையானவை; வேறு சில கற்பனையானவை. அவருடைய நண்பர்களும் குடும்பத்தினரும் அவர்களுடன் ஜெபித்து அவரை ஆறுதல்படுத்தினர். அவருக்கு உதவும் பொருட்டாக “நாங்கள் எங்களால் இயன்ற அளவு உங்களுக்கு யாவையும் செய்துவிட்டோம். இனி நீங்கள் தேவனை நம்புங்கள்” என்ற கூறியவுடன், அவர் அதிர்ச்சிக்குள்ளாகி, “அப்படியா? என் முடிவு வந்துவிட்டதா? ” என்று புலம்பினார். ஹாவ்னர், “அப்படியாயின் நாம் மீண்டும் ஆரம்பிக்கவேண்டிய நிலை வந்துவிட்டது” என்று குறிப்பிடுகிறார்.

யோபு இந்த பாடத்தைதான் கற்றுக் கொண்டார். நமது குடும்பத்தினரும் நண்பர்களும் நம்மை ஆறுதல்படுத்துவதாக எண்ணிச் செய்யும் காரியங்கள், நம்மை சோர்வடையச் செய்வனவாக அமைந்துவிடும். நல்ல எண்ணத்துடன் நாம் செய்யும் சில நல்ல காரியங்களும் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதுமுண்டு.

ஆனால் தேவன் எப்பொழுதும் நம்மை சரியாகப் புரிந்துகொள்ளுவார். தேவனை நோக்கிக் காத்திருக்கும் வேளை உண்டு. நம்முடைய நலத்துக்கும் பெலத்துக்கும் அவரையே நாம் சார்ந்திருக்க வேண்டும். தவறான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும்பொழுதும் தனிமையில் துணை தேடிச்செல்லும் வேளையிலும் அவருடைய உதவியும் ஆறுதலும் நமக்குத் தேவை. அவற்றை தேவன் மாத்திரமே தரமுடியும்.

அதிகாலைப் பாடல்:

என் வாழ்வில் சமாதானம் நீரோட்டம் போல் வந்தாலும்,
துன்பங்கள் அலையலையாய் ஆர்ப்பரித்து வந்தாலும்,
என்ன வந்தாலும் எது நடந்தாலும் அவை நன்மைக்கே
என்று கூறி உம்மைத் துதிக்க எனக்குப் போதியும்.

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

வாசகர்கள் பேசுகிறார்கள்

(நவம்பர் – டிசம்பர் 2018)

[1]
கர்த்தருக்குள் அருமையான சகோதரர்களுக்கு தங்களது அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்தை அநேக வருடங்களாக வாசித்து வருகிறேன். தியானங்கள் மிகவும் ஆசீர்வாதமாக உள்ளது. எனக்கு வயது 74. கணவருக்கு 78 வயது. எங்களையும் பிள்ளைகளையும் கர்த்தர் அருமையாக ஆசீர்வதித்து வருகிறார்.

Mrs.Marjorie Kingsly, Chennai.


[2]
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள ஐயா, சத்தியவசனம் பத்திரிக்கை எங்கள் பாதைக்கு வெளிச்சமாகவும் வாழ்க்கைக்கு தேவையான அனுதின மன்னாவாகவுமிருக்கிறது. கர்த்தருக்கு கோடி கோடி ஸ்தோத்திரங்களை செலுத்துகிறேன். ஊழியங்களுக்காக அனுதினமும் ஜெபித்து வருகிறேன்.

Mrs.Salomi, Dharapuram.


[3]
Greetings in the precious name of our Lord Jesus Christ. Anuthinamum Christhuvudan is a wonderful scripture guide for every morning. Bible study by Vethanayagam Sasthriyar, Bro.Susi prabhakaradoss make me spend more and more time reading the Bible. Deep messages are simply explained. Thank God for those preparing morning devotion and also Tv messages. With much prayer for the progress of Sathia vasanam.

Mrs.Angelina Packianathan, Coimbatore.


[4]
இந்த வருடத்தில் தாங்கள் அனுப்பியிருந்த காலண்டர். மற்றும் மாத பத்திரிக்கைகள் யாவும் கிடைத்தன. நன்றி. பத்திரிக்கைகள் நாங்கள் கிறிஸ்துவுக்குள் பலப்பட உதவியாயிருக்கின்றன. தொடர்ந்து ஜெபித்துக் கொள்ளுங்கள்.

Mrs.P.Vasan, K,K,Dist.


[5]
நான் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகத்தை படித்து வருகிறேன். இப்புத்தகம் என் ஆவிக்குரிய வளர்ச்சிக்கும் வேதத்தில் உள்ள எண்ணிலடங்கா வாக்குத்தத்தங்களையும் தியானிக்க எனக்கு அதிக உதவியாக இருக்கிறது. சகோதரி சாந்திபொன்னு அவர்கள் எழுதும் தியானங்கள் மிக அருமையாக உள்ளது. மொத்தத்தில் இத்தியான புத்தகம் ஒரு சிறந்த வெளியீடு. இந்த ஊழியம் மென்மேலும் வளர ஆண்டவர் அருள்புரிவாராக.

Mrs.Mercy Rufus, Salem.

ஆசிரியரிடமிருந்து…

(நவம்பர் – டிசம்பர் 2018)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

நமக்காக அடிமையின் ரூபமெடுத்து மனுஷசாயலான இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

இவ்விதழின் வாயிலாக தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள் (1சாமு.12:24). இவ்வருடத்தில் இந்நாள்வரை கர்த்தர் நம்மை எவ்வளவு அற்புதமாய் நடத்தி வந்திருக்கிறார். அவருக்கே சகல மகிமையும் உண்டாகட்டும்.

அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் தங்களுக்கு ஆசீர்வாதமாகவும் பிரயோஜனமாகவும் இருந்தது என்பதை தங்கள் கடிதங்கள் வாயிலாக அறிந்து கர்த்தரைத் துதிக்கிறோம். தொடர்ந்து இவ்வூழியத்தை தாங்கள் இணைக்கரம் கொடுத்து ஆதரிக்கவும் ஊழியங்களுக்காக ஜெபிக்கவும் அன்புடன் வேண்டுகிறோம்.

இவ்வருடத்தில் தியானபுத்தகத்தின் அட்டவணையைப் பயன்படுத்தி பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்கள் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அவர்களது பெயரை எதிர்வரும் இதழில் பிரசுரிப்போம். புதிய வருடத்திலும் மேலும் அநேகர் தீர்மானம் எடுத்து வேதாகமத்தை தொடர்ச்சியாக வாசித்து முடிப்பதற்கும் உற்சாகப்படுத்துகிறோம்.

இவ்விதழின் நவம்பர் மாதத்தில் 1 சாமுவேல் புத்தகத்திலிருந்து அன்றாட கிறிஸ்தவ வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படையான சத்தியங்களை சகோதரி தர்ஷினி சேவியர் எழுதியுள்ளார்கள். இருள் போன்ற சூழ்நிலைகளில் எல்லாம் ஆண்டவருடைய வழிநடத்துதல்களையும், வாக்குப்பண்ணப்பட்டபடி பாலகனாக இவ்வுலகுக்கு வந்த ஆண்டவராகிய இயேசு தாம் வாக்குரைத்தபடியே மீண்டும் வரப்போவதை நாம் மற்றவர்களுக்கு அறிவிக்கிறவர்களாக வாழ வேண்டுமென்பதையே சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் டிசம்பர் மாதத்தில் திட்டமும் தெளிவுமாக எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதமாக இருக்கவேண்டுமென்றே ஜெபிக்கிறோம்.

சத்தியவசன விசுவாசபங்காளர்கள், ஆதரவாளர்கள், சந்தாதாரர்கள் யாவருக்கும் சத்திய வசனம் ஊழியத்தின் சார்பாகவும் ஊழியர்களின் சார்பாகவும் எங்களது இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்