ஜெபக்குறிப்பு: 2020 மே 31 ஞாயிறு
“.. நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம். .. தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?” (உபா.4:7) என்ற வாக்கை எண்ணி நன்றி உணர்வோடு ஆராதனையில் பங்கெடுப்போம். இந்த மாதத்தின் இறுதிவரை இந்த நெருக்கடியான காலத்திலும நம்மை பாதுகாத்து வழிநடத்தின தேவனை நன்றியோடு ஸ்தோத்தரிப்போம்.
குடும்ப ஜெபம்!
தியானம்: 2020 மே 31 ஞாயிறு | வேத வாசிப்பு: யோசுவா 24:15-24
“…நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்” (யோசுவா 24:15).
‘குடும்ப ஜெபம் இல்லாத வீடு கூரையில்லாத வீடு’ என்பார்கள். உங்கள் வீட்டில் ஜெபம் என்ற கூரை இருக்கிறதா என சிந்தித்துப் பாருங்கள். இந்த காலத்திலே குடும்பமாக தேவனை ஆராதிக்க நேரங்களை ஒதுக்கிக்கொள்ளுங்கள். கிறிஸ்தவ வீடுகள் பலவற்றில் “கிறிஸ்துவே வீட்டின் தலைவர்” என்னும் வாசகம் அழகாக வரவேற்பறையில் தொங்கிக்கொண்டிருப்பதை நீங்களும் கண்டிருக்கலாம், சில வேளைகளில் உங்கள் வீட்டிலும் அப்படியிருக்கலாம். “கிறிஸ்துவே தலைவர்” என்பது வெறுமனே எழுத்துக்களில் மட்டும்தானா? வீட்டிலுள்ளவர்கள் உள்ளத்தில் கிறிஸ்து இல்லை என்றால் அது துக்கத்துக்குரிய விஷயம்! கிறிஸ்து தலைவர் என்பதை குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் உணர்வார்களானால் குடும்பமாகச் சேர்ந்து அவரை ஆராதிப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் காரியமாகவே இருக்கும்.
இஸ்ரவேலரிடம், “இன்று நீங்கள் யாரைச் சேவிக்கப் போகிறீர்கள் என தெரிவு செய்யுங்கள்” என்று கூறிய யோசுவா, “நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம்” என்று ஆணித்தரமாகக் கூறியதைப்போல நாமும் கூறத்தக்க விதத்தில் நமது குடும்ப ஜெபங்களை அமைத்துக்கொள்ள வேண்டாமா! என்றைக்கு ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்தில் இணைந்து, கணவன், மனைவியாகிறார்களோ அன்றைக்கே அவர்கள் குடும்ப ஜெபத்தை ஆரம்பிக்கவேண்டும். பிள்ளை பிறந்து ஓரளவு விளங்கிக்கொள்ளும் பருவத்தை அடைகிறவேளையில் அப்பிள்ளையும் குடும்ப ஜெபத்தில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். குடும்ப ஜெபத்தில் அமைதியாக இருக்கக் கற்றுக்கொள்ளும் பிள்ளைகள், ஞாயிறு ஆராதனையில் அமைதியாக இருப்பார்கள் என்பது உறுதி. பிள்ளைகள் வளர்ந்து வரும்போது அவர்களை ஜெபிக்கவும், வேதத்தை வாசிக்கவும் நாம் ஊக்குவித்து நமது குடும்ப ஜெபங்களைக் கட்டியெழுப்பவேண்டும். தேவனை ஆராதிப்பதும், குடும்பத் தேவைகளுக்காக, உறவினர், நண்பர்களுக்காக ஜெபிப்பதும், குடும்பத்தில் யாராவது தவறு செய்து மற்றவரை மனம் நோகப் பண்ணியிருந்தால் அதற்காக மன்னிப்புக் கோருவதும் குடும்பஜெப நேரத்தில் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியது அவசியம்.
இவ்வளவு காலமும் ஒருவேளை நாம் குடும்ப ஜெபத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்திருக்கலாம். அதை இன்று ஏன் நாம் ஆரம்பிக்கக் கூடாது? இதை வாசிக்கும் சகோதரனே, சகோதரியே, உங்கள் குடும்பத்தை ஜெப வீடாக்க நீங்கள் முயற்சி செய்துபாருங்கள். அது பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும். தேவன் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக!
ஜெபம்: “குடும்ப ஜெபத்தின் முக்கியத்துவத்தை எனக்கு உணர்த்திய ஆண்டவரே, இன்றே குடும்ப ஜெபத்தை ஆரம்பிக்க என்னை ஒரு கருவியாகப் பயன்படுத்தியருளும். ஆமென்.”
வாக்குத்தத்தம்: 2020 மே 30 சனி
நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம். (ரோ.14:8)
2இராஜாக்கள் 9,10 | யோவான் 9:1-20
ஜெபக்குறிப்பு: 2020 மே 30 சனி
அவர்களுக்கு நன்மையுண்டாக நான் என் கண்களை அவர்கள்மேல் வைத்து, … அவர்களைக் கட்டுவேன் (எரே:24:6) கொரனா வைரஸ் பாதிப்பினால் நம் தேசத்தில் நிலவியுள்ள பொருளாதார சரிவு, நிதிநிலை பற்றாகுறை, பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரங்கள் யாவற்றையும் கர்த்தர்தாமே சரி செய்யவும் மேலும் இந்த வாதையிலிருந்து மக்களைப் பாதுகாக்கவும் மன்றாடுவோம்.
நமது தீர்மானம் என்ன?
தியானம்: 2020 மே 30 சனி | வேத வாசிப்பு: ஆதியாகமம் 22:15-18, தீத்து 2:11-14
“என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், …நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது” (யாத்.19:5).
இம்மட்டும் அழைத்து வந்த தேவன், தமது ஜனத்திற்கு ஒரு நிபந்தனையை விடுக்கிறார். “என் வாக்கைக் கேள். ஒன்றையும் கூட்டாமல் குறைக்காமல் உள்ளபடி கேள். என் உடன்படிக்கையைக் கைக்கொள், அப்பொழுது நீ என் சொந்த ஜனமாவாய். நான் உன் தேவனாயிருப்பேன்.”
கர்த்தர்தாமே ஆபிரகாமைப் பெயர் சொல்லி அழைத்ததும், இஸ்ரவேலரைத் தமது சம்பத்தாகத் தேர்ந்தெடுத்ததும் அவர்கள் விசேஷித்தவர்கள் என்பதினாலோ, பலத்த ஜாதி என்பதினாலோ, அல்லது தரமானவர்கள் என்பதினாலோ அல்ல. தேவசாயலில் சிருஷ்டிக்கப்பட்ட மனுஷன் பாவத்திற்கு அடிமையாகி தேவமகிமையை இழந்து தூரம்போனதால், தேவன்தாமே தம்மை ஜனங்களுக்கு வெளிப்படுத்தும்படியாக ஒருகூட்ட ஜனத்தைத் தெரிந்தெடுத்தார்.
இப்பொழுதும்கூட தமது இரண்டாம் வருகையின் நாளுக்காக ஒரு கூட்டம் ஜனத்தைக் கர்த்தர் ஆயத்தம் பண்ணி வருகிறார். இக்கூட்டத்தில் சேர்ந்துகொள்ள, பலி செலுத்தவோ துறவறமிருக்கவோ வேண்டியதில்லை. இப்படிச் சுயமாகச் செய்யும் எந்தக் காரியங்களுமே வீணாகிவிடும். நமது சகல அக்கிரமங்களினின்றும் நம்மை மீட்டெடுத்து தமக்குரிய சொந்த ஜனங்களாக சுத்திகரிக்கும்படி தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த கிறிஸ்து இயேசுவிற்கு நம்மை ஒப்புக்கொடுத்து, சிலுவையிலே சிந்தப்பட்ட பரிசுத்த இரத்தத்தினாலான புதிய உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிவதே நாம் செய்யக்கூடிய புத்தியுள்ள செயலாகும். தேவனின் கற்பனைகளின்படி செய்கின்ற யாவருக்கும் நற்புத்தியுண்டு (சங்.11:10) என்கிறார் சங்கீதக்காரன். மற்றபடி கிறிஸ்துவில்லாத நற்கிரியைகளும், தானதர்மங்களும் தேவனுடைய ராஜ்ஜியத்திற்குள் நம்மை வழிநடத்தமுடியாது.
‘நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால்…’ (ஆதி.22:18) என வாசிக்கிறோம். ஆபிரகாம் செய்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அவர் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தார். தேவவாக்கை உள்ளபடி கேட்டு உடன்படிக்கையைக் கைக்கொண்டார், ஆசீர்வதிக்கப்பட்டார். அவருக்குள்ளாகவே சகலமும் ஆசீர்வதிக்கப்பட்டது. தேவபிள்ளையே, கிறிஸ்துவுக்காக பிரயாசப்படுகிறவர்களோடு சேர்ந்துகொள். அவரது வருகைக்கு தம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ளும் கூட்டத்திலே உன்னையும் சேர்த்துகொள். அவரது வசனங்களைக் கைக்கொள்வேன் என்று தீர்மானம் எடுத்துக்கொள். கர்த்தருக்குக் கீழ்ப்படிவேன் என்று கர்த்தருக்குள் உறுதிசெய்துகொண்டு வந்தவருக்கு மாத்திரமல்ல, நீதிபதியாய் வரப்போகிற வருக்கும் சாட்சியாய் வாழ உன்னை ஒப்புக்கொடு.
ஜெபம்: “நேச பிதாவே, உமக்கு மட்டுமே முற்றிலும் கீழ்ப்படிவேன் என்றும் உமது வசனங்களை உறுதியாகக் கடைப்பிடிப்பேன் என்றும் தீர்மானிக்கிறேன். அதில் இறுதிவரை உறுதியாய் நிலைத்திருக்கக் கிருபை தாரும். ஆமென்.”