ஜெபக்குறிப்பு: 2020 ஏப்ரல் 30 வியாழன்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார் (சங்.28:6) இம் மாதம் முழுவதும் கர்த்தர் நமக்கு காட்டின இரக்கங்களுக்காக, ஏறெடுத்த ஜெபங்களுக்கு கொடுத்த பதில்களுக்காக, எல்லா நன்மைகளுக்காகவும் ஆண்டவரைத் துதித்து ஸ்தோத்திரிப்போம்.
தேவகரத்தில்…
தியானம்: 2020 ஏப்ரல் 30 வியாழன் | வேத வாசிப்பு: சங்கீதம் 104:1-24
“கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது.” (சங். 104:24).
தேவன் உலகத்தை எந்த ஒழுங்கிலே படைத்தாரோ அந்த ஒழுங்கிலே, சங்கீதக்காரன் தியானம் பண்ணி இந்தச் சங்கீதத்தைப் பாடியுள்ளார். பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் தேவன் அதை ஸ்தாபித்தார் என்று எழுதப்பட்டுள்ளது. ஆம், உருண்டு கொண்டிருக்கும் இந்தப் பூமியை, அதைப் படைத்த தேவனைத் தவிர, அதன் நிலையிலிருந்து வேறு யாராலும் பெயர்த்துவிட முடியாது. இந்த பூமி ஒரு பந்துவடிவாக இருந்தாலும் அதன் நேர்கோடு சரிந்திருக்கின்றது என்ற உண்மை பலருக்குத் தெரியாது. இந்தப் பூமி 14 பாகை சரிந்த நிலையிலேயே உருண்டுகொண்டிருக்கிறது. இந்த தேவனின் ஞானத்தை மனுஷனால் அளவிடமுடியுமா? இந்த சங்கீதக்காரன் ரசித்து ருசித்து எழுதிய பல இயற்கைத் தோற்றங்கள் இன்றும் நமக்கு சாட்சியாக திகழ்கின்றன. ஜெர்மனி தேசத்தில் வளைந்து நெளிந்து ஓடும் மையின் நதியும், லண்டன் மாநகரை வலம்வரும் தேம்ஸ் நதியும் நம்மையும் பாடவைக்கும். நதியோரத்தில் செழித்து ஓங்கி வளர்ந்து நிற்கும் மரங்களும், நீரில் வலம்வரும் அன்னப் பறவைகளும், நம்மையும் கவிஞர்களாக்கும். அதற்கு, நாமும் தேவசமுகத்தில் உட்கார்ந்திருந்து, கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது என்று சொல்லி தியானம் பண்ணவேண்டுமே! அந்த நேரங்கள் தேவனோடுள்ள உறவை எவ்வளவாக பலப்படுத்தும் என்பதை நாம் சிந்திப்பதில்லை.
‘கர்த்தருடைய விருட்சங்களும், அவர் நாட்டின லீபனோனின் கேதுருக்களும் சாரத்தினால் நிறைந்திருக்கும்’ (வச.16). இங்கு “கர்த்தருடைய”, “கர்த்தர் நாட்டின” என்ற வார்த்தைகள் நம்மோடு இன்று பேசட்டும். கர்த்தர் நாட்டும்போது அது சாரத்தில் குன்றிப்போகாது. அது தரும் நிழலில் போலித்தன்மை இருக்காது. அதன் பலனும் மிகுதியாயிருக்கும். காடுகளுக்குள் நடந்து சென்றுள்ளீர்களா? எதுவும் கர்த்தருடைய கரத்தினுள் பத்திரமாக இருக்குமானால் அதிலே மாயை இராது. அதன் பாதுகாப்பு, வளர்ச்சி, பலம், தேவையான சகலமும் கர்த்தரிடத்திலிருந்து அதற்குக் கிடைக்கும். காற்று வீசும், சூறாவளி அடிக்கும். ஆனால் கர்த்தர் நாட்டிய மரத்தின் ஆணிவேரை எதுவுமே அசைக்க முடியாது.
நாம் தேவனால் நாட்டப்பட்டவர்களா? தேவ பாதுகாப்பிலா நாம் இருக்கிறோம்? இக்கேள்விகளுக்கான பதில் எதுவோ, அது நம்முடைய பல கேள்விகளுக்குப் பதிலாயிருக்கிறது. நாளை அழிந்துபோகும் லீபனோனின் கேதுருக்களையே தேவன் சாரத்தினால் நிறைத்துப் பாதுகாப்பாரானால், சாரம் கெட்டுப் போகாதவர்களாக நம்மை தேவன் பாதுகாப்பது அதிக நிச்சயமல்லவா!
கர்த்தருடைய மகிமை என்றென்றைக்கும் விளங்கும்; கர்த்தர் தம்முடைய கிரியைகளிலே மகிழுவார் (சங்.104:31).
ஜெபம்: “பிதாவே, நான் உம்மால் சாரமாக்கப்பட்டு உமது பாதுகாப்பிலே இருக்கிறவன் என்பது எவ்வளவு உற்சாகத்தைத் தருகிறது. இவ்வுலகத்தைப் பார்த்து நடுங்கி விடாதபடி கடைசிவரை அடியேனைக் காத்துக்கொள்ளும். ஆமென்.”
வாக்குத்தத்தம்: 2020 ஏப்ரல் 29 புதன்
உபத்திரவங்களிலேயும் மேன்மை பாராட்டுகிறோம். (ரோ.5:4)
1 சாமுவேல் 23 – 25 | லூக்கா 21:01-19
ஜெபக்குறிப்பு: 2020 ஏப்ரல் 29 புதன்
…நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் …அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே (எரேமி.29:11) பலவிதமான போராட்டங்களோடும், நெருக்கங்களோடும் விடுதலைபெற வழிதெரியாது திகைத்துப் போய் ஜெபத்தேவைகளோடிருக்கிற ஒவ்வொருவருக்கும் கர்த்தர் வழிவாசல்களை ஏற்படுத்தி தேவைகளைச் சந்திக்க மன்றாடுவோம்.
இவர் யார்?
தியானம்: 2020 ஏப்ரல் 29 புதன் | வேத வாசிப்பு: ஏசாயா 40:12-17
“தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய்ப் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி …. நிறுத்தவர் யார்?” (ஏசா.40:12).
விஞ்ஞான கண்காட்சி ஒன்றிலே, ஆச்சரியமான ஒரு படைப்பு முன்பாக மக்கள் குழுமி நின்றனர். ஏனென்றால், அதற்குரியவன் அங்கிருக்கவில்லை. மற்ற மாணவருக்கோ அதைக்குறித்த விளக்கம் கொடுக்கத் தெரியவில்லை. ஒரு சாதாரண மாணவன் உருவாக்கிய சாதாரண ஆக்கத்தைப் பற்றி அவன்தான் அறிவான் என்றால், வானங்களையும் பூமியையும் படைத்த தேவாதி தேவனை ஆராய்ந்து அறியத்தக்கவன் யார்?
“உருண்டை வடிவான பூமியின் விட்டம் என்ன? இந்த அழகான பூமியைச் சுற்றிவர எவ்வளவு காலம் எடுக்கும்? சூரியனைத் தனக்கு மையமாகக் கொண்டு சுற்றிவரும் பூமிக்கும், சூரியனுக்கும் உள்ள இடைத்தூரம் என்ன? பூமியின் தரைப்பகுதியின் பரப்பளவு என்ன? சமுத்திரத்தின் ஆழம் என்ன? அதின் தண்ணீரின் கன அளவுதான் என்ன?” உண்மையில் இது விஞ்ஞான பாடம் அல்ல. ஆனால், விஞ்ஞானிகளாலும் நுணுக்கமாகவும் சரியாகவும் கணக்கிட முடியாத இந்தக் கணக்குகளை யார் விடுவிப்பார்?
தேவன் மனிதனானார்; அவர் தம்மைச் சிலுவை பரியந்தம் தாழ்த்தினார்; இவை நமது மனப்பாடம். பாரம்பரியமாக இந்த நாட்களில் சிலுவை பாடுகளை தியானிக்கிறோம். இந்நேரத்தில் மனிதனாக வந்த தேவனுடைய மகத்து வத்தை குறித்து எவ்வளவுதூரம் சிந்திக்கிறோம்? அவரை எவ்வளவுக்குக் கனப்படுத்துகிறோம்? அவர், தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளப்பாராம்; வானங்களை ஜாணளவாய் அளப்பாராம்; பூமியின் மணலை மரக்காலில் அடக்குவாராம்; பர்வதங்களை துலாக்கோலினாலும், மலைகளைத் தராசிலும் போட்டு நிறுப்பாராம். இதை அவரே சொல்லியுள்ளார். “இது நம்பக்கூடிய காரியமா?” முகத்தைச் சுளித்தார் ஒருவர். அதற்கு அவரது பேரன், “தாத்தா, நமது தலை மயிரெல்லாம் இயேசப்பா எண்ணி வைத்திருக்கிறாராம். ஞாயிறு பள்ளி டீச்சர் சொன்னாங்க. உங்க தலை மொட்டை. என் தலையிலுள்ள மயிரை எண்ணிச் சொல்லுவீங்களா” என்று கேட்டானாம். இந்த தேவாதி தேவனுடன் நாம் அன்றாடம் போர் செய்கிறோமே, எப்படி? அவரைக்குறித்து மலிவான எடை போட்டு, நமது ஜெபங்களில் அவருக்கே போதனை செய்கிறோமே, எப்படி? சிந்தித்து மனந்திரும்புவோம்.
“நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி. அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல் போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு” (யோபு 38:4,5).
ஜெபம்: மகத்துவமுள்ள தேவனே, நீர் வானத்தையும் பூமியையும் அண்டசராசரத்தையும் படைத்தவர், ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களை நீர் செய்கிறவர், உம்மிடத்தில் என்னை அர்ப்பணிக்கிறேன். ஆமென்.