ஜெபக்குறிப்பு: 2020 ஏப்ரல் 23 வியாழன்
தமிழகத்தின் தலைநகர் சென்னை பட்டணத்திலுள்ள பல்வேறு துறையிலுமுள்ள மக்களுக்கு சுவிசேஷத்தை அறிவிப்பதற்கும், அங்குள்ள அனைத்து சபை ஊழியங்களையும் கர்த்தர் ஆசீர்வதிப்பதற்கும், தமிழக முதல்வர் மற்றும் அமைச்சரவை, தொழிலதிபர்கள் போன்ற அனைத்து காரியங்களுக்காகவும் மன்றாடுவோம்.
சந்திக்க ஆயத்தமா?
தியானம்: 2020 ஏப்ரல் 23 வியாழன் | வேத வாசிப்பு: எபேசியர் 2:4-9
“கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்” (எபே. 2:8).
வேதப்படிப்புக்கு வந்திருந்த சில வாலிபரிடம் “இன்னும் சிலமணி நேரங்களில் கிறிஸ்து வரப்போகிறார் என்று அறிவித்தல் கிடைத்தால், அந்த சொற்ப நேரத்தில் என்ன செய்வீர்கள்” என்று கேட்டபோது, “என் பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்புக் கேட்பேன்”, “நான் சிலருடன் ஒப்புரவாகுவேன்”, “ஆலயத்திற்குச் சென்று ஜெபிப்பேன்” என்று பல பதில்கள் எழுந்தன. ஒருவன்மட்டும், “நான் என் ஆண்டவரைச் சந்திக்க ஆயத்தமாய் இருப்பதால், சந்தோஷமடைவேன்” என்றான்.
சமீபத்தில் ‘இது உலகத்தின் கடைசி நாட்களா’ என்று கேள்வியுடன் சமுத்திரத்தில் காணப்பட்ட சில மாற்றங்கள் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இப்படி இன்னும் நிகழும். உலகம் முடியும் என்று உலகம் நம்பினாலும், வரப்போகும் கிறிஸ்துவைச் சந்திக்க ஆயத்தமா என்பதே கேள்வி. பதிலுக்கு நாம், ‘ஆம்’ என்போம்; ஆனால், அது உண்மையா என்பது அடுத்த கேள்வி.
முதலாவது, நமது வாழ்வின் ஆவிக்குரிய அஸ்திபாரத்தைச் சரிபார்க்க வேண்டும். அஸ்திபாரம் உறுதியில்லாத கட்டடம் சிறு காற்றுக்குக்கூட நிலைக்காது என்றால், வாழ்வின் அஸ்திபாரமாகிய தேவனுடைய வார்த்தையை அசட்டை செய்தால் என்னவாகும்?
அடுத்தது, நமது கிரியைகள். சன்மார்க்க வாழ்க்கை, ஊழியப்பணி, காணிக்கை, சபையில் பங்களிப்பு, தான தருமங்கள் இவைகளை வைத்துக்கொண்டு, ‘நான் ஆயத்தம்’ என்று திருப்திப்படுவது, நம்மைநாமே ஏமாற்றுவது போலாகும். ஏனெனில், நமக்குள் நற்கிரியையைத் தொடக்குகிறவரே ஆண்டவர்தான். இதிலென்ன வீண்பெருமை. ஆகவே, செய்கின்ற காரியங்கள் அல்ல; அவற்றை எந்த நோக்குடன் செய்கிறோம் என்பதை காரியம்.
அடுத்தது, தேவனோடுள்ள உறவு. சிறு வேதவாசிப்பு, சிறிய ஜெபம், ஆலய ஆராதனை, ஆண்டவருடனான சரியான உறவுக்கு இவை சாட்சி அல்ல. உறவு என்பது ஆண்டவருடன் நாம் கொண்டிருக்கும் நெருக்கம். அவருடைய பாதத்தில் காத்திருக்கும் அன்பின் செயல், தேவ ஆலோசனையின்றி ஒரு அடியேனும் எடுத்துவைக்காத உறுதி, தேவசித்தத்தைத்தவிர வேறெதற்கும் வாழ்வில் இடமளிக்காத வைராக்கியம் … இன்னும் அதிகம் சொல்லலாம்.
நம்மில் யாரும் தேவ சந்நிதானத்தில் காணப்படாமற்போகாதபடிக்கு ஆண்டவர் நம் அனைவரையும் தம்முடன் சேர்த்தருளும்படி நம்மை அவர் கரத்தில் கொடுப்போம்.
“மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்” (வெளி.22:20).
ஜெபம்: அன்பின் தேவனே, நான் கிறிஸ்தவன் என்றாலும், என் வாழ்வின் அஸ்திபாரத்தைச் சரிசெய்யவும் உம்மோடுள்ள உறவிலே பெலப்படவும் எனக்கு கிருபை தாரும். ஆமென்.