ஜெபக்குறிப்பு: 2020 ஏப்ரல் 14 செவ்வாய்

நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா.45:2) என்ற வாக்குப்படியே திருமணத்திற்கு காத்திருக்கும் பங்காளர் குடும்பத்தின் பிள்ளைகளுக்கு கர்த்தர்தாமே ஆயத்தப்படுத்தின ஏற்ற வாழ்க்கைத் துணைகளைக் காண்பித்து அவர்களை குடும்பமாக ஆசீர்வதிக்க ஜெபம் செய்வோம்.

வெள்ளைச் சிங்காசனம்

தியானம்: 2020 ஏப்ரல் 14 செவ்வாய் | வேத வாசிப்பு: வெளி 20:11-15

“…பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; …மரித்தோர் தங்கள் .. கிரியைகளுக் குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்” (வெளி.20:11,12).

வெள்ளைச் சிங்காசனத்தைக்குறித்து யோவான் கண்ட தரிசனம் இறுதி நியாயத் தீர்ப்பு பற்றியது. மரித்தோர் அனைவரும் தேவனுக்கு முன்பாக நிற்கிறார்கள். அங்கே ஒரு புஸ்தகம் திறக்கப்படுகிறது. அதுதான், ‘ஜீவ புஸ்தகம்’. அதில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைகிறார்கள். இப்புஸ்தகத்திலே பெயர் எழுதப்படாதவர்களோ அக்கினிக்கடலிலே தள்ளப்படுகிறார்கள். இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்றுதானே, இயேசு மனிதனின் பாவங்களுக்காக மரித்து, உயிர்த்து, உயிர்த்தெழுதலின் நிச்சயத்தைத் தந்திருக்கிறார்.

ஆம், நித்திய ஆக்கினை என்ற நிலைமை எந்த மனுஷனுக்கும் வரக்கூடாது. ஆகவே, கிருபையாய் நமக்கு அருளப்பட்ட இந்த வாழ்நாட்களைப் பயனுள்ளதாக வாழுவோமாக. “அவரை (கிறிஸ்துவை) விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று” (யோவா.3:18). அதாவது, நற்செய்தியைக் கேட்டும் உள்ளத்தைக் கடினப்படுத்தி சுய இச்சையிலும், வேசித்தனத்திலும், குடிவெறியிலும் வாழுகிறவன், என்றும் தன்னைத்தானே நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்திவிடுகிறான். நம்மில் அநேகர், பணம், சொத்து, அந்தஸ்து, தானதருமங்கள், கல்வி அறிவு என்று இவற்றால் நமது வாழ்வைக்குறித்த பயத்தை மூடிப்போட வகைபார்க்கிறோம். சில சமயம் தற்காலிகமாக அவை நமது பயத்தைப் போக்கலாம். ஆனால், நாம் உண்மையாகவே பயப்படவேண்டிய பயம் ஒன்றுண்டு; அதுவே நியாயத்தீர்ப்பில் நித்தியமாய் தள்ளிவிடப்படுதல். அதிலிருந்து நம்மைக் காப்பாற்ற தேவனால் மாத்திரமே முடியும். நம்மால் நம்மை இரட்சிக்கவும் முடியாது; காப்பாற்றவும் முடியாது என்று உணரும்போதுதான் நாம் தேவனை நம்புகிறோம்.

அன்பானவர்களே, நாம் தேவனுடைய பிள்ளைகள் என்பது மெய்யென்றால், உலகத்தின் முடிவுக்கோ நியாயத்தீர்ப்புக்கோ பயப்பட வேண்டியதில்லை. ஏனெனில், நாம் எப்பொழுது ஆண்டவரிடம் திரும்பினோமோ, அப்பொழுதே நமது பாவங்கள் யாவும் மன்னிக்கப்பட்டுவிட்டன. ஆனால், பிறரைக்குறித்த பொறுப்பை ஆண்டவர் நம்மிடமே தந்துள்ளார். ஆகவே, எல்லோரும் சத்தியத்தை அறிய வேண்டி மனமார ஒன்று சேர்ந்து உழைப்போமாக.

“தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.” (யாக்கோபு 5:20).

ஜெபம்: இரட்சிப்பின் தேவனே, நீர் அருளிய பாவ மன்னிப்பையும் இரட்சிப்பையும் பெற்ற நான் எப்படியாவது பிறரையும் இயேசுவண்டை வழிநடத்த கிருபை தாரும். ஆமென்.