ஜெபக்குறிப்பு: 2021 ஜனவரி 31 ஞாயிறு

அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், ராஜாதிராஜாவும், கர்த்தாதி கர்த்தாவுமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென் (1தீமோ.6:15,16). இம்மாதம் முழுவதும் நம்மை போஷித்து காப்பாற்றி வந்த தேவாதி தேவனை அவருடைய சந்நிதிதானத்தில் ஆராதித்து உயர்த்தி மகிமைப்படுத்திடுவோம்.

எதுவரினும் முன்செல்வேன்!

தியானம்: 2021 ஜனவரி 31 ஞாயிறு | வேத வாசிப்பு: பிலி.3:4-14

கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன் (பிலி. 3:13-14).

“எதுவரினும் முன்செல்லுவேன்” என்று ஒருவன் சொன்னால், அவன் ஒரு இலக்கோடு வாழுகிறவனாகவே இருப்பான். எந்த நிலையிலும் அவன் தன் இலக்கை விட்டுவிடாமல் முன்செல்லுவான். பவுலுடைய வாழ்வு இதற்கு ஒரு சிறந்த மாதிரி. அவர் கூறுகிறார்: “ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (பிலி.3:13-14).

இப்படியான ஓட்டத்தை பவுல் எப்படி நிறைவு செய்தார்? முதலாவது, பவுலின் வாழ்க்கை பாதை இலகுவானதாக அமையவில்லை. “நான் அதிகமாய் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன். யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன். மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒரு தரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற் சேதத்திலிருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன்” என்று எழுதுகிறார் பவுல். மட்டுமல்ல, அவர் அநேகந்தரம் பிரயாணம் பண்ணினார். ஆறுகள், கள்ளர்கள், சொந்த ஜனங்கள், பட்டணங்கள், வனாந்தரங்கள், சமுத்திரங்கள் என்பவற்றால் வந்த மோசங்களில் அகப்பட்டார். அதிகம் வருத்தப்பட்டார். பசியிலும், கண் விழிப்புகளிலும், குளிரிலும் இருந்தார். தாகமாய் இருந்தார். இவற்றோடு, ஆத்தும பாரமும், சபைகளைக் குறித்த பாரமும் அதிகம் கொண்டவராய் இருந்தார் (2கொரி.11:23-28). மட்டுமல்ல, இறுதியில் சிறையிலும் அடைக்கப்பட்டார். இரண்டாவதாக, இத்தனை துயரும் வேதனையும் நிறைந்த வாழ்க்கைப் பயணத்தை ஓடி முடிக்க பவுலினால் எப்படி முடிந்தது? ஒன்று, அவர் தன் வாழ்க்கையின் பின்னானவைகளை மறந்து தன் குறிக்கோளை முன்வைத்து அதையே நோக்கி முன்சென்றார். அடுத்தது, தான் பெற்ற இரட்சிப்பிலும், அர்ப்பணிப்பிலுமிருந்து சிறிதும் விலகாமல் விசுவாசம், நம்பிக்கை, மனத்தைரியத்தோடு முன் சென்றார்.

அன்பானவர்களே, நாமும் இயேசுவை உறுதியாகப் பற்றிக்கொண்டு, உறுதியோடு முன்செல்லுவோம். இயேசு நம்மோடு கூடவே இருந்து, இறுதிவரை நடத்திச்செல்லுவார். ஆகையால், பவுலைப்போல, “எதுவரினும் முன்செல்லுவேன்” என்று உறுதியோடு முன்செல்வோமாக.

“பாரமாகத் தோன்றுகிற யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்குகிற பாவ பாரத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தை பொறுமையோடே ஓடக்கடவோம்” (எபி.12:1).

ஜெபம்: நம்பிக்கையின் தேவனே, பின்னோக்கிப் பாராமல், முன்னோக்கிப் பார்த்து இயேசுவையே நோக்கி ஓட்டத்தை ஓட என்னை உமது பாதத்தில் அர்ப்பணிக்கிறேன். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2021 ஜனவரி 30 சனி

சத்தியவசன முன்னேற்றப் பணியாளர்கள் சகோ.அருண்மோசஸ், சகோ.ராஜாசிங், சகோ.சைலஸ் இவர்களது முன்னேற்றப்பணி ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், அவர்களது பிரயாணங்கள் மற்றும் அவர்களது குடும்பத்தின் தேவைகள் சந்திக்கப்பட யாவருடைய நல்ல சுகம் ஆரோக்கியம் ஆகிய காரியங்களுக்காக ஜெபிப்போம்.

முன்னானவைகளை நோக்கி…

தியானம்: 2021 ஜனவரி 30 சனி | வேத வாசிப்பு: பிலிப்பியர் 3:10-14

…கிறிஸ்து இயேசுவினால்; நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன் (பிலிப்பியர் 3:12).

பவுல், தன் வாழ்வில் ஓர் இலக்கு உடையவராகவே காணப்பட்டார். கிறிஸ்துவைச் சந்திக்கும் முன்னர், தான் வளர்க்கப்பட்ட கடைப்பிடித்த யூத மதக் கொள்கையில் மிகுந்த வைராக்கியம் கொண்டவராக இருந்தார். கிறிஸ்துவைச் சந்தித்த பின்னர், பவுலின் சிந்தை, சொல், செயல் அனைத்தும் கிறிஸ்துவின் சித்தத்தையும் அழைப்பையும் நோக்கியதாய் அமைந்திருந்தது. இதற்காக அவர் தன் வாழ்வில் பல பாடுகளையும் துயரங்களையும் கடக்க வேண்டியதாயிருந்தது. இப்பாடுகள் தான் எதற்காகப் பிடிக்கப்பட்டாரோ, அந்த இலக்கை நோக்கி ஓடும் தனது ஓட்டத்தைத் தடைசெய்ய பவுல் ஒருபோதும் இடமளிக்கவேயில்லை. இது எப்படி ஆனது? “பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (பிலி.3:13-14). பவுலுடைய வெற்றியின் இரகசியம் இதுதான்.

பவுலின் முன்னான வாழ்க்கை மத வைராக்கியம் நிறைந்ததாக இருந்தது. இதனால், கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தினார். முதலாவது இரத்த சாட்சியாக மரித்த ஸ்தேவானின் மரணத்திலும் பங்குபெற்றவர் இவர். பின்னர், இவற்றைச் சிந்திக்கும்போது பவுலின் மனதிலே இவை குற்ற உணர்வையும், அவமானத்தையும் ஏற்படுத்தியிராது என்று சொல்லுவதற்கில்லை. ஆனால், இந்தச் சோர்வுக்கு பவுல் இடமளிக்காமல், கிறிஸ்து தன்னுடன் இருப்பதால், அவரது அழைப்பின் உறுதி இருப்பதால், முந்தியவற்றை நினைத்திருப்பதைவிட, தான் துன்பப்படுத்திய கிறிஸ்துவுக்காக முன்செல்ல பவுல் தீர்மானித்தார். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு உள்ள கடந்தகால நினைவுகள், கிறிஸ்துவின் மன்னிப்பைப் பெற்றுக்கொண்ட பின்னர் தன்னுடைய உண்மையான ஓட்டத்தைத் தடை செய்யாதபடி பவுல் உறுதியாயிருந்தார். இறுதியில் மரணத்தால்கூட அவரது இலக்கிலிருந்து பவுலைத் திசைதிருப்ப முடியாமற்போனது.

தேவபிள்ளையே! இன்று கிறிஸ்துவையே இலக்காகக் கொண்ட நமது வாழ்க்கை ஓட்டத்தில் நமக்கு இடையூறாக இருப்பது எது? கிறிஸ்துவைச் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் முன்னான பாவங்கள் இன்னமும் நம்மைச் சோர்வுறச் செய்கிறதா? நாம் விட்டுவந்த உலக வாழ்வின் சந்தோஷங்கள் எதுவாயினும், அவற்றில் இருந்து விடுபட்டு கிறிஸ்துவுக்குள்ளான இலக்கை நோக்கி முன்செல்ல, கிறிஸ்துவை இறுகப் பற்றிக்கொள்வோமாக.

பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம் (1கொரி-9:25).

ஜெபம்: பிதாவே, என் மனதிலுள்ள பாரங்களை முற்றிலும் இறக்கிவிட்டு, உம்மை நோக்கி இலக்கை நோக்கி உறுதியோடு ஓட என்னைப் பெலப்படுத்தியருளும். ஆமென்.