ஜெபக்குறிப்பு: 2021 பிப்ரவரி 20 சனி

…மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவன் (ரோம.4:17) தாமே குழந்தைப் பாக்கியத்திற்காய் ஜெபிக்கக்கேட்ட நபர்களுக்கு மனமிரங்கி அற்புதங்களைச் செய்யவும், களிப்பின் சத்தமும், மகிழ்ச்சியின் சத்தமும் குடும்பங்களுக்குள் உண்டாயிருக்க வேண்டுதல் செய்வோம்.

சுயம் சாகட்டும்!

தியானம்: 2021 பிப்ரவரி 20 சனி | வேத வாசிப்பு: யோவான் 21:1-11

அவர் கர்த்தர் என்று சீமோன் பேதுரு கேட்டவுடனே, … தன் மேற்சட்டையைக் கட்டிக்கொண்டு கடலிலே குதித்தான் (யோவா. 21:7).

இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்று இயேசு சொன்னவுடனே பேதுரு மனுஷரைப் பிடிக்கிறவர் ஆனாரா? அவரது முதல் பரீட்சையிலே வெற்றிபெற்றதால் முழுத் தகுதியையும் பெற்றுவிட்டிருந்தாரா? இல்லை. தேவன் பேதுருவை எதற்காகத் தெரிந்துவைத்திருந்தாரோ அதற்கு தகுதியாகும்வரை பேதுரு பரீட்சைக்கு முகங்கொடுக்க நேர்ந்தது. எல்லாவற்றையும்விட்டு ஆண்ட வரைப் பின்பற்றிய பேதுரு, ஆண்டவரால் கடிந்துகொள்ளப்பட்டார், முன் எச்சரிக்கை கொடுத்திருந்தும் மறுதலித்தார்; இயேசுவைப் பிடித்தபோதும் விட்டுவிட்டு ஓடிவிட்டார். மாத்திரமல்ல, இயேசுவின் உயிர்த்தெழுந்ததைக் குறித்து பெண்கள் அறிவித்தபோது விசுவாசித்தினாலா பார்க்க ஓடிப்போனார்? அதுமாத்திரமா, தன் பழைய மீன் பிடிக்கும் வாழ்க்கைக்கு மற்றவர்களையும் சேர்த்துக் கொண்டு புறப்பட்டுவிட்டார். ஆண்டவர் முதன்முதலில் எப்படி எந்த சூழலில் பேதுருவை சந்தித்தாரோ அதேவிதமாகவே இன்னுமொருதரம் பேதுருவைச் சந்தித்தார். இப்போதும் அவர்களுக்கு இராத்திரியிலே ஒரு மீனும் அகப்படவில்லை. படகுக்கு வலது புறம் வலையைப்போடும்படி ஆண்டவர் சொல்ல, அவர்கள் போட, திரளான மீன்கள் பிடிபட… யாவும் ஒரே மாதிரியான சம்பவம் அல்லவா! இம்முறையும் இவர் கர்த்தர் என்று உணர்த்தப்பட்டபோது தனது அபாத்திர நிலையை உணர்ந்து கடலிலே குதித்தார் பேதுரு. இப்போது, இந்தப் பேதுருவிடமேதான், யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்று மூன்று தரம் கேட்டு தம் ஆடுகளை மேய்க்கும் உன்னத பணியை ஆண்டவர் கொடுத்தார். ஆம், பேதுரு ஆண்டவரால் அங்கீகரிக்கப்பட்டார்.

பரீட்சை பார்க்கப்படாத எதுவுமே அங்கீகரிக்கப்பட முடியாது. பரீட்சிக்கப்பட்டு பொன்னாய் விளங்கும்போது அதை எதுவும் அசைக்கமுடியாது. ஆகவேதான் பேதுரு, இறுதியிலே ஆண்டவர் மரித்த மாதிரி அல்லாமல், அதிலும் அதிகமாக தன்னை சிலுவையிலே தலைகீழாக அறையும்படி கேட்டுக்கொண்டாரோ! மொத்தத்தில் பேதுரு என்ற சுயம் இந்த இரண்டாம் தடவை முற்றிலுமாகச் செத்தது. அந்த இடத்திலே அவர் பரீட்சையிலே முழு வெற்றி பெற்றவராக ஆண்டவரின் பணியை முன்னெடுத்துச் செல்ல தயாரானார்.

பிரியமானவர்களே, நமது வெளிப்படையான வாழ்விலே நாம் பெயர் பெற்றவராயிருக்கலாம். ஆனால் சோதிக்கப்பட்டு பரீட்சையில் தேறாத, தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையைச் சுமக்காதவனுடைய ஆத்துமாவில் ஆண்டவர் பிரியமாயிரார். என் விஷயம் என்ன? என் சுயம் செத்துவிட்டதா? தேவன் என்னில் பிரியமாயிருக்கிறாரா? நான் சோதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளேனா?

..பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் (யோவா.21:17).

ஜெபம்: எங்களை பெலப்படுத்துகிற ஆண்டவரே, சுயம் எங்களில் முழுவதும் சாம்பலாகட்டும். தூய ஆவியானவரே உமது வல்லமையால் எங்களை நிரப்பும். ஆமென்.