ஜெபக்குறிப்பு: 2021 மார்ச் 31 புதன்
பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு (லூக்.8:50) என்று ஜெப ஆலயத் தலைவனைத் திடப்படுத்திய தேவன்தாமே இம்மாதம் முழுவதும் நம்மைத் திடப்படுத்தி, எல்லாப் பயங்களுக்கும் நீங்கலாக்கி இரட்சித்து நமது தேவைகளையெல்லாம் சந்தித்து வழிநடத்தி வந்த கிருபைகளுக்காக ஆண்டவரைத் துதிப்போம்.
பரிசுத்தர் பாவியாக்கப்பட்டார்!
தியானம்: 2021 மார்ச் 31 புதன் | வேத வாசிப்பு: மத்தேயு 27:38-50
எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார் (எபி.4:15).
ஆதியிலே சகலவற்றையும் சிருஷ்டித்த தேவன், மனிதனை தமது சாயலாகவே சிருஷ்டித்தார். தமது ஜீவ சுவாசத்தையும் அவனுக்குள்ளே ஊதி அனுதினமும் தம்மோடு உறவாடவென்றே அவனைச் சிருஷ்டித்தார். ஆனால் கீழ்ப்படியாமையினாலே மனிதனோ பாவத்தில் விழுந்தான். அப்படியாக பாவத்தில் விழுந்த மனிதனைக் குறித்து பின்பு சிந்திப்போமென, தேவன் விட்டுவிடவில்லை. உடனடியாகவே அந்த நேரத்தில்தானே மனிதனின் மீட்பைக் குறித்தும் தேவன் வாக்களித்தார் (ஆதி.3:15). அதன்படி, பாவத்தில் அழிந்துபோகும் மனிதனை மீட்கும்பொருட்டு தனது சொந்தக் குமாரனையே உலகிற்கு அனுப்பி அவரை ஏகபலியாக சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.
ஆண்டவராகிய இயேசு, இப்பாவ உலகில் வாழ்ந்தபோதும், பாவம் அற்றவராகவே ஜீவித்தார். பாவமில்லாத அவர் நமக்காகப் பாவமாக்கப்பட்டார். பரிசுத்தராகிய அவர் நமக்காக ஒரு பாவிபோல, பாவிகளோடே சிலுவையில் தொங்கினார். கெத்சமனே தோட்டத்தில் “பிதாவே இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக் கூடுமானால் நீங்கட்டும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என்று ஜெபித்தார். ஆனாலும், அக்கிரமம் செய்யாத அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்படும்படிக்கு பிதா அவரை ஒப்புக்கொடுத்தார். அப்படியே இரண்டு கள்வர்கள் மத்தியில் ஒரு கள்வனைப்போல் இயேசு சிலுவையில் தொங்கினார். களவு செய்தது நான். கள்வரைப்போல தொங்கியது இயேசு. பெருமை பிடித்துப்பேசுவது நான். ஆனால் சிறுமைப்படுத்தப்பட்டது இயேசு. தேவனுடைய ஆலயத்தை அசுத்தப்படுத்துவது நான். ஆனால் தேவதூஷணம் சொன்னார் என்று குற்றப்படுத்தப்பட்டது இயேசு.
அன்பானவர்களே, இந்தப் பாடுகள் எல்லாம் எதற்காக? யாருக்காக? கொடிய பாவிகளாகிய நம்மை மீட்பதற்காகவே. இதை உணர்ந்து வாழ்கிறோமா? நமக்காக தமது உயிரையே கொடுத்த ஆண்டவருக்காக நாம் எதைக் கொடுக்கப்போகிறோம்? எனக்காகவும் உங்களுக்காகவும் பரிசுத்தராகிய அவர் பாவியாக்கப்பட்டார் என்பதை நினைந்து, உணர்ந்து, அவருக்காய் நம் வாழ்வை அர்ப்பணிப்போமாக.
மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் (ஏசா.53:4-5).
ஜெபம்: இதயக் கதவைத் திறந்தேனே, என்னுள்ளத்தில் வாரும் இயேசு சுவாமி, பெலவீனம் யாவையும் போக்கி காத்துக்கொள்ளும் தேவா. என் சிலுவையை எடுத்துக்கொண்டு உம்மைப் பின்பற்ற, உதவி செய்யும் ஆண்டவரே. ஆமென்.
வாக்குத்தத்தம்: 2021 மார்ச் 30 செவ்வாய்
நீங்கள் … சோதனைக்குட்படாதபடிக்கு எழுந்திருந்து ஜெபம் பண்ணுங்கள் என்றார் (லூக்.22:46).
யோசுவா 10,11 ; லூக்கா 6:20-49
ஜெபக்குறிப்பு: 2021 மார்ச் 30 செவ்வாய்
நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது (யாக். 5:16) சத்தியவசன ஊழியத்திலிருந்து செய்யப்படும் ஜெப ஊழியங்களையும் ஆலோசனை கடித ஊழியங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்து, இவ் வூழியங்களினாலே அநேகர் விசுவாச வாழ்க்கையில் ஸ்திரப்படுவதற்கு வேண்டுதல் செய்வோம்.
அழைப்பிற்கு உண்மையாயிரு!
தியானம்: 2021 மார்ச் 30 செவ்வாய் | வேத வாசிப்பு: பிலி.3:7-14
கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். (பிலி.3:14).
ஓட்டப் பந்தயத்தில் ஓடுகிறவன் திரும்பிப் பார்க்காமல் ஓடினால்தான் அவனால் வெற்றி பெறமுடியும்; தனது இலக்கையும் சரியாகச் சென்றடைய முடியும். அத்தோடு பந்தயப் பொருளையும் பெற்றுக்கொள்ள முடியும். திரும்பிப் பார்ப்பது அவனது ஓட்டத்தைத் தாமதமடையச் செய்யும், அவனது கவனத்தைத் திசை திருப்பும். அதேவேளை தான் ஓடும்போது மற்றவனும் ஓடுகிறானா என்று பார்ப்பவன் தன் ஓட்டத்தின் நிதானத்தை இழந்துவிடுவான்.
பவுல் யூத மத வைராக்கியம் உள்ளவராய், தான் செய்வது எல்லாமே சரி என்ற எண்ணத்தில் கிறிஸ்தவர்களைத் துன்பப்படுத்தி வந்தார். ஆனால் அவர் இயேசுவால் தொடப்பட்டபோது, தனது அழைப்பை உணர்ந்தவராக அந்த அழைப்புக்கு உண்மையாயிருக்கும் பொருட்டு தன் இலக்கை நோக்கித் தொடர்ந்ததையும், இறுதிவரை கிறிஸ்துவுக்காய் வாழ்ந்ததையும் நாம் காண்கிறோம். பவுல், பிலிப்பியருக்கு இந்த நிருபத்தை எழுதியபோது அவர் கிறிஸ்துவினிமித்தம் கட்டப்பட்டவராய் சிறை வைக்கப்பட்டிருந்தார். ஆனாலும் அவர் தன் கட்டுகளைக்குறித்து கவலைகொள்ளாமல், அவருக்காய் எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன் குப்பையுமாக எண்ணுகிறேன் என்கிறார். நான் தேறினவன் கிடையாது. அவருக்காக அழைத்த அழைப்புக்கு உண்மையுள்ளவனாய் இலக்கை நோக்கித் தொடருகிறேன் என்கிறார்.
பிரியமானவர்களே, நாம் எந்த நோக்கில் சென்று கொண்டிருக்கிறோம். தேவன் நம்மை அழைத்ததன் நோக்கத்தை நாம் அறிந்தவர்களாக வாழுகிறோமா? அல்லது, நமது மனம்போன போக்கில் வாழுகிறோமா? அல்லது, இந்த நாற்பது நாட்கள்தான் நம்மில் ஏதோவொரு மாற்றத்தைக் கொண்டுவரும் நாட்கள் என்று எண்ணி, இந்த நாட்களில் மாத்திரம் பக்தியாய் வாழ்ந்துவிட்டு பின்னர் மீண்டும் நமது விருப்பப்படி சாதாரண வாழ்க்கைக்குள் போக எத்தனிப்போமா? சிந்திப்போம். நமது கிறிஸ்தவ வாழ்வானது இன்றோடு முடிவடைந்துபோகிற வாழ்வல்ல; அது நாம் தேவனோடு வாழுகிறதான ஒரு வாழ்வாகும். நாம் மரித்த பின்பும் நித்திய நித்தியமாக அவரோடு என்றென்றும் வாழுகின்ற ஒரு உன்னதமான உறவு அது. இந்த உறவைப் பேணிக்கொள்ள நாம் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும். நமது வாழ்வுக்காக ஆண்டவர் வைத்திருக்கின்ற நோக்கத்தை அறிந்து, கடினமோ இலகுவோ அதில் நடக்க நம்மைத் தருவோமாக.
ஆதலால், கர்த்தர் நிமித்தம் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து (எபே. 4:1).
ஜெபம்: எங்களை அழைத்தவரே, நீர் எங்களை அழைத்த அழைப்பிலே உண்மையுள்ளவர்களாக பாத்திரவான்களாக முடிவு பரியந்தம் நிலைத்திருக்க உமதருள் தாரும். ஆமென்.