ஜெபக்குறிப்பு: 2021 ஏப்ரல் 30 வெள்ளி
என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக (சங்.66:20) இம்மாதம் முழுவதும் கர்த்தர் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் ஸ்தோத்திர பலிகளைச் செலுத்தி, நமக்கு நியமிக்கப்பட்ட ஓட்டத்தில் அவரையே நோக்கி பொறுமையோடு ஓட தேவ கிருபைக்காய் வேண்டி ஜெபிப்போம்.
மாற்றத்தின் தோற்றங்கள்
தியானம்: 2021 ஏப்ரல் 30 வெள்ளி | வேத வாசிப்பு: லூக்கா 19: 1-10
நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள் (யாக்.1:22).
இரட்சிப்பைக் குறித்து இன்று பலர் பலவிதமான கருத்துக்களைக் கூறுகிறார்கள். இரட்சிப்பு என்பது நேராக பரலோகம் கொண்டுபோய் சேர்க்கும் பஸ் டிக்கட் போன்றது என பலர் சொல்வதுண்டு. இரட்சிக்கப்பட்டுவிட்டால் இவற்றைச் செய்யலாம், இவற்றைச் செய்யக்கூடாது என்று தமக்குதாமே ஒரு பட்டியலைப் போட்டுக்கொண்டு அதன்படி நடந்தால் போதும் என்று எண்ணுவோரும் உண்டு. தாம் செய்யாததை இன்னுமொருவர் செய்வதைக் கண்டுவிட்டால் அவர்கள் பாவிகள், தான் பரிசுத்தவான் என்ற எண்ணமும் சிலருக்குத் தோன்றும். இவைகள்தான் இரட்சிப்பினால் உண்டாகும் மாற்றங்களா?
சகேயுவின் மனமாற்றத்தைப் பாருங்கள். எல்லோராலும் வெறுக்கப்பட்டவனாய், ஒரு பாவியாக இருந்த அவன் இயேசுவைக் காண விரும்பினான். ஆனால் இயேசுவோ அவன் வீட்டிற்கே சென்றார். அங்கே சென்ற ஆண்டவர் அவனது வாழ்வைக் குறித்து அப்படி செய் இப்படிச் செய் என்று எதுவும் கூறவில்லை. ஆனால் சகேயுவோ, “ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன்” என்று தானாகவே கூறினான். இயேசுவோடு உறவு ஏற்பட்டதும் சகேயுவின் வாழ்வு தலைகீழாய் மாற்றம் பெற்றது.
பிரியமானவர்களே, இரட்சிப்பு என்பது நமது பாவ வாழ்வில் இருந்து மீட்கப்பட்டு, தேவனோடு நமக்கு ஏற்படும் ஒரு புதிய உறவையே குறிக்கிறது. தேவனோடுள்ள உறவில் வளர வளர, அவர் தமது வசனத்தினூடாக நம்முடன் பேசுவார். தேவனோடு நாம் நெருங்கிய உறவுகொள்ளும்போது, நம் வாழ்வில் ஏற்படும் புதிய மாற்றங்களே இரட்சிப்பினால் உண்டாகும் மாற்றங்கள். அவருக்குப் பிடிக்காத காரியத்தை நாம் நமது வாழ்விலிருந்து நாமாகவே அகற்றிக்கொள்வதே நாம் அவர் மீது கொண்டிருக்கும் அன்பின் வெளிப்பாடாக அமைகிறது. அவருக்குப் பிடிக்காது என்று எதனால் அறிகிறோம்? அவருடைய வார்த்தையிலிருந்துதானே அறிகிறோம். ஆகவே, முற்றும் முழுவதுமாக தேவ வார்த்தைக்குக் கீழ்ப்படிவதே இரட்சிப்பினாலுண்டாகும் மாற்றங்களின் தோற்றங்களாகும். இத்தோற்றங்கள் நமது வாழ்வில் காணப்படுகின்றதா?
ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழைய வைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின (2 கொரி. 5:17).
ஜெபம்: அன்பின் ஆண்டவரே, நீர் சகேயுவின் வீட்டிற்குச் சென்றபோது, அவனது ஜீவியத்திலே மாற்றம் தெரிந்தது. அதேபோல எனது உள்ளமாகிய வீட்டிலும் வந்து எனது வாழ்வையும் மாற்றியருளும். ஆமென்.
வாக்குத்தத்தம்: 2021 ஏப்ரல் 29 வியாழன்
அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார் (ரோம.8:26).
1சாமுவேல் 23-25 | லூக்கா 21:1-19
ஜெபக்குறிப்பு: 2021 ஏப்ரல் 29 வியாழன்
கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்; … அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன் (சங்.130:55) இவ் விதமாக கர்த்தரையே நம்பிக்கையாகக் கொண்டு பற்பலவிதமான தனிப்பட்ட மற்றும் குடும்ப காரியங்களுக்காக ஜெபித்துவரும் பங்காளர்களுக்கு இரக்கங்களின் பிதாவாகிய தேவன் ஏற்ற பதிலையும் தம்முடைய வழிநடத்துதலையும் தந்தருள மன்றாடுவோம்.
மன்னித்து மறக்கிறார்!
தியானம்: 2021 ஏப்ரல் 29 வியாழன் | வேத வாசிப்பு: சங்கீதம் 130:1-8
உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு (சங்.130:4).
நாம் மற்றவர்களை மன்னிப்பதற்கும், தேவன் நம்மை மன்னிப்பதற்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு. நாம் மற்றவர்களை மன்னித்துவிடுவோம். ஆனால் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களின் தப்பிதங்களை நினைத்துப் பார்ப்போம். அல்லாவிட்டால், பிறரிடம் கூறுவோம். ஆனால் நம் ஆண்டவரோ நமது பாவங்களை மன்னிப்பது மாத்திரமல்ல, அதை மீண்டும் நினையாது மறந்துவிடுகிறவராய் இருக்கிறார் (எரே.31:34). நாமே சில வேளைகளில் நமது கடந்த கால பாவங்ளைக் குறித்து எண்ணி வேதனைப்படலாம். ஆனால் ஆண்ட வரோ அவற்றை முற்றுமாய் மன்னித்து மறக்கிறார்.
தேவன் நமது பாவங்களைத் தமது முதுகுக்குப் பின்னால் போட்டுவிடுகிறார் (ஏசா.38:17). அதாவது அவர் நமது பாவங்களை தனக்கு முன்பாக வைத்து அனுதினமும் அதைப் பார்த்துக்கொண்டு இருப்பவரல்ல. தமது கண்கள் காணாதபடிக்கு அவற்றையெல்லாம் தமக்குப் பின்னால் எறிந்து போடுகிறார். “தேவன் நமது பாவங்களை ஆழ்ந்த சமுத்திரத்தில் போட்டுவிடுகிறார்” என மீகா தீர்க்கதரிசி எழுதுகிறார். (மீகா7:19) ஆம், ஒருமுறை மன்னித்த பாவங்களை தேவன் மீண்டும் அசைபோட்டுப் பார்க்கிறவர் அல்ல. ஆழ்ந்த சமுத்திரம் என்பது ஒருபோதும் மீளமுடியாத ஓரிடம். எனவே நமது பாவங்களையும் தேவன் அவ்விதமாகவே அப்புறப்படுத்துகிறார்.
தேவனுடைய மன்னிப்பு அதிசயமானதும் ஆச்சரியப்படத்தக்கதுமாகும். அன்பானவர்களே, இவற்றை வாசிக்கும்போது நமக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது அல்லவா? எனவே நாம் தொடர்ந்தும் நமது இஷ்டப்படி பாவத்தைச் செய்யலாம் என்பது இதன் கருத்தாகுமா? இல்லை. “உமக்குப் பயப்படும் படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு”. ஆகவே, தேவன் நம்மை ஆச்சரியமான விதத்தில் மன்னிப்பதால் அவருக்கு நாம் பயப்படவேண்டும். அவருக்குப் பயப்படும் பயம் நம் உள்ளத்தில் இருக்குமேயானால் நாம் தொடர்ந்து பாவம் செய்யமாட்டோம். எனவே துணிகரமான பாவங்களைப் புறம்பே தள்ளிவிட்டு, தேவன் நமக்குத் தரும் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு, அவருக்காய் தொடர்ந்து வாழ நாம் பிரயாசப்படுவோம். பாவம் செய்ய நாம் தூண்டப்படும்போதெல்லாம் தேவன் நமது கடந்தகால பாவங்களை எவ்வளவாய் மன்னித்து நம்மை விட்டகற்றினார் என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும். அப்போது தேவன்மீது மரியாதையும், பயமும் தோன்றும். அந்தப் பயம், பாவத்தைவிட்டு விடுபட நமக்கு உதவி செய்யும்.
ஜெபம்: மன்னிப்பதில் தயை பெருத்த அன்பின் ஆண்டவரே, உம்மிடம் மன்னிப்பைப் பெற்றுக்கொண்ட நான் மீண்டும் பாவம் செய்யாதிருக்கவும், நீர் மன்னித்த பாவங்களைத் திரும்பிப் பார்க்காதபடிக்கும் எனக்கு உதவி செய்யும். ஆமென்.