ஜெபக்குறிப்பு: 2021 மே 31 திங்கள்

ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது (சங்.136:4) அதிசயமான ஆண்டவர் இம்மாதத்தில் நமக்கருளிச் செய்த சகல நன்மைகளையும் எண்ணி அவருடைய பரிசுத்த நாமத்துக்கு மகிமையுண்டாக ஸ்தோத்திரித்துத் துதிப்போம்.

அவருடைய காலடிகளில் …

தியானம்: 2021 மே 31 திங்கள் | வேத வாசிப்பு: 2இராஜா. 2:11-14

எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று சொல்லி … தண்ணீரை அடித்தவுடனே அது இரு பக்கமாகப் பிரிந்ததினால் எலிசா இக்கரைப்பட்டான் (2 இராஜா.2:14).

“ஒரு சிறுவன் பின்பற்ற விரும்பும் காலடிகள், தன் தகப்பனார் நடந்து முடித்து விட்டதாக நினைத்து மூடிவிட்ட காலடிகளாகும்” என்றார் ஒருவர். ஆனால், எலியாவின் வாழ்க்கையில் அப்படி இல்லை. எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து: “எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே” என்று சொல்லித் தண்ணீரை அடித்தவுடனே அது இருபக்கமாகப் பிரிந்ததினால் எலிசா இக்கரைக்கு வந்தான்.

எலியா, எலிசாவோடு வாழ்ந்த காலத்தில் தன் ஆவிக்குரிய குமாரனாகிய எலிசா பின்பற்றத்தக்கதாக தன் காலடிகளை விட்டுச்சென்றான். தேவன் தமது வல்லமையை இந்தத் தீர்க்கதரிசி மூலமாக செய்து நிறைவேற்றியவை முன்மாதிரியானது. எலியா செய்த அற்புதங்களை எலிசா செய்ய முயற்சித்தது இதற்கு உதாரணமாகும். எலியா யோர்தானை அடித்து தண்ணீர் இரண்டாகப் பிளந்ததைக் கண்டிருந்த எலிசா, எலியா பரலோகம் சென்ற பின்னர் அவனிடமிருந்து விழுந்த சால்வையை எடுத்துக்கொண்டு வந்து யோர்தானை அடைந்ததும், சால்வையை முறுக்கி தண்ணீரை அடித்து, “எலியாவின் தேவன் எங்கே?” என்று கேட்டான். உடனே, யோர்தானின் தண்ணீர் இரண்டாக பிரிந்தது. எலியாவின் காலடிகளைப் பின்பற்றி அவனைப்போல வாழ்ந்தால், தேவன் அவன் மூலமாகவும் அற்புதங்களைச் செய்வார் என்று அறிந்துகொண்டான் எலிசா.

ஒவ்வொரு கிறிஸ்தவனும் தங்கள் காலடிகளை விட்டுச் செல்கின்றனர். ஒவ்வொருவரும் தன் வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள் துன்பங்கள் நேரத்திலும், நன்மையும் ஆசீர்வாதமும் அனுபவிக்கும் நேரங்களிலும் தங்கள் காலடிகளைப் பதிய வைக்கிறார்கள். ஒரு விசுவாசி என்ற நிலையில் தேவ வல்லமையை அவர் சமுகத்தை, பல சூழ்நிலைகளில் வெளிப்படுத்திக்காட்டிய அனுபவங்களை பெற வேண்டும். தங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறவர்களில் அழிக்க முடியாத ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தும் கிறிஸ்தவ விசுவாசிகள் உண்டு.

உங்கள் காலடிகளைப் பின்பற்றி நடப்பவர்கள் எங்கே வழிநடத்தப்படுகிறார்கள்? ஆத்தும ஆகாரம் பெறும் இடங்களுக்கா? தேவனுக்கு நேராக அதிக நெருங்கிய தொடர்பு கொள்ளும்படி அவர்கள் அழைத்து செல்லப்படுகின்றார்களா? உங்களைத் தொடர்ந்து பின்பற்றியவாறு பலர் வந்துகொண்டிருக்கின்றனர் என்பதை மறவாதீர்கள். அவர்கள் பின்பற்றக்கூடிய நல்ல பாதையில் உங்கள் காலடிகள் செல்லும்படி பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் விரும்புகிறீர்களோ, இல்லையோ, அவர்கள் பின்பற்ற விரும்பும் நல்ல பாதையில் உங்கள் காலடிகள் பதியக் கவனமாயிருங்கள்.

நீங்கள் எங்கே காலடி வைக்கிறீர்கள் என்று கவனியுங்கள். ஏனென்றால், நண்பர்களும் உங்களைத் தொடர்ந்து பின்பற்ற அருகில் பின்னால் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

ஜெபம்: அன்பின் தேவனே, எங்களைப் பின்பற்றி வருகின்றவர்களுக்கு எங்கள் வாழ்க்கையில் நல்ல முன்மாதிரிகளைக் காட்ட எங்களுக்கு உதவியருளும். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2021 மே 30 ஞாயிறு

கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய பிராகாரங்களில் பிரவேசியுங்கள் (சங்.96:8) வருடத்தின் ஐந்து மாதங்களின் ஓய்வு நாள் ஆராதனைகளை கர்த்தர் ஆசீர்வதித்தார். சகல ஸ்துதி ஸ்தோத்திரத்துக்கும் பாத்திரராய் இருக்கிற கர்த்தரை முழு உள்ளத்தோடும் ஆராதிப்போம்.

சுழல்காற்றின் மத்தியில் …

தியானம்: 2021 மே 30 ஞாயிறு | வேத வாசிப்பு: 2இராஜா 2:9-12

அவர்கள் பேசிக்கொண்டு நடந்து போகையில், இதோ, அக்கினி ரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது (2இராஜா.2:11).

கழுகுகள் ஒரு வித்தியாசமான பறக்கும் பழக்கத்தைப் பெற்றுள்ளன. அவை புயல் வீசும்போது பெருங்காற்றைக் கண்டு பயந்து தூரமாகப் பறந்து செல்லாமல், அதை நேருக்கு நேராக சந்திக்கும் தன்மை உடையவை. மற்றப் பறவைகள் பயந்து தூர விலகிப் பறந்து செல்லும்போது, கழுகுகள் மட்டும் தங்களை உயரத்தில் உந்தித்தள்ள இந்தக் காற்றுடன் மோதுகின்றன.

ஒரு புயல் பூமியிலிருந்து எழுந்து, பரலோகத்தில் தேவனது சமுகம் வரை எலியாவை உயர்த்திச் சென்றது. கில்காலிலிருந்து தனது சீஷனான எலிசாவுடன் எலியா புறப்பட்டு வந்தபோது, பெத்தேலில் தீர்க்கதரிசிகளின் புத்திரர், எலியா பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படப் போவதைக் குறித்து எச்சரித்தார்கள். பின்னர் எரிகோவிலும், அப்படியே நடந்தது. எலியா பயந்து தப்பி ஓட முயற்சிக்கவில்லை. அவன் தேவசித்தம் நிறைவேறட்டும் என்று காத்திருந்தான். அவர்கள் யோர்தானைக் கடந்து சென்ற பின்னர் ஒரு அக்கினி ரதம், வானத்திலிருந்து இறங்கி, அவர்கள் இருவரையும் பிரித்தது. ஒரு சுழல்காற்று எலியாவைத் தூக்கிப் பரலோகத்துக்கு எடுத்துச் சென்றுவிட்டது.

உலகத்தில் உருவாகும் சூறாவளிக் காற்று பொதுவாக பேரழிவைத் தோற்றுவிக்கும். ஆனால், இந்த சுழல் காற்றைத் தேவன், எலியாவைப் பூமியிலிருந்து பரலோகத்துக்கு கொண்டுசெல்ல பயன்படுத்தினாரே. நமது வாழ்விலும் சூறாவளிகள் வந்து நம்மைத் தாக்கும்போது, நாம் தப்புவதற்கும் ஒரு மார்க்கம் உண்டு. நமது துன்பங்கள் நெருக்கடி கஷ்டங்களின் மீது முழுகவனத்தையும் செலுத்தும்போதுதான் நாம் சோர்ந்து போகிறோம். மாறாக, அந்த வேளையில் நாம் ஜெபித்து, கடவுளைத் துதிக்கும்போது, அதே சூறாவளி நம்மை உயர்த்தி தேவனுக்கு முன்பாகக் கொண்டுசெல்லக்கூடும். மற்றவர்கள் இதைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, நம்மைத் தாக்கும் இந்த சூறாவளி நமது குடும்பத்தையே அழித்துவிடும் என்று பயப்பட நேரிடும். ஆனால் தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் ஆண்டவரிடம் இந்த சூறாவளியை உயர்த்திக்காட்டி தீர்வு வேண்டும்போது, அவர் அனைவரும் ஆச்சரியப்படும் வண்ணம் அந்தச் சூறாவளியைச் சிதறப்பண்ணி தென்றலாக மாறச் செய்துவிடுவார். எனவே வாழ்க்கையின் புயல்களைக் கண்டு நாம் பயந்து ஓடவேண்டாம். இவை நம்மை தம்மிடம் கிட்டிச்சேரச் செய்வதற்கு தேவன் கையாளும் முறையாக இருக்கலாம். ஜெபம், துதி என்னும் இறக்கைகளை விரித்து ஆண்டவரிடம் விண்ணப்பம் செய்யுங்கள். சூறாவளியும் புயலும் நம்மைப் பூமியிலிருந்து உயர்த்தி தேவனண்டை சேர்க்கும் மார்க்கங்களாகவும் அமையலாம். ஆக, சூழ்நிலைகளைக் கண்டு நாம் கலங்காதிருப்போமாக.

உங்களுக்கு வரும் புயலும், சூறாவளியும், உங்களைக்கவலைப்படவைத்து தாழ்ந்துபோகச் செய்யாமல், உங்களை உயர்த்தி தேவனண்டை சேர்க்கும் ஏதுக்களாக இருக்கட்டும்!

ஜெபம்: எங்கள் பெலனாகிய கர்த்தாவே, புயல் காற்றின் மத்தியிலும் நீர் எங்களைப் பாதுகாத்து எங்களை உயர்த்தி உம்மண்டை சேர்க்கின்றீர். உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.