ஜெபக்குறிப்பு: 2021 மே 23 ஞாயிறு
அப்பொழுது புற ஜாதிகள் தங்கள் கண்களுக்கு முன்பாக நான் உங்களுக்குள் பரிசுத்தம் பண்ணப்படுகையில், நான் கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் (எசே.36:23) என்ற வேதவாக்கு இந்நாட்களில் அனைத்து திருச்சபை ஆராதனைகளிலும் நிறைவேறவும், பலவித தடைகள் மத்தியில் நடைபெறும் ஆராதனைகளுக்காகவும் பாரத்தோடு ஜெபிப்போம்.
முழுவதும் இழக்கப்படவில்லை!
தியானம்: 2021 மே 23 ஞாயிறு | வேத வாசிப்பு: 1இராஜா 19:15-18
ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற …ஏழாயிரம் பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன்… (1இராஜா.19:18).
தென்னாப்பிரிக்க போயர் யுத்தத்தில், ஒரு மனிதன் தண்டிக்கப்பட்டான். அவன் குற்றவாளியாக கருதப்பட்டான். காரணம், யுத்தம் நேரத்தில், யுத்தம் செய்வதற்கு ஊக்குவிக்காமல், வீரர்களின் மனதைக் குழப்பி, யுத்தத்திலிருந்து பின்வாங்கச் செய்து, ஊக்கத்தை குன்றச் செய்ததே அவன் செய்த குற்றம். தென்னாப்பிரிக்க நகரமான லேடிஸ்மித்தான் தாக்கப்பட்டிருந்தது. போர்வீரர்கள் தற்காப்பு முறையில் வரிசையாக நின்றுகொண்டிந்தார்கள். எதிரிகளின் சேனையின் பலம், நகரம் பிடிக்கப்படப்போவது உறுதி என்றெல்லாம் கூறி போர்வீரர்களின் மனதைத் தளரச்செய்ய முயற்சித்தான். இவன் ஒரு துப்பாக்கியைக் கையில் வைத்திருக்கவில்லை. இவனுடைய ஆயுதமெல்லாம் வாய் வார்த்தைகள்தான். சோர்வடையச் செய்யும் யுக்தியே அவனது ஆயுதமாகும்.
நம்மைச் சோர்வடையச் செய்யும் முதல் எதிரி சாத்தான். அவன் பல விதங்களில் எலியாவைச் சோர்வடையச் செய்திருந்தான் என்பது உறுதி. எலியாவின் பக்கத்தில் எல்லாம் இழக்கப்பட்டுவிட்டதாக உணரச்செய்தான். “நீ மட்டும் தனியாக விடப்பட்டிருக்கிறாய்” என்ற எண்ணத்தைத் தூவினான். எலியா அதை நம்பிவிட்டான். எலியா மீண்டும் திரும்பிப்போய் செய்யவேண்டிய பெரிய காரியங்களை தேவன் அறிவித்தபோது, பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேர் இஸ்ரவேலில் மீதியாக தேவனால் வைக்கப்பட்டிருந்ததை அறிந்துகொண்டான்.
அன்பானவர்களே, நம்மை சோர்வுக்குள் தள்ளுகின்ற சாத்தான் சில காரியங்களை மிக மோசமானவைகளாக மிகைப்படுத்திக் காட்டுவான். விசுவாசிகளைச் சோர்வடைய செய்வதற்காக தவறான தகவல்களை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பான். பல தடவைகளில் அவன் வெற்றிபெற்றும் விடுகிறான். சாத்தானின் பொய்களுக்குத் தேவன் தமது வார்த்தையில் தீர்வுகளைத் தந்துள்ளார். வேதாகமத்தில் மிகப்பெரிய அற்புதமான பல வாக்குத்தத்தங்களைத் தந்திருக்கிறார். சாத்தானின் எதிர்மறையான முடிவுகளை மேற்கொள்ள எண்ணிலடங்கா நேர்மறைத் தீர்வுகளை வேதாகமத்தில் வைத்திருக்கிறார். நமது வாழ்க்கை முழுவதையும் சோர்வடையச் செய்வது சாத்தானின் வேலையாக இருக்கிறது. சாத்தானின் தந்திரங்களை நாம் எப்படி முறியடிக்க முடியும்? வேதாக மத்திலுள்ள வாக்குத்தத்தங்களை உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும். வேதாகமமே நம்மை ஊக்குவிக்கும் காரணி. வேதவசனத்தில் தேவசத்தத்தை நாம் கேட்கப் பழகிக்கொண்டால், நாம் வேறு எதற்கும் பயப்படவேண்டியதில்லை.
தேவன் உன்னை உயர்த்தும்போது, சாத்தானால் உன்னைக் கீழே தள்ளமுடியாது.
ஜெபம்: கிருபையுள்ள தேவனே, வேதாகமத்தை கருத்தாக படிக்கவும் அதில் நீர் தந்துள்ள ஒப்பற்ற வாக்குத்தத்தங்களை உறுதியாகப் பற்றிக்கொண்டு சாத்தானின் பொய்களையும் அவனது எதிர்மறையான முடிவுகளையும் வெற்றி சிறக்க கிருபை தாரும். ஆமென்.