ஜெபக்குறிப்பு: 2021 மே 19 புதன்
நான் சொன்ன வசனமே அவனைக் கடைசி நாளில் நியாயந்தீர்க்கும் (யோவா.12:48) ஆண்டவராகிய இயேசு சொன்ன இந்த வாக்குகளை நினைவு கூர்ந்தவர்களாய் ஆவிக்குரிய வாழ்வில் நிர்விசாரத்தோடு உள்ள பங்காளர் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் சத்தியங்கள் கேட்கக் கிடைத்த இந்நாட்களில் கர்த்தருடைய வார்த்தைகளை அதிகமாக தியானிக்க ஜெபிப்போம்.
நீ இங்கே என்ன செய்கிறாய்?
தியானம்: 2021 மே 19 புதன் | வேத வாசிப்பு: 1இராஜா 19:7-10
…எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம்… (1இராஜா.19:9).
ஒரு பெண்மணி ஒரு புரோக்கராக வேலை செய்தபோது, பெரிய பிரமுகர்களுடன் பழகியிருந்தாள். அவள் ஒரு விசுவாசியானபோது, இனி சாதாரண வாழ்வை வாழக்கூடாது. அர்த்தமுள்ள, பிறருக்கு ஆசீர்வாதமான நல்ல வாழ்வை வாழ வேண்டுமென்று உணர்ந்தாள். அவளிடம் மீன் பதப்படுத்தி விநியோகிக்கும் ஒரு நிறுவனம் இருந்தது. அங்கிருந்து அவள் தன்னைப்பார்க்க வருகிறவர்களுக்கு நல்லாலோசனை கூறி, வேதாகமத்தை வாசித்துகாட்டி, நல்வழிப்படுத்தி, ஆவிக்குரிய இளைப்பாறுதல் பெற உதவி செய்ய ஆரம்பித்தாள். தான் வசிக்கின்ற இந்த இடத்தை தேவ ஊழியர்கள் தங்கி, இளைப்பாறி, கூட்டங்கள் நடத்தி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இடமாக ஆக்கவேண்டும் என்பது அவளுடைய விருப்பம். இதுதான் தேவன் என்னை அழைத்து, எனக்குத் தந்திருக்கிற ஊழியம் என்றாள்.
ஓரேப் பர்வதத்தில் தேவன் எலியாவைச் சந்தித்தார். எலியாவின் ஊழியத்தைத் தேவன் பரிசீலித்தார். தேவன் எலியாவிடம், “எலியாவே, நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டபோது, அதன் பதிலைத் தேவன் அறிந்திருந்தார். எலியா தன் பொறுப்புகளையும் கடமைகளையும், தன் ஊழியத்தையும்கூட பின்னால் தள்ளிவிட்டதைத் தேவன் அறிந்திருந்தார். அதை அவன் உணரவேண்டும் என்று தேவன் விரும்பினார். தன் வாழ்வின் இறுதி நோக்கம் என்ன என்பதை அவன் உணரவேண்டும் என்று கருதியே அவனது சிந்தனையைத் தூண்டும்படி இக்கேள்வியைக் கேட்டார்.
“நான் இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறேன்?” இந்தக் கேள்வியை எல்லா கிறிஸ்தவர்களும் தங்களிடம் தாங்களே கேட்கவேண்டும். நான் ஏன் இன்னும் உயிரோடிக்கிறேன்? நான் என்ன செய்யவேண்டும் என்று தேவன் என்னை வைத்திருக்கிறார்? வாழ்விற்கு தேவனால் ஒருநோக்கம் கொடுக்கப்படாத எந்த விசுவாசியும் உலகத்தில் இல்லை. தம் மனதில் ஒரு திட்டம் வைத்துக்கொண்டே தேவன் நம் ஒவ்வொருவரையும் உருவாக்கினார். நம் வாழ்வில் தேவநோக்கத்தைக் கண்டுபிடித்து அது நிறைவேறும்படி உண்மையுடன் உழைக்க வேண்டியது நமது கடமை. “நீ எதற்காக இங்கே இருக்கிறாய்? நற்செய்தி அறிவித்து வாலிபர்களை பக்திவிருத்தியடைய செய்வதா? ஆலயத்தின் ஓய்வு நாட்பாட சாலையின் மூலம் முயற்சிப்பதே உங்கள் வாழ்க்கையின் நோக்கமா? வேறு தேசத்தில் திருப்பணி செய்யும் நண்பர்கள் குடும்பங்களை ஆதரித்து உதவி செய்வதா? நோயாளிகளுக்காக ஜெபிப்பதா? அனாதைகள், விதவைகள், சிறைச்சாலை கைதிகள் மத்தியில் ஊழியம் செய்வதா? என்ன செய்யவேண்டும் என்று ஆண்டவரிடம் கேளுங்கள். தேவன் உங்களுக்காக நியமித்த பணியை செய்துமுடியுங்கள்.
உங்கள் வாழ்க்கைக்கு தேவன் வைத்திருக்கும் நோக்கம் உங்கள் வாழ்க்கைக்கான அர்த்தத்தைத் தருகிறது.
ஜெபம்: என்னை அழைத்த தேவனே, என்மேல் நீர் கொண்டுள்ள நோக்கம் எதுவாயினும் அது நிறைவேற என்னை உமக்கு அர்ப்பணிக்கின்றேன். ஆமென்.