வாக்குத்தத்தம்: 2021 மே 1 சனி

சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து … கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும் … வேண்டுதல் செய்கிறோம் (கொலோசெயர் 1:10).


என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன் (யோவா.14:14).
1சாமுவேல் 29-31 | லூக்கா 22:1-27

ஜெபக்குறிப்பு: 2021 மே 1 சனி

உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக (மத்.6:10).


தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப் பண்ணும் (சங்.67:2) இம்மாதத்திலும் கர்த்தருடைய வாக்கைப் பற்றிக்கொண்டு சகல வித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ள நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.

காகங்களின் இறக்கைகளின் மேல்

தியானம்: 2021 மே 1 சனி | வேத வாசிப்பு: 1இராஜாக்கள் 17:2-5

அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய், அங்கே உன்னைப் போஷிக்கக் காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார்  (1ராஜா.17:4).

ஒரு மனிதன் ஒரு ரோல்ஸ் ராயிஸ் கார் வாங்க விரும்பினார். பல மாதங்களாக விரும்பி, சிந்தித்துத் திட்டமிட்டு, கடைசியில் அங்கிருந்த கார் டீலரிடம் சென்று தாம் வாங்க விரும்பிய கார் பற்றிய விபரங்களையெல்லாம் கேட்டறிந்தவன், காரின் விலையையும் கேட்டறிந்தான். பின்னர் கார் பற்றிய முக்கியமான சில தகவல்களையும் கேட்டுக் கொண்டான். அவன் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் விடை கிடைத்தன. ஒரேயொரு கேள்விக்குமட்டும் அந்த டீலருக்கு விடை தெரியவில்லை. அவர் சேல்ஸ் மானேஜரிடம் விசாரித்தார். அவருக்கும் தெரியவில்லை. அந்த மானேஜர் இந்தக் கேள்விக்கான விடை என்னவென்று லண்டனில் இருக்கும் தங்கள் தலைமை அலுவலகத்திற்குக் கேபிள் மூலம் செய்தி அனுப்பினார். அங்கிருந்து உடனே பதில் வந்தது. “போதுமான அளவு” என்று ஒரு வார்த்தையில் அந்த விடை இருந்தது.

ஆகாப் ராஜாவை எலியா சந்தித்த பின்னர் தேவன் தானியேலுக்கு ஒரு கட்டளை கொடுத்தார். “நீ சென்று மறைந்திரு” என்று. கேரீத் ஆற்றங்கரையில் எலியா மறைந்திருக்க ஒரு பெரிய காட்டுப்பகுதி இருந்தது. வறண்டு, தண்ணீரற்று இருந்த காலத்தில் அந்தக் காட்டுப் பகுதியில் எலியா மறைந்திருந்தால் ராஜா சந்தேகப்படவும் தேடவும் மாட்டான். ஆனால் அங்கே வாழ்வது ஒரு சவாலாகும். தேவன் எலியா அங்கே வாழப் “போதுமானவராக” இருந்தார். அங்கே இருந்த நீரோடையில் எலியா தண்ணீர் குடிப்பான். அவனுக்குத் தேவையானவைகளைக் காகங்கள் கொண்டுவந்து கொடுக்க தேவன் அவைகளுக்குக் கட்டளை கொடுத்திருந்தார்.

அன்பானவர்களே, எந்த நெருக்கடியும், சூழ்நிலையும் தேவனுக்குக் கடினமானவை அல்ல. உலகம் தன் பொருட்களைக் காக்கத் தவறும்போது, தேவன் போதுமானவராக இருக்கிறார். உங்கள் தேவைகளைச் சந்திக்க தேவன் கையாளும்முறை உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள படைப்புகள் அனைத்தும் அவருக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய சித்தம் செய்ய ஆயத்தமாயிருக்கின்றன. அவர் நமக்குப் போதுமானவராயிருந்து, நமது தேவைகளைச் சந்திப்பார். உங்கள் இருதயத்தைத் திடப்படுத்திக்கொள்ளுங்கள். அதோ, தூரத்தில் அடிவானப் பகுதியில் காணப்படும் கறுப்பு நிழல்கள், காகங்களாக இருக்கலாம். தேவன் உங்களைக் கைவிடமாட்டார் என்பதில் உறுதியாயிருங்கள். உங்கள் வாழ்க்கையில் சூழ்நிலைகள் எவ்வளவு கடினமாய் இருந்தாலும் அந்நேரங்களில் உங்கள் ஆண்டவர் உங்களுக்குப் போதுமானவராக இருப்பார்.

உலகத்தில் மற்றவர்கள் உங்களை ஏமாற்றலாம். ஆனால் தேவன் எப்பொழுதும் உங்களுக்கும் போதுமானவராக இருப்பார்.

ஜெபம்: கிருபையுள்ள தேவனே, எங்கள் வாழ்க்கையின் சூழ்நிலைகள் எவ்வளவு கடினமாய் இருந்தாலும் நீர் எங்களுக்கு போதுமானவராக இருக்கின்றபடியால் உம்மை துதிக்கிறோம். ஆமென்.

இயேசு ஜீவிக்கிறார்!

அதிகாலை வேளையில்…
(மே-ஜுன் 2021)
Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: மாற்கு 16:1-20


வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார். அவளிடத்திலிருந்து அவர் ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார் (மாற்.16:9,10).


முதல் ஈஸ்டர் நாளின் அதிகாலை யிலே மிகவும் வியக்கத்தக்க ஒரு நிகழ்வு நடந்தது. அது தேவன், இயேசுகிறிஸ் துவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினது ஆகும். தேவன் தம்முடைய சிறப்பான காரியங்களை அதிகாலையிலே செய்வது வழக்கம். ஆனால் அந்த குறிப்பிட்ட காலையில் மிகவும் அதிசிறப்பான ஒரு காரியத்தை நடப்பித்தார். இயேசு உயிர்த்தெழுந்த பின்னர் ஆண்டவரின் தரிசனங்கள் தேவனுடைய வல்லமையான ஆற்றலை வெளிப்படுத்தின.

உயிர்த்தெழுந்த ஆண்டவரின் மூன்று தரிசனங்கள் மாற்கு 16ம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. “பதினொருவரும் போஜன பந்தியிலிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி” என்று வசனம் 14 அறிவிக்கிறது. தோமாவைத் தவிர மற்ற சீடர்கள் ஒன்று கூடியிருந்தனர். இயேசுகிறிஸ்து உயிரோடிருக்கிறார் என்ற அறிக்கைகளை அவர்கள் நம்பவில்லை. ஆனால், சீடர்கள் கூடியிருந்த அந்த பூட்டப்பட்ட அறைக்குள்ளே இயேசு பிரவேசித்தார். அவர்கள் ஓர் ஆவியைக் காண்கிறதாக எண்ணி பயந்து கலங்கினார்கள். இயேசு அவர்களது அவிசுவாசத்தைக் குறித்தும் இருதய கடினத்தைக் குறித்தும் அவர்களைக் கடிந்துகொண்டார். ஆனாலும், “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” (வசனம் 15) என்ற கட்டளையை அவர்களுக்குக் கொடுத்தார். அந்த மாபெரும் உயிர்த்தெழுந்த நாளின் கடைசி தரிசனம் இதுவே.

இந்நிகழ்வுக்கு முன்னதாக அவர் எம்மாவு கிராமத்துக்குச் செல்லும் வழியில் வேறு இருவருக்கு தரிசனமானார். மாற்கு நற்செய்தியாளர் அச்சந்திப்பை வெகு சுருக்கமாகத் தந்தாலும் லூக்கா நற்செய்தியாளர் தன்னுடைய நூலில் மிகவும் சுவாரசியமாக விவரித்துள்ளார். கிலெயோப்பாவும் மற்றொருவரும் இயேசுவின் காலியான கல்லறையைப் பார்த்த பின்னர் எருசலேமுக்கு சுமார் ஏழு மைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள்.

அவர்கள் பேசிக்கொண்டு நடந்து போகையில் இயேசுதாமே அவர்களுடனே சேர்ந்துகொண்டார். அவர்கள் அவரை கிலெயோப்பாவின் வீட்டுக்கு அழைத்தனர். அவரை உயிர்த்தெழுந்த ஆண்டவர் என்று அவர்கள் அறியாதிருந்தார்கள். “மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக் குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்” (லூக்.24: 27). உயிர்த்தெழுந்த ஆண்டவரைச் சந்தித்தோம் என்று மற்றவர்களுக்கு அவர்கள் அறிவித்தபொழுது அதனை மற்ற சீடர்கள் நம்புவது கடினமாயிருந்தது.

ஆனால், உயிர்த்தெழுந்த இயேசு யாருக்கு முதன்முதல் தரிசனமானார்? முதல் நூற்றாண்டின் கிறிஸ்தவ பிரதான போதகரான பேதுருவுக்கோ இயேசு அதிகமாய் நேசித்த சீடனான யோவானுக்கோ அல்ல. தன் மேலுள்ள பக்தியில் சிறந்து விளங்கியவரும், அர்ப்பணிப்பில் எவரும் மிஞ்சமுடியாதவருமான ஒரு பெண்ணுக்கே உயிர்த்தெழுந்த இயேசு முதன் முதலில் தரிசனமானார். இவ்வித மேன்மையைப் பெற தகுதியற்ற ஒருவருக்கே காட்சியளித்தார்.

ஏனெனில் “வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு எழுந்தி ருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார். அவளிடத்திலிருந்து அவர் ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார்” என்று மாற்கு 16:9 கூறுகிறது. அவள் ஓர் அப்போஸ்தலர் அல்லர்; மேலும் வேதபுத்தகத்தில் ஒரு வரியும் எழுத தேவன் அவளை உபயோகப்படுத்தவில்லை; ஆனாலும், அவளிடமிருந்த பிசாசுகளை இயேசு துரத்தினபின்பு அவள் இயேசுவைப் பின்பற்றி சீடர்களின் கூட்டத்தோடு இணைந்துகொண்டாள். தங்களுடைய ஆஸ்திகளால் அவருக்கு ஊழியங்செய்துவந்த மற்ற பெண்களுடன் அவளும் சேர்ந்துகொண்டாள் (லூக்கா 8:1-3). ஆண்டவர் அவளது குறைவற்ற பக்தியைக் கண்டு அவளுக்கு மிகச்சிறந்த பேற்றினை அளித்தார்.

ஆண்டவருடைய ஊழியத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பது முக்கியமல்ல; நாம் எந்த அளவு அன்புடன் செய்கிறோம் என்பதே முக்கியம். சீடர்களைப்போல மரியாள் பயன்படுத்தப்படவில்லை; திருச்சபையின் முதல் நூற்றாண்டின் மாபெரும் தலைவர்களில் ஒருவராகவும் அவள் கருதப்படவில்லை. எனினும் இயேசு உயிர்த்தெழுந்தபின் மகதலேனா மரியாளுக்கே முதன்முதலாக தரிசனம் தந்தார்.

ஏனெனில், நசரேயனாகிய இயேசு உயிர்த்தெழுந்தார் என்ற செய்தியை பேதுருவுக்கும் யோவானுக்கும் அறிவித்த பிறகு அவள் கல்லறைக்கு வந்து வெளியே நின்று கண்காணித்துக் கொண்டிருந்தாள். இந்த சாதாரண பெண்மணியின் பக்தியைப்போல் நம்முடையது இருக்கிறதா? நாம் என்ன ஊழியம் செய்கிறோம் என்பதை விட அவரை எவ்வாறு நேசிக்கிறோம் என்பதே முக்கியம்.


அதிகாலைப் பாடல்:

எனக்காக மரித்தார் எனக்காக உயிர்த்தார்
கல்லறையினின்று அவர் எனக்காக எழுந்தார்
மரணத்தின் கூரை ஒடித்து வெற்றி சிறந்தார்
எனவே பாதாளம் இனி என்னை மேற்கொள்ளாதே

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை

வாசகர்கள் பேசுகிறார்கள்

(மே-ஜுன் 2021)

[01]
தாங்கள் அன்புடன் அனுப்பித்தந்த 2021 ஆம் வருட காலண்டர் கிடைக்கப் பெற்றோம். 2021ஆம் ஆண்டிலும் அனைத்து ஊழியங்களும் சிறப்பாக தொடரவும் அதன் மூலம் அநேக ஆன்மாக்கள் இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளவும் ஊக்கமாக ஜெபிக்கிறேன். விசேஷமாக அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான நூல்களில் வெளிவரும் தியானங்கள் ஒவ்வொரு நாளுக்கும் ஏற்ற ஆலோசனைகளைத் தருவதாகவும், ஆவிக்குரிய வாழ்க்கையைப் பெலப்படுத்துவதாகவும், ஆறுதல் அளிப்பதாகவும் அறிவுரை வழங்குவதாகவும் உள்ளது. மனநிறைவு, மனஅமைதி, மன மகிழ்ச்சி, மன சமாதானத்தையும் அளிக்கிறது. தினமும் ஆண்டவர் நம்மோடு இடைபடுவதை உணரமுடிகிறது. எத்தனைமுறை வேண்டுமானலும் படித்து பயன்பெற முடிகிறது. அதற்காக உங்களுக்கும் ஆண்டவருக்கும் நன்றி கூறுகிறேன். நான் படித்தபின் மற்றவர்களும் படித்து பயன் பெற ஊழியர்களிடம் கொடுத்துவிடுவேன். இவற்றின் வாயிலாக விதைக்கப்படும் இறை வார்த்தைகள் அநேகருக்கு பயன் தந்துக்கொண்டே இருக்கிறது. எத்தனையோ பேர் ஆறுதலும் அறிவும் பெறுகின்றனர். தொடர்ந்து உங்கள் ஊழியங்கள் சிறப்பாக மற்றவர்களுக்கு பயன்தர ஜெபிக்கிறேன்.

Mrs.Victoria Vimaladevi, Seyyoor.


[02]
Dear Brother in Christ, Anuthinamum Christhuvudan (22.12.2020) Devotion was very super. When I read this devotion, my eyes are filled with tears. It encourage me so much and give me a strong Hope. I thank God for that excellent Devotion. Thank you.

Mr.J.Asir Thomas, Kallidaikurichi.


[03]
Praise the Lord Brother, May God bless your Ministry more and more for his Glory to get lot of souls in this year.

Mr.John Arputharaj, Coimbatore


[04]
சத்தியவசன பத்திரிக்கைகளினாலே நான் மிக்க பலன் அடைகிறேன். பத்திரிக்கைகள் வந்தவுடன் உடனுக்குடன் படிக்க இயலவில்லை என்றாலும் மெதுவாகவும் ஆர்வத்துடன் படிக்கிறேன். ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.

Mrs.Christina Vijaya, Trichy.


[05]
கர்த்தருக்குள் அன்பான சகோதரருக்கு, கர்த்தரின் இனியநாமத்தில் வணக்கம். சத்தியவசன ஊழியத்திற்காக தினமும் ஜெபிக்கிறோம். குறிப்பாக துதி ஜெபவிண்ணப்பம் குறிப்புகள் வைத்து உபவாச ஜெபங்களில் ஜெபிக்க பயனுள்ளதாக உள்ளது. பரிசுத்த வேதாகம கால அட்டவணை அனுதினமும் கிறிஸ்துவுடன் பத்திரிக்கையிலும் காலண்டரிலும் நீங்கள் அனுப்புவது கிரமமாக வேதம் வாசிக்க மிக பயனுள்ளதாக உள்ளது. 2020 டிசம்பர் 31 ஆம் தேதி சரியாக நானும் என் கணவரும் ஒரு முறை படித்து முடித்து விட்டோம். தொடர்ந்து தினமும் வாசிக்கிறோம். அனுதின தியானம், சஞ்சிகை ஆசீர்வாதமாக உள்ளது.

Mrs.Beulah James, Chennai.

ஆசிரியரிடமிருந்து…

(மே-ஜுன் 2021)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிற ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் யாவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

கர்த்தரின் பெரிதான கிருபையாலும் தேவ பெலத்தாலும் நான்கு மாதங்களை கடந்து வந்துள்ளோம். சட்டமன்றத் தேர்தல் நல்லவிதமாக முடிய தயை செய்தக் கர்த்தரைத் துதிப்போம். தேர்தல் முடிவுகளுக்காகவும் கருத்தாய் ஜெபிப்போம். கொரோனா இரண்டாவது அலையினால் தேசமெங்கும் நிறைந்துள்ள அச்சம் நீங்கவும், இந்த வைரஸ் தொற்று வேகமாக பரவாதபடியும் உயிர்ச்சேதங்கள் அதிகரிக்காதபடி காப்பதற்கும், லூக்கா 10:19 இல் ஆண்டவர் கொடுத்த அதிகாரத்தின்படி சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளும்படிக்கு தேசத்திற்காக, அகில உலகத்தின் நன்மைக்காய் இடைவிடாமல் மன்றாடுவோம்.

சத்தியவசன அனைத்து ஊழியப்பணிகளுக்காகவும் ஜெபித்துவருகிற ஜெப பங்காளர்கள் அனைவருக்கும் இயேசுவின் நாமத்தில் நன்றி கூறுகிறோம். 2019ஆம் ஆண்டிலே நிறுத்தம் செய்திருந்த சத்தியம் டிவி நிகழ்ச்சிகள் பிப்ரவரி மாதத்திலிருந்து மறுபடியும் ஒளிபரப்பாகி வருகிறது என்பதை தெரியப்படுத்துகிறோம். அனைவரும் குடும்பமாக நிகழ்ச்சிகளில் பங்குபெற்று ஆசீர்வாதமடையுங்கள்.

2020ஆம் ஆண்டில் பரி. வேதாகமத்தை வாசித்து முடித்தவர்களின் பட்டியலின் தொடர்ச் சியை 6ஆம் பக்கத்தில் பிரசுரித்துள்ளோம். பங்காளர் குடும்பங்களிலே பிளஸ் டூ தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் தேர்வுகளை நன்கு எழுதி சிறந்த விதத்தில் தேர்ச்சியடைய கர்த்தர் உதவி செய்ய வேண்டுமென்றே வேண்டுதல் செய்துவருகிறோம்.

இவ்விதழின் மே மாதத்தில் Dr.உட்ரோ குரோல் அவர்கள் தீர்க்கதரிசி எலியாவைக் குறித்து எழுதிய தியானங்கள் இடம்பெற்றுள்ளது. இத்தியானங்களை சகோ.வில்சன் அவர்கள் மொழியாக்கம் செய்துள்ளார். ஜுன் மாதத்தில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் தேவன் அருளிய கற்பனைகளைக் குறித்த தெளிவான விளக்கங்களை தியானங்களாக எழுதியுள்ளார்கள். தியானங்கள் எழுதும் சகோதர, சகோதரிகளுக்காக ஜெபியுங்கள். தாங்கள் பெற்ற நன்மைகளையும் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

கே.ப.ஆபிரகாம்