வாக்குத்தத்தம்: 2021 மார்ச் 1 திங்கள்

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள் (2பேதுரு 3:18).


கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன் (பிலி.4:4).
எண்ணாகமம் 15-17 ; மாற்கு 8:1-21

ஜெபக்குறிப்பு: 2021 மார்ச் 1 திங்கள்

நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய் தரித்திருங்கள் (ரோமர் 12:12) .


என் நாமத்திற்கு பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும் (மல்.4:2) நீதியின் சூரியனாகிய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை பற்றும் விசுவாசத்திலும் அவரை அறிகிற அறிவிலும் இம்மாதத்திலும் வளர்ந்து கனிதரும் ஜீவியம் செய்ய தேவ கிருபைக்காய் மன்றாடுவோம்.

பொன்மொழி

தியானம்: 2021 மார்ச் 1 திங்கள் | வேத வாசிப்பு: மத்தேயு 7:7-12

மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் (மத்.7:12).

ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளாத கணவனும் மனைவியும் இருந்தனர். ஒருநாள், “நாளை என்னை ஆறுமணிக்கு எழுப்பிவிடவும்” என எழுதி வைத்துவிட்டு கணவன் படுக்கைக்குச் சென்றுவிட்டார். காலையில் ஆறுமணிக்கு மனைவி எழுந்து, “இப்போது ஆறுமணி எழும்பவும்” என்று எழுதி அவர் அருகில் வைத்துவிட்டாள். திடுக்குற்று ஏழுமணிக்கு எழும்பிய கணவர், மனைவி எழுதிவைத்திருந்த செய்தியைக் கண்டு திகைத்துப்போனார். பிறர் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று விரும்புகிறோமோ, முதலில் அவைகளை நாம் பிறருக்குச் செய்வோம். ஆனால் நாமோ, பிறர் நமக்குச் செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்போம்; ஆனால், அதையே பிறருக்குச் செய்யத் தயங்குவோம், இல்லையா!

ஜெபத்தைக்குறித்து ஆண்டவர் பேசியபோது, நமக்கு எது தேவையென்பதை பரமபிதா அறிந்திருக்கிறார் என்றும், அத்தோடு பொல்லாத மனுஷராகிய நாமே நமது பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க நினைக்கும்போது பரமபிதா தம்மிடம் வேண்டிக்கொள்பவர்களுக்கு நல்ல ஈவுகளைக் கொடுப்பது அதிக நிச்சயமல்லவா என்றும் சொன்னார். ஜெபத்தில் நாம் செய்யவேண்டிய பங்கு ஒன்று உண்டு என்பதை இயேசுவானவர் வலியுறுத்துவதைக் காண்கிறோம். நாம் தேவனைத் தேடவேண்டும்; அவர் நமக்குத் திறக்கும்படியாகத் தட்டவேண்டும், அவர் நமக்குச் செவிகொடுக்கும்படியாக கேட்கவும் வேண்டும். இதை நாம் செய்ய வேண்டும் என்றே தேவன் எதிர்பார்க்கிறார். இப்படியிருக்க, நாம் ஏன் ஜெபிக்க வேண்டும் என்று கேட்போரும் உண்டு. நாம் கேட்க வேண்டும் என்பது பரம பிதாவின் விருப்பம். அதைச் செய்ய நாம் நம்மைத் தகுதிப்படுத்த வேண்டும். நமது ஜெபம் கேட்கப்பட வேண்டுமேயாயின் நாம் பாவத்தை அறிக்கை செய்து மனந்திரும்பியவர்களாய் கேட்கவேண்டும். ஏனெனில் நமது பாவங்களே தேவன் நமக்குச் செவிகொடுக்க முடியாதபடி தடுக்கிறது. ஆகையால், தேவனை நோக்கி கேட்க, தட்ட, தேட நம்மை இந்தக் காலங்களில் தகுதிப்படுத்திக்கொள்வோம்.

அருமையானவர்களே, பிறர் உங்களுக்கு செய்யவேண்டும் என நினைப்பதை நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள் என்று ஆண்டவர் கூறியுள்ளார். இயேசு எவைகளையெல்லாம் செய்யும்படிக்கு நமக்குக் கற்பித்தாரோ அவற்றையெல்லாம் அவர் செய்தும் காட்டினார். ஆக, நாம் அவர் பிள்ளைகளானால் நாமும் அதைச் செய்யவேண்டுமல்லவா. அதை இந்நாட்களில் முயற்சித்துப் பார்ப்போம்.

எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள் (கொலோ.3:24).

ஜெபம்: எங்களுக்காக பாடுகளைச் சகித்த ஆண்டவரே, உம்முடைய பிள்ளைகளாகிய நாங்கள் செய்யும்படி நீர் கற்பித்த சத்தியங்களை எங்கள் வாழ்க்கையில் அப்பியாசப்படுத்த எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.

அதிகாலை துதி

அதிகாலை வேளையில்…
(மார்ச்-ஏப்ரல் 2021)
Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: சங்கீதம் 113:1-9


சூரியன் உதிக்கும் திசை தொடங்கி அது அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக (சங்.113:3)


இச்சங்கீதத்தின் ஆசிரியர் யாரென்று குறிப்பிடப்படவில்லை. ஒரு சில வேத விரிவுரையாளர்கள்; இதனை சாமுவேல் தீர்க்கதரிசி எழுதினார் என்றும், வேறு சிலர் தாவீது எழுதினார் என்றும் கூறுகின்றனர். இதன் ஆசிரியர் யாராயிருந்தாலும் இது ஒரு சிறந்த எழுத்தாளரின் இலக்கிய நடையில் அமைந்துள்ளது. ஒரு நிகழ்வைப் பதிவு செய்யும் எந்த புது எழுத்தாளரும் கேட்கும் யார், என்ன, எப்பொழுது, எங்கே மற்றும் ஏன் என்ற ஐவ்வகை வினாக்களுக்கும் இங்கே பதில் கிடைக்கிறது. இவ்வாறு எழுதுவதற்கு அந்த இளம் எழுத்தாளரை ஆர்வமூட்டியது எவை என நாம் காண்போமா?

யார்?

யார் துதிக்கவேண்டும்? என்று இந்த ஆசிரியர் கேட்கிறார். நாம் அனைவரும். இச்சங்கீதத்தை வாசிக்கும் ஒவ்வொருவரும் இதில் அடங்குவர். குறிப்பாக கர்த்தருடைய ஊழியக்காரர்கள் என வசனம் 1 கூறுகிறது. மற்ற மக்களைவிட தேவனுடைய ஊழியக்காரர்கள் தேவனைத் துதிக்கும் செயலில் அதிகம் ஈடுபடவேண்டும். தேவனுக்கு ஊழியம் செய்கிறோம் என்று கூறிக்கொள்ளும் நாம் நமது கடமையை வெளிப்படையாய்த் தெரிவிக்கவேண்டும். தேவனைத் துதிப்பதற்கான காரணங்களை நாம் நன்கு அறிந்துள்ளோம். அவருடைய துதியை அறிவிப்பதற்கு நாமே சிறந்த கருவிகள்.

யாது?

கர்த்தரைத் துதித்தலே தேவனுடைய ஊழியக்காரரின் முதற்கடமையாகும். கர்த்தருடைய ஊழியக்காரரே, துதியுங்கள்; கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள். துதியுங்கள் என்ற சொல் ஒரே வசனத்தில் இருமுறை வந்துள்ளது மிக முக்கியமானது. நாம் தேவனுடைய கிருபையினால் இரட்சிக்கப்பட்டுள்ளோம். எனவே இயல்பாகவும், இடைவிடாமலும் நாம் அவரது துதியைச் சொல்லவேண்டும் என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் நாம் தேவனுடைய ஆசீர்வாதங்களுக்காக தேவனைப் போற்றுவது மிகவும் குறைவே. எனவேதான் சங்கீதக்காரன் நம்மைத் தூண்டியெழுப்புவதும் உற்சாகப்படுத்துவதும் அவசியம் என எண்ணினார். தேவனைத் துதியுங்கள் என்று பலமுறை கூறி நாம் அதில் உறுதியாய் இருக்க நம்மை ஊக்கப்படுத்துகிறார்.

எப்பொழுது?

தேவனுடைய ஊழியக்காரர்கள் தேவனைத் துதிக்கும் காலத்தைக் குறிப்பதற்கு சங்கீதக்காரர் ஒரு சொற் கோவையை உபயோகப்படுத்துகிறார். அதனை எபிரெய தீர்க்கதரிசிகளைவிட பழங்கால கிரேக்க கவிஞர்கள் அதிகம் பயன்படுத்தினர். அது சூரியன் உதிக்கும் திசை தொடங்கி அது அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக என்பதாகும் (3).

இக்கவிதை நடையானது தேவனுடைய நாமத்தைத் துதிப்பதற்கு, பகல் நேரம், விழித்திருக்கும் காலம், பொருத்த மான நேரம் அல்லது பொருத்தமற்ற நேரம் என்று எதுவுமே தேவனுடைய ஊழியக்காரர்களுக்கு கிடையாது என்று தெரிவிக்கிறது. சூரியன் உதிக்கும் நேரம் தொடங்கி – அதாவது அதிகாலை முதல் அது மறையும் காலம் மட்டும் இடைவிடாமல் தேவனுடைய நாமத்தைத் துதிக்கவேண்டும். அது நாள் முழுவதும், நமது வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டிய நமது ஒரு சிறப்பு உரிமையாகும்.

எங்கு?

காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைத் துதித்துப் புகழவேண்டும் எனில் அதற்கான இடம் எது? கர்த்தர் எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது என்றாலும் அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார். தேவனுடைய பிரசன்னம் எங்கெல்லாம் அறியப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் அவரது நாமம் துதிக்கப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது நமது கடமையாகும். எனவே உன்னதமான வானங்களிலும் கீழே தாழ்ந்த பூமியிலும் அவருடைய நாமத்தை நாம் துதிக்கவேண்டும். தேவனைத் துதிப்பதற்கு எப்படி காலவரையில்லையோ அதுபோன்று இடத்துக்கும் வரையரை கிடையாது. தேவனுடைய ஊழியக்காரர்களாக நாம் அவரை எல்லா இடங்களிலும் இடைவிடாமல் துதிக்க வேண்டும்.

ஏன்?

தேவனைத் துதிப்பதற்கான காரணங்கள் ஏராளம் உண்டு. அவர் எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவர்; அவரது மகிமை வானங்களுக்கு மேலானது. ஆயினும் அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார். அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். ஏழைகளை பிரபுக்களாக மாற்றுகிறார். மலடிக்கு குழந்தைச் செல்வங்களை அருளி மகிழ்ச்சியான வீட்டைக் கட்டுகிறார்.

இந்தநாளிலும் தேவனுக்கு நமது தேவைகளைத் தெரியப்படுத்தும் ஜெபக் குறிப்பை நாம் எழுதுவதுபோல, தேவனைத் துதிக்கும் குறிப்புகளையும் ஏற்படுத்துவோம். ஒவ்வொரு கிறிஸ்தவனும் தேவனைத் துதிக்கும் காரியங்களை எழுதி வைத்திருக்க வேண்டும். முதலாவது தேவனுடைய அன்பிலிருந்து ஆரம்பியுங்கள். அவருடைய மரணம், நமக்கு அருளின இரட்சிப்பு மற்றும் காலை முதல் மாலை வரை அவர் நமக்குச் செய்த நன்மைகளை குறிப்பெடுத்து துதியுங்கள். நமது ஜெபக் குறிப்பைப் போன்று துதிக் குறிப்பும் எண்ணிலடங்காதவைகளாய் அமைந்து நம்மை வியப்பில் ஆழ்த்தும்.


அதிகாலைப் பாடல்:

ஆ! என்னில் நூறுவாயும் நாவும் இருந்தால்
என் ராஜாவாம் தேவனின் மகிமையையும்,
என் அருமை இரட்சகரின் துதியையும்,
கிருபையின் வெற்றியையும் நாள்முழுவதும்
ஓயாத்தொனியாய் பாடுவேன்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை

வாசகர்கள் பேசுகிறார்கள்

(மார்ச்-ஏப்ரல் 2021)

[01]
அன்பார்ந்த ஆசிரியர் அவர்களுக்கு, தங்கள் கடிதங்களும் பத்திரிக்கைகளும் தவறாமல் கிடைக்கப்பெறுகிறோம். ஆண்டவரின் பெரிதான கிருபையால் 2020ஆம் ஆண்டின் வேதவாசிப்பின் அட்டவணைப்படி பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடிக்க கர்த்தர் கிருபை செய்தார்.

Mrs.Menaka George, Coimbatore.


[02]
நமது ஆண்டவரின் இரக்கம் நிறைந்த பராமரிப்போடு கடந்த 82 ஆண்டுகள் கர்த்தர் கரம்பிடித்து நடத்தி 2021க்குள் என்னை பிரவேசிக்கச் செய்துள்ளார் என்பதை கோடானகோடித் துதிகளோடு சாட்சி கூறி சமர்ப்பிக்கிறேன். கடந்த 50 ஆண்டுகட்கு முன்பிருந்தே இலங்கை வானொலியில் சத்திய வசன நிகழ்ச்சிகளைத் தவறாமல் கேட்டு மகிழ்ந்துள்ள நான் இன்று வரை தொடர்ந்து பங்காளராகவும் இருந்து வருகிறேன். 2020ஆம் ஆண்டிலும் மறுபடியும் ஒருமுறை தியான புத்தகத்திலுள்ள அட்டவணையைப் பயன்படுத்தி பரிசுத்த வேதாகமத்தைக் கிரமமாக வாசித்து முடிக்க அருள் செய்த ஆண்டவரைத் துதிக்கிறேன். நெருக்கடி நிறைந்த இக்கடைசி நாட்களில் சத்தியவசன ஊழியங்கள், ஊழியர்களை கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிக்கிறேன்.

Mrs.Chandrabai Paul, Coimbatore.


[03]
I thank Lord for your ministry through media and Bi-monthly maga zine and Anuthinamum Christhuvudan and they are very useful for our daily devotion. Thank you again and God bless your Lord’s ministry.

Dr.Deivamony Selvam, Trichy


[04]
இம்மட்டும் வழிநடத்தி பாதுகாத்து ஜீவன் தந்த கர்த்தருக்கே ஸ்தோத்திரம். முதிர்வயதிலும் உன்னைத் தாங்குவேன், தப்புவிப்பேன் என்று சொன்ன தேவன் எனது 82வது வயதைக் காணச்செய்தார். அவருக்கே கோடான கோடி நன்றி. அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்தை தினமும் வாசித்து தியானிப்பதின் மூலம் என் வாழ்வில் சமாதானம், ஆறுதல், மாற்றங்கள் உண்டாகச்செய்து ஆண்டவரை அதிகம் தேட, ஜெபிக்க துதிக்கச் செய்தார். வேதாகம வாசிப்பு அட்டவணைப் படி 2020ஆம் ஆண்டில் பரிசுத்த வேதாகமத்தை முழுவதுமாக வாசித்து முடிக்க கிருபை செய்தார். அவருக்கே நன்றி. ஒவ்வொரு மாதமும் தியானங்களை எழுதிவருகிற சகோதர, சகோதரிகளுக்காகவும், ஊழியத்தின் எல்லாத் தேவைகளும் சந்திக்கப்பட ஜெபிக்கிறேன்.

Mrs.Darlingam Gunaranjitham, Ramnad.


[05]
அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானப் புத்தகத்தில் பிரசுரமாகும் அட்டவணைப்படி 2020ஆம் ஆண்டில் பரிசுத்த வேதாகமத்தை முழுவதுமாக ஒருமுறை வாசித்து முடிக்க கிருபை செய்தற்காக ஆண்டவருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்.

Mr.P.Gurunath Rajasekeran, Chennai.

ஆசிரியரிடமிருந்து…

(மார்ச்-ஏப்ரல் 2021)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

நமக்காக பாவமாக்கப்பட்ட கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் யாவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இவ்விதழ் வாயிலாக தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகம், சத்தியவசனம் இணையதளம், வாட்ஸ் அப் ஆகியவற்றின் வாயிலாக தினமும் இத்தியானங்களை பல்லாயிரக்கணக்கானோர் வாசித்து ஆவிக்குரிய வாழ்வில் கர்த்தருக்குள் பெலனடைந்து வருகிறார்கள். அநேகருடைய சாட்சிகளை அறிந்து கர்த்தரைத் துதிக்கிறோம்.

சத்தியவசன வானொலி பணிகளுக்காகவும் தொலைகாட்சி ஊழியங்களுக்காகவும் பங்காளர்கள் ஜெபித்து உற்சாகமாய் தாங்கிவருகிறீர்கள். நன்றி கூறுகிறோம். 2019ஆம் ஆண்டிலே நிறுத்தம் செய்திருந்த சத்தியம் டிவி நிகழ்ச்சிகள் பிப்ரவரி மாதத்திலிருந்து மறுபடியும் ஒளிபரப்பாகி வருகிறது என்பதை தெரியப்படுத்துகிறோம். இந்நிகழ்ச்சிகளில் குடும்பமாக பங்குபெற்று ஆசீர்வாதம் பெறுங்கள்.

2020ஆம் ஆண்டில் வேதவாசிப்பு அட்டவணைப்படி பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்களின் பெயர்களை 7ஆம் பக்கத்தில் பிரசுரித்துள்ளோம். பங்காளர் குடும்பங்களிலே ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்துப் பிள்ளைகளுக்காகவும், அவர்கள் தேர்வுகளுக்காகவும் ஜெபிக்கிறோம்.

இவ்விதழில் சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் மார்ச் மாதத்தில் லெந்து நாட்களில் நாம் தியானிப்பதற்கான தியானங்களையும், ஏப்ரல் மாதம் 18 முதல் 30ஆம் தேதி வரை பாவத்தைக் குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டிய சத்தியங்களையும் எழுதியுள்ளார்கள். ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை கிறிஸ்து உயிர்த்தெழுந்த செய்திகளை சகோதரி சாந்திபொன்னு அவர்கள் எழுதியுள்ளார்கள். தியானங்களை எழுதிவரும் சகோதர, சகோதரிகளுக்காக ஜெபிக்க மறவாதிருங்கள். இத்தியானங்கள் ஒவ்வொன்றும் நாம் ஆவியில் பெலன்கொண்டு விசுவாசத்தில் நிலைத்திருக்க உதவி செய்யும் என்பதில் சந்தேகமில்லை. இத்தியானங்கள் வாயிலாக தாங்கள் பெறும் ஆசீர்வாதங்களை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.

கே.ப.ஆபிரகாம்