ஜெபக்குறிப்பு: 2021 ஆகஸ்ட் 31 செவ்வாய்

… நீரோ நிலைத்திருப்பீர் … நீரோ மாறாதவாயிருக்கிறீர் (சங்.102:26,27) தேவன் நம்மேல் எவ்வளவு கரிசனையுள்ளவராய், வல்லமையுள்ளவராய், மாறாதவராய் இந்த மாதம் முழுவதும் நம்மோடிருந்து ஜீவனை அழிவுக்கு விலக்கி பாதுகாத்தாரே, அவரை முழுமனதோடும் முழு உள்ளத்தோடும் நன்றி செலுத்தி ஆராதித்து மகிமைப்படுத்துவோம்.

இனிவரும் பலன்மேல்

தியானம்: 2021 ஆகஸ்ட் 31 செவ்வாய் | வேத வாசிப்பு: எபிரெயர் 11:24-29

…தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அனுபவிப்பதையே தெரிந்துகொண்டு… (எபிரெயர் 11:25).

ஒருபுறம் சௌகரியமான செழிப்பான ஜீவியம்; மறுபுறம் அசௌகரியங்களும் வறட்சியும் பாடுகளும் நிறைந்த ஜீவியம். இவை இரண்டும் நமக்கு முன்னே இருந்தால், சாதாரணமாக நமது தெரிவு எதுவாக இருக்கும்? யுத்த சூழ்நிலை காரணமாக வெளிநாடு சென்ற ஒரு குடும்பத்திற்கு, அந்த நாட்டில் தங்கியிருப்பதற்குரிய உத்தரவு கிடைத்துவிட்டது. ஆனால் அக்குடும்பத்தின் தலைவனோ, அந்த வெளி நாட்டிலிருக்கும் சௌகரியங்களைப் பார்க்கிலும் சொந்த நாட்டின் அசௌகரியங்களே மேல் என்று சொல்லி, குடும்பத்துடன் நாடு திரும்பிவிட்டார். அவரிடம் கேட்டபோது, “மோசே விசுவாசத்தினாலே ஒரு தெரிந்தெடுப்பைச் செய்தார். நானோ அனுபவித்ததினாலே இந்தத் தெரிந்தெடுப்பைச் செய்தேன். நமது சொந்த நாட்டில் கஷ்டமானாலும் கௌரவமாக வாழலாமே” என்றார்.

மோசேயின் தெரிந்தெடுப்பு விசித்திரமானது. எகிப்து செழிப்பும், இஸ்ரவேலின் வறட்சியும்; அரண்மனையின் சுதந்திரமும், ஆளோட்டிகளின் அடிமைத்தனமும்; மகிழ்ச்சியும் களியாட்டமும், துக்கமும் அழுகையும் என்று எதிரும் புதிருமான இருவேறுபட்ட வாழ்வு. மாத்திரமல்ல, வாழ்வு கொடுத்து வளர்த்தெடுத்த அன்பு ஒருபுறம், பாடனுபவிக்கும் சொந்த இரத்தம் மறுபுறம்; பார்வோன் குமாரத்தியின் மகன் என்ற பெருமைக்குரிய பெயர் ஒருபுறம், இஸ்ரவேலன் என்ற மதிப்பற்ற பெயர் மறுபுறம்; அநித்தியமான பாவசந்தோஷம் ஒருபுறம், நித்திய இன்பத்தைத் தரும் துன்பம் மறுபுறம்; எகிப்தின் பொக்கிஷம் ஒருபுறம், கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தை மறுபுறம். இவற்றில் எப்பக்கத்தை சாதாரணமாக ஒரு மனுஷன் தெரிந்தெடுப்பான்? “இனிவரும் பலன்மேல்” – இதுதான் மோசேயின் தெரிந்தெடுப்பின் இரகசியமாகும். அப்பலனை நம்புவதற்கு யார் அதை கண்டார்? ஆனால் மோசே நம்பினார்; தேவனுடைய பிள்ளைகளோடுகூட நிந்தையை அனுபவிப்பதையே தெரிந்தெடுத்தார். அரண்மனையைவிட்டு வெளியேறினார். இன்றும் அவருடைய தெரிந்தெடுப்பு நமக்கொரு சவாலாயிருக்கிறது.

தேவபிள்ளையே, நாம் இலகுவில் வஞ்சிக்கப்பட்டுவிட ஏதுவாக ஏராளமான காரியங்கள் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன. நன்றிக்கடனுக்காகவே பல தெரிந்தெடுப்புகளைச் செய்துவிட்டு தடுமாறுகிறோம். இவ்வுலக காரியங்கள் உலகத் தின் பெறுமதிப்பை அதிகமாகக் காட்டி நம்மைத் தடுமாற வைக்கும். “இனி வரும் பலன்மேல்” மோசேக்கு இதை நம்பக் கடினமானபோதும் நம்பினார். ஆனால் இன்று நமது காரியம் அப்படியல்லவே. அதை விசுவாசிக்க நமக்கு என்ன தடை? நமது கண்ணோட்டம் எப்போதும் தேவராஜ்யத்தின் நித்திய பெறுமதிப்பை நோக்கி இருக்குமானால், அந்த விசுவாசம், நல்ல தெரிவை அல்ல; சரியான தெரிவைச் செய்ய நம்மை வழிநடத்தும்.

ஜெபம்: “நித்திய ராஜ்யத்தின் நித்திய பெறுமதிப்பை எனக்கு உணர்த்திய தேவனே, நான் காரியங்களைத் தெரிந்தெடுக்கும் நிலை வரும்போது நீரே எனக்கு நல் ஆலோசனையைத் தந்து என்னை வழிநடத்தும். ஆமென்.”

ஜெபக்குறிப்பு: 2021 ஆகஸ்ட் 30 திங்கள்

…பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? (மத்.7:11) இந்த வாக்கைப் பற்றிக்கொண்டவர்களாய் பலவிதமானத் தேவைகளோடு உள்ள பங்காளர்கள் ஆண்டவரை உறுதியாய் பற்றிக்கொள்ளவும், கர்த்தர் தமது பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறந்து அவர்களது தேவைகளைச் சந்தித்திடவும் வேண்டுதல் செய்வோம்.

பரமனா? பாகாலா?

தியானம்: 2021 ஆகஸ்ட் 30 திங்கள் | வேத வாசிப்பு: 1இராஜாக்கள் 18:16-24

“நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள். பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் (1இராஜா. 18:21).

தெரிவுக்குரிய இரண்டு விஷயங்கள் இருந்தால் அவற்றின் மத்தியிலே நாம் அலைபாய்வது ஏன்? இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, நமக்கு திடமான மனது இல்லை; காரியங்களைக் குறித்து ஒரு தெளிவில்லை. அடுத்தது, நல்லது சரியானது தேவையானது எது என்பது நன்றாகவே தெரிந்தாலும், இதுவரைக்கும் வாழ்ந்த வாழ்வு, அனுபவித்த சந்தோஷங்கள், பெற்ற நன்மைகள் யாவும் ஒன்றிணைந்து, நம்மைப் பற்றிப்பிடித்து தன் பக்கம் இழுப்பதால் சரியான தெரிவைச் செய்ய முடிவதில்லை. ஒரு காரியத்தைக் குறித்த திட்டவட்டமான தெளிவும் மனவுறுதியும் இருக்குமானால் தடுமாற்றத்துக்கு இடமேது? உதாரணமாக, குடிக்கு அடிமையான ஒருவன், ஒரு கொலைக்கு சாட்சியாக இருந்தான், குடிக்காமல் இருக்கும்போது நிதானமாக சிந்தித்து, கொலைகாரனைக் காட்டிக்கொடுக்கத் தீர்மானித்தான். இதையறிந்த கொலையாளி அவனை தந்திரமாக அழைத்து மேல்நாட்டுக் குடிவகையைக் காட்ட, அவனும் மனம் மாறி “ஐயா நீங்கள்தான் பெரியவர்” என வாழ்த்திவிட்டு, மதுபாட்டிலை எடுத்துக்கொண்டு போய்விட்டான். இதுதான் இன்று நம் உலகில் அநேகரது நிலையாகும்.

ஆகாப் ராஜாவின் சொகுசுகளையும் நன்மைகளையும் அனுபவித்து பாகாலிடம் சாய்ந்துவிட்ட இஸ்ரவேல் முழுகுடும்பத்தையும் ஒன்றுகூட்டிய எலியா அவர்களிடம் கேள்வி கேட்டார். “எந்தமட்டும் குந்திக்குந்தி நடப்பீர்கள்?” தேவன் அல்லது பாகால் இரண்டில் ஒன்றைத் தெரிந்தெடுக்கும்படி சவால் விட்டார். தேவனோ, பாகாலோ யாராயிருந்தாலும் அது அவர்கள் சொந்த விருப்பம். (ஆனால் தாம் பின்பற்றும் தெய்வத்திடம் ஒரு வைராக்கியம், ஒரு உறுதி உண்மை வேண்டும்). ஆனால் இந்த இஸ்ரவேலரோ இரண்டு பக்கமுமே உண்மையற்றவர்களாக இருந்தனர். இவர்களிடம் எலியா கேட்ட கேள்விக்கு அந்த ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை. இது ஒருவிதத்தில் கபட்டுத்தனம் எனலாம். தேவனே தேவன் என்பது தெரியாமலும் இல்லை; ஆனால், பாகாலைச் சேவிப்பதால் கிடைக்கின்ற நன்மைகளையும் இழக்க விருப்பமில்லை. ஆகவே இந்த ஜனங்கள், பதில் சொல்லி அகப்படுவதைவிட பேசாமல் இருந்துவிட்டனர்.

தேவபிள்ளையே, நாம் தேவனுக்கு எவ்வளவு தூரம் உண்மையாய் இருக்கிறோம்? நமக்கு ஆண்டவரும் வேண்டும், உலகமும் அதன் மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்றால் அது தகுமா? உண்மையைவிட்டு மாயையைப் பின் பற்றி, குந்திக்குந்தி நடப்போமானால் ஒரு பொய்யான கடவுளை அதாவது நம்மையும் உலகையும் சேவிக்கிறவர்களாவோம். ஆகவே, இப்போதே சரியான திடமான ஒரு தெரிந்தெடுப்பைச் செய்வோமாக.

ஜெபம்: அன்பின் கர்த்தாவே, உமக்கும் உலகத்திற்கும் சேவை செய்த மாயைகளை விட்டு விட்டு இதோ, உம்மைத் தெரிந்துகொண்டு வாழ என்னை அர்ப்பணிக்கிறேன். ஆமென்.