ஜெபக்குறிப்பு: 2021 ஆகஸ்ட் 4 புதன்

சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை … அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார் (மத்.15:30) இவ்வாக்குப்படியே பற்பல வியாதிகளோடும், சுக வீனங்களோடும் ஜெபிக்கக் கேட்ட பங்காளர்களையும் கர்த்தர்தாமே தொட்டு அவர்களை சொஸ்தமாக்கவும் பரிபூரண கிருபை எல்லார்மேலும் உண்டாயிருக்கவும் பாரத்துடன் ஜெபிப்போம்.

தேவபயம்

தியானம்: 2021 ஆகஸ்ட் 4 புதன் | வேத வாசிப்பு: 1சாமுவேல் 26:9-25

என் ஜீவனும் கர்த்தரின் பார்வைக்கு அருமையாயிருப்ப தினால், அவர் என்னை எல்லா உபத்திரவத்திற்கும் நீங்கலாக்கி விடுவாராக (1சாமு.26:24).

விழுந்துபோன மனித குணத்தை அறிவீர்களா? பழிக்குப்பழி, பகையாளிக்குத் தீங்கு செய்தல், பகையுணர்வைக் காட்டுதல் ஆகியவற்றை ஆதாம், காயீன் வாழ்விலும் காண்கிறோம். ஆனால், தேவபயம் என்பது அழகான சிறப்பான மானிட வாழ்வை மேம்படுத்துகின்ற ஒரு விஷயம்! இது இருந்தால், அன்பு, மன்னிப்பு, நீடிய பொறுமை எல்லாமே நமது அலங்காரமாயிருக்கும். எப்படி? ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு அசைவையும்கூட தேவன் பார்க்கிறார் என்ற உணர்வு நமக்குள் வேர்விட்டிருக்குமானால், பகைக்குப் பதில் பணிவும், ஆத்திரத்திற்குப் பதில் ஆதரவும், அன்பும் மன்னிப்பும் ஒன்றன்பின் ஒன்றாக உள்ளிருந்து பிரவாகித்து பாயும். இன்று நம்மில் பிரவாகிப்பது எது?

நான் ஆண்டவருக்குள் விடுதலை பெற்று வேதாகமத்தை முதன்முறையாக உணர்வோடு வாசிக்க ஆரம்பித்தபோது, தாவீதைக் குறித்து, இப்படியும் ஒரு மனுஷனா? தாவீது சவுலுக்கு செய்ததை மன்னிப்பு என்பதா? நீடிய பொறுமை என்பதா? தேவபயம் என்பதா? எனக்குள் அன்று குழப்பம்தான் ஏற்பட்டது. தாவீதை கொன்றுபோட எண்ணுமளவுக்கு தாவீது சவுலுக்குச் செய்த குற்றம் என்ன? எதுவுமே இல்லை. இருந்தும், தாவீது விலகி ஓடினானே தவிர, சவுலை எதிர்க்கவுமில்லை, பழிவாங்க எண்ணவுமில்லை. இத்தனைக்கும் கர்த்தர் சவுலைத் தள்ளிப்போட்டிருந்தார். அப்படியிருந்தும் தாவீது சொன்னது என்ன? “கர்த்தர் அவரை அடித்து, அல்லது அவருடைய காலம் வந்து, அவர் மரித்து, அல்லது அவர் யுத்தத்திற்குப்போய் மாண்டாலொழிய, நான் கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் கைபோடாதபடிக்கு கர்த்தர் என்னைக் காக்கக்கடவர்” என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு என்று சொல்லி தனக்குத்தானே ஒரு வேலியைப் போட்டுக்கொண்டார் தாவீது.

ராஜாங்கத்தையும் விட்டுவிட்டு தன்னைக் கொல்ல துரத்தி திரிந்த சவுலைக் கொல்ல இரு தடவை தருணம் கிடைத்தும் தாவீது அவனை தப்பவிட்டது, தாவீதின் மன்னிப்பின் சிந்தையா? தேவபயமா? கிறிஸ்து, தாம் தேவனாயிருந்தும் தமது வல்லமையை தம்மை கொலை செய்தவர்கள்மீது காட்டவில்லை, மாறாக அவர்களுடைய மன்னிப்புக்காக தாமே இரங்கி ஜெபித்தார். எப்படி? தன் பிதாவின் சித்தம் செய்துமுடிப்பதே அவரது ஒரே நோக்கமாயிருந்ததே தவிர, தன்னைப் பாதுகாக்க அவர் முனையவில்லை. இன்று இயேசுவின் சிந்தையை, அவர் காட்டிய உன்னத வழியை அறிந்து உணர்ந்த நாம் தேவபயத்துடன், பிறரை நடத்துகிறோமா?

கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்கு திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும். கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவ ஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம் (நீதிமொழிகள் 14:26,27).

ஜெபம்: அன்பின் தேவனே, எனது எல்லா அசைவுகளையும், மன எண்ணங்களையும் நீர் காண்கிறீர் என்ற உணர்வுடனும் தேவ பயத்துடனும் வாழ எனக்குக் கிருபை தாரும். ஆமென்.