ஜெபக்குறிப்பு: 2021 செப்டம்பர் 30 வியாழன்
என் கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்; என் உடன்படிக்கை அவனுக்காக உறுதிப் படுத்தப்படும் (சங்.89:28) இம்மாதம் முழுவதும் உடன்படிக்கையின் தேவன் நம்மோடிருந்து தம்முடைய கிருபையினால் நம்மை பாதுகாத்து நடத்தினார். அவருக்கே சகல மகிமையும் துதியும் ஸ்தோத்திரமும் உண்டாவதாக. ஆமென்.
ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? (மத்.7:11) .
நான் தேவனுடைய பிள்ளை!
தியானம்: 2021 செப்டம்பர் 30 வியாழன் | வேத வாசிப்பு: ஏசாயா 54:1-17
இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும், என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார் (ஏசா.54:17).
வேதாகமத்தை வாசித்திருப்போம்; சில பகுதிகள் நமக்குப் பிடித்தவையாயிருக்கும், சில பழக்கமாயிருக்கும். நமக்குப் பழக்கப்பட்ட வசனங்களாக இருந்தாலும், வசனம் ஒருநாள் நமது உள்ளத்தில் உறுதியாய்ப் பேசும், இந்த அனுபவம் உங்களுக்குண்டா? ஒரு வார்த்தை நம்மை உந்தித்தள்ளுகிறது என்றால், கர்த்தர் நமக்கு எதையோ உணர்த்துகிறார் என்பது உறுதி. ஏராளமான வாக்குத் தத்தங்கள் வேதாகமத்திலே உண்டு; வழிநடத்துதலின் வசனங்கள், கண்டிப்பின் வார்த்தைகள் எல்லாம் உண்டு. வேறொருவர் சொல்லியோ, உணர்ச்சிவசப்பட்டோ ஒரு வசனத்தை நமக்கு ஏற்றபடி பற்றிக்கொள்வது ஒன்று; ஆனால், தனிமையான ஜெப தியான வேளையிலே கர்த்தர் நம்முடனே உறுதியாக இடைப்படுவது மேன்மையான அனுபவமாகும். எந்த சூழ்நிலையாயினும் அந்த வார்த்தையைப் பற்றிக்கொண்டு தொடர்ந்து கர்த்தருக்குள் காத்திருக்கும்போது அது நிச்சயம் நிறைவேறும். கர்த்தர் நம்முடன் இடைப்பட்டார் என்பதற்கு அது சாட்சியாகும்.
கர்த்தர் இஸ்ரவேலை அழைத்து நடத்திச்சென்ற வழிகள், நிறைவேறிவிட்ட நிறைவேறவேண்டிய தீர்க்கதரிசனங்களை உன்னிப்பாகக் கவனித்தால், தேவனின் அன்பும் நீதியும் எவ்வளவுக்குப் பரிசுத்தமாக கரம்கோர்த்திருக்கிறது என்பதை நாம் உணரலாம். அவர் தம் பிள்ளைகளைத்தாம் தண்டிப்பார், கண்டிப்பார், எதுவும் செய்வார்; சில சமயங்களில் தாமே புறவின மக்களை உபயோகித்துத் தம் பிள்ளைகளை தண்டிப்பார். ஆனால் தம்மை மிஞ்சி யாரும் தம் பிள்ளைகளில் கைவைக்க அவர் இடமளிப்பதில்லை. இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன். ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன்” என்று கூறியதோடு, தமது மனதுருக்கத்தை, அன்பை, அநாதி திட்டத்தை கர்த்தர் வெளிப்படுத்த தவறவில்லை. ஆம், கர்த்தர் இன்றும் தமது பிள்ளைகளாகிய நம்மைக் குறித்தும் கரிசனைமிக்கவராகவே இருக்கிறார்.
அன்பானவர்களே, ஒரு காரியத்தை நாம் நம்பவேண்டும். தேவனுடைய பிள்ளையாக வாழுவது நமது பொறுப்பு; அப்படி வாழும்போது நம்மை யாரும் தொட்டால், எதிர்த்தால், தூஷித்தால் அது கர்த்தரை எதிர்ப்பதற்குச் சமம். ஏன் தெரியுமா? “உன்னைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்” என்று சொன்ன கர்த்தர் பொய் சொல்கிறவர் அல்ல. ஆகவே தைரியத்தோடே கர்த்தருடைய வார்த்தையைப் பற்றிக்கொண்டு, ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் அவரோடு சஞ்சரிக்கின்ற உன்னத அனுபவத்தைக் கேட்டுப் பெற்றுக்கொள்வோம். நமக்கு எதிராக என்ன வந்தாலும், கர்த்தருடைய பாதுகாப்பு உண்டு என்று நம்புவோம்; அப்போது அது தேவன் நமக்கு அருளும் நீதியாக, அவர் தந்த சுதந்திரமாக இருக்கின்றதே. நீங்கள் அப்பா பிதாவே, என்று கூப்பிடப் பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள் (ரோமர் 8:15).
ஜெபம்: அன்பின் தகப்பனே, நான் உம்முடைய பிள்ளையாக இருக்கின்ற பாக்கியத்தை நீர் எனக்கு தந்தபடியால் உம்மைத் துதிக்கிறேன். ஆமென்.
வாக்குத்தத்தம்: 2021 செப்டம்பர் 29 புதன்
இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள் (மத்.5:7).
ஏசாயா 30,31 | எபேசியர் 1
ஜெபக்குறிப்பு: 2021 செப்டம்பர் 29 புதன்
ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது (சங்.136:4) சத்தியவசன ஊழியங்களிலே பிரதிநிதிகளாக பணியாற்றி வரும் ஒவ்வொருவரையும் கர்த்தர் ஆசீர்வதித்து, அவர்களது பணிகள், குடும்பங்களின் தேவைகளை சந்திக்கவும் ஊழியத்தின் நிமித்தமாய் எடுக்கும் பிரயாசங்களில் கூட இருந்து வழிநடத்தவும் வேண்டுதல் செய்வோம்.
உலகத்தோற்றம் முதற்கொண்டு!
தியானம்: 2021 செப்டம்பர் 29 புதன் | வேத வாசிப்பு: ஏசாயா 64:1-8
தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, … ஒருவரும் கேட்டதுமில்லை, …. அவைகளைக் கண்டதுமில்லை (ஏசா. 64:4).
ஓர் உண்மை சம்பவத்தை வாசிக்க நேர்ந்தது. ஒரு மகன், அவனுக்குத் தகப்பனில் அலாதி பிரியம். தகப்பனும் மகனின் விருப்பங்கள் எதையும் மறுத்ததில்லை. ஆனால், பெற்றோருக்குள் தகராறு ஏற்பட்டு, ஒருநாள் தகப்பன், தாயை அடித்துவிட்டு, வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். தகப்பன் வெளியேற தாய்தான் காரணம் என நினைத்த இந்தச் சிறுவனுக்குத் தாயின்மீது பயங்கர வெறுப்பு ஏற்பட்டது; அவன் தாயை அடியோடு வெறுத்தான். சில மாதங்களில் தாய் வியாதிப்பட்டு இறந்துபோனாள். பின்னர் ஒருநாள் இவன் தாயின் கைப்பட எழுதிய ஒரு கடிதத்தைக் கண்டான். “மகனே, உன் தகப்பனுக்கு இன்னுமொரு குடும்பம் இருப்பதை நீ அறிந்துகொள்வதை நான் விரும்பவில்லை. உன்னை என் உயிரினும் மேலாக நேசிக்கிறேன். நீ என் கர்ப்பத்தில் உருவான நாட்களிலேயே உனக்காக, உன் எதிர்காலத்திற்காக நான் ஆயத்தம்பண்ணி வைத்த யாவையும் கீழுள்ள விலாசத்திற்குச் சென்று பெற்றுக்கொள்” என எழுதப்பட்டிருந்தது. மகன் மனங்கசந்து அழுதான். குறிப்பிட்ட விலாசத்திற்குப் போனபோது, அவனுக்கு ஆச்சரியங்கள் காத்திருந்தன. தாயின் அன்பை உணர்ந்து அழுதான் அவன்.
தன் வயிற்றில் உருவானது ஆணோ பெண்ணோ என்று தெரியாதபோதும், தன் கணவன் துரோகம் செய்வான் என்பதுகூடத் தெரியாதிருந்தபோதும், தன் பிள்ளைக்காக முன்னறிவுடன் அவள் ஆயத்தங்களைச் செய்துவைத்திருந்தாளே இந்தச் சாதாரண தாய்! இஸ்ரவேலை தமக்கென அழைத்த தேவன் அவர்களுக்காக ஆயத்தம் பண்ணி வைத்திருந்தவற்றை, வனாந்தரத்திலே அவர்களை நடத்திய வழிகளை, இன்று நாம் வேதத்தில் வாசிக்கும்போது எத்தனை ஆச்சரியம்! அன்று இஸ்ரவேலினாலேயே அவற்றைப் புரிந்துகொள்ள முடியாதிருந்தது. ஆனால், அன்றும், இன்றும், முடிவு பரியந்தமும் தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்கிலிருந்து மாறவுமில்லை; மாறவுமாட்டார். இஸ்ரவேல் திசைமாறும்போது, தேவன் தண்டித்தாலும், அவர்கள் திரும்பிவரும்போது மனமுருகிச் சேர்த்துக்கொண்டார். அவர்களுக்காக அவர் வைத்திருந்த எதையும் இதுவரை இந்த உலகம் முழுதாகக் காணவேயில்லை!
தேவபிள்ளையே, கர்த்தருக்குத் தங்களை ஒப்புக்கொடுத்துக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்பட்டதாகச் சரித்திரமே இல்லை. அவர் தம்மை நம்பி, அன்புகூருகிறவர்களுக்காக ஆயத்தம் பண்ணி வைத்திருக்கிறவைகளை உலகத்தோற்றம் முதற்கொண்டு ஒருவரும் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. அப்படிப்பட்ட நன்மையை நமக்காகத் தேவன் வைத்திருக்கும்போது, நாம் எதற்காகப் பயப்படவேண்டும்? நமது கண்கள் இந்தப் பூமியை அல்ல; தேவனோடு வாழும் பரலோக வாழ்வை நோக்கட்டும். அந்தப் பேரானந்தம், இன்றைய அற்ப வேதனைகளை அழித்துப்போடும்.
ஜெபம்: உலகத் தோற்றத்திற்கு முன்பாக எங்களை தெரிந்தெடுத்தவரே, இரட்சிப்பு, தேவ பிள்ளை என்ற அதிகாரம், தேவனோடு நித்திய வாழ்வு இவற்றை தந்தீரே உமக்கு நன்றி. ஆமென்.