வாக்குத்தத்தம்: 2021 செப்டம்பர் 1 புதன்

விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் … உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார் (2கொரி. 9:10).


கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான் (எரேமி.17:7).
சங்கீதம் 139-144 | 1 கொரிந்தியர் 11

ஜெபக்குறிப்பு: 2021 செப்டம்பர் 1 புதன்

ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக (நெகேமி. 1:11).


விதைக்கிறவனுக்கு விதையையும் புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார் (2கொரி.9:10) இவ்வாக்கின்படியே புதிய மாதத்தில் நம்முடைய குடும்பத்தை, ஊழியங்களை, தேசத்தை கர்த்தர் விசாரித்து போஷித்து வழி நடத்த ஜெபிப்போம்.

அருமையானவைகள்!

தியானம்: 2021 செப்டம்பர் 1 புதன் | வேத வாசிப்பு: ஏசாயா 9:6; நீதி.1:5

தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம் (சங்.139:17).

அன்பான வாசகர்களே, இவ்வருடத்தில் எட்டு மாதங்களைக் கடந்து ஒரு புதிய மாதத்திற்குள்ளாக வருவதற்கு தேவன் கிருபை செய்துள்ளார். கொரோனா தொற்று பரவுதல் இன்னும் உலகத்தை அச்சுறுத்திவருகிறது. தேவன் இம்மாதத்திலும் நம்மையும் நமது குடும்பத்தையும் தேசத்தையும் இந்த தீங்கிலிருந்து பாதுகாக்கவல்லவர். ஆனபடியால் நாம் மனந்தளராமல் ஊக்கமாக தேவனிடம் மன்றாடுவோம்.

கிறிஸ்துவுக்குள் அருமையானவர்களே, தியான வேளை என்பது நாம் கர்த்தரோடு நாம் உரையாடுவதும் அவர் நம்மோடு உரையாடுவதுமான நேரம். நாம் நம்முடைய இதயத்தில் உள்ள நன்றிகளையும் இதயப் பாரங்களையும் அவருக்கு தெரிவிக்கும் நேரம் அது. இந்த நேரத்தில் நாம் அவருடைய சமுகத்தை நாடி ஓடி வரும்போது எவ்வாறு வரவேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரை தரிசிப்பதில்லயே (எபி.12:14). எனவே தியான வேளையை ஏதோ ஒரு கடமைக்குச் செய்யும் ஒரு காரியமாக சிந்திப்பதை தேவன் விரும்புவதில்லை.

ஆனால் நாம் கர்த்தரோடு உறவாட வேண்டுமென விரும்பினால் அவருடைய பரிசுத்த சமுகத்திற்கு பரிசுத்த அலங்காரத்துடன் வரவேண்டும். அப்படி வரும்போதுதான் அவர் நம்மோடு பேசுவார். இன்றைய நாளிலும் தொடர்ந்து வரும் தியான வேளைகளையும் பரிசுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் (யோசுவா 3:5). நீங்கள் பரிசுத்தத்தோடு அவர் சமுகம் வருவீர்களானால், கர்த்தர் உங்கள் மத்தியில் அற்புதம் செய்வார்.

தேவனே உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள் அவைகளின் தொகை எவ்வளவு அதிகம் என்பதுபோல அருமையானதும் அதிகமானதுமான ஆலோசனைகள் வேதாகமத்தில் சங்கீதப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதைப் பார்க்கிறோம். எனவே, சங்கீதப் புத்தகத்தை நாம் கருத்தாய் தியானிப்பதன் வாயிலாக நமது வாழ்விற்கான அநேக ஆலோசனைகளை நாம் பெற்றுக்கொள்ள இயலும். அதேவேளையில் தினமும் தேவசமுகத்தில் தியான வேளைக்கு வரும்போது நம்மை நாமே ஆராய்ந்து பார்த்து தேவனுக்குப் பிரியமில்லாத காரியம் நம் வாழ்க்கையில் இருக்குமானால், அவற்றை அறிக்கை செய்து கர்த்தாவே, இந்த தியான வேளையில் என் கண்கள் உம்முடைய வேதத்திலுள்ள அதிசயங்களைக் காணும்படியான அற்புதத்தை செய்யுமென ஜெபிப்போம்.

ஜெபம்: கிருபையுள்ள ஆண்டவரே, பரிசுத்தத்தோடு உம்முடைய சமுகத்தில் வந்து உம்மைத் தொழுதுக்கொள்ளவும், எங்கள் தியான வேளைகளில் உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நாங்கள் பார்க்கும்படிக்கு எங்கள் கண்களைத் திறந்தருள வேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

தேவனைச் சார்ந்திருத்தல்

அதிகாலை வேளையில்…
(செப்டம்பர்-அக்டோபர் 2021)
Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: சங்கீதம் 127:1-2


நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார் (சங்கீதம் 127:2).


இந்த சிறு சங்கீதமானது தேவனை விட்டு சுயபெலத்தை நம்பி செயல்படும் மனிதனின் அறியாமையை மையக் கருத்தாகக் கொண்டுள்ளது. தேவனுடைய வல்லமையைச் சார்ந்திராமல் எடுக்கப்படும் மனித முயற்சிகள் அழிவையே கொண்டுவரும்.

இது உண்மை என்பதை மனித வாழ்வின் சமுதாயம் (வசனம்1), குடிமை (வசனம் 1), வர்த்தகம் (வசனம் 2) மற்றும் குடும்பத்துக்குரியவை (வசனம் 3-5) ஆகிய நான்கு அம்சங்களில் சங்கீதக்காரன் விளக்குகிறார். இவை ஒவ்வொன்றிலும் தேவனைச் சார்ந்திருப்பதன் அவசியத்தை சந்தேகத்திற்கிடமின்றி வலியுறுத்தியுள்ளார்.

கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா. ஒரு தனி மனிதனின் வசிப்பிடமோ அல்லது தேவனுடைய ஆலயமோ எதுவாயிருந்தாலும் தேவனுடைய ஆசீர்வாதத்தை நாம் தேடாவிடில் கட்டிடம் கட்டும் வேலையை ஆரம்பிப்பது உபயோகமற்றது. வீட்டைக் கட்டுவதற்கு தேவனுடைய அனுமதி தேவையென்று அவர் கூறாமல், கர்த்தரே அதைக் கட்டவேண்டும் என்று சொல்லுகிறார். நாம் தேவையான காரியங்களைக் கொடுக்கும்பொழுது சமுதாய வாழ்வில் கர்த்தர் கிரியை செய்வார் என்றும் விளக்குகிறார்.

கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா. யேகோவா தேவனே ஒவ்வொரு நகரத்துக்கும் கண்ணுக்குப் புலப்படாத காவற்காரர் என்று குடிமை வாழ்வைக் குறித்து சங்கீதக்காரன் அறிவிக்கிறார். ஒரு காவலாளி நிலையான விழிப்புடன் தனிமையாக செயல்படுவது எந்த பலனையும் தராது. ஆண்டவரும் நம்முடன் இல்லையெனில், நாம் மட்டும் பிரயாசப்படுவது சிறப்பானது அல்ல. எதிரி நெருங்கும்பொழுது அதை எச்சரிக்க காவல் இல்லையென்றால் அது எவ்வளவு மடமைத்தனமோ அதேபோல் நம்முடைய சுய பெலத்தினால் காவல் செய்வதும் மடமையாகும்.

நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்.

இங்கு அதிகாலையில் எழுவதற்கு சங்கீதக்காரன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை; நமது பிரச்சனைகளைப் பற்றி கவலைப்பட்டு அதிகாலையில் எழுவதும், இரவு வெகுநேரம் கண் விழிப்பதும் எதையும் சாதிக்காது என்பதையே விளக்குகிறார். இதிலும் நாம் தேவனையே முழுவதுமாக சார்ந்திருக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.

இறுதியாக, சங்கீதக்காரன் தனது கவனத்தை குடும்பத்தை நோக்கித் திருப்புகிறார். இவ்வுலகத்தின் தத்துவத்துக்கு நேரிடையான ஒரு கருத்தைத் தருகிறார். பிள்ளைகள் தனிப்பட்ட சுதந்தரத்துக்குத் தடையாக இருக்கின்றனர் என நினைத்து அநேக சிசுக்கள் கருவிலேயே கலைக்கப்படுகின்றனர். ஆனால் சங்கீதக்காரன் குழந்தைகள் தேவனால் அருளப்படும் ஈவு; அவர்களால் வீடு கட்டப்படுகிறது என்கிறார். எபிரெய மொழியில் மகன் (பென்) மற்றும் மகள் (பத்) என்ற இரு சொற்களுமே வீடு என்ற பொருளையுடைய பெத் என்ற சொல்லை அடிப்படையாகக்கொண்டது. வீட்டைக் கட்டுவது இரத்த உறவுகளுடன் தொடர்புடையது; வீடு கட்டுமானத்தைவிட குழந்தைகள் வளர்ப்பே முக்கியமானது.

இரு வாலிப பையன்களைக் கொண்ட ஒரு தம்பதியர் வீட்டுக்கு ஒரு போதகர் சென்றார். அவர் அந்த வீட்டுக்குள் நுழைந்தவுடன் அங்கு ஒரு நட்புச் சூழலை உணர்ந்தார். அந்த வரவேற்பறையில் இருந்த கம்பளம் அதிகக் கந்தலாக இருந்ததையும் அவர் கண்டார். அச்சந்திப்பு முடிந்தவுடன் அந்த வீட்டின் தாயார் அவரிடம், சில நாட்களுக்கு முன் தங்களது அண்டை வீடுகளைச் சேர்ந்த அநேக பையன்கள் தன் வீட்டின் வரவேற்பறையில் பல மணிநேரம் மகிழ்ச்சியுடன் செலவழித்தனர் என்றும் அவர்கள் சிறிது முரட்டுத்தனமாகவும் கூச்சலாகவும் இருந்ததால்தான் அவர்களை வேறு இடத்துக்குச் சென்று விளையாடக் கூறியதாகவும் பகிர்ந்துகொண்டார். ஆனால், அவர்களோ “நாங்கள் எங்கு செல்வோம்?” என்று, கேட்டனர். அங்கிருந்த ஒரு பையனிடம் “உங்கள் வீட்டுக்குச் செல்லலாமே” என்று கேட்டேன். அதற்கு அவன், “வாய்ப்பேயில்லை; எங்கள் வீட்டுக்கு பிள்ளைகளை அழைத்துவர அனுமதி இல்லை” என்று கூறினான். மற்றவர்களும் அவ்வாறே கூறினர். தனது வீடு ஒன்றே அவர்கள் தாராளமாக வந்து செல்லவும், விளையாடி மகிழவும் உகந்த இடம் என்று தான் அறிந்துகொண்டதாகவும், அன்றிலிருந்து அவர்களுக்குத் தங்களது வீடு எப்பொழுதும் திறந்திருக்கும் என்று கூறினார்.

தன்னுடைய பொருட்களை நாசமாக்க அனுமதிப்பதில்லை என்றாலும், அந்த கம்பளம் வெறும் ஒரு பொருள்; ஆனால் பிள்ளைகளோ கடவுளின் சுதந்தரம் என்றும், தனது குடும்பத்தை வளர்க்கவேண்டுமெனில் பிள்ளைகளிடம் அதிகமான அன்பைச் செலுத்த வேண்டும் என்றும், அதற்கு ஆண்டவரைச் சார்ந்திருக்கவேண்டும் என்றும் அத்தாயார் அறிந்திருந்தார்.

நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் சரி, சமுதாயம், குடிமை, வணிகம் அல்லது குடும்பம் இவற்றில் வெற்றி பெற வேண்டுமெனில் அதற்கு தேவனைச் சார்ந்திருத்தல் அவசியமாகும். தேவனுடைய ஒத்தாசையின்றி நீங்கள் வெற்றியுள்ள ஒரு குடும்பத்தை அமைக்க முடியாது. தேவனுடைய பாதுகாப்பு இல்லாமல் உங்களது நகரத்தை காவல் செய்வது தோல்வியையே தரும். உங்களது வியாபாரத்தில் களைப்பில்லாமல் செய்வதற்கு தேவனுடைய பெலன் தேவை. தேவனுடைய ஞானம் இல்லாமல் பிள்ளைகளை அன்புடன் வளர்ப்பதும் இயலாத காரியம். வெற்றிக்கு தேவனை சார்ந்திருக்காமல் செய்யும் அனைத்து மனித உழைப்பும் வீணே. இன்றே உங்களை ஒரு வெற்றி வீரனாக மாற்ற ஆண்டவரைக் கேளுங்கள்.


அதிகாலைப்பாடல்:

தேவன் அஸ்திபாரமாக இல்லையெனில்
எக்கட்டிடமும் புயலில் நிலைநிற்காது;
மதிலாகவும் கோட்டையாகவும் இல்லையெனில்
அதன் அரணும் காவற்கோபுரமும் வீண்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை

வாசகர்கள் பேசுகிறார்கள்

(செப்டம்பர்-அக்டோபர் 2021)

[01]
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 11.8.2021 அன்று சத்தியவசன Zoom Meeting இல் கலந்துகொண்டோம். பாடல்கள், சாட்சிகள், தேவசெய்தி அருமையாகவும் எங்களுக்கு ஆசீர்வாதமாகவும் இருந்தது. கர்த்தரைத் துதிக்கிறோம்.

Mr.V.Thangaraja, Vellore.


[02]
இம்மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற சத்தியவசன Zoom Meeting இன் ஜெபக் கூடுகையில் நாங்களும் பங்கு பெற தேவன் கிருபை செய்தார். எங்கள் குடும்பத்திற்கு ஆசீர்வாதமாக இருந்தது. சிறப்பாக இக்கூட்டத்தை ஒருங்கிணைத்த சகோதரருக்காக ஆண்டவருக்கு நன்றி சொல்கிறோம். தொடர்ந்து ஊழியங்களுக்காக ஜெபிக்கிறோம்.

Mr.Gopi, Watrap.


[03]
ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் சத்தியவசனம் தொலைகாட்சியை தவ றாமல் பார்த்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுகிறோம். ‘சத்தியவசனம்’ பத்திரிக்கையில் கட்டுரைகளை எழுதும் அனைவருக்காகவும் சகோதரி சாந்தி பொன்னு அவர்களுக்காகவும் உங்கள் ஊழியங்களுக்காகவும் ஜெபித்து வருகிறோம்.

Mrs.Menaka George, Coimbatore.


[04]
அனுதினமும் கிறிஸ்துவுடன் தினசரி வேதவாசிப்பு பயனுள்ளதும், நல்ல விளக்கங்கள் உள்ளதுமாக பயன்தருகிறது. எனக்கு வயது 85, ஓய்வு பெற்ற ஆசிரியர். தினமும் வாசித்து நன்மையைப் பெற்றுக்கொண்டிருக்கிறேன்.

Mrs.Eben Duraisamy, Palayamkottai.


[05]
Praise God for Sister Shanthi ponnu. The Mighty hand of our God is upon her and we are thriving day by day in spiritual maturity by the word of God through her daily devotions. I thank God for her life. Be assured of my prayers.

Mrs.Vasugi Celin, Arni.


[06]
சத்தியவசன ஆசிரியர் அவர்களுக்கு, ஞாயிற்றுகிழமை பகல் 12.30 மணிக்கு நம்பிக்கை டிவியில் சத்தியவசன நிகழ்ச்சியைப் பார்த்து வருகிறோம். சகோ.சுவி பிரபாகரதாஸ் அவர்களின் செய்தி எங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கிறது. இதன் மூலம் வேதத்தை ஆராயமுடிகிறது. மிக்க நன்றி.

Mr.J.Vincent, Nagercoil.


[07]
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம். சகோதரி சாந்தி பொன்னு அவர்களின் இந்த வல்லமையான எழுத்துப்பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள். கர்த்தர்தாமே அவர்களின் ஊழியங்களை ஆசீர்வதிப்பாராக.

Mr.Johnson Ebezenzer, Madurai.


[08]
அன்பார்ந்த சத்தியவசன ஊழியர்களுக்கு, கொடிய கொள்ளைநோய் காலத்திலும் கர்த்தர் எங்களை பாதுகாப்பாக வைத்துள்ளார். பெருந்தொற்றின் நாட்களிலும் உங்களையும் கர்த்தர் பாதுகாத்து ஊழியம் சிறப்பாக நடைபெற உதவி செய்திருக்கிறார். தங்களது ஆவிக்குரிய வெளியீடுகள் எங்களுக்கு ஆறுதலாக இருந்து வருகிறது.

Mr.Sam N.Gunalan, Erode.

ஆசிரியரிடமிருந்து…

(செப்டம்பர்-அக்டோபர் 2021)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

இவ்விதழின் வாயிலாக தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். கொரோனா இரண்டாவது அலையின் தாக்கங்கள் முழுவதுமாக குறைய கர்த்தர் பாராட்டிய கிருபைகளுக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம். மூன்றாவது அலையின் எச்சரிப்புக்களை அரசாங்கம் அறிவித்துக்கொண்டும், அதன் பரவலைத் தடுப்பதற்கான முன்னேற்பாடுகளையும் நடைமுறைப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். இனித் தீங்கைக் காணாதிருப்பாய் (செப்.3:15) என்று வாக்குப்பண்ணின வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமுமுள்ள கர்த்தர்தாமே நம்மோடுகூட இருந்து மூன்றாம் அலை நமது தேசத்திற்குள்ளும் உலக நாடுகளுக்குள்ளும் கொடிய தீங்குகளை ஏற்படுத்தாதபடி கடந்து செல்வதற்கு திறப்பிலே நின்று மன்றாடுவோம். பிள்ளைகளுடைய கல்விதரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு விரைவிலேயே பள்ளிகள் திறப்பதற்கும், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரின் பாதுகாப்பிற்காகவும் தற்போது ஞாயிறு ஆராதனைக்கு இருக்கின்ற தடைகள் நீங்குவதற்கும் தவறாது ஜெபிப்போம்.

ஆப்கானிஸ்தானின் செய்திகளை கேட்கும்போது ஒவ்வொருவருடைய இருதயமும் உடைகிறது. அந்த நாட்டிலே ஒடுக்கப்படுகிறவர்களினிமித்தம் இடுகிற கூக்கூரல் தேவசந்நிதியில் எட்டவும், மிஷனெரிகள், சபைகள், ஊழியர்கள் விசுவாசிகள் அனைவரின் பாதுகாப்புக்காகவும் அதிக பாரத்தோடு தொடர்ந்து ஜெபிப்போம். நமது ஜெபங்களைக் கேட்டு அந்நாட்டிலே தேவன்தாமே சமாதானத்தை நிலவப்பண்ணுவார்.

இவ்விதழில் செப்டம்பர் மாதத்தில் 1-4 மற்றும் அக்டோபர் 1-5 வரையுள்ள நாட்களில் பல்வேறு தலைப்புகளிலும், செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதிய தியானங்களும், அக்டோபர் 6-31 வரையுள்ள நாட்களில் சகோ.வர்ஷினி சேவியர் அவர்கள் எழுதிய தியானங்களும் இடம்பெற்றுள்ளன. தியானங்களை எழுதிவரும் சகோதர, சகோதரிகளையும் உங்கள் ஜெபங்களில் மறவாதீர்கள். இத்தியானங்கள் உங்களது ஆவிக்குரிய வாழ்வின் வளர்ச்சிக்கு பிரயோஜனமாக இருக்க ஜெபிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்