ஜெபக்குறிப்பு: 2021 அக்டோபர் 31 ஞாயிறு

நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள் (சங்.97:12) இந்த மாதத்தின் ஒவ்வொரு தினங்களிலும் தேவனுடைய அதிசயமான வழிநடத்துதலை கர்த்தர் காணச்செய்தார். நன்றியறிதலான உள்ளத் தோடு எல்லா நாமத்திற்கும் மேலான நாமமுள்ள பரிசுத்தரான தேவனைத் துதித்து மகிமைப்படுத்துவோம்.

இருளுக்குட்படாமல்….!

தியானம்: 2021 அக்டோபர் 31 ஞாயிறு | வேத வாசிப்பு: 1தெசலோனிக்கேயர் 5:1-11

… தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே (எபேசியர் 5:5).

நாம் அறிந்திருந்தும், அதிகம் கரிசனை காட்டாத பல விஷயங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானது இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை. அது தாமதமாவதாலும், அது வாக்களிக்கப்பட்டு ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஓடி மறைந்துவிட்டதாலும், இன்னும் காலம் இருக்கலாமே என்றதொரு அசட்டைத்தனம் நமக்குள் உண்டு. இரண்டு காரியங்கள் உண்மை. கிறிஸ்து திரும்பவும் வருவது ஓர் உண்மை. அவர் வரும் நாளை, பிதாவைத் தவிர யாரும் அறியமாட்டார்கள் என்பதுவும், யாரும் எதிர்பாராத நேரத்தில் அவர் வருவார் என்பதுவும் அடுத்த உண்மை. இப்படியாக நிச்சயமாக நடக்கப்போகிற நிகழ்வைக்குறித்த கரிசனையற்றவர்களாகவும், தூங்குகிறவர்களாகவும், நாளை மாறிப்போகும் காரியங்களைக் குறித்து கவலைப்படுகிறவர்களாகவும், உலக விஷயங்களில் அதிக சிரத்தை கொண்டவர்களாகவும் நாம் வாழலாமா?

நமது தவறுகளை உணர்ந்து, நம்மை திருத்திக்கொள்பவர்களாக, எந்த நேரமும் ஆயத்தமுள்ளவர்களாக வாழ்ந்தால், அவரது வருகையைக்குறித்து நாம் பயப்பட வேண்டியதில்லை. குற்றம் செய்தவனைப் பிடிக்கக் காவல்துறை சொல்லிவிட்டாவரும்? திடீரென வரும்போது குற்றம் செய்தவன் ஒளித்துக்கொள்ள அவகாசம் கிடைக்காது. அப்படியே, யார் யார் தேவனுடைய ராஜ்யத்திலே சுதந்திரமடைவதில்லை என்று பவுல் தெளிவாக எழுதியுள்ளார். இந்தச் செயல்களை யாராவது வெளிச்சத்தில் செய்வார்களா? குற்றம் புரியாத எவனும் ஒளிந்து நடக்கவேண்டியதில்லையே! அதே சமயம், தவறான பாதையில் செல்லும் எவனும் வெளிப்படையாக செல்லவேமாட்டான். நமது தனிப் பட்ட வாழ்க்கையைத் தேவனுக்குமுன் வெளியரங்கமாக ஒப்புக்கொடுப்போம். பிழைகளையும் அவர் சரி செய்து, நமது தலையை உயர்த்துவார்.

தேவ பிள்ளையே, இன்று கிறிஸ்துவின் வருகை இருக்குமானால் நாம் அவரோடேகூடச் செல்லுவோமா? அல்லது கைவிடப்படுவோமா? அவர் நம்மைக் குற்றவாளிகளாகக் காண்பாரா? அல்லது தமது வருகைக்காக விழித்திருக்கும் பிள்ளைகளாக நம்மைக் காண்பாரா? தேவனால் கைவிடப்படுவது போன்றதொரு பயங்கர நிலைமை நம்மில் யாருக்கும் வரக்கூடாது. நாம் இருளில் வாழ்கிறோமா? வெளிச்சத்தில் நடக்கிறோமா என்பதை அவர் கவனிக்கின்றார். ஆகவே, இப்போதே, நம்மில் தொத்திக்கொண்டிருக்கிற இருளின் காரியங்கள், நாம் மறைத்துச் செய்யும் செயல்கள், மனதில் தேக்கி வைத்திருக்கும் தவறான சிந்தனைகள் யாவையும் அழித்து விடுவோமாக. நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே! (1தெச.5:5).

ஜெபம்: சீக்கிரமாய் வரப்போகும் எங்கள் இராஜாவே, இருளின் கிரியைகளினாலே நாங்கள் வஞ்சிக்கப்பட்டு போய்விடாமல், வெளிச்சத்திற்குரியவர்களாக எப்போதும் உம்முடைய வருகைக்கு ஆயத்தப்பட்டவர்களாய் காணப்பட உமது கிருபை தாரும். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2021 அக்டோபர் 30 சனி

அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்து விடுங்கள் (1பேது.5:7) பலவிதமானத் தேவைகளோடு உள்ள பங்காளர்கள் இந்த ஆறுதலான வாக்கைப் பற்றிக்கொள்வதற்கும், உள்ளந்திரியங்களை சோதித்தறிகிற தேவன் அவர்களது மனக்கவலைகளிலிருந்தும், போராட்டங்களிலிருந்தும் விடுவித்து அவர்களுக்கு சமாதானத்தைக் கட்டளையிடுவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.

கிறிஸ்துவுக்குள் வளருவோம்!

தியானம்: 2021 அக்டோபர் 30 சனி | வேத வாசிப்பு: எபேசியர் 4:14-24

… தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார் (எபேசியர் 4:15).

தேவசாயலிலே படைக்கப்பட்ட மனிதன் பாவத்திற்குள் விழுந்தது எப்படி? தேவன் தொடவேண்டாம் என்றதை அவன் தொட்டது எப்படி? ஆம், அவனுக்குள் இருந்த சுதந்திரத்தை அவன் தவறாகப் பயன்படுத்தியதே அதற்குக் காரணம். நமக்குள் தெரிந்தெடுக்கும் திறமையுண்டு. ஆனால் அதைச் சாத்தானின் வஞ்சகத்திற்கு விற்றுப் போட்டதாலேயே மனிதன் தேவனைவிட்டுப் பிரிந்துவிட நேரிட்டது. அன்று ஏதேனிலே ஏற்பட்ட அதே சோதனைதான் இன்றும் நம்மை ஆட்டிப்படைக்கிறது. அதே கண்களின் இச்சை, மாம்சத்தின் இச்சை, ஜீவனத்தின் பெருமை இன்றும் நம்மை வீழ்த்திப்போட வகை பார்க்கிறது. ஆனால் நாம் அன்றைய ஆதாம் ஏவாளைப்போல இன்னும் விழுந்துகொண்டே இருக்கவேண்டிய அவசியம் இல்லையே! பாவத்தைப் பரிகரிக்கும் பலியாக கிறிஸ்து உலகிற்கு வந்து தம்மையே கொடுத்ததாலே, இன்று நாம் பாவத்துக்குள் விழவோ, விழுந்தாலும் விழுந்த இடத்திலேயே கிடக்கவோ, பாவத்திற்கு நம்மை முற்றிலும் விற்றுப் போடவோ தேவையில்லை. நாம் அன்றாடம் கிறிஸ்துவுக்குள் வளருகிறவர்களாக இருக்கிறோம். ஆகவே, விழுந்தாலும் விழுந்த இடத்தில் இராமல் நாம் எழுந்து நடக்கலாமே!

ஆனால், அநீதியும் ஒழுக்கமின்மையும் வன்செயல்களும் நிறைந்திருக்கும் இந்த இருளான காலத்தில் வாழுகின்ற நமக்கு, கிறிஸ்துவுக்குள்ளாக வளருவது எப்படிச் சாத்தியமாகும் என்ற கேள்வி நமக்குள் எழலாம். எல்லா விதத்திலும் சோதனைகள் நம்மை இழுத்துக்கொண்டிருக்க, தேவனுக்குச் சாட்சியாக வாழுவது எப்படி முடியும் என்பது கேட்கப்படவேண்டிய கேள்விதான். ஆனால் முடியும். நம்மால் முடியாததை நம்மிடம் எதிர்பார்க்கிறவர் அல்லவே நம் தேவன். அப்படியானால் நாம் விழுந்துபோவதற்குரிய முக்கிய காரணம் என்ன என்பதை நாம் கண்டறியவேண்டியது கட்டாயம். அதற்குப் பலவித காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணம் ஒன்றுண்டு. அது என்னவெனில் நம்மைச் சூழ்ந்திருக்கின்ற மக்களைப்போல நாமும் வாழ முற்படுவது என்பதுதான். சிந்திக்காமலேயே உலகத்தோடு ஓட நாம் முயற்சிப்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். மனுஷ ஞானம் சொல்லும் தந்திரமான போதனைகளினால் அலைகிறவர்களாய் சத்தியத்தை வெகு இலகுவில் மறந்து போகிறோம். அப்படியானால் எப்படிக் கிறிஸ்துவுக்குள் வளரமுடியும்?

அன்பானவர்களே, தேவனைமட்டும் சார்ந்து நின்று, பிறரையும் அந்தச் சத்திய வெளிச்சத்திற்குள் கொண்டு வரவேண்டிய நாமே தேய்ந்து போகலாமா? நாம் வளரவேண்டும். கிறிஸ்துவுக்குள், கிறிஸ்துவின் குணாதிசயத்தில் வளரவேண்டும். அதுவே நம் வாழ்வை வெளிச்சமாக்குவதுடன், பிறருக்கும் வெளிச்சத்தைத் தரும்.

ஜெபம்: நல்ல ஆண்டவரே, நாங்கள் வேதசத்தியத்திலே நிலைத்திருந்து, மற்றவர்களையும் சத்திய வெளிச்சத்தினிடத்திற்கு கொண்டுவருகிறவர்களாக வளருகிறதற்கு எங்களையும் மறுபடியும் ஒப்புக்கொடுக்கிறோம். எங்களை பயன்படுத்தும். ஆமென்.