ஜெபக்குறிப்பு: 2021 நவம்பர் 30 செவ்வாய்

கிறிஸ்துவே தேவனுடைய வலது பாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே (ரோம.8:34) நமக்காக வேண்டுதல் செய்கிற பரிசுத்த ஆவியானவர் இம்மாதம் முழுவதும் நம்மோடிருந்து நமக்கு உதவி செய்தார். வேண்டிக்கொண்டதற்கும் அதிகமான நன்மையாலே நம்மை நிரப்பினபடியால் அவருக்கே எல்லா மகிமையையும் செலுத்தி ஜெபிப்போம்.


நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம் (1யோவா.5:15).

புளிப்பில்லாத அப்பம்

தியானம்: 2021 நவம்பர் 30 செவ்வாய் | வேத வாசிப்பு: யாத்.12:1-10, 1கொரி.5:7-8

புளிப்பில்லாத அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள் (யாத்.12:8).

கர்த்தருடைய பஸ்காவை ஜனங்கள் எப்படி ஆசரிக்க வேண்டுமென்பதைக் குறித்து கர்த்தர் தெளிவாக யாத்திராகமம் 12ஆம் அதிகாரத்தில் கூறியுள்ளார். புளிப்பில்லாத அப்பத்தோடும், கசப்பான கீரையோடும் அதை புசிக்கக்கடவீர்களெனக் கூறுகிறார். இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையைப் பெற்று, தங்கள் பிரயாணத்தை கானானை நோக்கி ஆரம்பிக்கும் வேளையில் இந்த பஸ்காவை புசித்தார்கள். அதேபோல நாமும் எகிப்தாகிய உலகத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று, மோட்சமாகிய கானானை நோக்கி நம் பிரயாணத்தை ஆரம்பிக்கும்போது இந்தக் காரியங்களைக் கடைப்பிடிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

புதிய ஏற்பாட்டில் பவுல் புளிப்பில்லாத அப்பத்தைக் குறித்து என்ன கூறியுள்ளார். பழைய புளித்த மாவோடே அல்ல, துர்க்குணம், பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு; உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே எனக் கூறியுள்ளார். இந்த புளித்த மா நமது பழைய வாழ்க்கையை, பழைய சுபாவங்களை நம்மில் புளித்துப் போயிருக்கும் காரியங்களைக் காட்டுகிறது. எரிச்சல், பொறாமை, கசப்பு, பொல்லாப்பு போன்ற துர்ச்சுபாவங்களைக் குறிக்கிறது. கர்த்தருக்கு நம் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கும்போது இத்தகைய பழைய சுபாவங்கள் அனைத்தும் அகற்றப்படவேண்டும். புளிப்பில்லாத புதிய சுபாவங்களாகிய உண்மை, அன்பு, பரிசுத்தத்தோடு கர்த்தரை நாம் பின்பற்ற வேண்டும்.

அடுத்து, கசப்பான, கீரையோடும் புசிக்கக்கடவீர்கள் எனக் கூறுகிறார். இது பாவங்களைக் குறித்ததான மெய் மனஸ்தாபத்தை, பாவ அறிக்கையைக் காட்டுகிறது. நம் பாவங்களை உணர்ந்து உண்மையாகவே அவற்றுக்காக மனஸ்தாபப்பட்டு, அவற்றை அறிக்கை செய்து விட்டுவிட்டு கர்த்தரை பின்பற்றிச் செல்லவேண்டும். நாம் என்ன நிலையில் கர்த்தரை பின்பற்றிச் செல்கிறோமென ஆராய்ந்து பார்ப்போம், அன்பானவர்களே, பழைய சுபாவங்கள், விட்டு விடாத பாவங்கள் இன்னும் நமக்குள் காணப்படுகிறதா? அவற்றை சுத்திகரித்துக்கொள்வோமாக.

ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்த மாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே. ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம் (1 கொரி.5:7-8).

ஜெபம்: கர்த்தாவே, நான் இன்னும் விட்டுவிட முடியாத பழைய சுபாவங்கள், பாவப் பழக்கங்கள் என்னிடம் காணப்படுகிறது. அவற்றை ஜெயிக்க கிருபை தாரும். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2021 நவம்பர் 29 திங்கள்

சகல ஜனங்களும் … அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரீகமும் கொடுக்கப்பட்டது (தானி.7:14) வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்கள் மராத்தி, கன்னடம், பெங்காலி ஆகிய மொழிகளில் நடைபெறும் ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து, அறிவிக்கப்படும் சத்தியங்களினாலே சகல ஜனங்களும் கர்த்தரையே சேவிக்கவும் கர்த்தர் நாமம் உயர்த்தப்படவும் மன்றாடுவோம்.

கேதுரு மரம்!

தியானம்: 2021 நவம்பர் 29 திங்கள் | வேத வாசிப்பு: எண்ணாகமம் 24:1-7

நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான் (சங்கீதம் 92:12).

நீதிமானின் வாழ்க்கையை கேதுரு மரத்துடன் ஒப்பிட்டுக் கூறப்பட்டிருப்பதைக் குறித்து இன்று தியானிப்போம், நீதிமான் லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவானெனக் கூறப்பட்டிருப்பதிலிருந்து, லீபனோன் என்ற இடத்திலுண்டாகும் கேதுரு மரம்தான் செழித்து வளரும் என்பதை நன்கு அறிந்துகொள்ளலாம்.

லீபனோன் ஒரு மலை நாடு; மலையின் உச்சியில் உறைந்த மழை காணப்படுகிறது. இம்மலை நாட்டில்தான் கேதுரு மரம் அதிகம் வளருகிறது. மலை ஜெப ஜீவியத்தை குறிக்கிறது. கர்த்தருடன் தனித்திருந்து அவரின் உன்னத சமுகத்தைத் தரிசித்து உறவாடுவதுதான் ஜெபமாகும். ஜெபத்தின்மூலம் கர்த்தரோடு உறவாடும்போது, நம்மேல் ஆவிக்குரிய பனி, மழை இறங்கிக் கொண்டேயிருக்கும். ஜெபத்தின் மூலம் கர்த்தருடன் நெருங்கி உறவாடி ஜீவிக்கும் ஒரு நீதிமான் லீபனோனிலுள்ள கேதுருவைப்போல வளருவான் எனக் கூறப்பட்டுள்ளது.

அடுத்தாக, கேதுரு மரம் ஆயுள் கூடிய மரமாகும். ஆயிரம், இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக அது உயிருடன் நிற்கக்கூடியது. ஆம்: கர்த்தர் நமக்கு அருளும் இரட்சிப்பும் நீடிய ஆயுளை உடையது. நித்தியம் நித்தியமாக ஜீவிக்கக்கூடிய நித்திய ஜீவனை நமக்கு அளிக்கிறது. நாமும் இரட்சிப்பு மூலமாக நீதிமான்களாக்கப்படும்போது நம்முடைய வாழ்க்கையும் நீடிய ஆயுளைப் பெறுகிறது.

அடுத்து, கேதுரு மரம் தண்ணீர் அருகேதான் அதிகமாக வளரும். தண்ணீர் இல்லாவிட்டால் அது பட்டுப் போய் விடும். நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுக்களிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர் மொண்டு கொள்வீர்கள் (ஏசா.12:3) என ஏசாயா கூறுகிறார். இரட்சிப்பின் ஊற்றாகிய கர்த்தரண்டை நம் வாழ்க்கையானது வேர் விட்டுச் செல்லவேண்டும். அப்போதுதான் வேர் தண்ணீரை உறிஞ்சிக் கொண்டேயிருக்கும். நீதிமானின் வாழ்க்கையானது ஜீவ ஊற்றாகிய கர்த்தரண்டையிருப்பதால் அவன் இந்த கேதுருவைப்போல வளருவான் என அதனுடன் ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது. நம் வாழ்க்கையும் கர்த்தரின் காரியங்களை நாடி வேர் விட்டுச் சென்று, அங்கிருந்து ஆசீர்வாதங்களை உறிஞ்சிக்கொள்வதாக அமையட்டும்.

யாக்கோபே, உன் கூடாரங்களும், இஸ்ரவேலே, உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள்! அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப் போலவும், நதியோரத்திலுள்ள தோட்டங்களைப் போலவும், கர்த்தர் நாட்டின சந்தன மரங்களைப் போலவும், தண்ணீர் அருகே உள்ள கேதுரு விருட்சங்களைப் போலவும் இருக்கிறது (எண்ணாகமம் 24:5-6).

ஜெபம்: அன்பின் தேவனே, ஜீவ தண்ணீரைக் கொடுக்கும் உம்மண்டையில் என் வாழ்க்கையானது வேர் விட்டுச்சென்று அதிக கனிகளைக் கொடுக்க கிருபை செய்யும். ஆமென்.